Wednesday, April 13, 2011

நான் ஓட்டுப் போட்ட காதை!!

ஒரு வழியாக தேர்தல் கொண்டாட்டங்கள் முடிவுக்கு வந்தன. என்னுடைய பொன்னான வாக்கினையும் வரிசையில் நின்று செலுத்தி விட்டேன். கிட்டத் தட்ட ஒரு மணி நேரம் வரிசையில் நின்ற என் பொறுமை மற்றும் பெருந்தன்மைக்கு, அருகே நின்ற பெண்கள் வரிசையில் இருந்த அழகிய மார்வாடிப் பெண்கள்தான் காரணம் என என் எதிரிகள் சொலல்லாம். யாரும் நம்பி விடாதீர்கள்!!.

பளிச் புன்னகைகள்,தலை அசைப்புகள்,பவ்யம், வணக்கம்,நல விசாரிப்புகள்,போலியான சிரிப்பு...நான் இத்தனை பேருக்கு பரிச்சயமானவனாய் இருக்கிறேனே என்கிற நினைப்பு அசட்டுத் தனமாய் ஒரு பெருமையை தந்தது.

பெண்கள் வரிசைக்கு போன என் மனைவி திடீரென விஐபி ஆகி விட, நிறைய பெண்கள் அவரை வலுக்கட்டாயமாக ஓட்டு போடும் அறைக்கு நேரடியாக அழைத்துப் போய், “டாக்டரம்மா”க்கு பேஷண்ட்ஸ் எல்லாம் வெயிட் பண்ணுவாங்க,அதுனால மேடம் முதல்ல போடட்டும் என காவலர்களிடம் சொல்ல அவர்களும் உள்ளே அனுமதிக்க...என்னை யாரும் கண்டு கொள்ளவில்லை. ஆக சடுதியில் ஓட்டுப் போட்டுவிட்டு மனைவி கிளம்பிவிட்டார்.இத்தனை நோயாளிகள் இருக்குமொரு ஊரில் வாழ்கிறேனே என்கிற வித்தியாசமான கவலையெல்லாம் அப்போது வந்தது.

என்னுடைய சாவடியில் 1900 ஓட்டுகளிருப்பதாக பேசிக் கொண்டார்கள்.நல்ல கூட்டம், ஆண்களை விட பெண்கள் அதிகம்.திடீரென ஒருவர் வந்து என்ன சார் இப்படி மெலிஞ்சிட்டீங்க என அதிர்ச்சியை கொடுத்தார்....விசாரிக்கராராமாம்!. அடப்பாவி 95 கிலோவிலிருந்து அநியாயத்துக்கு கஷ்டப் பட்டு 93 கிலோ வந்ததெல்லாம் மெலிந்த கணக்கில் வருமா என்ன?. மறுபடியும் போலியான சிரிப்பு,விசாரிப்புகள்.

வயதானவர்கள், மாற்றுத் திறனாளிகளை நேரடியாக அனுமதித்தனர்.போலீஸ்காரர்களும் அநியாயத்துக்கு பவ்யமாய்,பணிவாய் இருந்தனர். இந்த இடத்தில் என் நிறத்தில் களையாய்,சிரித்த முகத்துடன் ஒவ்வொருவராய் வாக்குச் சாவடிக்கு உள்ளே அனுப்பி வைத்த அந்த பெண் போலீசைப் பற்றி குறிப்பிட்டே ஆகவேண்டும்.வாக்குச் சாவடி அலுவலர்கள் அநியாயத்துக்கு தூங்கி வழிந்தனர்.இவர்களையெல்லாம் வைத்துக் கொண்டு எப்படி வேலை வாங்குகிறார்கள் என தெரியவில்லை. இவர்களால்தான் அத்தனை நீளமான வரிசை வெளியில் தேங்கியிருந்தது.

இந்த சமயத்தில் பாரதீய ஜனதா கட்சியின் வேட்பாளர் என்று ஒரு மனிதர் வந்தார்.கழுத்தில் துண்டெல்லாம் போட்டுக் கொண்டு முழு ஒப்பனையுடன் நாலைந்து கைத்தடிகளுடன் சாவடிக்குள் போய் எல்லாம் ஒழுங்காய் நடக்கிறதா என்று பார்ப்பதாய் படம் காட்டி விட்டு வந்தார்.கூட வந்த ஒரு அல்லக்கை விழுந்து விழுந்து போட்டோ எடுத்துக் கொண்டிருந்தார். வரிசையில் நின்று கொண்டிருந்த எங்களிடம் வந்து நல்லா யோசிச்சு உங்க வாக்குகளை அளியுங்கள் என அறிவுரை வேறு கூறிச்சென்றார்.

