Tuesday, July 31, 2012

உலகத் திரைப்படம் - "Anche libero va bene "/இத்தாலி

உலகத் திரைப் படங்களை பார்த்தோமா, ரசித்தோமா, கொஞ்ச நாள் நினைவில் வைத்தோமா என்பதைத் தாண்டி, அப்போதைய உணர்வுகளை, படம் தந்த அனுபவங்களை தொகுத்து வைக்க முடிவு செய்திருக்கிறேன். இந்த தொடரில் முதலில் இத்தாலிய திரைப்படமான "Anche libero va bene ".

விமர்சனம் எழுதுகிறேன் பேர்வழி என யாரையும் சோதிக்க விரும்பாததால், தைரியமாய் வாசிக்கலாம். :)

நகரத்தில் வசிக்கும் நடுத்தரக் குடும்பம். குடும்பத்திற்காக உழைக்கும் கணவன்.மிக இள வயதில் தாயாகி விட்டதால் தன்னுடைய இளமைக் கொண்டாட்டங்களை இழந்து விட்டதாய் நினைத்து படி தாண்டிய மணைவி.பதின்ம வயது மகள், மகன். இவர்களின் உணர்வுகளின் ஊடே பயணிக்கிறது படம்.

படத்தின் ட்ரைய்லர்....


எளிமையான கதை, குடும்ப உணர்வு சார்ந்த பல விஷயங்களை போகிற போக்கில் அநாயசமாய் தொட்டுப் போகிறார் இயக்குனர். நான்கே கதாபாத்திரங்களை வைத்துக் கொண்டு இத்தனை லாவகமாய் கதை சொல்வது எளிதில்லை. கொஞ்சமும் சலிப்பூட்டாமல் திரையாக்கம் செய்திருக்கிறார்.

இரண்டு குழந்தைகளின் தகப்பனாய், அவர்களின் நலனுக்காக மெனக்கெடும் தந்தையின் பாத்திரத்தின் தாக்கமோ என்னவோ இந்தப் படம் எனக்கு நெருக்கமானதாய் தோன்றுகிறது.

பொறுமையுள்ளவர்கள் பார்க்கலாம்.

Thursday, July 26, 2012

வாடாத ரோசாப்பூ

80ல் வெளியான கிராமத்து அத்தியாயம் படத்தில் பாடல்கள் எல்லாம் பிரபலமானவை. அத்தனை பரிச்சயமில்லாத நடிகர்கள் நடித்ததாலோ என்னவோ இந்த படம் பற்றிய செய்திகள் இணையத்தில் அவ்வளவாக இல்லை.

இளையராஜவின் பொற்காலத்தில் வெளிவந்த பாடல்....வாடாத ரோசாப்பு :)

Wednesday, July 25, 2012

நானுந்தான்....

2007ல் எழுதியது.புனைவு எழுத்துக்களில் எனக்கு ஒரு போதும் ஆர்வம் இருந்ததில்லை. இருந்தாலும்,சோதனை முயற்சியாய் எழுதியது, அந்த வகையில் இது முதலும் கடைசியுமான ஆக்கம் என்பதால் முக்கியத்துவம் பெறுகிறது. வாக்கிய அமைப்பில் இருந்த தவறுகளை மட்டும் இப்போது திருத்தியிருக்கிறேன். முக்கியமாய் கதையில் வரும் சம்பவங்கள் யாவும் கற்பனையே...:)


மதுரை,

காலை நேர பரபரப்பில் திணறிக் கொண்டிருந்தது அந்த வங்கி

பெருந்தொகைக்கான செக் ஒன்றை High Value Clearence மூலம் உடனடியாக பணமாக்க வேண்டிய அவசரத்தில் இருந்தேன். கொம்பு முளைத்த வங்கிப் பணியாளரோ என் அவசரம் புரியாமல் நடைமுறைச் சிக்கல்களைச் சொல்லி என்னை வெறுப்பேற்ற அவரை எகிறிக் கொண்டிருந்தேன். இதை எல்லாம் வேடிக்கை பார்த்துக் கொன்டிருந்த பெண் அலுவலர் ஒருவர் இடையில் புகுந்து என்னை மேளாளர் அறைக்கு வருமாறு கனிவான குரலில் அழைத்தார்.

