Tuesday, October 25, 2011

நான்!...ஆன்மீகம்!...தேடல்!...தெளிவுகள்!

கொஞ்ச நாளாய் எதுவும் எழுதவில்லை. தோன்றவில்லை என்பதே காரணம். இப்போதும் கூட வலிந்து உட்கார்ந்து இதை எழுதிட ஒரு காரணம் இருக்கிறது. 

நான் ஆத்திகனா? இல்லை நாத்திகனா? என்கிற கேள்வி என்னை சுற்றியுள்ள பலருக்கு உண்டு. அவர்களுக்கு நான் இரண்டையும் தாண்டிய ஒரு நிலையில் என்னை இருத்தி வைத்திருப்பதாக சொல்லிக் கொள்வதுண்டு.

 “மற்ற மதத்தினரின் பண்டிகை எல்லாம் பொது வெளியில் வாழ்த்துச் சொல்கிறாய், உனது அடையாளமான இந்துமத பண்டிகைகள் ஒன்று விடாமல் கொண்டாடுகிறாய், பண்டிகை தரும் உற்சாகத்தை குடும்பத்தோடு அனுபவிக்கிறாய். எல்லாம் செய்து விட்டு இங்கே பொது வெளியில் நாத்திக கருத்துக்களை சொல்லி வருவதன் மூலம் எதை சாதிக்க நினைக்கிறாய்” மிகப் பழமையான உனது இந்து மதத்தின் பெருமைகளை உணராமல் போனது ஏன்?, ஏன் இந்த இரட்டை நிலை? என்பதாக பொருள் தரும் ஒரு மின்னஞ்சல் எனது மிக நெருங்கிய நண்பரிடமிருந்து சற்று முன்னால் வந்திருக்கிறது.அதன் பொருட்டே இந்த நடுநிசியில் உட்கார்ந்து இந்த விளக்கப் பதிவினை எழுதிக் கொண்டிருக்கிறேன். 

 கடந்த ஏழு வருடங்களில் இணைய பரப்பில் ஆன்மீகத்தில் எனது பயணம், பரிசோதனைகள், தெளிவுகள் பற்றி தொடர்ந்து நிறைய எழுதியே வந்திருக்கிறேன். ஆனால் அது என்னுடையது என பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை, ஏனெனில் கடந்த இரண்டு வருடங்களாக மட்டுமே அவற்றை எனது பெயரில் எழுதிக் கொண்டிருக்கிறேன். எனவே இந்த வாய்ப்பில் கடந்த ஆண்டுகளில் எழுதியவைகளை சுருக்கமாய் தொகுப்பதன் மூலம் என் நண்பரின் கேள்விக்கான விடையை தேட முயற்சிப்போம்.

 இப்போது என்னை கொஞ்சம் அறிமுகப் படுத்திக் கொள்ள வேண்டிருக்கிறது. 

பிறப்பால் தமிழன், தாய் மொழி தமிழ், ஒரு தலைமுறைக்கு முன் வரை விவசாயம்தான் பரம்பரைத் தொழில்.உழைப்பதைத் தவிர வேறெதுவும் தெரியாதவர்கள்.எழுத்தறிவோ,பகுத்தறிவோ எங்கள் பரம்பரைக்கு பூஜ்ஜியம். இத்தனைக்கும் மேல் மகுடம் வைத்தாற் போல இந்து மதத்தவன்.....இதுதான் காலம்காலமாய் என் பரம்பரையின் அடையாளம். 

 நமது/எனது சமூக அமைப்பில் அவரவர் செய்யும் தொழிலைக் கொண்டு சாதிகளானோம். சிலர் உயர்ந்தவரானார்கள், சிலர் தாழ்ந்தவரானார்கள்.உயர்ந்தவர்களில் ஒரு பிரிவினர் மிக உயர்ந்தவர்களானார்கள். இவர்கள் ஆசிர்வதிக்கப் பட்டவர்கள். ஏனெனில் கடவுள் அவர்கள் மூலமாகவே மற்றவர்களைப் பார்ப்பார் அல்லது நமது கோரிக்கைகளை அவர்கள் மூலமாகவே கடவுளிடம் கொண்டு சேர்க்கப் படவேண்டும். 

