Monday, April 11, 2011

மயிரிழை வித்தியாசத்தில் மீண்டும் திமுக ஆட்சி!!

அரசாங்கத்தின் ஒரே ஒரு துறை விதிகளின் படி தீவிரமாக நடக்க ஆரம்பித்தால் சட்டம் ஒழுங்கு எத்தனை அருமையாக இருக்கும் என்பதை இந்த தேர்தல் நமக்கு உணர்த்தியது.அதேபோலீஸ்காரர்கள், அதே அரசு அலுவலர்கள் ஆனால் திடீரென அத்தனை பேரும் உத்தமர்களாய் மாறி கடமையை செய்தார்கள்.நிகழ்த்திக் காட்டியது தேர்தல் கமிஷன்....இதற்காகவேனும் வாழ்த்த வேண்டும் பிரவீன் குமாரையும் அவரது சகாக்களையும்.

தேர்தல் களத்தில் திமுக, அதிமுக என்கிற இரண்டே தலைகள், அவர்களுக்கு பின்னால் சில பல அல்லக்கைகள்.முதலமைச்சர் பதவிக்கான போட்டியில் ஒரு தாத்தாவும் , ஒரு பாட்டியும்!ஒரு கட்சி ஆட்சிக்கு வரவேண்டுமானால் அவர்களின் ஆதரவாளர்களும், எதிரி கட்சியை பிடிக்காதவர்களுமாய் சேர்ந்து ஓட்டுப் போட்டால்தான் சாத்தியமாகும்.அந்த வகையில் திமுக அரசுக்கு எதிரான அதிருப்தி மக்களிடம் நிறையவே இருந்தது. அதை வெகுவாக குறைத்த பெருமை எதிர்கட்சி தலைவிக்கு போய் சேர்கிறது. இதற்காகவேனும் ஆளும் கட்சிக்காரர்கள் அம்மாவுக்கு நன்றி விசுவாசத்துடன் இருக்க வேண்டும்.

இந்த தேர்தல் களேபரத்தில் நான் கவனித்த ஒன்று!, போன மாதம் வரை கிலோ 20 ரூபாய்க்கு மேல்தான் அத்தனை காய்கறி விலையும் இருந்தது. ஆனால் இந்த ஒரு மாதத்தில் விலைகள் கிலோ 10 ரூபாக்குள் வந்திருக்கிறது. இது தற்செயலானதா அல்லது திட்டமிட்டு குறைக்கப் பட்டதா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

தேர்தல் பிரச்சாரத்தில் சூப்பர் ஸ்டார் பட்டத்தை போட்டியே இல்லாமல் தட்டிப் போகிறவர் வடிவேலுதான்....மோசமான பிரச்சாரகர் பட்டத்தை போட்டியே இல்லாமல் விஜயகாந்த் தட்டிச் செல்கிறார். ஏன் இத்தனை தடுமாற்றம் கேப்டன்?, ஆரம்பத்தில் இருந்தே ஏதோவொரு பதட்டத்தில் இருப்பதாகவே அவரது உடல்மொழி காட்டியது.

அநியாயத்துக்கு எரிச்சலை தந்த பிரச்சாரம் என்றால் நிச்சயமாக அம்மாவின் பிரச்சாரம்தான்....ஊர் ஊராய் ஹெலிகாப்ட்டரில் பறந்து போய், வேனுக்கு மேலே கண்ணாடி கூண்டுக்குள் உட்கார்ந்து கொண்டு அட்டைகளில் எழுதி வைத்ததை படித்ததை ஜால்ராக்களைத் தவிர பொதுமக்கள் யாரும் ரசித்திருக்க மாட்டார்கள். தொடர்ந்து கருணாநிதியையும், அவர் குடும்பத்தையும் திட்டுவதையே பிரதானமாக செய்தார். என் பார்வையில் அவர் தொண்டர்களோடு ,குறிப்பாக பெண் வாக்காளர்களிடம் உணர்வுப் பூர்வமாய் நெருங்கவில்லை, இது பாதகம்தான்.