மவனே இருடா! வந்து உன்ன வச்சிக்கறேன்னு கருவிக்கொண்டே மேளாளரின் அறைக்குள் நுழைந்தால், என்னை அழைத்த பெண் அந்த கிளையின் மேளாளர். முப்பதுகளில் பொலிவாய் இருந்த அவரை ரசிக்கிற மனநிலையில் நான் இல்லை.. என் அவசரம் எனக்கு..உட்காரச்சொல்லி பிரச்சினனயை கேட்டார்...காசோலையை வாங்கிப் பார்த்து, ஒரு சலான் மட்டும் ஃபில்லப் பண்ணி தாங்க மற்றதை நான் பார்த்துக்க் கொள்கிறேன் என்றார்.

இது மரியாதை, என குஷியாகி, அவர் கொடுத்த சலானை பூர்த்தி செய்துகொண்டிருக்கும் போது.....

நீங்க சரவணன்தானே...!

குழப்பமாய் நிமிர்ந்து ஆமென்றேன், அடுத்து நீங்க ....... சாரோட பையண்தானே என கேட்க ஆச்சர்யமாகி, உங்களுக்கு எங்க அப்பாவை தெரியுமாவென கேட்டேன். சிரித்துக் கொண்டே ஏன் உங்களை தெரிஞ்சிருக்க கூடாதா!, எனக் கேட்டவர், என்னை தெரியலையா நான்தான் .......னை என்றார்.

இந்த இடத்துல ஷாட் கட் பண்ணி ஒரு இருவது வருசம் பின்னால போவோம்....ஃப்ளாஷ் பேக்க்க்க்க்!

பதினேழு வயசு வரை அவனுக்கு சைட் அடிக்கறதப் பத்தி பெரிசா எதுவும் தெரியாது ...அம்புட்டு சமத்து, காலைல எல்லா பசங்களும் 8.30 பஸ்ஸில தொங்கிட்டு வரும் போது அவன் மட்டும் மக்கு மாதிரி 8 மணி பஸ்ல உக்காந்து போவான்.டெய்லி க்ளாஸ்க்கு போற முதல் பையன் அவன்தான்.. பைய க்ளாஸ்ல வச்சிட்டு நேர சர்ச்சுக்கு வந்து தனியா உக்காந்திருப்பான்.பாவமன்னிப்பு கேக்க வர்றவங்களை வேடிக்கை பார்க்கறது அவனுக்கு பிடிச்ச அப்போதைய பொழுது போக்கு. காலை 8.30 மணி பஸ்ல ஸ்கூலுக்கு வர்றவனையெல்லாம் கிறுக்குப் பயலுகன்னு நெனச்சிட்டு இருந்தான். அதே மாதிரி சாயங்காலம் எல்லாப் பயலும் பஸ்ஸ்டாண்ட்ல நின்னுட்டு இருக்கும் போது அவன் முதல் பஸ்ஸுல வீட்டுக்கு போயிருவான்.

ப்ளஸ்2 வந்தப்பதான் கொஞ்சம் வெவரம் தெரிய ஆரம்பிச்சது அவனுக்கு...ஃப்ரெண்ட்ஸ் ரெண்டுபேர் அவன் ஏரியாவுல இருக்கிற இரண்டு பொண்னுங்களை லவ் பண்றதாயும்,அவங்க யாரு, அவர்களோட பிண்ணனி என்னன்னு சொல்ல முடியுமான்னு கேக்க...முதலில் பயந்தாலும் அப்புறம் ஆர்வ கோளாறில் சரி வர்றேன்னு போனான்.

அந்த நாள் அவனுக்கு இன்னிக்கும் மறக்க முடியாது...

