Thursday, July 14, 2011

நித்யானந்தரும் நானும்!

இப்படியான ஒரு பத்தியை எழுதியதற்காக இப்போதும் எனக்கு வருத்தம் இல்லை.வைரஸ் காக்காய் வந்து பதிவை தூக்கி போய் விட்டது என்று கதையளந்து, எகிறிக் குதித்து நித்யானந்தாவை திட்டி எனது நேர்மையை பறைசாற்றும் அளவுக்கு யோக்கியனும் இல்லை என்பதால் அந்த கட்டுரையை  இங்கே மீள் பதிவு செய்யவே விரும்புகிறேன்.

இந்த பதிவு வெளியாகி சில நாட்களில்தான் உலகப் ப்ரசித்தி பெற்ற அந்த வீடியோ சன் டிவியில் வெளியாகி இனையமெங்கும் வெற்றி நடைபோட்டது. அப்போது நித்யானந்தரின் மேலிருந்த பொறாமை மற்றும் வயிற்றெரிச்சல் காரணமாக இதன் இரண்டாவது பாகத்தை எழுதாமலே விட்டு விட்டேன்.

ஃபெப்ரவரி 21 ம் தேதி 2010ல் எழுதிய கட்டுரை உங்களின் மீள் வாசிப்புக்காக இதோ...

முக்கியமான எச்சரிக்கை: இந்த பதிவுக்கு கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து கடந்த ஏழு வருடங்களில் இனைய பரப்பில் நான் எழுதிய ஆக்கங்களை தொகுக்கும் முய்ற்சி என்கிற பெயரில் பல கட்டுரைகள் இங்கே மீள் பதிவு செய்யப் படும் அபாயமிருக்கிறது. :)

SUNDAY, FEBRUARY 21, 2010

ப்ளாஸ்டிக் புன்னகையும், நித்யானந்த அனுபவமும்

கடந்த வார இறுதியின் அனுபவம்/அவஸ்தையை பற்றி கொஞ்சம் பிரஸ்தாபிக்கலாம் என்று இந்த பதிவு !

எனது நினைவாற்றல் குறித்தான கவலை அவ்வப்போது வருவதுண்டு.எதைக் கொட்டினாலும் தங்குவதில்லை, 'நிறைகுடம்' நானென பெருமையடித்துக் கொள்ளலாம். சமீபத்தில் சாரு நிவேதிதாவின் பதிவில் ஸ்ரீ நித்யானந்தரின் அதீத நினைவாற்றல் பயிற்சி என ஒரு விளம்பர பதிவிட்டிருந்தார்.

சமீப நாட்களில் சாருவின் பதிவுகளில் இம்மாதிரியான நித்யா புராணம் படித்து கிளர்ச்சி அடைந்தவர்களில் நானும் ஒருவன்.நித்யானந்தரின் பல யூட்யூப் க்ளிப்பிங்குகள் வேறு, இந்த ஆளிடம் ஏதோ சரக்கு இருக்கிறது என எண்ண வைத்திருந்தன.

நித்யானந்தரை நேரில் பார்க்க ஒரு வாய்ப்பு அத்தோடு, நான் அதீத நினைவாற்றல் பெற்றவனாகி விடும் சாத்தியம் வேறு கைகூடி வருகிறது! என்னே ஒரு பாக்கியம்! தொலை பேசினேன்.....

நித்யானந்தம்! , யார் மூலமா தெரிஞ்சிகிட்டீங்க?

எழுத்தாளர் சாரு நிவேதிதாவோட சைட்ல போட்ருந்தாரு !

அவசியம் வாங்க, வரும் போது உங்களுக்கு தெரிஞ்சவங்களையும் கூட்டீட்டு வாங்க!

நித்யானந்தர் க்ளாஸ் எடுப்பாரா? ஃபீஸ் எவ்வளவு ஆகும்?

மஹராஜ்தான் க்ளாஸ் எடுப்பார், எழுநூற்றி அய்ம்பது ஆகும்.

ம்ம்ம்ம்....எத்தனை மணிக்கு அங்க இருக்கனும்?

காலை எட்டு மணிக்கெல்லாம் வந்துருங்க, ஆன் த ஸ்பாட் ரிஜிஸ்ட்ரேஷன்.பதின்மூன்று வயசுக்கு மேல உள்ளவங்களுக்கு மட்டும்தான் அனுமதி.

ரொம்ப தேங்க்ஸ்ங்க, வந்துர்றேன்....

நித்யானந்தம்....


சனிக்கிழமை காலை எட்டு மணி, என்னுடைய நினைவாற்றலை பல மடங்கு அதிகரிக்கும் பேராசையில், வீட்டில் அனைவரின் கேலியையும் பொருட்படுத்தாத கர்ம வீரனாய் ஹோட்டல் காஞ்சியில் காலடி வைத்தேன். வலது புறம் இருந்த கல்யாண மஹால் போன்றதொரு பகுதியில், எழும்பூர் மற்றும் மயிலாப்பூர் நித்யானந்த சபைகள் ஃப்ளெக்ஸ் மூலமாய் வரவேற்றனர்.