என்னுடைய மதத்தை அதன் கோட்பாடுகளை இந்த ஆசீர்வதிக்கப் பட்ட்வர்களே தீர்மானிக்கிறார்கள்.அவர்கள் வரையறை செய்ததை நான் ஏற்றுக் கொண்டாக வேண்டும்.ஏனென்றால் அதுதான் என் கலாச்சாரம்,பண்பாடு,வரலாறு. 

 இதை எல்லாம் எதிர்த்தவன் நாத்திகன், ஆதரிக்கிறவன் ஆத்திகன். 

இதுதான் நான், எனது, என்னுடைய என சொல்லிக் கொள்ளக் கூடிய வாழ்வியல் ஆதார கூறுகளின் அடையாளம். 

 ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத ஆறு தனித்தனி மத நம்பிக்கையாளர்களின் கூட்டனியை ஷண்மதம் என்ற பெயரில் ஆதிசங்கரர் ஒன்றிணைக்கிறார். இந்த ஒவ்வொரு பிரிவின் மூலக் கடவுளர்கள் தனித்துவமானவ்ர்கள்.அவர்களுக்குள் தொடர்பே கிடையாது. இன்னும் சொல்லப் போனால் இவர்களிடையே தீராப் பகையெல்லாம் இருந்தது. ஸ்ரீரங்கத்தில் கழுவிலேற்றப் பட்ட வைணவர்களின் கதையெல்லாம் ரொம்பவே பரிதாபம். சைவர்கள் வைணவர்களையும், அவர்களின் கோவில்களையும் எப்படியெல்லாம் அழித்தார்கள் என்பதற்கு வரலாற்றில் நிறைய உறுதியான சாட்சிகள் இருக்கின்றன. 

 ஆனால் ஷண்மதமான பின்னர் அவர்களுக்கிடையே உறவுகள் உருவகிக்கப் படுகிறது. சைவ மதத்தின் கடவுளான சிவனும், சாக்த மதத்தின் கடவுளான சக்தியும் கணவன் மனைவியாகிறார்கள். காணாபத்யத்தின் கடவுளான கணபதியும், கௌமாரத்தின் கடவுளான முருகனும் அவர்களுக்கு மகன் முறையாக்கப் படுகிறார்கள்.வைணவ மதத்தின் கடவுளான விஷ்ணுவோ சக்தியின் சகோதரனாக, சிவனின் மைத்துனராக்கப் படுகின்றனர். சௌரம் என்கிற மதத்தின் கடவுளான சூரியன் அல்லது அக்கினி இந்த ஐந்து பிரிவினருடன் ஐக்கியமாகிறார். இதை உறவுகளை வலுவாக்க புராணங்கள் என்கிற பெயரில் அபத்தக்/அற்புத களஞ்சியங்கள் உருவாக்கப் படுகின்றன. 

சமணமும், புத்த மதமும் இந்திய துனைக் கண்டத்தில் செழித்து வளரத் துவங்கிய உடன் தாங்கள் அழிந்து விடுவோம் என்கிற பயத்தில் உருவான சந்தர்ப்பவாத கூட்டனியே இந்த ஷ்ண்மதம். பாரசீகத்து ஆசாமிகள் கொடுத்த இந்து என்கிற வார்த்தையை ஏற்று இந்து மதமாயிற்று. இதுதான் இந்து மதத்தின் கதை, பாரம்பர்யம், வரலாறு எல்லாம்.இந்த நிதர்சனத்தை இதை வாசிக்கிற யாரும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது. 

 தமிழ் நாட்டில் இருக்கும் தெய்வங்களுக்கு ஆதிகாலம் தொட்டு சமஸ்கிருத அர்ச்சனைகளே நடக்கிறது. கருவறையில் இருக்கும் மூலவருக்கு தமிழில் ஏன் அர்ச்சனை செய்வதில்லை?, அல்லது என்னுடைய கடவுளுக்கு தமிழ் தெரியாதா? தெரியாதென்றால் அவர்கள் எப்படி என்னுடையவர்களாக இருக்க முடியும்?. 