காதல் படத்துல வருமே அந்த ஸ்கூல் பொண்ணுங்கதான் அவங்க, அதில் ஒருத்தியை பார்த்த மாத்திரத்தில் அவன் காதலில் விழுந்தான். ஆனாலும் பயம்...தினமும் அந்த பெண்ணைப் பார்க்க நண்பர்களுக்கு உதவும் சாக்கில் அவனும் அவர்களோடு ஜோதியில் ஐக்கியமானான். அந்த தேவதை அவனை மட்டும் விசேடமாய் பார்ப்பதாயும் சிரிப்பதாயும் தோன்றியது. ஒரு கட்டத்தில் நண்பர்கள் கண்டுபிடித்துவிடவே ஒரு உடன்படிக்கை தயாரானது...மூணு பேரும் ட்ரை பண்ணுவோம் யாருக்காவது ஒர்க்கவுட் ஆய்ட்டா மத்தவன் ஒதுங்கிக்கனும்னு உடன்பாடு ஆனது.....வேறு வழியில்லாமல் ஒத்துக்கொண்டான்.

ஆனால் திருட்டுதனமாய் நண்பர்களுக்கு தெரியாமல் அந்த தேவதையின் ஒவ்வொரு அசைவையும் கவனிக்க ஆரம்பித்திருந்தான்....சேகரித்த தகவல்களை வைத்துக் கொண்டு அவளை எப்படி அணுகுவது என்றெல்லாம் திட்டம் போட்டாலும் அதற்கான தைரியம் இல்லை.ஒரு வேளை வீட்டுக்கு தெரிந்தால், அவள் முடியாது என சொல்லி அவர்கள் வீட்டில் சொல்லி அசிங்கப்படுத்தி விட்டால் என நிஜங்களை நினைத்து பயந்தான், ஆனாலும் அவளை எப்படியாவது தன்னுடையவளாக்கி கொள்ள வேண்டுமென்கிற வைராக்கியத்துடன் ப்ளஸ்2 நெருக்கடிகளுடன் போராடினான்.

அம்மா அதிரடியாய் அவனது பின்னனியில் இருந்ததால் ஓரளவு நல்ல மதிப்பெண்களுடன் தேறினான்.மதுரையில் பொறியியல் சேர்ந்தான்.அவனது இரு நண்பர்களும் தேர்வில் பரிதாபமாய் சோடை போனது இன்றும் அவன் வருந்தும் விஷயம்.புதிய சூழல்,புதிய நண்பர்கள்,புதிய பெண்களின் அருகாமை கொஞ்சம் கொஞ்சமாய் தேவதையின் நினைப்பு கரைந்தது. இருந்தாலும் வாழ்க்கையில் படிச்சி முடிச்சி செட்டிலானவுடன் வீட்டில் சொல்லி அவளை துனைவியாக்க வேண்டுமென அரசியல்வாதி போல நீண்டகால திட்டம் ஒன்றை கிடப்பில் போட்டிருந்தான்.

இங்கன ஃப்ளாஷ்பேக்கை கட் பண்ணிடுவோம்....

வ்வாவ்...அடையாளமே தெரியல என்றேன், நிஜமான ஆச்சர்யத்துடன். அவரோ பதில் சொல்லாமல் சிரித்துக் கொண்டார்.எப்போதோ பேசவேண்டும், பழக வேண்டும் என துடியாய் துடித்த பெண்ணிடம் இப்போதுதான் பேச முடிகிறது. இந்த வாழ்க்கைதான் எத்தனை கொடூரமானது.....ம்ம்ம்ம். சம்பிரதாயமாய் பரஸ்பரம் விசாரித்துக் கொண்டோம். நான் நிறைய மாறிவிட்டதாக கூறினார்,அவரும் நிறைய மாறிவிட்டதாய் சிரித்துக் கொண்டே  பொய் கூறினேன்...நிஜத்தில் நான் அவரை மறந்திருந்தேன் என்பதுதான் உண்மை.

வேலை எல்லாம் முடிந்து அவரிடம் விடைபெற்றுக் கொண்டு வெளியே வந்தபோதுதான் கிறுக்குத்தனமாய் அந்த எண்ணம் தோன்றியது. மீண்டும் அவர் அறையை பாதி திறந்து உள்ளே எட்டிப் பார்க்க, என்ன என்பது போல அவர் நிமிர....