சிவந்த மேனியராய், வெள்ளுடையில் ஆண்களும், பெண்களும் ...... வாலண்டியர்களாம்!, ஒரு விண்ணப்பதைக் கொடுத்து பூர்த்தி செய்ய சொன்னார்கள், கர்ம சிரத்தையாய் செய்தேன். என் பெயரை நித்யானந்தர் மாற்றிட விருப்பமா என்று கேட்டிருந்தனர். சற்றே யோசித்தேன்! ,ஏதாவது ஒரு பாடாவதி பெயரை அவர் வைக்கப் போய், அந்த ராசியில் நான் அடுத்த அவதார புருஷனாகி விட்டால்....நினைக்கவே பீதியாக இருந்தது.

என்னோடு விண்ணப்பம் பூர்த்தி செய்தவர்களில் பெரும்பாலானவர்கள், 'அவா' வாகவே இருந்தனர். எல்லாவற்றிலும் முந்திக் கொள்ளும் அவர்களின் விழிப்புணர்வு குறித்து பொறாமையாகவே இருந்தது. ஸ்பீக்கரில் நித்யானந்தரை வானுக்கும், மண்ணுக்குமாய், ஆண்டவரே!..தாண்டவரே! என நாட்டுப் புற மெட்டுக்களில் போட்டு தாக்கிக் கொண்டிருந்தனர்.

அங்கிருந்தவர்களின் ‘நேக்கு','நோக்கு' சம்பாஷைனகளில் எரிச்சலாகி எத்தனை மணிக்குத்தான் துவங்குவீர்கள் என கேட்டேன். பத்து மணிக்கு என ஈவிரக்கமில்லாமல் சொன்னார்கள். எட்டு மணிக்கே எதுக்கு வர சொன்னீங்க என்கிற என் கேள்விக்கு , எட்டு மணியில் இருந்து ரிஜிஸ்ட்ரேசன்னு சொல்லீருப்பாங்க என அசராமல் பதில் வந்தது. என் நினைவாற்றலின் மீதிருந்த நம்பிக்கையினால், அவர்களின் பதில் கோவத்தை தரவில்லை, எரிச்சல் தான் மண்டியது.

இந்த இடத்தில் ஹோட்டல் காஞ்சியை பற்றி சில வார்த்தைகள் ....... நகரின் இதயப் பகுதியில், கால ஒட்டத்தின் கவனிப்பு போதாமல் அழுக்காய் இருக்கும் மூன்று நட்சத்திர(!) ஹோட்டல். பணியாளர்களுக்கு கலர்கலராய் சீருடைகள் ,ஆனால் வருடத்திற்கு ஒரு முறைதான் வாஷிங் அலவன்ஸ் தருவார்கள் போலிருக்கிறது.

அழுது வடிகிறது ரெஸ்ட்டாரண்ட்...... பொங்கல்,வடை கேட்டேன்!, காபி குடிக்கும் சாசரில் பொங்கலை வைத்து அதன் தலையில் ஒரு ஸ்பூன் குத்தி, வடை ஓரத்தில் தொற்றிக் கொண்டு வந்தது. சரி சாப்பிட தட்டு தருவார்கள் என காத்திருந்தேன்.... காத்திருதேன்...., பொறுமையிழந்து ஒரு தட்டு கொடுக்கச் சொல்லி கேட்டால் சர்வர் நான் ஜோக்கடிப்பதாய் நினைத்து சிரித்துக் கொண்டே, இங்க இப்படித்தான் தர்றது என அலட்சியமாய் சொல்ல.....கடுப்பேறியது. அந்த அதிகாலை நேரத்தில் எனக்குள் இருந்த மிருகம் தூங்கிக் கொண்டிருந்த படியால் அவர் தப்பினார். காஃபி நன்றாக இருந்தது. அறுபத்தி ஐந்து ரூபாய் மொய்ய்ய்ய்ய்...

ஒரு வழியாய் கல்யாண மஹாலில் நுழைந்தேன்.....வாசலில் குறிப்பெடுக்க ஒரு நோட்டும், பேனாவும் கூடவே ஒரு முழ நீளத்தில் ஒரு துணியும் கொடுத்தார்கள். எதற்கென்று புரியவில்லை. சம்பந்தமே இல்லாமல் கோவனமும் அது தொடர்ச்சியான எண்ணங்களும் கிலியேற்படுத்த ஆனது ஆகட்டும் என உள்ளே நுழைந்தேன்.


மேடையில் ஒரு சிம்மசனம் போட்டிருந்தார்கள். அதில் நித்யானந்தரின் பெரிய படம் வைத்திருந்தார்கள். அதற்கு கீழே காவித் துணி போர்த்திய இன்னொரு சிம்மாசனம். லேசாக பொறி தட்டியது, மஹராஜ்தான் நடத்துவார்னு சொன்னாங்களே....அப்ப நித்யானந்தர் மஹராஜ் இல்லையா?

தொடரும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.......