Thursday, June 14, 2012

ஜப்பானில் எந்திரன்

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் வெளியான ரஜினியின் எந்திரன் தமிழ் மற்றும் தெலுங்கில் வசூலை அள்ளிக் குவித்தாலும் ஹிந்தியில் சுமாராகவே போனது.இந்தியாவைத் தாண்டி ரஜிக்கென இருக்கும் மிகப் பெரிய சந்தையான ஜப்பானில் கடந்த மாதம் வெளியான ஜப்பானிய வெர்ஷன் எந்திரன் சக்கை போடு போட்டுக் கொண்டிருப்பதை ஏனோ நமது மீடியாக்கள் மறந்து விட்டன.

நாலு வாரம் கடந்து விட்ட நிலையிலும் கூட இன்னமும் மற்ற பிற ஜப்பானிய படங்களுக்கு இனையான வரவேற்பும், வசூலும் ரஜினியின் ரசிகர்களுக்கு கொண்டாட்ட செய்தி. கடந்த மாதம் டோக்யோவில் நடந்த சர்வதேச திரைப் படவிழாவில்தான் இந்த படம் முதலில் திரையிட்டுக் காட்டப் பட்டது.

Tuesday, June 12, 2012

மொழிபெயர்ப்பின் தரம்!

"பர்மிய பிக்கு சொன்ன கதைகள்" என்கிற மொழி பெயர்ப்பு நூலின் விமர்சனத்தை இன்று வாசிக்க நேர்ந்தது. இந்த நூலை மொழியாக்கம் செய்தவர் திரு.சோ.பத்மநாதன். 58 கதைகளைக் கொண்ட இந்த நூலில் இடையிடையே கவிதைகளும் இடம் பெற்றிருக்கின்றன.

கதையை யாரும் மொழியாக்கம் செய்து விடமுடியும். ஆனால் கவிதையை அப்படி செய்ய முடியாது.கதையை மொழி பெயர்ப்பதற்கும், கவிதையை மொழி பெயர்ப்பதற்குமான வித்தியாசமே ஒரு மொழி பெயர்ப்பாளனின் தகுதியை, மொழியாளுமையை நிர்ணயிக்கிறது.

இந்த உதாரணத்தை பாருங்கள். தினமும் கோவா சூப் குடித்து அலுத்துப் போன துறவி மடத்தை விட்டு ஓடி விடுகிறார்.அவரை காணாது தவித்த மடத்தின் சொந்தக்காரி அவருக்கு இப்படி ஒரு கவிதையை அனுப்புகிறாள்.

I watched the road

I shed a rear,

When he will return,

Our Monk so dear,

Our Golden Monk

குரு பின்வருமாறு அதற்குப் பதில் கவிதை அனுப்புகிறார்.

Watch not the road,

Waste not your tear.

There is no return

Till your patch is clear

Of Golden Cabbage

இதை சோ.பத்மநாபன் இப்படி மொழி பெயர்க்கிறார்.

“வழிபார்த்திருக்கின்றேன்
வாள்விழிகள் நீர்சோர
தங்கத் துறவி வரத்
தாமதமேன் நானறியேன்”

“வழிபார்த் திருக்காதே
வாள்விழிநீர் சொரியாதே
கோவாப் பயிர் அழிந்தால்
குடியிருக்க நான் வருவேன்”

நானும் கூட மொழி பெயர்க்கிறேன் பேர்வழி என சில கவிதைகளை துவம்சம் செய்திருக்கிறேன். என்றாவது ஒரு நாள் இவர் தரத்திற்கு அருகில் வரவேண்டும்.

Saturday, June 9, 2012

ஒரு காட்சி!, இரண்டு மொழி!!

வெற்றிகரமாய் ஓடிய திரைப் படங்கள் மொழி மாற்றப் படுவது ஒன்றும் புதிதில்லை. சமகால தமிழ் சினிமாவின் பத்துக்கு எட்டுப் படங்கள் பிற மொழிகளின் வெற்றிப் படங்களே. சிலர் முறையாக வெற்றிப் படத்தின் உரிமையை வாங்கி மொழி மாற்றம் செய்கிறார்கள், பலர் இங்கேயும் அங்கேயும் கொஞ்சம் கொஞ்சமாய் பிய்த்து அதைப் போலவொரு புதுக்கதையை உருவாக்கி விடுகின்றனர்.

வருமானத்தையும், வெற்றியையும் மட்டுமே முன்னிருத்தும் கலை வடிவங்களில் இம் மாதிரியான சமரசங்கள் தவிர்க்க இயலாதுதான், அதே நேரத்தில் மொழி மாற்றுப் படங்கள் எல்லாம் வெற்றிகரமாய் ஓடி விடுவதில்லை. ஈயடிச்சான் காப்பியாக மொழி மாற்றப் பட்ட பல படங்கள் பெரும் தோல்வியை சந்தித்தது வரலாறு.

இன்று அந்த வகையில் எடுக்கப் பட்ட இரண்டு படங்களைப் பற்றியும் அதில் வரும் குறிப்பிட்ட ஒரு பாடல் காட்சியையும் பார்ப்போம்.

