Saturday, December 3, 2011

இந்து,இஸ்லாம் - ஓர் ஒப்பாய்வு

2003ம் ஆண்டில் இருந்து தமிழ் இணைய பரப்பில் புழங்க ஆரம்பித்திருந்தாலும் 2005ம் ஆண்டில்தான் எழுதும் துணிவு வந்தது. அப்போதெல்லாம் என் வாசிப்பில் இருந்த புத்தகங்க்ளை பதிவாக்கும் உத்தியை கைக் கொண்டிருந்தேன். இது என்னை ஒரு புத்தி சீவியாகக் காட்டி புகழ் பெற்ற பதிவராக்கிக் கொள்ள செய்த அபத்தமான உத்தி. காலப் போக்கில் பதிவுலக தகிடு தத்தங்கள் அனைத்தையும் பரிசோதித்து அலுத்துப் போய் இப்போதெல்லாம் எனக்கே எனக்கான பத்திகளை மட்டுமே எழுதுகிறேன். யாருக்காகவும் வலிந்து எழுதிட இப்போது தோன்றுவதில்லை.

அந்த வகையில் இந்து இஸ்லாம் பற்றிய ஒப்புமையை தொடராக எழுதியிருந்தேன்.இவை 'Stephen Knapp' எழுதிய "Proof of Vedic Culture's Global Existence" மற்றும் 'Aditi Chaturvedi' யின் "Pre-Islam" நூல்களில் இருந்து சேகரித்த குறிப்புகளின் அடிப்படையில் எழுதப் பட்டவை. எனது பழைய பதிவுகளை ஒரே தளத்தில் சேகரிக்கும் முயற்சியில்....இப்போது இந்த பதிவுகள் உங்கள் பார்வைக்கு.....


-------------------------------------------------


TUESDAY, AUGUST 01, 2006


இந்து-இஸ்லாம் விவாதிக்கலாமா-1

   


இந்துத்வாவை தாங்கிப் பிடிக்கும் நண்பர்களும், இஸ்லாத்தை தூக்கிப்பிடிக்கும் அன்பர்களும் நான் வைக்கப்போகும் கருத்துக்களின் மீதான ஆரோக்கியமான விவாதங்களை பகிர்ந்துகொள்ள அழைக்கிறேன். இந்தப்பதிவு தமிழ்மண விதிகளின் படி மட்டுறுத்தப் படாததனால் தமிழ்மண பின்னூட்ட திரட்டியில் திரட்டப்படாது, எனவே விருப்பமுள்ள அன்பர்கள் தங்கள் வலைப்பதிவில் இந்த பதிவின் சுட்டியை இருத்தி விவாதத்தை சுவையுள்ளதாக்கலாம்.

மெக்கா
இஸ்லாமியர்களின் புனிதத் தலமான மெக்கா, இந்துக்களுக்கும் புனிதத் தலம் என்று ஒரு குறிப்பு பண்டைய வேதநூலான "ஹரிஹரேஷ்வர் மஹாத்மியம்" காணப்படுகிறதாம்.

ஏகம் பதம் கயாந்து
மக்கயாந்து த்வித்தியகம்
த்ரித்தியம் ஸ்தாபிதம் திவ்யம்
முக்த்யை ஷுக்லஸ்ய சன்னிதௌ

அதாவது விஷ்னுவின் அவதாரமான வாமனரின் பாதங்கள் 'கயா','மக்கா','ஷுக்லதீர்த்தம்' ஆகிய மூன்று தலங்களை புனிதமாக்கியிருப்பதாக பொருள் கூறுகிறார்கள்.

அடுத்து இஸ்லாமியரின் புனித நகரங்களான மெக்கா, மதினா வின் பெயர்கள் சமஸ்கிருதச் சொல்லான மகா-மேதினி என்கிற வார்த்தையிலிருந்து வந்திருக்கலாம். இதன் பொருள் 'அக்கினியை வழிபடும் பூமி' என்பதாகும்.

