Monday, June 10, 2019

காடுவெட்டி சோழன் என்கிற....


10-ம் நூற்றாண்டின் இறுதியில் ஆட்சிக்கு வந்து 11-ம் நூற்றாண்டின் ஆரம்ப வருடங்கள் (கி.பி 985 -1014 )வரை அரசாண்ட ராஜராஜ சோழனை, அவனது புகழை அடுத்தடுத்த தலைமுறையினர் மறந்தே போயிருந்தனர். ஒரு கட்டத்தில் அப்படியொரு மன்னன் இருந்ததற்கான செவிவழி செய்திகள் கூட அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு கடத்தப்படாமல் 19ம் நூற்றாண்டின் இறுதிவரை தமிழகத்திற்கு/ தமிழர்களுக்கு ராஜராஜன் என்கிற பெயரே யாருக்கும் தெரியாமல் இருந்தது என்பதுதான் உண்மை.

ராஜராஜன் காலத்திற்குப் பிறகு சோழ அரசர்கள் தஞ்சையை ஏன் கைவிட்டார்கள் என்பதற்கான சரியான காரணங்கள் தெரியவில்லை. வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் பல்வேறு ஊகங்களை முன்வைத்தாலும் அதற்கான சான்றுகள் எதுவும் இல்லை. பின்னாளில் ஜடாவர்ம சுந்தர பாண்டியனால் தஞ்சையும், அதன் கோட்டைகளும் அழிக்கப்பட்டதாக ஒரு தகவல் மட்டுமே நம்பும்படியாக இருக்கிறது.

1858-ம் ஆண்டு வாக்கில் இந்தியாவில் கிருஸ்துவ மதத்தைப் பரப்பவந்த George Uglow Pope (ஜி.யூ. போப்) என்பவர்தான் முதல் முறையாக தஞ்சை பெரிய கோவிலையும், அதைச் சுற்றியுள்ள மற்றபிற கோவில்களையும் தனது புத்தகத்தில் ஆவணப்படுத்தினார். அதன் படி அந்த காலகட்டத்தில் தஞ்சை பெரிய கோவிலை கட்டிய அரசனின் பெயர் “காடு வெட்டி சோழன்” என்றுதான் அறியப்பட்டிருந்தது.

1861 -ம் ஆண்டுதான் பிரிட்டீஷாரால் இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவனம்(Archaeological Survey of India (ASI) ) துவங்கப்பட்டது. இதன் பின்னரே இந்தியாவெங்கும் உள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் மற்றும் அதன் தகவல்களை சேகரிக்கும் பணி முறையாக துவங்கியது.

ஜெர்மனியைச் சேர்ந்த கல்வெட்டு ஆய்வாளரான “Eugen Julius Theodor Hultzsch” என்பவர் 1886ம் ஆண்டு சென்னை மாகாண அரசின் தொல்பொருள் ஆய்வுத் துறையில் பணியில் சேர்ந்த பிறகே, தென்னகத்தில் இருந்த கல்வெட்டுக்களைப் பற்றிய ஆய்வுகள் சூடுபிடித்தன. சமஸ்கிருதம் மற்றும் இந்திய மொழிகளில் அவருக்கிருந்த பரிச்சயம் மற்றும் புலமை இந்த கல்வெட்டுக்களில் கூறப்பட்டிருந்த தகவல்களை தொக்குத்திட உதவியது.

இவ்வாறு தொகுக்கப்பட்ட தகவல்களை காலாண்டுக்கு ஒரு முறை ”Epigraphia Indicaஎன்ற பெயரில் புத்தகங்களாக வெளியிடப்பட்டன. 1882 முதல் 1977 வரை இந்த தொகுப்புகள் தொடர்ந்து வெளியிடப்பட்டது. இவற்றில் மூன்றாவது முதல் ஒன்பதாம் தொகுதி வரை “Eugen Julius Theodor Hultzsch” தொகுப்பாசிரியராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. (Vol III (1894–95), Vol IV (1896–97), Vol V (1898–99), Vol VI (1900–01), Vol VII (1902–03), Vol VIII (1905–06), Vol IX (1907–08) .

1987ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில்தான் “Eugen Julius Theodor Hultzsch” குழுவினரால் தஞ்சை பெரிய கோவில் கல்வெட்டுக்கள் படியெடுக்கப்பட்டு அதில் உள்ள தகவல்கள் ஆவணப்படுத்தப்பட்டது. அந்த ஆய்வில்தான் இந்த கோவிலைக் கட்டிய அரசனின் பெயர் ”கோ ராஜகேசரிவர்மன் என்கிற ராஜராஜ தேவன்” என்பதே தெரியவந்தது.

தஞ்சை பெரிய கோவிலில் படியெடுக்கப்பட்ட கல்வெட்டுக்களின் தகவல்கள் புத்தகமாக “South Indian Inscriptions – IIஎன்ற பெயரில் வெளியிடப்பட்டது. இந்த கல்வெட்டுக்களில் கோவிலின் அமைப்பு, நிர்வாகம், கோவிலுக்கு கொடுக்கப்பட்ட தானங்கள், பொருட்கள், சிலைகள் அவற்றை அளித்தவர்கள், கோவிலுக்கான வருமானம், அதை வசூலிக்க வேண்டிய முறை என பல்வேறு தகவல்கள் விரிவாக பொறிக்கப்பட்டிருந்தது.

இதன் பின்னரே, பல்வேறு இடங்களில், கோவில்களில் கிடைத்த கல்வெட்டு தகவல்கள் ராஜராஜனைப் பற்றியும் சோழ வம்சத்தைப் பற்றியும் ஏராளமான தகவல்கள் நமக்குத் தெரியவந்தது.

ராஜராஜனின் கல்வெட்டுக்கள் கூறும் தகவல்களின் அடிப்படையில் ராஜராஜன் ஒரு தலைசிறந்த நிர்வாகி, தான தர்மங்கள் செய்தவர், எல்லா மதத்தினரையும் ஆதரித்தவர் போன்ற புகழ் பிம்பம் உருவாவதை தவிர்க்க இயலாது. இருந்தாலும் இதைத்தாண்டி அவர் மீது பல விமர்சனஙக்ளும் வரலாற்று ஆய்வாளர்களினால் வைக்கப்படுகிறது.

ராஜராஜ சோழன் தன் ஆட்சி காலத்தின் பெரும்பகுதியை போர்களில் செலவிட்டவர். போர் கைதிகளைக் கொண்டே எல்லா கோவில்கள் கட்டப்பட்டது. மக்கள் மீது கூடுதலான வரி விதிக்கப்பட்டது. தமிழ் சைவ மரபினரை ஒதுக்கி காஷ்மீர சைவர்களை ஆதரித்தார். ஒரு காலகட்டத்தில் காஷ்மீர பிராமணர்கள் ஆட்சி அதிகாரத்தில் பலம் கொண்டவர்களாக இருந்தனர். சமூகத்தில் சாதிய ஏற்றத்தாழ்வுகள் உருவாகிட துனை போனார் என்பது போன்ற குற்றச்சாட்டுகளும் வைக்கப்படுகின்றன.