1968 ல் ஷம்மி கபூர், ராஜஶ்ரீ நடிப்பில் வெளியான படம் "பிரம்மச்சாரி". ஷம்மிக் கபூர் புகழின் உச்சியில் இருந்த போது வெளி வந்த வெற்றிப் படம். 1970 ல்  இந்தப் படம் தமிழில் சிவாஜி கணேசன், ஜெயலலிதா நடிப்பில்  "எங்க மாமா" என்ற பெயரில் வெளியானது.

மிகுந்த சிரமங்களுக்கு இடையே குழந்தைகளுக்கான அனாதை இல்லம் நடத்தும் கதையின் நாயகனின் வாழ்க்கையில் உள்ளே வந்து போகும் ஒரு பெண், அவளுடனான காதல்,பிரிவு, சோகம் என எல்லா ரசங்களும் கலந்து கட்டிய கலவைதான் இந்த படத்தின் கதை. இரண்டு மொழியிலும் படத்தின் வெற்றிக்கு பாடல்கள் பேருதவியாய் இருந்தன என்றால் மிகையில்லை.

ஹிந்தியில் முகமது ரஃபி யின் குரலில் பாடல்கள் சக்கை போடு போட்டன என்றால், தமிழில் அதற்கு சற்றும் குறையாத டி.எம்.எஸ் ன் குரலில் பாடல்கள் காலம் கடந்து நிற்கின்றன. முதலில் மூலப் படமான ஹிந்தியில் வரும் பாடல் காட்சியை பார்ப்போம்.

நாயகனை தவறாக புரிந்து கொண்ட நாயகி, அவனை வெறுப்பேற்ற வில்லனை திருமணம் செய்து கொள்ள சம்மதிக்கிறார். சூழ்நிலை கைதியான நாயகனோ, நாயகியிடம் உண்மையை சொல்ல முடியாமல் மௌனம் காக்கிறான், இந்த நிலையில் நாயகன் பகுதி நேர பாடகனாய் இருக்கும் ஹோட்டலுக்கு வரும் நாயகியும் வில்லனும் தங்களுக்கு திருமணம் ஆக இருப்பதாயும், தங்களை வாழ்த்தி பாடும்படியும் கூறுகிறார்கள்.

இதுதான் காட்சியமைப்பு, தன் இயலாமையை நாயகன் பாடலின் வழியே நாயகிக்கு தெரிவிக்க வேண்டும். இப்போது ஹிந்தி படத்தின் பாடல் காட்சியை பாருங்கள்.


மொழி புரியாதுதான், ஆனால் உணர்வுகளையும், இசையையும் உள்வாங்க முடியும்தானே...லவ்வர் பாய் எனவும் என்ட்டெர்டெய்னர் எனவும் அறியப் பட்ட ஷம்மி கபூர் இந்த காட்சியில் தனது வழமையான அங்க சேஷ்ட்டை எல்லாம் தவிர்த்து விட்டு உட்கார்ந்த நிலையில் அத்தனை பாவங்களையும் கொட்டியிருக்கிறார்.

இனி இதே பாடல் காட்சியை தமிழில் பாருங்கள். சில இடங்களில் கேமிரா கோணங்கள் கூட அச்சு அசலாக ஒரிஜினலை பின் பற்றியிருப்பார்கள். எல்லாவற்றிற்கும் மேலாய் அவர்களின் உடைகளும், அதன் நிறங்களும் கூட ஒன்றாயிருப்பதை அவதானிக்கலாம்.


காலம் காலமாய் நடந்து வரும் ஈயடிச்சான் காப்பிகளுக்கு இந்த பாடல் காட்சி ஒரு உதாரணம் மட்டுமே, ரிஸ்க் எடுக்கக் கூடாது என்பதும், வெற்றி பெற்ற சென்ட்டிமென்ட் என்பதுமே இம் மாதிரியான ஜெராக்ஸ் முயற்சிகளுக்கு அடிப்படையாக இருக்கிறது.

இந்த பதிவின் நோக்கம் யாரையும் குறை சொல்வதில்லை, வெகு நாளாய் பத்தி எழுதாமல் ட்விட்டரிலும், முகநூலிலும் குட்டி குட்டியாய் எழுதிக் கொண்டிருந்ததில் என் பழைய எழுத்தை தொலைந்து விட்டேனோ என்கிற கவலையை பரிட்சித்துப் பார்க்கும் ஒரு முயற்சியே இந்த பதிவு.

பதினைந்து நிமிடத்தில் எழுதி முடித்த பதிவு இது.... :)

Thursday, June 7, 2012

நூல் வாசிப்பு....

தமிழக அரசினால் நாட்டுடமையாக்கப் பட்ட எழுத்துக்கள் தொகுக்கப் பட்டிருக்கிறது. அறிவு வளர வேண்டும் என நினைப்பவர்கள் இவற்றை எல்லாம் வாசிக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் ரசனைகளை வளர்த்தெடுக்க நினைப்பவர்கள் படிக்கலாம்.

இவை வெறும் எழுத்துக்கள் மட்டுமில்லை, அதன் பின்னால் விரவிக் கிடக்கும் எழுத்தாளுமைகளின் வரலாறு, அறிவியல், பூகோளம் என ஒரு வாழ் நாளின்  அனுபவங்களைப் பற்றிய புரிதலை பெற ஒரு வாய்ப்பு. ஒரு தலைமுறையின் ஊடான பயண அனுபவம் இலவசமாய் கிடைக்கிறது.

வாசித்துப் பாருங்கள்.