 தமிழ் வருடங்கள் அறுபத்தி இரண்டு அவற்றின் பெயர்கள் எல்லாம் சமஸ்கிருதத்தில்....தமிழ் வருடத்தின் பெயர்கள் ஏன் சமஸ்கிருதத்தில் இருக்க வேண்டும்?.இத்தனை சிறப்பான ஒரு மொழிக்கு, தன் வருடங்களின் பெயர்களை தமிழில் வைத்துக் கொள்ளத் தெரியாதா என்ன? 

 இப்படி நிறைய கேள்விகள்!...ஆன்மீக வாதிகள் பதில் சொல்ல முடியாத/தயங்கும் கேள்விகள் என்னிடம் இருக்கின்றன. ஆனாலும் கூட இதுதான் என் மதம், அடையாளம், கலாச்சாரம், பண்பாடு....நான் இதை கட்டிக் காத்து போற்றி சிறப்பிக்கவில்லை என்பதுதான் என் மீதான குற்றச் சாட்டு. 

 மீண்டும் என் கதைக்கு வருவோம்..... 

 பள்ளி இறுதி வரையில் அதி தீவிரமான ஆத்திகன். கல்லூரி நாட்களில் மிகத் தீவிரமான நாத்திகன். கல்லூரி நாட்களுக்குப் பின்னால் ஆத்திகமா அல்லது நாத்திகமா எதைத் தேர்ந்தெடுப்பது என்ற குழப்ப நிலை. 

 தொழில், திருமணம், குழந்தைகள், பணம், லாபம், நஷ்டம், உயரம், பள்ளம் என வாழ்க்கை தன் போக்கில் ஓடத் துவங்கிய போது என்னுடைய ஆத்திக,நாத்திக தேடல்கள் எல்லாம் பின் சீட்டில் போய் உட்கார்ந்து கொண்டன என்பதுதான் உண்மை. அந்த கால கட்டத்தில் ஆத்திகனாயும் இல்லாமல் நாத்திகனாயும் இல்லாமல் இருக்க பழகிக் கொண்டேன். என் சரிபாதியோ மிகத்தீவிரமான ஆத்திகர். அவரின் உணர்வுகளை மதிக்கவும், அனுமதிக்கவும் கூடியவனாக இருந்தேன்.இன்றும் இருக்கிறேன்....இனியும் இருப்பேன். 

 இந்த சமயத்தில் நிறைய வாசிக்க ஆரம்பித்திருந்தேன்.இலக்கில்லாமல் கிடைத்ததை எல்லாம் வாசித்தேன் என்றுதான் சொல்ல வேண்டும். ஆன்மீகத்தின் நிழலான பக்கங்களை நாத்திக காலத்தில் பெரியார் மூலமாய் வாசித்திருந்ததால், இந்த புதிய வாசிப்பின் போது நிஜமான பக்கங்களை சட்டென அடையாளம் காணவும், புரிந்து கொள்ளவும் முடிந்தது. இந்து மதம், அதன் ஆன்மீகம், அடையாளம், கலாச்சாரம் எல்லாம் எங்கே ஆரம்பித்து எப்படியாக இன்றைக்கு உருமாறி நிற்கிறது என்பதை நிராகரிப்பில்லாத வாசிப்பனுபவமே உணர்த்தியது. 

 கடவுளே இல்லை என்கிற நாத்திக நிலைப் பாட்டுக்கும், கடவுளை விழுந்து விழுந்து கும்பிடுகிற ஆத்திக நிலைப் பாட்டிற்கும் இடையேயான பொதுவெளியில்தான் பல நிஜங்கள் காலம் காலமாய் புதையுண்டிருப்பதை உணர்ந்து, அந்த பரப்பில் தேடவும் ஆரம்பித்தேன். எனது பண்பாடு, எனது கலாச்சாரம் என்பது என்னுடைய தார்மீக அடையாளமாக இருத்தல் வேண்டும், பொய்யானவைகளை என்னுடையதென சுமந்து கொண்டு அலைவதில் அர்த்தமில்லை என்பதையும் உணர ஆரம்பித்ததும் இந்த கால கட்டத்தில்தான். 