எங்கள் தொகுதியில் அதிமுக வேட்பாளர்தான் வெற்றி பெறுவார் என்பதை, எதிர்கட்சி வேட்பாளரை தூக்கத்தில் எழுப்பி கேட்டால் கூட அடித்துச் சொல்லுவார்.அத்தனை கடுமையான போட்டி இங்கே....வித்தியாசம் எவ்வளவு வரும் என்பதுதான் எல்லோருக்குமான எதிர்பார்ப்பு.காங்கிரஸ் என்பதாலும்,வேட்பாளர் தொகுதிக்கு வெளியே உள்ள ஆள் என்பதாலும் உடன்பிறப்புகள் எதையும் கண்டு கொள்ளவில்லை. அதனால் அதிமுக மகளிரணி,இளைஞரணி என ஆளாளுக்கு வரிசையில் நின்று கொண்டிருந்தவர்களிடம் பிரச்சாரம் பண்ணிக் கொண்டிருந்தனர். போலீசார் இவர்களை கண்டு கொள்ளவும் இல்லை, எதிர்கட்சி ஏஜெண்டுகள் சண்டை போடவும் இல்லை.எல்லாம் ஒரு புரிதலின் அடிப்படையில் நடந்து கொண்டிருந்தது.

வெய்யில் கொளுத்த ஆரம்பித்து தாய்மார்கள் கஷ்டப் படுவதைப் பார்த்து துடித்துப் போன ஒரு இரத்தத்தின் ரத்தம் ஓடோடிப் போய் நாலைந்து பெரிய்ய பாட்டில் பெப்சி,மிரிண்டா,கோக் என வாங்கிக் கொண்டு வந்து வரிசையில் நின்று கொண்டிருந்த பெண்களிடம் ஆளுக்கு ஒரு மடக்கா குடிச்சிட்டு அபப்டியே அடுத்தவங்களுக்கு கொடுங்க என ஐஸ் வைத்துக் கொண்டிருந்தார். ஆண்கள் பகுதியில் இருந்து சில அவலக் குரல்கள் கேட்கவே ஒரு பாட்டில் இந்தப் பக்கமும் வந்தது.பாட்டிலை கையில் வாங்கிய பெரிசு ஒருவர் மிக சாதுரியமாய் அங்கே நின்றிருந்த களையான பெண் போலீஸுக்கு கொடுத்து குடிக்கச் சொல்லி நூல் விட்டார். அந்த பெண்ணும் யோசிக்காமல் வாங்கி மடக் ம்டக்கென குடித்து விட்டு...இத்தனை பேரு நிக்கறீங்க அப்பாவுக்கு மட்டும்தான் என் கஷ்டம் தெரிஞ்சிருக்கு என சொல்லி சிரித்தார். பெரியவர் மனசுக்குள் பெரிய அளவிளான பூகம்பம் ஒன்று வெடித்ததை அவர் முகம் காட்டியது. குரூரமான ஒரு சந்தோஷம் மின்னலாய் மனதுக்குள் வர என்னைப் போலவே பலரும் அங்கே சந்தோஷித்தார்கள்.

ஒரு வழியாய் என் முறை வர பொன்னான வாக்கினை பொத்தானை நசுக்கி செலுத்தினேன்.ஓட்டுப் போட்ட சந்தோஷத்தை BlueD ரெஸ்தோரெண்டில் கொண்டாடுவதாய் ஏற்கனவே தீர்மானிக்கப் பட்டிருந்ததால் டயட்டை எல்லாம் ஒரு நாளைக்கு ஒத்தி வைத்துவிட்டு புகுந்து விளையாடினேன்.என்னவெல்லாம் சாப்பிட்டேன் என பட்டியல் போடலாம்தான்,அதனால் நீங்கள் மன உளைச்சலுக்கு ஆளான பாவம் எனக்கு வருமென்பதாலும், இயல்பான எனது தன்னடக்கத்தினாலும் அதையெல்லாம் இங்கே தவிர்த்து விடுகிறேன்.

ஒரு முரட்டு தூக்கம் போட்டு எழுந்து இந்த கதையை உங்களுக்காய் எழுதிக் கொண்டிருக்கிறேன். யாருக்கு ஓட்டுப் போட்டேன் என்று கேள்வி வருபவர்களுக்கு மட்டும் சொல்கிறேன்.காங்கிரஸ் வேட்பாளர் மீதிருந்த கோபத்தை அவர் பெயருக்கெதிரே இந்த பொத்தானை நசுக்கியதன் மூலம் காட்டிவிட்டேன்.