இந்தப் பதிவிற்கு வரும் ஆரோக்கியமான வாதவிவாதங்களைப் பொருத்து என்னிடமுள்ள கேள்விகளை இனிவரும் பதிவுகளில் பதிகிறேன்.

TUESDAY, AUGUST 01, 2006


இந்து-இஸ்லாம் விவாதிக்கலாமா-2

   கடந்த பதிவின் தொடர்ச்சியாய்....

சமஸ்க்ருதத்தில் 'ஸங்கே அஷ்வதே' என்பது சிவலிங்கத்தைக் குறிக்கிறது. இதற்கு மற்றொரு பொருள் 'வெண்மை அல்லாத கல்'.சிலை வழிபாட்டை ஏற்றுக்கொள்ளாத இஸ்லாத்தில் "காபா" வில் உள்ள கருமையான கல் புனித சின்னமாய் போற்றி வழிபடப்படுகிறது. இந்தக் கல்லின் பெயர் 'ஹஜ்ர அஸ்வத்' என்று அழைக்கப்படுகிறது.

மேலும் சமஸ்கிருத வார்த்தையான 'கர்ப்ப கிரஹா' வுக்கும் 'காபா' க்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா?

அறிந்தவர்கள் விளக்கலாம்.....

(இந்தப் பதிவுகளில் குறிப்பிடப்படும் விடயங்கள் எனக்கு ஞானோதயமாய் தோன்றியவை அல்ல.......'Stephen Knapp' எழுதிய "Proof of Vedic Culture's Global Existence" மற்றும் 'Aditi Chaturvedi' யின் "Pre-Islam" நூல்களில் இருந்து எடுக்கப்பட்டவையே. .)

TUESDAY, AUGUST 01, 2006


இந்து-இஸ்லாம் விவாதிக்கலாமா-3

   புனித குரானிலும் சரி, பகவத்கீதையிலும் சரி 'சரணாகதி'தத்துவத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப் பட்டிருக்கிறது.

ஸூஃபி முறையில் ஆன்மீக வளர்ச்சியானது பொதுவில் மூன்று நிலைகளில் சொல்லப்பட்ட்டிருக்கிறது. முதல் நிலையில் துறவறம் பழகுதல் அதாவது பற்றற்ற நிலைக்கு பழகுதல், மௌனத்தில் தியானித்தல் முக்கியமானது.

அடுத்த நிலையில் ஓர் உயர்ந்த ஆசானிடம் ஞானத்தைப் பெறுதல்....தொழுகையின் போது அல்லாவின் 99 பெயர்களை,99 மணிகள் கொண்ட ஜபமாலையுடன் உச்சரித்தல்.

உயர்ந்த நிலையாய் கடவுளுக்கும்,மனிதனுக்கும் இடையேயான மகாப் புனிதமான அன்பை அனுபவிக்கும் பேரானந்த நிலை....

இந்த முறைக்கும் வைணவ மதத்தில் உபாசிக்கும் 'பக்தி' மார்க்கத்துக்கும் எந்த வித்தியாசமும் இல்லை....

WEDNESDAY, AUGUST 02, 2006


இந்து-இஸ்லாம் விவாதிக்கலாமா-4

   இந்தப் பதிவில் நாம் அனைவரும் அறிந்த சில ஒற்றுமைகளை பட்டியலிடுகிறேன்...

1.'நமாஸ்' மற்றும் 'நமஸ்காரம்' இறைவனை வணங்குதலைக் குறிக்கிறது.

2.இந்துக்கள் தினமும் இறைவனுக்கு ஐந்துவேளை பூசையும், இஸ்லாமியர் தினமும் ஐந்து முறை நமாஸ் செய்கின்றனர்.

3.இஸ்லாமியருக்கு 'ஹஜ்' யாத்திரை புனித கடமையாக சொல்லப்படுவதைப் போன்றே இந்துக்களுக்கு 'தீர்த்த யாத்திரை'.

