Tuesday, January 25, 2011

பீம்சென் ஜோஷி (1922 - 2011)


"மிலே சுர் மேரா தும்ஹாரா" என்கிற தேச ஒற்றுமைப் பாடலில்தான் முதல் தடவையாக இவரின் குரலை கேட்டேன்.கோடு கிழித்தாற் போல தீர்க்கமான,அதே நேரத்தில் அதிர்வுகள் நிரம்பிய குரல்.அந்த வசீகரிப்பின் தொடர்ச்சியாக அவரைப் பற்றிய தகவல்களைத் தேடத் துவங்கினேன்.

எம்.எஸ்.வியும்,இளையராஜாவும்தான் எனக்கு தெரிந்த அல்லது புரிந்த இசை வடிவம்.அதைத் தாண்டி மிகச் சில இசை வடிவங்களே பாதிப்பினை உண்டாக்கியிருக்கின்றன.அத்தகைய இசையில் பீம்சென் ஜோஷியின் பஜன்களும் ஒன்று. யூட்யூப் வழியே இவரது அருமையான சில பஜன்கள் அறிமுகமானது.அதன் தொடர்ச்சியாக சில குறுவட்டுகள் வழியே காரில் எனக்காக அவ்வப்போது பாடுவார்.என் மாதிரி பாமரனுக்கும் கூட இந்துஸ்தானி சங்கீதத்தின் மூலமாய் கொண்டாட்ட மனநிலையை தரமுடிந்தவர்.தமிழ் சூழலுக்கு அத்தனை பரிச்சயமில்லாது போன மிக பிரமாதமான கலைஞன்.ஹிந்துஸ்தானி இசையில் மிகவும் அழிந்து வரும் சம்பிரதாயமான ”கிரானா கரானா” என்கிற பழமையான சம்பிரதாயத்தின் வழி வந்தவர்.இந்த முறையில் பாடுவோர் தற்போது மிகச் சிலரே இருக்கின்றனர்!.

ஒரு மழை நாளில் தனியே சென்னையிலிருந்து மதுரைக்கு வண்டியோட்டிய பொழுதில் ஏழு மணி நேரமும் எனக்காக திரும்ப திரும்ப பாடிக் கொண்டே வந்தார். மறக்க முடியாத மழைப் பயணமது.மொழி புரியாவிட்டாலும் கூட ஏதோ ஒரு தளத்தில் நம்மை கட்டிப் போடும் குரல். வழக்கம் போல நமது அரசாங்கம் காலம் தாழ்த்தியே இந்த கலைஞனை “பாரத ரத்னா” மூலம் கவுரவித்தது.

இத்தனை மகத்தானவர் இன்று நம்மிடையே இல்லை.இதை அஞ்சலி பதிவென சொல்வதைக் காட்டிலும், என் மாதிரி மொழி தெரியாத ஒருவனுக்கும் தன் சங்கீதம் மூலம் கொண்டாட்ட மன நிலையை தந்த ஒரு கலைஞனை நினைவு கூறும் பதிவு.

Wednesday, January 19, 2011

திமிங்கில வேட்டை - “யோசியுங்கள்”

எந்தவொரு காரியத்தில் நுழைவதற்கு முன்னர் அது தொடர்பான சில தயாரிப்புகள் மிக அவசியமென நினைக்கிறேன். அவை குறித்து நீள அகலங்களில் அலசாமல் போகிற போக்கில் தொட்டுச் செல்லவே விரும்புகிறேன். இந்த தொடர் முடிவடையும்போது இந்த ஆரம்ப கட்ட தயாரிப்புகளின் அருமைகளை உண்ரத்தலைப்படுவீர்கள் என நம்புகிறேன்.

நண்பர்களே!, தகுதி என்ற வார்த்தையின் அர்த்தத்தை யோசித்துப் பாருங்கள், அது தானாய் வருகிறதா? , தலைமுறைகள் கொண்டு தருகிறதா?, அதிர்ஷ்ட்டத்தினால் கிடைக்கிறதா? இல்லை உங்களின் தீராத உழைப்பின் பலனாய் கிட்டுவதா?…..

எல்லாம் சரிதான், தகுதிகள் மட்டுமே பலனை தந்து விடுகிறதா?

பலன் கிடைக்க என்னவெல்லாம் சேர வேண்டும்?

பலன் கிடைக்கிறதென்றால் அதற்கு என்ன விலை தர வேண்டியிருக்கும்?

குறைந்த விலையில் பலனடைந்தால் நீங்கள் வெற்றியாளரா….?

யோசியுங்கள்…அதுதான் நம்மை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்லும் மந்திரச்சாவி…..

தொடரும்……

”It takes the same effort to do a good deed and a bad deed” Dennis Waitley’

Tuesday, January 18, 2011

மீண்டும் திமிங்கில வேட்டை!

இரண்டாண்டுகளுக்கு முன்னர் எனது ”பங்குவணிகம்” தளத்தில் பங்கு வர்த்தகம் பற்றி எழுதத் துவங்கிய தொடர்தான் “திமிங்கில வேட்டை”. மிகவும் உற்சாகமாய் துவங்கிய இந்த தொடரினை பல்வேறு காரணங்களினால் தொடர்ந்து எழுத முடியாமல் போனது.தற்போது பங்குவணிகம் தளத்தினை இடை நிறுத்தியிருப்பதாலும்,எனது எழுத்துக்களை ஓரிடத்தில் தொகுத்திடும் முயற்சியாகவும் அந்த தொடரினை இங்கு இங்கே தொடர விரும்புகிறேன்.