ஆனால் நேரெதிராக கருணாநிதி இத்தனை தள்ளாத வயதில் கூட ஊரூராய் வண்டியில்தான் பயணம் செய்து பிரச்சாரம் செய்தார். பல ஊர்களில் அவரை இறுதியாக நலமுடன் பார்த்துவிட வேண்டுமென்கிற உணர்வில் கூட்டம் அதிகமாய் வந்ததாக நினைக்கிறேன்.அநேகமாய் இது அவருக்கு கடைசி தேர்தலாய் இருக்கலாம்.தன் பிரச்சாரத்தில் கலைஞர் தனது அரசு செய்ததையும்,இனி செய்ய இருப்பதை மட்டுமே பேசினார்.இது பாஸிட்டிவ் அப்ரோச். மக்கள் வார்த்தை ஜாலங்களில் மயங்கிட இனி தயாராக இல்லை என்பதை இந்த கிழவர் நன்கு புரிந்து வைத்திருக்கிறார்.

தங்களை முன்னிலை படுத்திக் கொள்ள இரண்டு தரப்பும் பல்வேறு காரண காரியங்களை பட்டியல் போட்டாலும், சாமான்ய பொதுமகனின் எதிர்பார்ப்பு முழுக்கமுழுக்க தன் தேவைகளை ஒட்டியே அமைந்திருக்கிறது. தன்னுடைய எதிர்பார்ப்புகளை யார் கொஞ்சமாவது நிறைவேற்றுவார் என்பதையே அவன் பார்க்கிறான்.வாக்குறுதிகள்,கூட்டணி அரசியல்,சாதி ஓட்டுகள் என்பதையெல்லாம் விட அட்சிக்கு வருபவரின் மீதான நம்பகத் தன்மையே இப்போது பிரதானமாக பார்க்கப் படுகிறது.இந்த வகையில் அதிமுகவை விட திமுக மீதான நம்பகத் தன்மை அதிகம் என்பேன்.

சந்தர்ப்பவாதிகளை இப்போது மக்கள் விரும்புவதில்லை, முன்னைப் போல ஏமாறுவதும் இல்லை. சமீபத்தைய உதாரணம் பாராளுமன்ற தேர்தலில் மக்கள் பாமக வை ஒரேடியாக புறக்கணித்தது.இந்த வகையில் வைக்கோவை அம்மா கழற்றி விட்டது பச்சையான சந்தர்ப்பவாதம்.இதற்கான விலையை அவர்கள் இந்த தேர்தலில் கொடுத்தே ஆகவேண்டியிருக்கும். தென் மாவட்டங்களில் இருக்கும் 63 தொகுதியின் முடிவுகளில் இதன் தாக்கம் அதிகமாகவே இருக்கும்.இந்த புகழை அழகிரி அள்ளிக் கொள்வார்.

அனைத்து துறைகளிலும் கலைஞரின் குடும்ப ஆதிக்கம், வரலாறு காணாத உழல் குற்றச் சாட்டுகள், மின் வெட்டு, இலங்கைத் தமிழர் பிரச்சினையில் நடந்து கொண்டவிதம்(கடிதம்,தந்தி,மனிதசங்கிலி,உண்ணாவிரத நாடகம்),மணல் கொள்ளை,அரிசி கடத்தல் என திமுக வின் வெற்றிக்கு வேட்டு வைக்கும் காரணங்கள் நிறையவே இருக்கிறது.இவற்றில் நிறையவே உண்மை இருக்கிறது.இதை சரியான படி மக்கள் மத்தியில் கொண்டு சென்றிருந்தாலே அம்மா அசுர பலத்துடன் ஆட்சியை பிடித்திருக்கலாம்.

இலவச டிவி(என் மாதிரி பரம ஏழைக்கும் கூட இலவச டிவி கிடைத்திருக்கிறது!), இலவச கேஸ் அடுப்பு, ஒரு ரூபாய் அரிசி,கலைஞர் காப்பீட்டுத் திட்டம், 108 ஆம்புலன்ஸ் சேவை, மகளிர் சுய உதவிக் குழுக்களின் மூலம் நகரம் தாண்டிய பெண்களிடையே சுயசார்பினை உண்டாக்கியது,விவசாய கடன் ரத்து, மீனவர்களுக்கு 200 லிட்டர் டீசல் மானியம்,செம்மை நெல் சாகுபடி திட்டம்,அரசு ஊழியர்களுக்கு சலுகை, இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு,கணிசமான தொழில் முதலீடுகள்,உட் கட்டமைப்பு வசதிகள்,வேலையின்மையை குறைத்தது என செயல்பாடுகளின் பட்டியல் நீள்கிறது.