 இருப்பது ஒரு வாழ்க்கை, ஒரு வாய்ப்பு அதைக் கொண்டாடித் தீர்க்க வேண்டும் என சித்தர்கள் சொன்ன வரிகள் யோசிக்க வைத்தன.எத்தனை சத்தியமான வார்த்தைகள் இவை. கொண்டாட்டமான இந்த வாழ்க்கையில் கடவுள் இருப்பாரா?, இருக்கத்தான் முடியுமா? அப்படி இருந்தால் எப்படி இருப்பார் என்பதாக தேட ஆரம்பித்த போதுதான் பலதும் புரிய ஆரம்பித்தது. 

ஒருவருடைய எண்ணம், செயல், சிந்தனைகளே அவன் வழியினையும், வாழ்வினையும் தீர்மானிக்கின்றன. நான் முற்பகலில் செய்தவையே எனக்கு பிற்பகலில் விளைகின்றன. விதையொன்று போட சுரையொன்று முளைப்பதில்லை. அப்படி இருக்கையில் கடவுளின் பெயரால், கர்மாவின் பெயரால் எத்தனை பயமுறுத்தல்கள்!,அதற்காய் எத்தனை பரிகாரங்கள்!. அதைச் செய்ய எத்தனை இடைத் தரகர்கள்!. 

 எங்கும் நிறைந்திருப்பதாக சொல்லப் படும் கடவுள் கோவிலில் உறைந்திருக்கும் சிலைகளில் மட்டும் ஏன் குடியிருக்க வேண்டும்?, அல்லது அங்கே நடக்கும் சடங்குகளின் புனிதத்தை மட்டும் ஏற்றுக் கொள்கிறார் என ஏன் நம்ப வேண்டும்.?. ஒரு மாற்றாக எங்கு நிறைந்திருக்கும் கடவுள் உங்களுக்குள்ளம், எனக்குள்ளும் ஏன் இருக்கக் கூடாது? அப்படி இருக்கிறாரா என ஏன் நாம் தேடக் கூடாது. அப்படி தேடித் தெளிவதையே சித்தர்கள் மெய்யறிவு, அல்லது மெய்ஞானம் என்கின்றனர்.இதுவே ஞான மார்க்கம் சொல்லும் ஆன்மீகம். 

 அப்படியானால் இத்தனை பெரிய கோவில்கள், அதில் துலங்கும் கலை, கலாச்சாரம், கொண்டாட்டம், மரபுகள் இதெல்லாம் பொய்யா? இவை நம்முடையதில்லையா? 

 மிக நிச்சயமாக அவை நம்முடையதுதான்....ஆனால் கோவிலில் உறைந்திருக்கும் கடவுளர்கள் புராணங்கள் சொல்லுகிற மாதிரி, நாளும்,கோளும் கூடி நின்று ஆசீர்வதிக்க, தேவர்கள் மலர் தூவிட தோன்றிய அவதாரங்களாக இருக்க முடியாது.அவர்கள் நம்மைப் போல மிகச் சாதாரணமாய் பிறந்து தங்களுடைய சிறப்பினால் உயர் நிலை எய்திய மகாபுருஷர்களாக இருக்க வேண்டும். அவர்களின் நினைவினை சிறப்பிக்க உருவாக்கப் பட்ட நினைவிடங்களே காலப் போக்கில் ஒரு சில குழுவினரின் ஆதாயத்திற்காக/வருமானத்திற்காக மிகைப் படுத்தப் பட்ட கதைகளின் மூலம் தெய்வாம்சம் தரப்பட்டு, சடங்குகள், சம்பிரதாயங்கள்,வழிபாடுகள் என ஆகியிருக்க வேண்டும். 

 அழகர்கோவிலின் சுந்தரராஜ பெருமாளும், திருமோகூரின் காளமேகப் பெருமாளும் வெவ்வேறு காலகட்டத்தில் வாழ்ந்து மறைந்த உத்தமர்களாயிருந்திருக்க வேண்டும். கோவிலை/மதத்தை வைத்து பிழைக்கிறவர்கள் இருவரும் விஷ்ணுவின் அவதாரம் என கதைகட்டி இன்றுவரை லாபம் சம்பாதிக்கின்றனர். 