ராஜராஜன் காலத்திற்குப் பிறகு தஞ்சை பெரியகோவில் பல நூற்றாண்டுகளாக கைவிடப்பட்ட நிலையில் இருந்தது. கோவில் கல்வெட்டுக்களில் கூறப்பட்டுள்ள பல பொருட்கள், சிலைகள் இப்போது இல்லை. அவை களவாடப் பட்டிருக்கலாம். பின்னாளில் தஞ்சையை ஆண்ட நாயக்க மன்னர்கள், மராட்டிய மன்னர்கள் காலத்தில் கோவிலின் பெரும்பகுதி புதுப்பிக்கப்பட்டது. தற்போது இருக்கும் பெரிய நந்தியின் சிலையும் பின்னாளில் அமைக்கப்பட்டதுதான்.போர்ச்சுகீசியர்கள் காலத்தில் தஞ்சை பெரிய கோவிலை வாடகைக்கு எடுத்து அதனை குதிரைகளை அடைத்து வைக்கும் லாயமாகவும், ஆயுதங்களை சேகரித்து வைக்கும் ஆயுதக் கிடங்காகவும் பயன்படுத்தினர். 
Monday, May 27, 2019

“திருவாலங்காடு”.

தமிழ் சைவ மரபில் சிவன் நடனமாடியதாக நம்பப்படும் ஐந்து சபைகளில் முதலாவதான ரத்தினசபை அமைந்துள்ள ஊர்தான்  திருவாலங்காடு. அப்பர், சுந்தரர்,சம்பந்தர் என மூவராலும் பாடல்பெற்ற தலம். வீட்டிலிருந்து ஒரு  மணி நேர பயண  தூரத்தில் இருந்தாலும், இதுவரை போனதில்லை. ஏன் பெரிதாய் கேள்விப்பட்டதுமில்லை. “ஐவரிகோஸ்ட்”டில் இருந்து வந்திருந்த நண்பனின் ஆசைக்காக நாலு பேராக போய்வந்தோம். 

ராஜகோபுரம் ஐந்து நிலைகளைக் கொண்டிருக்கிறது. தூரத்தில் இருந்து பார்க்க கம்பீரமாய் இருக்கிறது. மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கோபுரத்திற்குப் பிறகு அதிக சுதை  சிற்பங்கள் உள்ள கோபுரம் இதுவாகத்தான் இருக்குமென நினைக்கிறேன். அவ்ற்றில் நிறைய பெண்கள் ஆடையின்றி அழகாயிருந்தனர்.எனவே வாலிப,வயோதிக அன்பர்கள் கோபுர தரிசனத்தை தவிர்ப்பது நலம்.என்னதான் தென்னாடுடைய சிவனாய் இருந்தாலும் மூலவருக்கு  வடமொழியில்தான் பெயர் வைத்திருக்கிறார்கள். “வடாரண்யேஸ்வரர்”. தேவர்  சிங்கப்பெருமான், ஆலங்காட்டு நாதர் என தமிழ் பெயர்களும் இருப்பதாய் விக்கிபீடியா சொல்கிறது. அம்மன் “வண்டார்குழலி”. உற்சவராக ரத்தினசபையில் நடனமாடிக்கொண்டிருக்கிறார் ”ரத்தினசபாபதி”. ஊர்த்தவ தாண்டவர்*. அவருக்கு நேர் எதிரே காளியின் சன்னிதி.

ஆறேழு பிரகாரங்களைக் கொண்ட மிகப்பெரிய கோவில் வளாகம். இரண்டாயிரம் வருட பழமையை கொஞ்சம் கூட பராமரிக்காமல் அப்படியே  வைத்திருக்கிறார்கள். தற்போது இரண்டு உள் பிரகாரங்கள் மட்டுமே புழகத்தில் இருக்கிறது. மற்றவையெல்லாம் தானே அழியட்டுமென விட்டு வைத்திருக்கிறார்கள் போலிருக்கிறது.

இரண்டாம் பிரகாரத்தில் கொடிமரம், பலிபீடங்களுக்கு அருகே உள்ள சில சிறிய சன்னிதிகளில் சாமி சிலைகளே இல்லை. அந்தக் கருவறைகளில் கட்டைகளையும் குப்பை கூளங்களை போட்டு வைத்திருக்கிறார்கள். அங்கே இருந்த சாமி  சிலைகள் எங்காவது வெளிநாடுகளுக்கு நிரந்தர டூர் போயிருக்கலாமென நானாகவே நினைத்துக் கொண்டேன். 


கோவில் வளாகத்தை இழைத்து இழைத்து செதுக்கியிருக்கிறார்கள். இந்த கோவிலை உருவாக்கிய சிற்பி/சிற்பிகள் வணக்கத்துக்குறியவர்கள் அல்லது கொண்டாடப்பட வேண்டியவர்கள். நேர்த்தி நேர்த்தி அத்தனையிலும் நேர்த்தி.ஒவ்வொரு அங்குலத்திலும் அத்தனை துல்லியம். இரண்டாயிர வருட பழமையென்கிறார்கள். ஏதோ நேற்றுதான் செதுக்கியதைப் போலிருக்கிறது. எதைப் பார்ப்பது, எதை விடுவதெனத் தெரியாமல் ஒவ்வொரு தூணாக நின்று நிதானித்து ரசித்தோம். அத்தனை தூணிலும் இருந்தான் கடவுள்.


உற்சவரான ரத்தினசபாபதி நடனமாடிக்கொண்டிருக்கும் ரத்தின சபையின் பக்கவாட்டில் நின்று  சிற்பசெதுக்கல்களை சிலாகித்து பேசிக்கொண்டிருக்கையில், அந்தப்பக்கமாய் வந்த கோவில் ஊழியர்,இந்த சுவருக்கு மறுபுறம் காரைக்கால் அம்மயார் ஜீவசமாதியாகி இருக்கிறார் என அதிர வைத்தார்.ரத்தின சபையின் முன் புறத்தில் உற்சவர் வீற்றிருக்க அவருக்குப் பின்னால் சுவர் எழுப்பி காரைக்கால் அம்மையாரின் ஜீவசமாதியை யாரும் பார்க்க முடியாதபடி மறைத்திருக்கிறார்கள். அந்த அம்மையார் இன்றும் பாடிக்கொண்டிருப்பதாகவும், அதற்கு உற்சவரான ரத்தினசபாபதி நடனமாடிக்கொண்டிருப்பதாகவும் ஐதீகமாம். 

நாலரை மணிக்கு மூலவருக்கு சாயரட்சை பூஜை. வடாரன்யேஸ்வரர் சுயம்புலிங்கம் என்றார்கள். அது பொய்யெனத் தோன்றியது. ஆவுடையோடு திட்டமாய் செதுக்கப்பட்டிருந்தார். ஏற்கனவே அணிவித்திருந்த அழுக்கு வேட்டியை அகற்றிவிட்டு நாலு சொம்பு தண்ணீரில் குளிப்பாட்டி, ஒரு பாக்கெட் பாலில் அபிஷேகித்து,  இன்னொரு அழுக்கு வேட்டிக்கு மாறினார் இறைவன். பகட்டாய், படாடோபமாய் வாழ்ந்து  கொண்டிருக்கும் மதுரையின் சொக்கனை பார்த்த கண்ணால் இதையெல்லாம் பார்க்க கொஞ்சம் கஷ்டமாயிருந்தது.

அம்மன் சன்னிதி தனியே இருக்கிறது. வண்டார்குழலி. தெற்கு நோக்கிய நின்ற திருக்கோலம். எளிமையான புடவையில் அத்தனை பாந்தமாயிருந்தார். அம்மன் சன்னிதியின் சுற்றுச்சுவரில் சீரான இடைவெளியில் கதாயுதம் போல அல்லது பன்னீர் சொம்பு போல புடைப்பு சிற்பங்கள். அச்சில் வார்த்ததைப் போல அத்தனையும் ஒரே மாதிரி செதுக்கப்பட்டிருந்ததை இங்கே சொல்லியே ஆகவேண்டும். கோவிலின் உள் பிரகாரத்தில் ஒரு பழமையான  ஆலமரம் இருக்கிறது. கிட்டத்தட்ட 60 அடி சுற்றளவுள்ள பிரம்மாண்டம். பாதி எரிந்து போன நிலையில் இருந்தாலும் மற்றொரு பகுதியில் பசுமையான இலைகள் இருக்கின்றன.”வட ஆரண்யம்” என்பது ஆலமரங்கள் நிறைந்த காடு என்பதாக பொருள் வருமாம். 