முந்தைய அதிமுக ஆட்சியில் இப்படியான சாதனை பட்டியல்கள் ஏதும் இல்லாததன் காரணமாகவே அம்மா கருணாநிதியை தனிப்பட்ட முறையில் திட்டித் தீர்க்கிறார் என நினைக்கிறேன்.மேலும் போன தேர்தலில் இந்த இலவசங்களை கேலி செய்து விட்டு இப்போது திமுகவின் தேர்தல் அறிக்கையை ஜெராக்ஸ் எடுத்ததைப் போல தேர்தல் அறிக்கை வெளியிட்டதன் மூலம் தனது அரசியல் நிலைப்பாட்டினை மேலும் கேலிக்குள்ளாக்கியிருக்கிறார்.

இனி பகுதி வாரியாக பார்ப்போம். வட மாவட்டங்களில் பா.ம.க மற்றும் விடுதலை சிறுத்தைகள் இடையே உள்ள இணக்கமான உறவு திமுக அணிக்கு கூடுதல் பலம். அதிமுக, தேமுதிக இடையே இத்தகைய இணக்கமான உறவும், புரிந்துணர்வும் இல்லை என்பதை அவர்களே ஒத்துக் கொள்வார்கள்.வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு என்கிற திமுக வாக்குறுதி எந்த அளவுக்கு வேலை செய்யும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். என்னுடைய கணிப்பில் இந்த பகுதியில் இராமதாசும், திருமாவளவனும் திமுக கூட்டனிக்கு கூடுதல் ஆதாயம் தருவார்கள்.திமுகவுக்கு அறுவடை!

நடு தமிழகத்தில் இரண்டு பெரும் தலைகளும் தேர்தல்களத்தில் இருப்பதால் இரண்டு தரப்பிலும் சுறுசுறுப்புக்கு பஞ்சமில்லை. காவிரி பிரச்சினையை திமுக கையாண்ட விதத்தில் விவசாயிகள் நிறைய அதிருப்தியில் இருக்கின்றனர். உள்கட்டமைப்பு வசதிகள் இந்த பகுதியில் சொல்லிக் கொள்ளும் படியாக பெரிதாக ஏதும் செய்யவில்லை என்பதும் திமுகவுக்கு பின்னடைவைத் தரும்.பொதுவில் இரண்டு அணிகளும் இங்கே ஏறத்தாழ சம அளவில் இருப்பதாகவே நினைக்கிறேன்.

தென் தமிழகத்தில் அழகிரிக்கு ஈடுகொடுக்க இனையான தளகர்த்தர் அதிமுகவில் இல்லை என்பதும், வைக்கோவின் மௌன புரட்சியும் அதிமுக விற்கு பெருத்த பின்னடைவைத் தரும். இத்தனைக்கும் அதிமுகவின் தீவிர விசுவாசிகள் நிறைந்த பகுதி இது.மொத்தமிருக்கும் 63 தொகுதிகளில் திமுக 35-42 தொகுதிகளை தக்க வைக்க போராடும். அதில் வெற்றி காணும் வாய்ப்புகளும் உண்டு.

கொங்குமண்டலம் அதிமுகவின் கோட்டை, இங்கே முன்னின்று போராட திமுகவிற்கு வலுவான தளபதிகளில்லை, ஆனால் அதிமுகவிற்கு அப்படி இல்லை.இதன் பொருட்டே திமுக பெரும்பாலான தொகுதிகளை கொமுக விற்கு விட்டுக் கொடுக்க நேர்ந்தது.சாதி ஓட்டுக்களின் புண்ணியத்தில் கரையேற நினைக்கிறது திமுக...அது அத்தனை எளிதில்லை என்பது என்னுடைய கருத்து. இங்கே அதிமுகவின் கொடி பறக்கும்.

ஆக பெரிதான அலை என்பது ஏதும் இல்லாமல் போனது ஜெயலலிதாவின் துரதிர்ஷ்டம் அல்லது கருணாநிதியின் அதிர்ஷ்டம் எனலாம்.அதிமுக தனக்கு கிடைத்த அருமையான வாய்ப்பினை தவறான அணுகு முறைகளினால் இழந்துகொண்டிருப்பதாகவே படுகிறது. கருணாநிதியின் அனுபவத்திற்கும், ஜெயலலிதாவின் எடுத்தேன் கவிழ்த்தேன் மனபோக்கிற்குமான வித்தியாசத்தை காட்டுவதாகவே இந்த தேர்தல் முடிவுகள் அமையும்.

ஆக தற்போதைய நிலைகளின் படி வெற்றியின் வாசல் படிக்கு இரண்டு அணிகளுமே வரும், கலைஞரின் சாதுர்யத்தினால் மயிரிழையில் திமுக மீண்டும் ஆட்சியமைக்கும்.