நான் ஒன்னு சொன்னா தப்பா நினைக்க மாட்டீங்களே...என இழுத்தேன். அவர் சிரித்தபடியே கண்ணாடியை உயர்த்திப் பார்க்க....

நான் வாழ்க்கையில லவ் பண்ணின முதல் பெண் நீங்கதான் என்றேன்...

சிரித்துக் கொண்டே தலை கவிழ்ந்து பைல்களை புரட்டிக் கொண்டே அவர் சொன்னார்....

நானுந்தான்....

சட்டென இறுக்கம் பரவ என்ன சொல்லதென தெரியவில்லை....

வலிய சிரிப்பை வரவழைத்துக் கொண்டு....God bless you...takecare...bye என்றேன் அவரும் சிரித்துக் கொண்டே அதை ஆமோதிக்க அதன் பிறகு திரும்பிப் பார்க்க தைரியம் இல்லாமல் வெளியேறினேன்.

மனசு லேசாய் இருந்தது, பாரமாகவும் இருந்தது.

Monday, July 16, 2012

காலம் (மீள் பதிவு)

எனது பழைய எழுத்துக்களை ஒரே இடத்தில் சேகரிக்கும் முயற்சியில், கடந்த 2005ல் "காலம்" குறித்து  எழுதியதை மீள் பதிப்பிக்கிறேன்.இணையவெளியில் எழுதத் துவங்கிய காலத்தில் என் வாசிப்பனுபவங்களை எழுதுவதன் மூலம், மற்றவர்கள் முன் என்னை ஒரு புத்திசாலியாக காட்டிக் கொள்ளும் முனைப்பில் எழுதியது இந்த ஆக்கம். இது ஒன்றும் கட்டுரை இல்லை, வெறும் தகவல் குறிப்புதானே என உங்களுக்குத் தோன்றினால் அது சரியான கணிப்பு, ஏனெனில் இந்த ஆக்கம் அந்த தரத்தில்தான் இருக்கிறது....

காலம் என்பது மகா ரகசியம்...அதனுள் எல்லா ரகசியங்களும் அடங்கியிருக்கின்றன.

இப்படி காலங்காலமாய் அலசப்பட்ட இந்த காலம்..... அதைப் பற்றிய தேடல்கள் இன்னும் எத்தனை காலத்துக்கு தொடருமோ?...காலத்துக்குதான் வெளிச்சம்...ம்ம்ம்ம் அனேகமாக அதிகமாய்பெயரிடப்பட்டு, பகுக்கப்பட்டு அணுகப்பட்டது காலமாய்த்தான் இருக்கும்.

நல்லகாலம்,கெட்டகாலம்,ராகுகாலம்,நிகழ்காலம்,எதிர்காலம்,இறந்தகாலம்,கோடைகாலம்,குளிர்காலம்,இளவேணிற்காலம்....என சொல்லிக்கொண்டே போனாலும், பொதுவில் காலத்தின் போக்கில் எல்லாமே அழிவதும் பின் புதிதாய் துவங்குவதும் மறு(றை)க்க முடியாத உண்மை.

நமது பண்டைய இலக்கியங்களில் காலம் பல கோணங்களில் அலசப்பட்டிருக்கிறது."ககோல சாஸ்த்ர"(க-அண்டவெளி, கோல-உருண்டையானவை) என்னும் நூலில் கோள்களின் வடிவம்,
தன்மை மற்றும் சுழற்சி காலம் ஆகியவை கணக்கிடப்பட்டு கூறப்பட்டுள்ளது.

'ஜெய்மினி' ரிஷியின் மீமாம்ச தத்துவத்தில் காலம் உண்மையானது அல்ல என்றும் அது அடுத்தடுத்து நிகழும் நிகழ்வுகளால் ஏற்படுகிற உணர்வு என்கிறார்.