நாங்கள் போயிருந்த சமயத்தில் எங்கள் நால்வரையும் சேர்த்து, கோவில் ஊழியர்களோடு  மொத்தமாய்  பத்து பேருக்கும் குறைவானவர்களே அத்தனை பெரிய கோவில் வளாகத்தில் இருந்திருப்பார்கள். அத்தனை கூட்டம். திருவிழா சமயம் தவிர்த்து மற்ற நாட்களில் இப்படித்தான் இருக்குமாம். ஐப்பசி மாத பௌர்ணமியன்று மூலவரை தரிசிக்க வாழ்வின் அனைத்து சுகங்களும் கிடைக்குமென்றார்கள். அதனால்தான் மற்ற நாட்களில் யாரும் வருவதில்லை போல.....

கோவிலின் பல பகுதிகளில் நிறைய கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன. அவற்றையெல்லாம் தொல்லியல்துறை படியெடுத்திருக்கும். ”Indian Antiquary” யில் வெளியிட்டதோடு தங்கள் வேலை முடிந்துவிட்டதாக நினைத்திருப்பார்கள் போலிருக்கிறது. அந்த கல்வெட்டுக்களில் இருக்கும் செய்தி, இந்த கோவிலின் தொன்மை, சிறப்பு போன்றவைகளை இங்கே வருகிற எல்லோரும் தெரிந்துகொள்ளும் வகையில் ஏதாவது ஏற்பாடுகளைச் செய்திருக்கலாம். இந்த கல்வெட்டுக்கள் சொல்லும் செய்திகளை அடுத்தடுத்த தலைமுறைக்கு கடத்துவது பண்பாட்டு ரீதியாக முக்கியமானது. 

இந்த இறைவனை தரிசிக்க திருமணத்தடை, சனிதோஷம் விலகுமாம். ஆர்வமும், தேவையும் உள்ளவர்கள் முயற்சிக்கலாம்.
-----------------------------------------------------------------------------
இந்த ஊரில் கிடைத்த திருவாலங்காட்டு செப்பேடுகள்தான் சோழ வம்சத்தின் வரலாற்றை நமக்கு வெளிச்சம் போட்டுக் காட்டிய பேராவணம்.

* வலது காலை உயர்த்தி உடம்போடு ஒட்டியிருக்கும்படி உச்சந்தலைக்கு மேல் தூக்கியபடி நின்றாடுபவர்.

Thursday, February 14, 2019

கண்ணகி வாழ்ந்த வீடு !

மதுரைக்கு மிக அருகில் உள்ள கிராமம் கடச்சனேந்தல். இங்கு விவசாயிகளை அமைப்பாகத் திரட்டும் ஒரு முயற்சிக்காக நான் சென்றிருந்தேன். அந்த ஊரைச் சேர்ந்த விவசாயச் சங்கத்தினர் உடன் இருந்தனர். அந்தச் சின்னஞ்சிறிய கிராமத்தின் குறுகிய வீதிகளின் வழியே, வயல் வேலைகள் முடித்துத் திரும்பும் விவசாயிகளைப் பார்த்துப் பேசிக்கொண்டிருந்தோம். சடசடவென மழை பெய்ய ஆரம்பித்தது.

எங்கு ஒதுங்குவது எனச் சுற்றும்முற்றும் பார்த்து, மூலையில் இருக்கும் ஒரு தாவாரத்தில் ஒதுங்கினோம். காற்றும் மழையுமாகக் கொட்டித் தீர்த்தது. ஒதுங்கி நிற்கிறோம் என்பதற்கான எந்த அடையாளத்தையும் மழை விட்டுவைக்கவில்லை. மேலெல்லாம் நனைந்து சற்றே நடுக்கம் எடுக்கத் தொடங்கியது. நான் எதையோ யோசித்தபடி அங்கு சிறு பலகை ஒன்றில் எழுதியிருந்ததைப் பார்த்தேன். 'கவுந்தியடிகள் ஆசிரமம்’ என எழுதியிருந்தது. என் கண்களையே நம்பாமல், ஆச்சர்யத்தோடு மீண்டும் ஒருமுறை படித்து உறுதிப்படுத்தினேன். கோவலனும் கண்ணகியும் மதுரைக்கு வருவதற்கு, உறுதுணையாக இருந்து ஆற்றுப்படுத்திய சமணத் துறவி கவுந்தியடிகளுக்கு இங்கு எதற்கு ஆசிரமம் என யோசித்தபடி நின்றேன்.

மழை குறையத் தொடங்கியது. தாவாரத்துக்கு அடுத்து இருந்தவரிடம், 'கவுந்தியடிகள் ஆசிரமம் என்ற பெயர் எதற்காக வைத்திருக்கிறீர்கள்?’ எனக் கேட்டேன். அவர் சொன்னார், 'இந்த அம்மாதானே கோவலன் - கண்ணகியை எங்க ஊருக்குக் கூட்டிவந்துச்சு’ என்றார்.

அவரின் பதில், மேலும் ஆச்சர்யத்தை ஊட்டியது. 'கோவலன் - கண்ணகி மதுரைக்குத்தானே வந்தார்கள்? உங்கள் ஊருக்கு எங்கு வந்தார்கள்?’ எனக் கேட்டேன். 'என்ன தம்பி... மதுரைக்குள்ள போறதுக்கு மொத நாளு அவங்க ரெண்டு பேரையும், எங்க ஊர்லதான அந்த அம்மா தங்கவெச்சுச்சு’ என்றார். எனக்கு என்ன சொல்வது எனப் புரியவில்லை. ஆனால், அவருக்கு என்னிடம் சொல்ல நிறைய விஷயங்கள் இருக்கின்றன என்பது மட்டும் புரிந்தது.

நான் பேச்சைத் தொடர்ந்தேன். அவர் மேலும், 'கோவலன் - கண்ணகி தங்கி இருந்த வீடு அருகில்தான் இருக்கிறது’ என்றார். நான் ஏறக்குறைய உறைந்துபோய் நின்றேன். அதற்கு மழை மட்டும் காரணம் அல்ல! தொடர்ந்து, 'கண்ணகி வீடுதானே... அது எனக்குத் தெரியும். நான் கூட்டிப்போய் காட்டுறேன்’ என உடன் இருந்தவர் பதில் சொன்னார்.

சிலப்பதிகாரத்தை வெளியில் இருந்து படித்த நான், முதன்முறையாக அதற்குள்ளே இருக்கும் மனிதர்களைச் சந்தித்தேன். அவர், 'வாருங்கள் போகலாம்’ எனச் சொல்லி என்னை அழைத்துப்போனார். மழை நின்ற அந்த இரவில் நான் காலத்துக்குள் நடந்துபோய்க்கொண்டிருந்தேன்.

இரண்டு தெரு தள்ளி ஓர் இடத்தைக் காட்டினார். 'இந்த இடத்தில்தான் கண்ணகியின் வீடு இருந்தது’ என்றார். நான் விழித்த கண் இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தேன். அந்த இடம் எதுவும் இல்லாத வெளியா... அல்லது காலவெளியா என்பது புரியாத திகைப்பில் நின்றிருந்தேன்.

