Saturday, June 18, 2011

அப்பா...!!


விலை மதிப்பில்லாத
எச்சில்முத்தங்களுடன் விடிந்தது
இன்றைய அப்பாக்களின் தினம்!

அப்பாவான பின்னர்தான் தெரிகிறது
என் அப்பாவின் மகத்துவம்
அப்பாவுக்கு நன்றி !!

Tuesday, June 14, 2011

படங்கள்!...படங்கள்!!....மேலும் படங்கள்!!!

உலகின் மிகச் சிறந்த புகைப் படக்காரர்களில் நானும் ஒருவன் என்பதான நினைப்பு எனக்கு எப்போதோ எப்படியோ வந்து நிரந்தரமாய் தங்கிவிட்டது.அதாவது நான் எந்த படத்தை எடுத்தாலும் அதில் ஓர் உலகத்தரம்  எங்கிருந்தோ ஓடி வந்து தங்கிவிடுகிறது.என் வாழ்க்கையில் நான் மிகத் தீவிரமாய் நம்பிக் கொண்டிருக்கும் ஒரு சில அபத்தங்களில் இதுவும் ஒன்று.

என்னுடைய அலைபேசி கேமராவின் மூலம் சமயம் கிடைக்கும் போதெல்லாம் எடுக்கிற படங்களை, பின்னர் ஏதோ ஒரு வேலையற்ற சந்தர்ப்பத்தில் இத்தனை மோசமாய் எடுக்கப் பட்ட படங்களை யாராவது பார்த்தால் நம் இமேஜ் டேமேஜ் ஆகிவிடுமே என்று மொத்தமாய் அழித்து விடுவது உண்டு.

இன்றைக்கும் அப்படி அழிக்கும்போது தோன்றிய விபரீத யோசனையின் பலனைத்தான் இனி நீங்கள் பார்க்கப் போகிறீர்கள்.மிக மோசமான படங்களின் மத்தியில் கொஞ்சம் மோசமான படங்களை தெரிந்தெடுத்து இங்கே இனைத்திருக்கிறேன்....சிறு குறிப்புகளோடு.....


பூந்தமல்லி நெடுஞ்சாலையில் இந்த சர்ச் இருக்கிறது. சாலையில் இருந்து சற்றே உள்ளடங்கி தனிமையில் இருக்க்கிறது.ஒரு மதிய வேளையில் பின்னனியில் இருந்த நீலவண்ணத்தில் கிறங்கி கிளிக்கிய படமிது.


அண்ணா நகரில் இருக்கும் KFC ரெஸ்தோரண்ட் இது. போன ஜென்மத்தில் இந்த ஆளிடம் கடன் ஏதும் வாங்கியிருப்பேன் போலிருக்கிறது. இந்த ஜென்மத்தில் அதை கொஞ்சம் கொஞ்சமாய் தீர்த்துக் கொண்டிருக்கிறேன்.


எங்க ஊர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். மேலமாசி வீதி!, இந்த சாலை பற்றி நிறைய எழுதலாம்.அத்தனை தொடர்பிருக்கிறது. எம்.எஸ்.சுப்புலட்சுமி இந்த வீதியில் இருந்த ஒரு வீட்டில்தான் பிறந்து வளர்ந்தாராம்.மஹாத்மா காந்தி கூட இந்த தெருவில் உள்ள ஒரு வீட்டில்தான் தனது புகழ்பெற்ற சாமானியனின் ஆடையை அனியத் துவங்கினார்.


சமீபத்தில் எனது கட்டுமான பணியொன்றிற்காக மொத்தமாய் செங்கல் வாங்கப் போனபோது எடுத்த படம்.அங்கே கல் அறுக்கிற தொழிளாளர்களின் இரண்டு,மூன்று வயது குழந்தைகள் ஆடையேதுமில்லாமல் சூளையைச் சுற்றி விளையாடிக் கொண்டிருந்தது மனதை பிசைந்த காட்சி.அவர்களை படம் எடுக்க நினைத்து அதற்கு துணிவில்லாமல் இதை மட்டும் காட்சிப் படுத்தி வந்தேன்.


இன்று மதியம் எடுத்த படம்.அம்மாவின் துக்ளக் தர்பாரில் இது மாதிரி இன்னமும் நிறைய காட்சிகளை பார்க்கலாம் என்று நினைக்கிறேன்.இந்த படத்திற்கு தூங்கும் ராட்சதர்கள் என்று பேர் வைக்கலாம்.


சென்னையில் தப்பிப் பிழைத்திருக்கும் மிகப் பழைய திரையரங்கங்களில் ஒன்றுதான் இது.இதற்கு பக்கத்தில் இருந்த கெயிட்டி இப்போது இல்லை. ஒரு பெரிய வணிக வளாகம் வந்து கொண்டிருக்கிறது.

இதுவும் இன்று மாலை எடுத்தது. சென்னையில் ஒரு மழைக் காலம்.

# படத்தை சொடுக்கினால் முழுப் படத்தையும் பார்க்கலாம்.

Friday, June 10, 2011

பிரிந்தவர் மீண்டும்...!

இன்று எதையோ தேடிக் கொண்டிருந்த போது பைரனின் இந்த கவிதையை வாசிக்க நேர்ந்தது.

"If I should meet you after a long time
How should I greet thee?
With silence and tears."
-Byron

பள்ளி நாட்களில் ஆங்கில கவிதைகளை மனப் பாடப் பகுதியாக அணுக நேர்ந்த கசப்புணர்வு, இன்னமும் அவற்றின் அழகியலை அணுக விடுவதில்லை.அதில் எனக்கு பெரிதாய் வருத்தமும் இருந்ததில்லை.ஆங்கிலத்தை விடவும் தமிழில் தேவைக்கு அதிகமாகவே அழகியல் சார்ந்த கவித்துவம் நிறைந்திருக்கிறது என்பது என்னுடைய தாழ்மையான கருத்து.

எழுத வந்ததில் இருந்து திசை மாறிச் செல்கிறேன்....

மேலே சொன்ன கவிதையை படித்த போது கவியரசு கண்ணதாசனும் இதே மாதிரியான வரிகளை எழுதியிருப்பது நினைவுக்கு வந்தது. ஒரு வேளை அவர் பைரனின் இந்த கவிதைகளை படித்திருக்கலாம், அல்லது சுயமாய் அனுபவித்து எழுதியிருக்கலாம். பாலும் பழமும் திரைப் படத்தில் வரும் “காதல் சிறகை காற்றினில் விரித்து” என்று துவங்கும் பாடலில் வரும் இந்த வரிகள்தான் அவை...

பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும் போது
அழுதால் கொஞ்சம் நிம்மதி,
பேச மறந்து சிலையாய் இருந்தால்
அதுதான் தெய்வத்தின் சன்னதி
அதுதான் காதல் சன்னதி


இரண்டு பேருமே அநேகமாய் ஒரே உணர்வைத்தான் தங்களின் படைப்புகளில் வடித்தெடுத்திருக்கின்றனர்.மொழியின் எளிமையும்,கருத்தின் அடர்த்தியிலும் கூட இருவரும் ஒரே மாதிரியாக அணுகியிருப்பதாய் உணர்கிறேன்.

இனி பைரனின் கவிதைகளில் தேடி வாசிக்கவேண்டும்.

பிற்சேர்க்கை: கவிச் சக்கரவர்த்தி கம்பரும் கூட இதே நயத்தில் ஓர் பாடலை எழுதியிருக்கிறார்.

“கருங்கடல் பள்ளியில் கலவி நீங்கிப்போய்
பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ”