Sunday, September 11, 2011

சக்திதாசன் நினைவு நாள்!

இன்றைக்கு சக்திதாசனின் நினைவு நாள். சக்திதாசனை நம்மில் பலரும் மறந்தே போயிருப்போம். இந்த பேர் கூட எத்தனை பேருக்கு பரிச்சயமாகி இருக்குமோ தெரியவில்லை.

எனக்கும் சக்திதாசனுக்கும் நேரடியாக தொடர்பு ஏதுமில்லை. ஆனாலும் கூட அவர் சகோதரர் ஒருவர் எனக்கு ஆசிரியராக இருந்திருக்கிறார்.சக்திதாசனின் தந்தையின் இரண்டாவது மனைவியின் மகனான அவர் எனக்கு ஓவிய ஆசிரியராக இருந்தார். மானாமதுரை ஒக்கூர் வெள்ளையன் செட்டியார் மேனிலைப் பள்ளியில் மூன்றாண்டுகள் அவரிடம் படித்திருக்கிறேன்.

அதிர்ந்து பேசாமல், அமைதியாய் கையில் ஒரு துணிப் பையுடன் வருவதும் தெரியாமல் போவதும் தெரியாமல் இருப்பார் அந்த மனிதர்.இன்னாருடைய தம்பி என்று தெரியாதவரையில் ஒரு சாமானிய அம்மாஞ்சி ஆசிரியராகவே தெரிவார்.அவர் பெயர் இப்போது எனக்கு நினைவில் இல்லை.இருந்தாலும் கூட சக்திதாசனுடன் எனக்கும் ஏதோ ஒரு வகையில் தொடர்பு இருந்ததென பெருமை அடித்துக் கொள்ள முடிகிறது.

தான் வாழ்ந்த காலத்தில் பலராலும் புரிந்து கொள்ள முடியாத குதர்கமான மனிதராகவே அவர் இருந்தார். அவரைப் புரிந்து கொண்ட சிலரும் அவருக்கு உதவிட முடியாதவர்களாகவே இருந்தனர்.அத்தனை கொடிய வறுமை சக்திதாசனை சூழ்ந்திருந்தது.இவை எதுவும் தன்னை பாதிக்காத ஆண்மையும்,ஆளுமையுமாய் வாழ்ந்த இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிற அந்த பெருமகனின் தொன்ணூறாவது நினைவு நாள் இன்று.

ரௌத்திரம் பழகவும்,இனியொரு விதி செய்யவும் நமக்கு சொல்லித்தந்த அந்த பெருமகனின் நினைவு நாளில் எனது நினைவஞ்சலியாக இந்த பதிவினை சமர்ப்பிக்கிறேன்.சக்தி தாசன் என்கிற பெயர் பலருக்கு பரிச்சயமில்லாமல் இருந்திருக்கலாம். ஆனால் இந்த கையெழுத்து அவர் யாரென உங்களுக்கு உண்ர்த்தலாம்.




பாரதியின் அரிய புகைப் படங்களின் தொகுப்பு...











வாழ்க நீ எம்மான்....