வயதான ஒரு மூதாட்டி, 'என்னப்பா, இந்த ராத்திரியில வந்து கண்ணகி வீட்டைப் பார்த்துக்கிட்டிருக்கீங்க?’ எனக் கேட்டபடி எங்களைக் கடந்துபோனாள். இப்போதுதான் கண்ணகியை வீட்டில் விட்டுவிட்டுப் போகும் கவுந்தியடிகளைப்போல இருந்தது அவளது வார்த்தைக்குள் இருந்த உரிமை.

என்னை அழைத்துப்போனவர் தொடர்ந்து சொன்னார்... 'கண்ணகி - கோவலன் கடைசியா இருந்தது இந்த வீட்டில்தான். இங்கிருந்துதான் சிலம்பை விற்க கோவலன் மதுரைக்குப் புறப்பட்டுப் போனான். புதுவாழ்வு தொடங்க ஆசையோடு காத்திருந்த கண்ணகிக்கு, போனவன் கொலையுண்ட செய்திதான் வந்து சேர்ந்தது. செய்தி கேள்விப்பட்டதும் ஆத்திரம் பொங்க தனது காலில் இருந்த இன்னொரு சிலம்பை கையில் ஏந்தியபடி இங்கிருந்துதான் புறப்பட்டாள். அதனால்தான் எங்கள் ஊருக்கு 'கடை சிலம்பு ஏந்தல்’ எனப் பெயர்.

20 வருடங்களுக்கு முன்புவரைகூட ஊரின் பெயர்ப்பலகை எல்லாமே 'கடை சிலம்பு ஏந்தல்’ என்றுதான் இருந்தது. அதன் பிறகுதான் பேச்சுவழக்கில் எல்லோரும் 'கடச்சனேந்தல்’ என்றே அழைக்க ஆரம்பித்துவிட்டனர்’ என்றார்.

நான் மறுபடியும் ஊரின் பெயரில் இருந்து எல்லாவற்றையும் யோசிக்க ஆரம்பித்தேன். அவர் பேச்சைத் தொடர்ந்தார். 'கோவலன் - கண்ணகியை அவமதித்துப் பேசிய இருவரை, கவுந்தியடிகள் நரியாகப் போகுமாறு சபித்துவிட்டார் இல்லையா?’ எனக் கேட்டார், சிலப்பதிகாரத்தின் காட்சியை நினைவுபடுத்தி. 'ஆம்... ஓராண்டு காலம் நரியாகப் போகுமாறு சபித்தார்’ என்றேன். 'அதுதான் அந்த நரி’ என்றார்.

அவர் கைகாட்டும் திசையை மிரட்சியோடு பார்த்தேன். கும்மிருட்டாக இருந்த அந்தத் திசையில் இருந்து அடுத்து வெளிவரப்போவது என்னவோ என்ற திகைப்பு குறையாமல் அவரை நோக்கித் திரும்பினேன். அவர் சொன்னார், 'கவுந்தியடிகளால் சபிக்கப்பட்ட அந்த நரிகள் இரண்டும் ஓராண்டு காலமும் அந்தப் பக்கம் உள்ள காட்டில்தான் இருந்ததாம். அதனால்தான் அந்த இடத்துக்கு 'அந்தநேரி’ எனப் பெயர்’ என்றார். அடுத்து இருக்கும் ஊரின் பெயர் 'அந்தநேரி’ என்பது அப்புறம்தான் நினைவுக்கு வந்தது (அதுவே 'அந்தனேரி’ ஆகிவிட்டது).

நிகழ்காலத்துக்கும் கடந்தகாலத்துக்கும் இடையில் இடைவெளியற்ற ஒரு நிலத்தில், நின்றுகொண்டிருப்பதுபோல் உணர்ந்தேன். ஒருவகையில் மதுரையே இப்படி ஒரு நிலம்தான். காலத்தின் எந்தப் புள்ளியில் நாம் நின்றுகொண்டிருக்கிறோம் என்பது பல நேரங்களில் ஒரு புகைமூட்டமாகத்தான் தென்படும்.

அந்த வீடுதான் சிலப்பதிகாரத்தில் கொந்தளிக்கும் உணர்ச்சிகள் மையம் இட்டிருந்த இடம். கோவலன் - கண்ணகி இருவரும் இங்குதான் ஒரு புது வாழ்வைத் தொடங்கினர். கண்ணகியின் களங்கம் இல்லாத அன்பின் முன்பாக கோவலன் ஒரு தூசுபோல கிடந்தான். ஆண் எனும் அகங்காரம் முற்றிலும் அழிந்து, கண்ணகியின் கால் பற்றி நின்றான். 12 ஆண்டுகள் நெஞ்சம் முழுவதும் பெருகிக்கிடந்த துயரக் கடலை அன்பு எனும் மிதவைகொண்டு எளிதாகக் கடந்தாள் கண்ணகி. கால் சிலம்பைக் கழட்டிக் கொடுத்து புதுவாழ்வின் வாசல் நோக்கி அனுப்பினாள். நற்செய்தியோடு வருவான் என எதிர்பார்த்திருந்த கண்ணகிக்கு, அவன் கொலையுண்ட செய்தியே வந்து சேர்கிறது. அவள் வெகுண்டெழுந்தாள்.

சிலப்பதிகாரத்தில் உணர்ச்சிகளினால் உச்சம் பெற்ற காட்சி இங்குதான் அரங்கேறியது. பெருக்கெடுத்த அன்பும், புதுவாழ்வின் கனவும், கொடுங்கொலையும் வந்துசேர்ந்த இடமாக, இந்தச் சிறு குடிலே இருக்கிறது. கோவலனின் மனைவியாக மட்டுமே இருந்த ஓர் அபலைப் பெண், கண்ணகியாக உருமாற்றம்கொள்வது இந்த இடத்தில் இருந்துதான். ஒரு காப்பியத்தில் எந்த இடத்தை சமூகம் பற்றி நிற்கவேண்டுமோ, அந்த இடத்தை இறுகப் பற்றி நிற்கிறது இந்த ஊர்.

கதைகளின் பலம், பெருந்துக்கத்தை மறந்துவிடாமல் மீண்டும் மீண்டும் நினைவூட்டிக் கொண்டே இருப்பதுதான். 'எங்கள் ஊருக்கு வந்த பெண்ணுக்கு இப்படி ஆகிவிட்டதே’ என்ற துக்கம், இத்தனை ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகும் அந்தக் கதையைச் சொல்பவரின் தொண்டைக் குழியில் தேங்கி நிற்கிறது. அந்தத் துக்கம் மறக்காமல் இருந்தால்தான் மனிதன் அறம்சார்ந்த வாழ்வை வாழத் தொடர்ந்து தூண்டப்பட்டுக் கொண்டிருப்பான். மனிதனை நியாயவானாக மாற்றவேண்டிய செயல், மனிதன் இருக்கும் வரை நடத்தப்பட்டுக்கொண்டே இருக்க வேண்டிய செயல்.

அதற்கான கருவியை தனது அனைத்து அங்கங்களிலும் வைத்திருக்கும் பண்பாட்டையே சிறந்த பண்பாடாக நாம் கருதுகிறோம். அத்தகைய பண்பாட்டு விழுமியங்கள் செழிப்புற்று இருப்பதே நாகரிகச் சமூகத்துக்கான சான்று. கண்ணகியின் கண்ணீர்த் துளியைக் கைகளில் ஏந்தி, கவுந்திக்கு மரியாதை செய்துகொண்டிருக்கும் இந்தச் செயல்கூட அத்தகைய நாகரிகத்தின் அடையாளமே.