ஒன்பது அவதாரங்களே எடுத்திருப்பதாக புராணங்கள் கூறும் மஹாவிஷ்ணு 108 வைணவ திய்வ திருப்பதிகளில் 108 நாமங்களுடன் அருள் பாலிக்கிறார். இதையெல்லாம் நாம் ஏன் யோசிப்பதே இல்லை, கேட்டால் நமது கலாச்சாரம், பண்பாடு அதனால் அதை துதிக்கவும், போற்றவும் வேண்டுமென பூசி மொழுகி விடுகிறோம். 

 ஊர் ஊராய் பிரும்மாண்டமான கட்டமைப்புகளில் கொலு வீற்றிருக்கும் இந்த கடவுளர்கள் செய்ததாக சொல்லும் அற்புதங்கள் வேண்டுமானால் மிகைப் படுத்தப் பட்ட கற்பனைக் கதையாக இருக்கலாம்.ஆனால் இந்த சிலைகள் அடையாளம் காட்டும் மனிதர்கள் நிஜமானவர்கள்.என் வரையில் இவர்கள் என் மூதாதையர்கள். இந்த மஹா புருஷர்களின் ஏதோ ஒரு ஜீன் இன்னமும் எனக்குள் ஓடிக் கொண்டிருக்கலாம்.அந்த சொந்தத்தை என்னால் புறக்கணிக்க முடியாது. அதற்கு நான் மரியாதை செய்தே ஆக வேண்டும்.மதத்திற்கு மரியாதை செய்வதை விட இந்த மனிதர்களுக்கு மரியாதை செய்வதே நான் எடுக்கும் சரியான அணுகுமுறையாக இருக்கும். 

 கொண்டாட்டமே வாழ்க்கை என தீர்மானித்த பின்னர் என் மூதாதையரின் பிறந்த நாளையோ, திருமண நாளையோ அவரின் நினைவாக கொண்டாடுவதில் எனக்கு தயக்கமில்லை. இப்போதும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் கோவிலுக்குப் போகிறேன். அதை மறுக்கவுமில்லை, மறைத்ததுமில்லை. தொடர்ந்து இடைவெளி விடாமல் இருபத்தியோரு வருடமாக கார்த்திகை மாதம் விரதமிருந்து பழநிக்கு போய் கொண்டிருக்கிறேன்.சித்தரான போகநாதரையும், அவரது ஆதி குருவான சித்தசேனன் எனப்படும் முருகனையும் வணங்கி விட்டுத்தான் வருகிறேன். 

குருவை வணங்குவதில் எனக்கு தயக்கமில்லை. அவர் என் மீது எதனையும் திணிப்பதில்லை.எனக்கான தெரிவுகளை என் விருப்பத்திற்கே விடுகிறார்.என் வழியில் நான் இடறும் போது என்னை திருத்தி வழி நடத்துகிறார். நான் அவரை வணங்க வேண்டுமென்றோ, வழிபட வேண்டுமென்றோ அவர் ஒரு போதும் எதிர்பார்ப்பதில்லை. மாறாக என் மீது அன்பு செய்கிறார். அன்புதான் தெய்வ நிலை. 

 அன்புதான் சிவம் என்கிறார் திருமூலர். அந்த அன்பை என்னாலும் வளர்த்தெடுக்க முடியுமானால் நானும் கூட தெய்வம்தான். 

குறிப்பு: விடிந்தால் தீபாவளி,சில தவிர்க்க முடியாத வேலைகளின் காரணமாய் சென்னையிலிருந்து 600 கிலோமீட்டர் தொலைவில் ஒரு ஊரில் தனியே உட்கார்ந்து இதை எழுதிக் கொண்டிருக்கிறேன். சென்னை திரும்ப சனிக்கிழமையாகலாம்.தீபாவளிக்கு வீட்டில் இல்லை. ஊருக்குத் திரும்பிய பின்னரே எனது தீபாவளி கொண்டாட்டங்கள் ஆரம்பமாகும்.