பங்கு வர்த்தகமென்பது நிச்சயமாக சூதாட்டமோ, அதிர்ஷ்ட சக்கரமோ இல்லை,மிக நுட்பமான உளவியல் மற்றும் அறிவியல் சார்ந்த ஒரு துறை என்பதை வலியுறுத்துவதே இந்த தொடரின் நோக்கம். எனது கல்லூரி வாழ்க்கையின் நிறைவு நாட்களில் எவ்வித அடிப்படைகளும் தெரியாமல் விளையாட்டாய் இறங்கி நிறைய சம்பாதித்து பின்னர் அதை விட நிறையவே தொலைத்த அனுபவங்களின் ஊடாக நுட்பங்களை அறிந்து மீண்ட ஒரு சாமானியனின் அனுபவமே இந்த தொடர்.

இயன்ற வரையில் எளிய தமிழில் பங்குச் சந்தையின் அமைப்பு, அடிப்படைகளை தொட்டு இந்த தொடரினை துவக்க உத்தேசித்திருக்கிறேன்.மொத்தத்தில் ஒரு சாமானியனால் சாமானியர்களை மனதில் கொண்டு எழுதப்படும் தொடர் இது.

-சரவணக்குமார்

Sunday, January 16, 2011

தலைவருக்கு பிறந்தநாள்!


உனக்கொரு பங்கும் எனக்கொரு பங்கும்
உலகில் நிச்சயம் உண்டு
ஒவ்வொரு மனிதன் உழைப்பினாலும்
உலகம் செழிப்பதுண்டு
எது வந்தாலும் ஏற்றுக் கொண்டால்
துணிவே துணையாய் மாறும்

Saturday, January 15, 2011

புத்தகத் திருவிழா!

இரண்டு நாளைக்கு முன்னரே இதை பதிந்திருக்க வேண்டும்.வழக்கம் போல சோம்பேறித்தனம்....பொய் சொல்வதானால் ரொம்ப பிஸி :)

கதையெல்லாம் எழுதப் போவதில்லை,படம் காட்டுவதோடு நிறுத்திக் கொள்கிறேன்.
பச்சையப்பன் கல்லூரிக்கு எதிரே இருக்கும் மிகப் பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய பள்ளி வளாகத்தில் இந்த கண்காட்சி நடைபெறுகிறது.நுழைவு வாயிலில் இருந்து கண்காட்சி அரங்கிற்கு 200 மீட்டர் தூரமாவது இருக்கும்.இரு மருங்கும் வினைல் தட்டிகளில் புத்தக விளம்பரம்,ஆர்ச் என ஆரம்பமே அமர்களமாயிருக்கிறது.

நாலைந்து டிக்கெட் கவுண்டர்கள் இருந்தாலும், நான் போனபோது ஒரே ஒரு கவுண்டர் மட்டுமே திறந்திருந்தது.நுழைவுக் கட்டணம் ஐந்தே ரூபாய்தான்.
நீள நீளமான வரிசைகள்,கடந்த ஆண்டை விட ஸ்டால்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.நிறைய கடைகள்,நிறைய புத்தகம்....நல்ல நடை பயிற்சி!
ஸ்டால்களின் நீள அகலங்களை இன்னமும் கொஞ்சம் அதிகரித்திருக்கலாம்.ஒரே நேரத்தில் பத்து,பதினைந்து பேர் நின்றாலே கடையில் கூட்டம் நிரம்பி வழிவதைப் போலவொரு தோற்றம்.பலர் இதனாலேயே அடுத்தடுத்த ஸ்டாலை நோக்கி நகர்வதை காண முடிகிறது.
குட்டி குட்டியாய் பள்ளி மாணவர்கள் ஆர்வமாய் புத்தகங்களை பார்வையிட வந்திருந்தனர். பலர் ஓடிப் பிடித்து விளையாடிக் கொண்டிருந்தனர்.ஒரு ஆசிரியை புத்தகங்களை வைத்துக் கொண்டு மாணவர்களுக்கு தீவிரமாய் விளக்கிக் கொண்டிருந்தார்.சந்தோஷமாய் இருந்தது.
டிக்‌ஷனரிகளுக்கு அடுத்து அநேகமாய் நிறைய கடைகளில் இருந்தது பொன்னியின் செல்வன் நாவல்தான்.எல்லோருக்கும் பதிப்பிக்கும் உரிமையை கொடுத்து விட்டார்கள் போலும்.நக்கீரன் பதிப்பகம் ஐந்து பாகத்தையும் ஒரே புத்தகமாய் வெளியிட்டிருக்கிறார்கள். மேலே உள்ள படம் அதுதான். நல்ல நேர்த்தியான வடிவமைப்பு...பார்த்தவுடன் வாங்க தூண்டும்.


ஹிந்தியை தாய் மொழியாக கொண்ட காஜல் அகர்வாலும், ரீமாசென்னும் குமுதத்தில் வரும் ஆக்கங்களை விரும்பி விழுந்து விழுந்து படிக்கிறார்களாம். கேப்பையில நெய் வழியுது!! :)

இந்த வருடம் புத்தகங்கள் வாங்க எனக்கு தடை விதித்து விட்டார்கள். கடந்த இரண்டு வருடங்களாய் வாங்கின புத்தகங்களில் பலதை இன்னமும் பிரிக்காமைதான் காரணம். என்னைத் தவிர மற்ற மூன்று பேரும் நான் பொறாமைப் படும் அளவுக்கு புத்தகங்களை வாங்கிக் குவித்தனர்.

மீண்டும் வாசிக்க ஆரம்பித்து விட்டேன்.