தார்ச்சாலையின் ஓரத்தில் இருக்கும் பெயர்ப்பலகையில் எனாமல் பெயின்டால் எழுதப்பட்ட எழுத்துக்குப் பின்னால் இவ்வளவு நெடிய கதையும் காலமும் மறைந்திருக்குமானால்... பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் எழுதப்பட்ட எழுத்துக்களுக்குப் பின்னால் மறைந்திருக்கும் கதைகளை யார் அறிவார்?

அப்படிப்பட்ட எழுத்தைத் தாங்கிநிற்கும் கருங்கல் ஒன்று, வைகையின் தென்கரை கிராமம் ஒன்றில் நிமிர்ந்து நிற்கிறது. சுமார் 2,400 ஆண்டுகளாக...

(நன்றி-  எழுத்தாளர் திரு.சு.வெங்கடேசன்)

Sunday, March 11, 2018

பேராசிரியர் சி.கோவிந்தராசனார் : கண்ணகியை கண்டெடுத்தவர்.

தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்
என்பார் திருவள்ளுவர். நண்பர்களே, நாமும் நமது பணியினை நிறைவாகச் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில், தினமும் முயன்று கொண்டே இருப்பவர்கள்தான். ஆனாலும் நமது முயற்சியின் எல்லை சிறியது, முயற்சிக்கும் காலமும் சிறியது.

     நண்பர்களே, நாம் அனைவரும் புத்தகங்கள் படிப்பவர்கள்தான். எத்துனையோ மாமனிதர்களின் வாழ்க்கை வரலாற்றைக் கரைத்துக் குடித்தவர்கள்தான். இதிகாசங்களையும், இலக்கியங்களையும், காப்பியங்களையும் படித்தவர்கள்தான். ஆனால் நம்மில் எத்தனைபேர், நூல்கள் சுட்டும் திசையில் பயணித்திருக்கிறோம்.

     நண்பர்களே, களப் பணி என்னும் சொல் இன்று மிகவும் பரவலாகப் பயன்படுத்தப் படுகிறது. தமிழாய்வாளர்கள் இன்று களப்பணி செய்து, புதிய புதிய செய்திகளை, உண்மைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வருகிறார்கள்.

     தமிழ்ப் பல்கலைக் கழகத்திலே பணியாற்றும், எனது நண்பர் முனைவர் பா.ஜம்புலிங்கம் அவர்கள், விடுமுறை நாட்களில், பௌத்தத்தின்அடிச்சுவட்டைத் தேடி, சோழ நாடு முழுமையும் பயணம் செய்து கொண்டே இருக்கிறார்.

    இன்று களப்பணி ஆற்றுவதற்கு தொடர் வண்டிகள், பேரூந்துகள், வானூர்திகள், இரு சக்கர வாகனங்கள் என ஏராளமான வசதிகள் பல்கிப் பெருகிவிட்டன. ஆனால் இன்றைக்கு 68 ஆண்டுகளுக்கு முன்னர், பயண வசதிகள் என்ன இருந்திருக்கும், என்பதை ஒரு கணம் எண்ணிப் பாருங்கள் நண்பர்களே.

     ஒரு சில புகை வண்டிகள், மாட்டு வண்டிகள், குதிரை வண்டிகள், இரு சக்கர மிதி வண்டிகள் இவைதானே, அன்றிருந்தவை.
பேராசிரியர் சி.கோவிந்தராசனார்
     நண்பர்களே, தஞ்சாவூர், கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின், கரந்தைப் புலவர் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றிய பேராசிரியர் சி.கோவிந்தராசனார்அவர்கள், இலங்கையைச் சார்ந்த பேரறிஞர், யாழ் நூல் என்னும் தமிழ் இசை இலக்கண நூலின் ஆசிரியர், சுவாமி விபுலானந்த அடிகளாரிடம், சிலப்பதிகாரத்தைத் திறம்படக் கற்றவர். சிலப்பதிகாரத்தில் ஊறித் திளைத்தவர். அவரது மனதில் நீண்ட நாட்களாகவே, ஓர் ஆசை, ஏக்கம், கனவு. சிலப்பதிகாரத்தில் கண்ணகி பயணம் செய்த, பாதை வழியாகவே, ஒரு பயணம் செய்தால் என்ன என்ற தணியாத தாகம்.

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு
பேராசிரியர் சி.கோவிந்தராசனார் அவர்களும் எண்ணி, எண்ணித் துணிந்து இறங்கினார்.

     நண்பர்களே, சொன்னால் நம்ப மாட்டீர்கள், பேராசிரியர் சி.கோவிந்தராசனார், கண்ணகியின் அடிச்சுவட்டில் பயணம் தொடங்கிய ஆண்டு 1945. ஆம் நண்பர்களே, இன்றைக்கு 68 ஆண்டுகளுக்கு முன்னர், துணிந்து இறங்கினார்.

     நண்பர்களே, கண்ணகியின் அடிச்சுவட்டில், கண்ணகி பயணித்த பாதை வழியாகவே, இவரும் நடந்தே சென்றார். கல்லூரி விடுமுறையில் நடந்தார், விடுமுறை எடுத்துக் கொண்டு நடந்தார். ஊதியத்தைச் செலவிட்டு நடந்தார். தனது உடமைகள் ஒவ்வொன்றையும், விற்று, விற்று, காசாக்கிக் கொண்டே நடந்தார்.

     நண்பர்களே, இவர் நடந்தது ஒரு மாதம், இரு மாதமல்ல, பதினேழு ஆண்டுகள் நடந்தார். முடிவில் சிலப்பதிகாரம் என்பது கற்பனைக் கதையல்ல, வரலாற்று நிகழ்வு என்பதனை உலகிற்கு உணர்த்தினார்.


     அதுமட்டுமல்ல நண்பர்களே, சிலப்பதிகாரத்தில், குன்றக்குரவை என்னும் காதையுள், கண்ணகி மலைமேல், வேங்கை மர நிழலில் நின்று தெய்வமானஇடத்தினையும், அவ்விடத்தில் சேரன் செங்குட்டுவன் அமைத்த பத்தினிக் கோட்டம் என்னும் கண்ணகிக் கோயிலையும் கண்டுபிடித்து உலகிற்கு அறிவித்த பெருமைக்கு உரியவரும் இவரேதான்.

     நண்பர்களே, பேராசிரியர் சி.கோவிந்தராசனார் அவர்கள், பதினேழு ஆண்டுகள் செலவிட்டு, கண்ணகியின் பாதச் சுவடுகளைப் பின் பற்றி நடந்த பாதையின் வழியே, நாமும் ஒரு புனிதப் பயணம் மேற்கொள்வோமா. வாருங்கள் நண்பர்களே வாருங்கள்.

      பேராசிரியர் சி.கோவிந்தராசனார் அவர்கள், தனது பயணத் திட்டத்தை நான்கு பகுதிகளாகப் பிரித்துக் கொண்டார்.

     காவிரிப் பூம்பட்டிணம் முதல், காவிரியின் வடகரை வழியாக, திருவரங்கம், உறையூர் வரையிலான பாதை, இவரது ஆய்வின் முதல் பகுதி.

     உறையூர் முதல், கற்குடி, பூங்குடி, விராலிமலை, கொடும்பாளூர் வழியாகப் பிரான் மலை, அழகர் மலை, மதுரை வரையிலான பாதை இவரது ஆய்வின் இரண்டாம் பகுதி.

     மதுரை மாநகர் ஆராய்ச்சி இவரது ஆய்வின் மூன்றாம் பகுதி.