4.இந்துக்களுக்கு வெள்ளிக்கிழமை புனிதமான நாள் அதுவும் உச்சிவேளையில் செய்யப்படும் இராகுகாலபூஜை விசேடமானது. இஸ்லாமியர்களுக்கும் வெள்ளிக்கிழமை நன்பகல் தொழுகை முக்கியமானது.

5.இந்துக்களின் பஞ்சாங்கம் சந்திரனைச் சார்ந்தது, இஸ்லாமியர்களின் நாட்காட்டியும் சந்திரனைச் சார்ந்ததே. வேதபஞ்சாங்கத்தில் உள்ள 'அதிக்' மாதத்தையொத்ததே இஸ்லாமியரின் 'சபர்' அதிக மாதத்தைக் குறிக்கிறது.

6.தர்காவில் 'சதாரை'(Chaddar)போர்த்துவதை போலவே இந்துக் கோவில்களில் இறைவனுக்கு 'வஸ்திரம்' போர்த்துவது காலம் காலமாய் வழக்கத்தில் உள்ளது.

7.இந்து மற்றும் இஸ்லாமிய மதச்சடங்குகளின் போது உச்சரிக்கப்படும் 'ஓம்', 'ஆமின்' உச்சரிப்புகள் ஒத்திருக்கிறது.

8.வேதத்தின் 'ஸ்மிருதிகள்' போன்றே இஸ்லாத்தின் 'ஷரியத்' நடத்தை விதிகளைத் தருகிறது.

9.இந்து மதத்தில் மந்திரங்களும் யந்திரங்களும் இருப்பதைப் போன்றே இஸ்லாத்தில் 'தாவீஸ்' மற்றும் 'உச்சாரணம்' காணப்படுகிறது.

10.இரு மதமும் பலதார மணத்தை ஆதரிக்கிறது...(ஹி..ஹி...ரொம்ப முக்கியமான பாயிண்ட்.)

WEDNESDAY, AUGUST 02, 2006


இந்து-இஸ்லாம் விவாதிக்கலாமா-5

   இந்தத் தொடரினை நிறைவு செய்யும் வகையில் சில எண்ணங்களை பகிர விரும்புகிறேன். இவை சிலரிடமாவது சலனத்தை ஏற்படுத்திருப்பின் அதையே பெரும் வெற்றியாக கருதுவேன்.இரு மதங்களை தாங்கிப் பிடிக்கும் அன்பர்கள் விவாதத்தில் பங்கேற்பார்கள் என எண்ணினேன்,ஒருவரையும் காணோம். காரணங்கள் பல இருக்கலாம்...அதில் நுழையவிரும்பவில்லை.

நண்பர்களே....இஸ்லாத்தின் காபாவை நிறுவிய இப்ராஹிமும் அவர் மனைவி சாராவும்...இந்து மதத்தின் பிரம்மா, சரஸ்வதியாகக் கூட இருந்திருக்கலாம்.இஸ்லாம் உருவவழிபாட்டை எதிர்த்ததை இங்கேயும் வலியுறுத்தியிருக்கலாம்('பலாநாம் லோஷ்த காஷ்டேஷு'-கல்லாத மற்றும் ஜடபுத்தியுள்ளவர்கள் கடவுளை சிலையில்தான் காண்கிறார்கள்).ஆனால் பிரச்சினை அதுவல்ல...

மதங்களின் பேரால் நாம் சகோதரத்துவத்தையும், சகிப்புத்தன்மையையும் இழந்துவருகிறோமே அதுதான் வருத்தத்தை தருகிறது.வாழும் சூழலில் சகிப்புதன்மையோடு...சகோதரத்துவத்தோடு வாழ்வதே வாழ்வின் தேடலாய்...அர்த்தமாய் அமையமுடியும்.

"மனிதனுக்கு அன்புதான் கடவுள்
அறிவாளிக்கு ஞானம்தான் கடவுள்
ஞானிகளுக்கு அவனது ஆத்மாதான் கடவுள்"


இதில் நம்மை எங்கே பொருத்திக் கொள்ள போகிறோம்?