'வைசேஷிக தர்ஷனத்தில்' (விவரமான அல்லது தீர்க்கமான பார்வை) ரிஷி கனாதரின் கூற்றுப்படி பிரபஞ்சம் நிலம்,நீர்,ஆன்மா,மனம்,புத்தி,அண்டவெளி,காலம்,ஒளி,ஆகாயம் என ஒன்பது அம்சங்களை உள்ளடக்கியது. இதில் ஆகாயம் காலி இடத்தை நிரப்பியுள்ளது, ஆகாயத்தை தவிர மற்றயைய அம்சங்கள் நுண்துகள்களால் ஆனது என்கிறார். இத்துகள்களை பகுக்கமுடியாத அளவுக்கு நுண்ணியது.இந்த அனுக்களின் சேர்க்கையினால் பொருள்கள் தோன்றி, மாற்றமடைந்து காலப்போக்கில் அதிலேயே கரைந்து விடுகின்றன.

கபில முனிவரின் 'சாங்க்ய தர்ஷனத்தில்'(அளக்க கூடியவைகளின் தத்துவம்) காலத்தை மீறிய ஏதோவொன்று இருக்கிறது.அதுவே மாறி மாறி வரும் படைப்பிற்கும், அழிவிற்கும் காரணமாய் அமைகிறது.

உபநிஷத கால ரிஷிகள்,முனிவர்களின் கூற்றின்படி காலமும் அண்டவெளியும் ஒரே தத்துவத்தின் மாறுபட்ட வெளிப்பாடுகளே.மேலும் உபநிஷத்துக்களில் மூன்று விதமான ஆகாசங்களை(அண்டவெளி) பற்றிய குறிப்புகள் காணமுடிகிறது.

1.பூதாகாஷம் என்பது பொருட்கள் உண்டாக்கப்பட்டு,காக்கப்பட்டு, அழிக்கப்படுகிற இவ்வுலகம்

2.சித்தாகாஷமானது எண்ணங்களும், கருத்துக்களும், உணர்வுகளும் தோன்றி, வளர்ந்து, கரைந்து போகும் இடம்

3.சிதாகாஷம் அல்லது மகாகாலமானது காலத்தின் மிக உயர்ந்த அல்லது பரந்தநிலை. நிலையான அன்பு, ஆனந்தம், அமைதி தரும் உயர்நிலையாகும்.இதுவே சிவதத்துவம் எனவும் கூறப்படுகிறது.

காலத்தின் அதிதேவதையான காலதேவன் எனப்படும் யமன் மரணத்தை தீர்மாணிப்பவனாகவும் பாரபட்சமின்றி நடக்கும் தர்மராஜனாகவும் குறியிடப்படுகிறான்.

பாகவதத்திலும், பகவத்கீதையிலும் காலத்தைப்பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன, பதிவின் நீளம் கருதி அவற்றை இங்கே விளக்கவில்லை.

இதையெல்லாம் கோர்த்தினைத்து பார்க்கும்போது எனக்கு தோன்றுவதெல்லாம்.....ஆசைகள்...அதன் வெளிப்பாடுகள் அதன் நிகழ்வுகளும் விளைவுகளுமே காலத்தின் கூறுகளாயிருக்கும். ஆசைகளும், அபிலாஷைகளும் உள்ளளவும் காலத்தின் காலமிருக்கும், அதன் தேடல்களும் தொடரும்.

Thursday, July 12, 2012

மாற்றான் Vs Stuck on You

அலுப்பின் காரணமாகவே இப்போதெல்லாம் சினிமாவைப் பற்றியோ,பங்குச்சந்தை பற்றியோ எழுதுவதில்லை. சினிமாவை விட்டு தற்காலிகமாய் விலகி ஓராண்டுக்கு மேலாயிற்று.வெறும் ரசிகனாய் இருந்த காலத்தில் ரசித்த தமிழ் சினிமாவை, வர்த்தகனாய் மாறிய பின்னர் ரசிக்க முடியவில்லை என்பது என் வரலாற்றின் சோகம்.

தமிழ் திரையுலகம் எல்லாத் துறைகளிலும் சர்வதேச தரத்தை நெருங்கிக் கொண்டிருப்பதாக பீற்றிக் கொள்கிறார்கள். இதில் எந்தளவு உண்மை இருக்கிறது என்பது இந்த துறையை தொடர்ந்து கவனிக்கிறவர்களுக்குத் தெரியும்.எது எப்படியோ என்னைக் கேட்டால் ஒரே ஒரு துறையில் மட்டும் நாம் சர்வதேசங்களை மிஞ்சியவர்கள் என அடித்துச் சொல்லுவேன். அதுதான் காப்பியடிக்கும் துறை.....