     மதுரை முதல் வையை கரை வழியே நெடுவேள் குன்றம் வரையிலான பாதை இவரது ஆய்வின் நான்காம் பகுதி.

கண்ணகியில் அடிச்சுவட்டில் பேராசிரியர் பயணித்த பாதை

    


1945 ஆம் ஆண்டின் ஓர் நாள், இவர் மயிலாடுதுறை என்று இன்று அழைக்கப் படுகின்ற மாயுரம் வரை புகை வண்டியில் சென்றார். அங்கிருந்து இரு சக்கர மிதி வண்டிதான். அந்தக் காலத்தில், இவர் மாயுரத்தில் இறங்கி விசாரித்த பொழுது, காவிரிப் பூம்பட்டிணம் எங்கிருக்கிறது என்று யாருக்குமே தெரியவில்லை.

     பலமுறை முயன்ற பிறகு, கடற் கரையில் மீனவர்களின் ஒரு சில குடிசைகளுடன், மணற் பரப்பும், மணல் மேடுகளும், கள்ளியுடன் காரைச் சூரைச் செடிகளும் செறிந்த புதர்களும், சவுக்குத் தோப்புகளும், புனங் காடுகளும் சூழ்ந்திருந்த பட்டணம் என்று, அன்று அழைக்கப் பட்டப் பகுதியே, பண்டைய புகார் நகரம் இருந்த இடம் என்பதைக் கண்டுபிடித்தார்.

     அங்கிருந்த மீனவர்களின் துணையோடு, கட்டுமரத்தில் ஏறி, ஒரு கல் அளவு கடலில் பயணித்தார். கடல் ஆழமின்றி இருந்ததை அறிந்தார். கடலில் மூழ்கி, மூச்சை அடக்கிக் கொண்டு, கடலுள் பயணிக்கும் பயிற்சி பெற்றிருந்தமுழுக்காளிகள் சிலரை, கடலினுள் மூழ்கச் செய்து, கடலடி ஆய்வு செய்தார். கடலில் மூழ்கிய மீனவர்கள் பழமையான செங்கற் பகுதிகள், சுண்ணக் காரைகள், பாசி படிந்த பானை ஓடுகள் என பலவற்றை எடுத்து வந்து இவரிடம் வழங்கினர்.

     இவ்வாராய்ச்சியின் பயனாக, கடற்கோளினால் அழிந்து கடலடியில் மறைந்து நிற்கும் நிலப் பரப்பே, காவிரிப் பூம்பட்டிணம், கண்ணகி பிறந்த இடம் என்பதை உறுதி செய்தார்.

     1945 ஆம் ஆண்டில் பூம்புகாரில் ஆய்வினைத் தொடங்கிய இவருக்கு, கால் நடையாக ஆராய்ந்து, ஆராய்ந்து, நடந்து, நடந்து மதுரை வரை செல்வதற்கே பன்னிரண்டு ஆண்டுகள் தேவைப் பட்டன.

     திருப்பரங் குன்றம் செல்லும் சாலையில் பழங்காலத்தில், இடுகாடாக இருந்த கோவலன் திடல் என்ற பகுதியினையும், செல்லத்தம்மன் கோயிலில் இருந்த, கண்ணகி சிலையினையும் கண்டு பிடித்தார்.

      பிறகு, மதுரையில் கோவலனை இழந்த கண்ணகி, சேரநாடு நோக்கிச் சென்ற வழியில், இளங்கோ அடிகள் தந்த குறிப்புகளின் உதவியுடன் நடக்கத் தொடங்கினார்.

     வையை ஆறானது, சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள, பாதை வழியாகவே, தடம் மாறாமல் இன்றும் பயணிப்பதை கண்டு கொண்டார்.
     மதுரையில் இருந்து கோட்டையின் மேற்கு வாசல் வழியாக மனமுடைந்து, வெறுப்பு உணர்ச்சியோடு, தனித்துப் புறப்பட்ட கண்ணகி, வையை ஆற்றின் ஒரு கரையைப் பின்பற்றி, மேற்கு நோக்கி சென்று, நெடுவேள் குன்றத்தில் அடி வைத்து ஏறி, மலை மேல் இருந்த, வேங்கை மரச் சோலையில் நின்று தெய்வமானாள்.

    சேரன் செங்குட்டுவன், கண்ணகிக்குப் பத்தினிக் கோட்டம் நிறுவி, அதில், தான் இமயத்தில் இருந்து கொண்டு வந்த கல்லில், சிலை செய்து வைத்து வழிபாடு செய்தான். அச் செய்தியினை, அறிந்த கண்ணகியின் செவிலித் தாயும், பணிப் பெண்ணும், தேவந்தி என்கிற தோழியும் சேர்ந்து, கண்ணகித் தெய்வத்தைக் காண, காவிரிப் பூம்பட்டிணத்தில் இருந்து புறப்படுகிறார்கள். இவர்கள் மதுரைக்கு வந்து, அங்கிருந்த மாதரியின் மகள் ஐயை, கண்ணகியைப் பற்றிக் கூறக் கேட்டு, அவளையும் அழைத்துக் கொண்டு, வையை ஆற்றின் ஒரு கரை வழியாகச் சென்று, பெரிய மலையின் மேல் ஏறி, கண்ணகியின் கோயிலை அடைந்தார்கள்.

      நண்பர்களே, மேற்கண்ட இரு செய்திகளும், சிலப்பதிகாரக் கட்டுரைக் காதையிலும், வாழ்த்துக் காதை உரைப் பாட்டுப் பகுதியிலும் இடம் பெற்றுள்ளன.

     எனவே, மேலே கண்ட சிலப்பதிகார வழிகளின் படி மதுரையில் இருந்து, தரை வழியாகச் சென்றால், வையை ஆற்றின் தென் கரையே, அதற்குரிய வழி என்பதைப் பேராசிரியர் சி.கோவிந்தராசனார் ஆராய்ந்து உணர்ந்தார்.

     இவ்வழியைப் பின்பற்றி நடந்தப் பேராசிரியர் சி.கோவிந்தராசனார், 40 மைல்களுக்கும் மேல் பயணித்து, வையை ஆற்றின் தென்புறம் தொடர்ந்து நடந்து சுருளி மலைத் தொடரை அடைந்தார்.

     சுருளி மலைத்தொடரின் மேற்குப் புறக் கோடியில் உற்பத்தியாகும் வையை ஆறு, பள்ளத்தாக்கின் வழியாக, வடக்கு நோக்கி ஓடி, தேனி அருகில், கிழக்கு நோக்கித் திரும்புகிறது. இங்கு குன்னூர் இருக்கிறது. இங்கிருந்து கண்ணகி நடந்த வழியாகச் செல்வதற்கு காட்டிலும், கரம்பிலும், சதுப்பு நிலத்திலும் ஓடி வரும் வையை ஆற்றைப் பின்பற்ற வேண்டும்.

     குன்னூரில் இருந்து வையை ஆற்றைப் பின்பற்றி நடந்து, எதிரில் நிற்கும் மலைத் தொடரின் குறுக்கே, எங்காவது ஓரிடத்தில் மலை மேல் ஏறுவதைத் தவிர வேறு வழியில்லை என்பதை உணர்ந்தார்.

வையை ஒரு கரைகொண்டு ஆங்கு நெடுவேள்
குன்றம் அடிவைத்து ஏறினாள்
என்று இளங்கோ அடிகள் கூறியிருப்பதற்கு ஏற்ப, இயற்கையில் அமைப்பு அவ்விடம் இருப்பதை அறிந்தார்.

     மேல் சுருளிமலையின் ஒரு பகுதியை ஆராயத் தொடங்கினார். சுருளி மலைதான் நெடுவேள் குன்றம் என்பதை உறுதி செய்தார்.

      பண்டைக் காலத் தமிழ் மரபுப் படி, முருகனின் பெயர்களுள் ஒன்று நெடுவேள் என்பதாகும். அப்பெயராலேயே, இம்மலைத் தொடர் அழைக்கப் பட்டிருக்க வேண்டும் என முடிவு செய்தார்.

     சித்தன் இருப்பு என்ற பெயருடன் விளங்கிய மலை, ஆவினன் குடியாகி, பின்னர் பொதினி மலையாக மாறி, தொடர்ந்து அதுவும் திரிந்து பழநி மலைஎன்று ஆனது போலவே, நெடுவேள் குன்றம் என்னும் பெயர், மலையில் இருந்து சுருண்டு விழும் அருவியின் பெயரால் சுருளி மலையாக மாறியிருக்க வேண்டும் என்பதை உணர்ந்தார்.

     சுருளி மலைத் தொடராலும், பழநி மலைத் தொடராலும் இணைந்து முப்புறமும் சுவர் வைத்தாற்போல் சூழப்பட்ட பகுதியில், வர்ஷ நாடு எனப்படும், கம்பம் பள்ளத்தாக்கின் காட்டுப் பிரதேசம் பரந்து விரிந்து கிடக்கிறது.

     வர்ஷ நாட்டின் மலைப் அடிவாரப் பகுதிகளை ஆராய்ந்த பேராசிரியர் சி.கோவிந்தராசனார், கீழக் கூடலூருக்குத் தெற்கே உள்ள கோயிலில் கல்வெட்டு ஒன்றினைக் கண்டு பிடித்தார்.

     கி.பி.14 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு அது. மங்கல தேவி அம்மன் பூஜைக்கு, சேர மன்னன் ஒருவன், தானமாக வழங்கிய நிலங்களைப் பற்றிய செய்தி, அக்கல்வெட்டில் பொறிக்கப் பட்டிருந்தது.

     நண்பர்களே, பேராசிரியர் சி.கோவிந்தராசனார் அவர்களின் மனதில் ஒரு மின்னல் வெட்டியது. கண்ணகிக்கு அடைக்கலம் தந்தபொழுது, அவளுக்கு உரிய சிறப்புப் பெயரில் ஒன்றான, மங்கல மடந்தை என்னும் பெயரை கவுந்தி அடிகள், இடையர் குல மங்கையான மாதரியிடம் கூறும் காட்சி, இவருக்கு நினைவிற்கு வந்தது.

     1963 ஆம் ஆண்டு நவம்பர் 16 ஆம் தேதி, மங்கலதேவி மலை ஆராய்ச்சிக்காக கூடலூருக்குச் சென்றார் பேராசிரியர். அடுத்த நாள் 17 ஆம் தேதி, அதிகாலை நான்கு மணிக்கு, ஊர் மக்கள் சிலரின் துணையுடனும், முத்து மற்றும் கந்தசாமி என்னும், இவரது இரு மாணவர்களோடும் புறப்பட்டார்.

     கூடலூரில் இருந்து மலையின் அடிவாரத்திற்குச் செல்ல மூன்று மைல்கள் நடக்க வேண்டியிருந்தது.  முல்லையாறு, காட்டாறு, களிமண் வழுக்கல், காடு கரம்பு, யானைகளின் புழக்கம் ஆகியவற்றைக் கடந்தாக வேண்டியிருந்த்து. ஏழு மணிக்கு மலை ஏறத் தொடங்கினார்கள். மலையில் தொடர்ந்து உயரும் மூன்று அடுக்குகளையும் ஏறிக் கடக்க வேண்டியிருந்தது. இடையே பற்பல இடையூறுகள்.

     ஒரு வழியாக, மங்கல தேவி மலையின் மேற் பரப்பிற்கு வந்தார்கள். போதைப் புற்காடு எட்டடி உயரத்திற்கு வளர்ந்து மண்டிக் கிடந்தது. அப் புதற்களுக்கு இடையில், ஓரிடத்தில், மூன்று சிற்ப வேலைப் பாடுகளுடன் கூடிய பெரிய, பெரிய கற்களைக் கண்டார்.

     அவற்றுள் இரண்டு கம்பமாக நிறுத்தப் பட்டிருந்த்து. ஒன்று வில் வடிவமாக கம்பத்தின் மீது நிறுத்தப் பட்டிருந்த்து. வில் வடிவமான கல்லின், ஒரு முகப்பில், மகர வாசிகையும, இரு பெண்களின் உருவமும் புடைப்புச் சிற்பங்களாகச் செதுக்கப் பட்டிருந்தன. இதை ஆராய்ந்த்தில், இது ஒரு சிற்ப முறையிலான மகர தோரண வாயில் என்பதை அறிந்தார்.

     பேராசிரியருடன், உடன் வந்த உள்ளூர் காரர்களில் ஒரு வேட்டைக் காரரும் இருந்தார். அந்த வேட்டைக் காரர், எல்லோரையும் உரக்கக் கத்துமாறு கூறவே, அனைவரும் தங்களால் இயன்ற வரை ஒலி எழுப்பினர். எதிரே திட்டாகத் தெரிந்த காட்டில் இருந்து எதிரொலி கிளம்பியது.

        எதிரொலி கிளம்பிய திட்டைச் சுட்டிக் காட்டிய வேட்டைக் காரன், அதோ தெரிகிறதே, அதுதான் வேங்கைக் கானல். அதனுள்ளேதான் கோட்டம் உள்ளது, அங்கிருந்துதான் எதிரொலி வருகிறது என்றார்.

      பேராசிரியர் சி.கோவிந்தராசனார் அவர்களின் நெஞ்சம், ஒரு நிமிடம், துடிப்பதை சற்றே நிறுத்திவிட்டுப் பிறகு துடிக்கத் தொடங்கியது. வேங்கைக் கானல், கோட்டம், ஆகா, ஆராய்ச்சியின் இலக்கைத் தொட்டு விட்டோம். பதினேழு ஆண்டுகால ஆராய்ச்சிக்கு, உழைப்பிற்குப் பலன் கிடைத்து விட்டது. மனம் மகிழ்ச்சியில் குதூகலிக்கத் தொடங்கியது.

     இது எப்படி வேங்கைக் கானல் ஆகும்? கோட்டம் என்றால் என்ன? யார் சொன்னது? என கேள்வி மேல் கேள்விகளால், வேட்டைக் காரனைத் துளைத்தெடுத்தார்.

     அதெல்லாம் தெரியாதுங்க. இதை வேங்கைக் கானல் என்றுதான் கூப்பிடுவாங்க. இதுக்குள்ளேதான மங்கல தேவி குடி. அதுதான் கோட்டம். இதுக்கு இதுதான் பேரு என்றார்.

     வேங்கைக் கானல் என்ற பெயரைக் கேட்டவுடன் கோவிந்தராசனார் அவர்களின் உடல் ஒரு முறை சிலிர்த்தது. உள்ளத்தில் புதிய சக்தி பிறந்தது. கானலில நுழைந்தார். 200 அடி பக்கமுள்ளதாகவும், ஓரளவு சதுரமாக உள்ளதுமாகிய கோட்டத்தைக் கண்டார். கருங்கற்கள் அடுக்கிய நிலையில், யானைகள் உள்ளே வராத வகையில், மதிர் சுவர் அமைந்திருந்தது. உட்பகுதி முழுவதும் புதர் மண்டிக் கிடந்தது. மரங்கள் நிறைந்திருந்தன.

