Saturday, June 9, 2012

ஒரு காட்சி!, இரண்டு மொழி!!

வெற்றிகரமாய் ஓடிய திரைப் படங்கள் மொழி மாற்றப் படுவது ஒன்றும் புதிதில்லை. சமகால தமிழ் சினிமாவின் பத்துக்கு எட்டுப் படங்கள் பிற மொழிகளின் வெற்றிப் படங்களே. சிலர் முறையாக வெற்றிப் படத்தின் உரிமையை வாங்கி மொழி மாற்றம் செய்கிறார்கள், பலர் இங்கேயும் அங்கேயும் கொஞ்சம் கொஞ்சமாய் பிய்த்து அதைப் போலவொரு புதுக்கதையை உருவாக்கி விடுகின்றனர்.

வருமானத்தையும், வெற்றியையும் மட்டுமே முன்னிருத்தும் கலை வடிவங்களில் இம் மாதிரியான சமரசங்கள் தவிர்க்க இயலாதுதான், அதே நேரத்தில் மொழி மாற்றுப் படங்கள் எல்லாம் வெற்றிகரமாய் ஓடி விடுவதில்லை. ஈயடிச்சான் காப்பியாக மொழி மாற்றப் பட்ட பல படங்கள் பெரும் தோல்வியை சந்தித்தது வரலாறு.

இன்று அந்த வகையில் எடுக்கப் பட்ட இரண்டு படங்களைப் பற்றியும் அதில் வரும் குறிப்பிட்ட ஒரு பாடல் காட்சியையும் பார்ப்போம்.

1968 ல் ஷம்மி கபூர், ராஜஶ்ரீ நடிப்பில் வெளியான படம் "பிரம்மச்சாரி". ஷம்மிக் கபூர் புகழின் உச்சியில் இருந்த போது வெளி வந்த வெற்றிப் படம். 1970 ல்  இந்தப் படம் தமிழில் சிவாஜி கணேசன், ஜெயலலிதா நடிப்பில்  "எங்க மாமா" என்ற பெயரில் வெளியானது.

மிகுந்த சிரமங்களுக்கு இடையே குழந்தைகளுக்கான அனாதை இல்லம் நடத்தும் கதையின் நாயகனின் வாழ்க்கையில் உள்ளே வந்து போகும் ஒரு பெண், அவளுடனான காதல்,பிரிவு, சோகம் என எல்லா ரசங்களும் கலந்து கட்டிய கலவைதான் இந்த படத்தின் கதை. இரண்டு மொழியிலும் படத்தின் வெற்றிக்கு பாடல்கள் பேருதவியாய் இருந்தன என்றால் மிகையில்லை.

ஹிந்தியில் முகமது ரஃபி யின் குரலில் பாடல்கள் சக்கை போடு போட்டன என்றால், தமிழில் அதற்கு சற்றும் குறையாத டி.எம்.எஸ் ன் குரலில் பாடல்கள் காலம் கடந்து நிற்கின்றன. முதலில் மூலப் படமான ஹிந்தியில் வரும் பாடல் காட்சியை பார்ப்போம்.

நாயகனை தவறாக புரிந்து கொண்ட நாயகி, அவனை வெறுப்பேற்ற வில்லனை திருமணம் செய்து கொள்ள சம்மதிக்கிறார். சூழ்நிலை கைதியான நாயகனோ, நாயகியிடம் உண்மையை சொல்ல முடியாமல் மௌனம் காக்கிறான், இந்த நிலையில் நாயகன் பகுதி நேர பாடகனாய் இருக்கும் ஹோட்டலுக்கு வரும் நாயகியும் வில்லனும் தங்களுக்கு திருமணம் ஆக இருப்பதாயும், தங்களை வாழ்த்தி பாடும்படியும் கூறுகிறார்கள்.

இதுதான் காட்சியமைப்பு, தன் இயலாமையை நாயகன் பாடலின் வழியே நாயகிக்கு தெரிவிக்க வேண்டும். இப்போது ஹிந்தி படத்தின் பாடல் காட்சியை பாருங்கள்.


மொழி புரியாதுதான், ஆனால் உணர்வுகளையும், இசையையும் உள்வாங்க முடியும்தானே...லவ்வர் பாய் எனவும் என்ட்டெர்டெய்னர் எனவும் அறியப் பட்ட ஷம்மி கபூர் இந்த காட்சியில் தனது வழமையான அங்க சேஷ்ட்டை எல்லாம் தவிர்த்து விட்டு உட்கார்ந்த நிலையில் அத்தனை பாவங்களையும் கொட்டியிருக்கிறார்.

இனி இதே பாடல் காட்சியை தமிழில் பாருங்கள். சில இடங்களில் கேமிரா கோணங்கள் கூட அச்சு அசலாக ஒரிஜினலை பின் பற்றியிருப்பார்கள். எல்லாவற்றிற்கும் மேலாய் அவர்களின் உடைகளும், அதன் நிறங்களும் கூட ஒன்றாயிருப்பதை அவதானிக்கலாம்.


காலம் காலமாய் நடந்து வரும் ஈயடிச்சான் காப்பிகளுக்கு இந்த பாடல் காட்சி ஒரு உதாரணம் மட்டுமே, ரிஸ்க் எடுக்கக் கூடாது என்பதும், வெற்றி பெற்ற சென்ட்டிமென்ட் என்பதுமே இம் மாதிரியான ஜெராக்ஸ் முயற்சிகளுக்கு அடிப்படையாக இருக்கிறது.

இந்த பதிவின் நோக்கம் யாரையும் குறை சொல்வதில்லை, வெகு நாளாய் பத்தி எழுதாமல் ட்விட்டரிலும், முகநூலிலும் குட்டி குட்டியாய் எழுதிக் கொண்டிருந்ததில் என் பழைய எழுத்தை தொலைந்து விட்டேனோ என்கிற கவலையை பரிட்சித்துப் பார்க்கும் ஒரு முயற்சியே இந்த பதிவு.

பதினைந்து நிமிடத்தில் எழுதி முடித்த பதிவு இது.... :)