அவனவன் கோடிகோடியாய் பணத்தையும், அதற்கு குறைவில்லாத மனித உழைப்பையும் போட்டு படமெடுத்தால் அதை நோகாமல் நொங்கெடுத்து தன்னுடையதாய் காட்டிக் கொள்ளும் சூராதிசூரர்கள் நிறைந்தது நம் தமிழ்த் திரையுலகம்.அந்த வரிசையில் நேற்று சிக்கிய ஒன்றை இன்று பார்ப்போம்.

சூர்யா நடித்த மாற்றான் திரைப்படத்தின் ட்ரெய்லர்கள் கடந்த சிலநாட்களாய் யூட்யூபில் வலம் வருகின்றன. எனக்கொன்ன்றும் அவர் மீது பெரிதான அபிப்ராயமில்லாததால் அதை பார்க்கவில்லை. ஆனால் இந்த வார ஆனந்தவிகடனில் இந்த படத்தைப் பற்றி ஆஹா, ஓஹோவென கவர் செய்திருந்தார்கள். கதையின் அவுட்லைன் வாசித்த போது ஒட்டிப் பிறந்த இரட்டையர்களைப் சுற்றி நடக்கும் கதை என தெரிந்தது. இன்னும் சொல்லப் போனால் அந்தக் காலத்து எம்.ஜி.ஆர் படமான "நீரும் நெருப்பும்" இதே அவுட்லைனை கொண்டதுதான்.

படத்தின் இயக்குனரோ தான் விமானத்தில் பறந்து கொண்டிருந்த போது நேஷனல் ஜ்யோக்ராஃபின் புத்தகத்தை புரட்டிய போது பார்த்த தகவலே இந்த படத்திற்கு தன்னை தூண்டியதாக பெருமையடித்திருந்தார். அப்போதுதான் இதே மாதிரியான ஆங்கில படம் ஒன்றை சில வருடங்களுக்கு முன்னர் பார்த்தது நினைவுக்கு வந்தது.படத்தின் பெயர் நினைவில்லை, கூகிளாண்டவரை சரணடைந்த வேளையில் அதிக சிரமமில்லாமல் சிக்கியது. அந்த படம் "Stuck on You"

இரண்டு படங்களின் கதைகளும் அநேகமாய் ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது. அநேகமாய் ஆறேழு வித்தியாசங்களில் தமிழ் படத்துக்காரர்கள் தங்களை ஒரிஜினல் என மெச்சிக் கொள்ளுவாரோ என்னவோ....

இப்போது ஆங்கில படத்தின் ட்ரெய்லரை பாருங்கள்.இனி தமிழ் படத்தின் ட்ரெய்லர்...கதாநாயகர்களின் ஹேர் ஸ்டைலில் இருந்து ஒற்றுமை ஆரம்பிக்கிறது. படம் வரட்டும் இன்னும் என்னவெல்லாம் ஜெராக்ஸ் எடுத்திருக்கிறார்கள் என பார்ப்போம்.

Monday, July 9, 2012

மன்மோகன் என்னும் மர்மயோகி? -1

என்கிற கட்டுரையின் மீதான விவாதத்தின் போது நான் முன் வைத்த எனது பார்வையை சேகரித்துக் கொள்ள இந்த பதிவு. இதன் மீது விரிவான கட்டுரை ஒன்று எழுத வேண்டும். தற்போது பயணத்தில் இருப்பதால் அதற்கான முழுமையான தகவல்கள் மற்றும் புள்ளி விவரங்கள் இப்போது என்னிடம் இல்லை.சென்னை திரும்பியது எழுதிட முயற்சிக்கிறேன்.

இனி அங்கே  நான் பகிர்ந்த கருத்து....

இதற்கு ஆங்கிலத்தில் பதில் சொல்வது இலகுவானது. ஆனாலும் தமிழில் வர்த்தக எழுத்துக்கள் வேண்டும் என்பதற்காக என்னுடைய கருத்தை தமிழில் பகிர்கிறேன்.