     செடி, கொடிகளால் சூழப்பட்டு சிதைந்த நிலையில் நிற்கும் கற்படைக் கோயில்கள் நான்கு ஆங்காங்கே இருந்தன. இரண்டு கோயில்கள் சிறியதாகவும், அழகுடனும் காட்சியளித்தன. இக் கோயிலின் உட்பகுதி வேரும், விழுதும், தழை மடிசல்களும், மழை நீரும் நிறைந்து, இடிபாடுகளுடன் இடிந்து கிடந்த்து.

     கோட்டத்தின் கிழக்குப் பகுதியில் ஓர் அழகான படிக்கட்டு. அதற்கு முன்னர் அரை குறையாகக் கட்டப் பட்டு, குத்துக் கற்களுடன் நிற்கும் வாயில். கோட்டத்திற்கு வெளியே சிறு சுனை.

    சுனையினைச் சூழ்ந்து, அடர்ந்து இருண்டு நிற்கும் காட்டு வேங்கை மரங்கள்.

     மிகப் பழமையோடு கூடியதும், பலி பீடத்துடன் உள்ளதுமாகிய மூன்றாவது கோயிலின் அருகினில் சென்றார்.

கண்ணகி சிலையின் மேற்பகுதி
கண்ணகி சிலையிருந்த அடிப் பகுதி (பீடம்)

      உள்ளே சுமார் இரண்டடி உயர அளவில், ஒரே கல்லில், இரண்டு கைகளுடன், இடது காலை பீடத்தில் மடக்கி, வலது காலை ஊன்றிய நிலையில், ஒரு பெண்ணின் சிலை.

      அப்பெண்ணின் தலையில் கிரீடம் இல்லை. விரிந்த கூந்தல். இடதுப் புற மார்பு சிறியதாக இருந்தது.

       நண்பர்களே, இதுதான், இதுதான் நண்பர்களே சேரன் செங்குட்டுவன் அமைத்த கண்ணகி சிலை. படிக்கும் நமக்கே, இவ்வளவு மகிழ்ச்சியும், பெருமையும் ஏற்படுகிறதே, இதனைக் கண்டு பிடித்த பேராசிரியர் சி.கோவிந்தராசனார் எவ்விதம் இருந்திருப்பார். உள்ளத்தில் உணர்ச்சிகள் அலைமோத, உற்சாகக் கடலிலே அல்லவா மிதந்திருப்பார். பதினேழு ஆண்டுகால இடையறா முயற்சி அல்லவா?

     கண்ணகி சிலை செய்யப் பெற்றக் கல், திண்மை இல்லாத, ஒருவகைக் கருங்கல். அதனால் அழிந்த அக் கட்டடத்தில் இருந்து , கீழே விழுந்த கற்களால் சிதைந்து போயிருந்தது. 1800 ஆண்டுகளுக்கு முற்பட்ட சிலையல்லவா.

     பல நூற்றாண்டுகளாக, இச்சிலை வழிபாட்டிற்கு உரியதாக இருந்துள்ளது என்பதனை, சிலையில் இருந்த வழவழப்பான தேய்வு புலப்படுத்தியது.

     இளங்கோ அடிகள் சிலப்பதிகாரத்தில், பல இடங்களில் குறிப்பிடும், நெடுவேள் குன்றமும், பத்தினிக் கோட்டமும் இதுதான் நண்பர்களே. சேரன் செங்குட்டவன் அமைத்த கண்ணகி சிலையும் இதுதான்.
கண்ணகி தீர்த்தம்
கண்ணகி கோயில் கல்வெட்டுகண்ணகி கோயில், இன்றும்  அதே நிலையில்
கண்ணகி கோயிலும், செல்லும் மலைப் பாதையும்
 (இது இன்றைய நிலைமை)

கோவை நன்னெறிக் கழகத்தின் சார்பில், 21.3.1965 அன்று ம.பொ.சி அவர்கள் தலைமையில் நடைபெற்றக் கூட்டத்தில்தான் முதன்முதலாக, கண்ணகி சிலையினைக் கண்டு பிடித்தது பற்றி வெளியுலகிற்குத் தெரியப் படுத்தினார். தொடர்ந்து பல இதழ்களில் கட்டுரைகள் எழுதினார்.

      இரண்டாவது உலகத் தமிழ் மாநாட்டின் போது, தனது கண்டுபிடிப்புப் பற்றி சிறிய ஆங்கில நூல் ஒன்றினையும் வெளியிட்டார். அன்றைய தமிழக முதல்வர் அவர்கள், 17.5.1971 அன்று பேராசிரியர் சி.கோவிந்தராசனார் அவர்களைக் அழைத்துப் பேசினார். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற, இளங்கோவடிகள் சிலைத் திறப்பு விழாவின் போது, பேராசிரியர் சி.கோவிந்தராசனார் அவர்களின் கண்டுபிடிப்பு பற்றி, தமிழக முதல்வரே , தமிழ் உலகிற்கு அதிகாரப் பூர்வமாக அறிவித்தார்.

தேடிச் சோறுநிதந்  தின்று – பல
     சின்னஞ் சிறுகதைகள் பேசி – மனம்
வாடித் துன்பமிக வுழன்று – பிறர்
     வாடப் பல செயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி – கொடுங்
    கூற்றுக் கிரையெனப் பின்மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
    வீழ்வே னென்று நினைத் தாயோ?
என்று பாடுவாரே பாரதி. அம்மகாகவியின் வரிகளுக்கு ஏற்ப, வேடிக்கை மனிதராய், வகுப்பறையே உலகென்று வீழ்ந்து விடாமல், வீறு கொண்டு எழுந்து, நடையாய் நடந்து, மலைதனில் மறைந்த வரலாற்றிற்கு உயிர் கொடுத்து, உலகறியச் செய்த மாமனிதரல்லவா இவர்.
   
கர்மவீரர் காமராசருடன் கை குலுக்குபவர் பேராசிரியர் சி.கோவிந்தராசனார்


பதினேழு ஆண்டுகள், ஒரே சிந்தனை, ஒரே செயல். சாதித்துக் காட்டிய மனிதரல்லவா பேராசிரியர் சி.கோவிந்தராசனார்.

பேராசிரியர் சி.கோவிந்தராசனார் அவர்களை சில நாட்களுக்கு முன்னர்,
இந்தப் பதிவிற்காகச் சந்தித்த போது எடுத்துக் கொண்ட படம்.
(படம் எடுத்து உதவியவர் நண்பர் கரந்தை சரவணன் அவர்கள்)
     நண்பர்களே, பேராசிரியர் சி.கோவிந்தராசனார் அவர்கள், இன்றும் நலமுடன் உள்ளார். அவருக்கு வயது 94. பத்தினி தெய்வம் கண்ணகியை நமக்கு மீட்டுக் கொடுத்தப் பேராசிரியர் சி.கோவிந்தராசனார், இன்னும் நூறாண்டு வாழ வாழ்த்துவோம். அவர்தம் உழைப்பை எந்நாளும் போற்றுவோம்.

       


     


     
பேராசிரியர் சி.கோவிந்தராசனார் குடியரசுத் தலைவரிடம் விருது பெறும் காட்சி

பேராசிரியர் சி.கோவிந்தராசனார் அவர்கள் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் பாராட்டப்பெறும் காட்சி
---------------------------------
நண்பர்களே,
ஆர்வத்தினால், பதிவு சற்று நீண்டு விட்டது.
பொறுத்தருள வேண்டுகிறேன்

என்றென்றும் நட்புடன்,
கரந்தை ஜெயக்குமார்
---------------