மன்மோகன் ஒரு பொருளாதார நிபுணர், மன்மோகன் ஒரு அரசியல்வாதி என்கிற இரண்டு அத்தியாயங்களை நாம் குழப்பிக் கொள்கிறோம் என நினைக்கிறேன். நிதி மந்திரியாக இருந்த காலத்தில் மன்மோகனுக்கு எல்லா சுதந்திரமும் இருந்தது. எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்கிற நிலையில் இருந்த பொருளாதாரத்தை உயிர்ப்பிக்க புதிய பரிசோதனைகளை விடவும் அமெரிக்க மாதிரி பொருளாதார அணுகுமுறை பாதுகாப்பானது என மன்மோகன் நினைத்ததில் அல்லது அதனை கொஞ்சம் இந்தியத் தனத்தோடு சாயம்பூசி அறிமுகப் படுத்தியதில் தவறில்லை என்றே நான் நினைக்கிறேன்.அன்றைக்கு கம்யூனிஸ்ட்டுகள் தவிர வேறு எவரும் அதனை எதிர்க்கவில்லை என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

தான் விதைத்த விதையை வளர்த்தெடுக்கும் வாய்ப்பு மன்மோகனுக்கு கிடைக்கவில்லை . நரசிம்மராவுக்குப் பிறகு வந்த காங்கிரஸ் அல்லாத அரசுகள் தங்களுடைய வசதிக்கேற்ப ஆதாய நோக்கில் மன்மோகனின் பொருளாதார கொள்கையை வளர்த்தெடுக்கிறேன் பேர்வழி என எல்லாத் துறைகளிலும் அன்னிய முதலீடுகளை அனுமதித்து அதன் மூலம் எத்தனை கறக்க முடியுமோ அத்தனை கறந்துவிடத் துடித்தனர். இதற்கு இன்னார்தான் என குற்றம் சாட்டிட முடியாது. ஒட்டு மொத்த அரசியல் மற்றும் அதிகார வர்க்கம் இதனை முழு முனைப்புடன் செயல்படுத்தினர்.

மன்மோகன் தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸில் சுதநதிரம் எதுவுமில்லாத மரப்பாச்சி பொம்மை போலவே இருந்தார்....இருக்கிறார்....இனியும் இருப்பாரென நம்பலாம்.. இருந்தாலும் கூட தன்னளவில் செய்யக் கூடிய சிறிய விஷயங்களை ஆலுவாலியா, ரங்கராஜன் மூலம் செய்ய முயற்சிக்கிரென தோன்றுகிறது. தற்போது நிதித்துறை அவரது நேரடி கட்டுப்பாட்டில் வந்திருக்கிற நிலையில் இப்போதாவது தறிகெட்டு ஓடிக் கொண்டிருக்கும் பொருளாதார கொள்கைகளின் மீதான கடிவாளங்களை உருவாக்கவும், அதனை சரியான இடங்களில் பயன்படுத்துவதற்கான மெக்கானிசத்தை மன்மோகன் சிங் உருவாக்கிட வேன்டும்.

உள்நாட்டு உற்பத்தியில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி, டாலருக்கு எதிரான ரூபாயின் பின்னடைவு, அரசின் எல்லா மட்டங்களிலும் விரவியிருக்கும் ஊழல், சிறு முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பெறுதல், உணவு உற்பத்தி மற்றும் விநியோக கட்டமைப்பின் மீது ஆதிக்கம் செலுத்த நினைக்கும் சக்திகளை ஒடுக்குதல் போன்ற கூறுகளுக்கான அவசர கால தீர்வுகளை உடனடியாக செயல்படுத்த வேண்டிய கட்டாயத்தில் மன்மோகன் சிங் இருப்பதாகவே நான் நினைக்கிறேன். இதைச் செய்யக் கூடிய தகுதியும் மன்மோகனுக்கு இருக்கிறது. எங்கே அவர் அத்தகைய அதிரடிகளில் இறங்கிவிடுவாரோ என்கிற பதட்டத்தில் கூட அவரை முடக்கும் ஒரு முயற்சியாகவே இந்த டைம்ஸ் கட்டுரையை நான் பார்க்கிறேன்.

இன்னும் விரிவாக எழுதலாம், இப்போது பயணத்தில் இருப்பதால். சென்னை திரும்பியதும் விரிவாக ஒரு கட்டுரை எழுத முயற்சிக்கிறேன்.

Sunday, July 8, 2012

நாட்குறிப்பு

1922ல் என் அம்மாவின் தகப்பனார் ஏழைக் குழந்தைகள் படிப்பதற்கு வேண்டி தன் கிராமத்தில் ஒரு பள்ளிக் கூடம் கட்டி அங்கே படிக்கும் குழந்தைகளுக்கு மூன்று வேளையும் உணவு அளிக்கும் ஏற்பாட்டினை செய்திருந்தார். இன்று தொண்ணூறு வருடம் கழித்து அந்த பள்ளி மட்டும் நடந்து கொண்டிருக்கிறது. தரும காரியங்களை எல்லாம் அவர் காலத்துக்குப் பிறகு நிறுத்திவிட்டனர்.

அவருடைய ஏழு வாரிசுகளின் குடும்பங்களே இந்த பள்ளியை தொடர்ந்து நடத்தி வருகின்றோம். நானும் கூட பள்ளியின் நிர்வாக குழுவின் ஒரு உறுப்பினன். பெரியவர்கள் நடத்துகிறார்கள், நான் கூட்டங்களில் கலந்து கொண்டு கையெழுத்துப் போடும் கடமையை மட்டுமெ செவ்வனே செய்து கொண்டிருப்பவன். இன்று இந்த வருடத்தின் முதல் கூட்டம். புதிய தலைவர் மற்றும், செயலாளர், பொருளாளரை தேர்ந்தெடுக்கும் கூட்டம் நடந்தது.

எனது பெரிய மாமா சமீபத்தில் தவறி விட்டதால், இப்போது என் தாயார் தலைமை பொறுப்புக்கு வந்தாக வேண்டிய நிர்பந்தம். தலைவர் பதவி ஆயுட்கால பதவி என்பதால் அம்மா தன் காலத்தில் தன் தம்பியை அந்த பொறுப்பில் வைத்துப் பார்க்க விரும்பியதால் தனக்குப் பதிலாக தம்பியை தலைவராக்க தீர்மானம் கொண்டு வந்தபோது அந்த எழுபது வயது தம்பியின் முகத்தில் தெரிந்த வெட்கம் கலந்த பெருமையும், பாசமும் சினிமா காட்சிகளை நினைவு படுத்தின.புதிய தலைவரை தொடந்து மற்ற பொறுப்புக்கானவர்களை ஏகமனதாய் தேர்ந்தெடுத்தனர்.

இந்த தேர்வுகளில் பலருக்கு மகிழ்ச்சி, சிலருக்கு வருத்தம், மனத் தாங்கல்.....ஒரு நிருவாக கட்டமைப்பில் இவை தவிர்க்க முடியாதுதான். எல்லாம் சரியாக நடந்தால் 2021 ல் பொதுச் செயலாளராகும் வாய்ப்பு எனக்கு வரும்.இந்த பள்ளி நூற்றாண்டை கொண்டாடும் போது அந்த கொண்டாட்டத்தை முன்னிருந்து நடத்தும் பாக்கியம் எனக்குக் கிடைத்தால் அதையொரு ஆசிர்வாதமாய் கருதுவேன்.

மதியம் பெரியம்மாவின் வீட்டில் சாப்பாடு. அவருடைய முதலாம் ஆண்டு நினைவு தினத்தன்று அங்கே போனது, மூன்று வருடம் கழித்து இன்றுதான் போனேன்.ஏதோவொரு வலி., ஏதேனும் ஒரு அறையில் இருந்து பெரியம்மா சிரித்த முகத்தோடு வெளியே வரமாட்டாரா என அசட்டுத்தனமாய் ஒரு எண்ணம் ஓடியது. மாலையில் குலதெய்வம் கோவிலுக்குப் போய் தாக்கல் சொல்லிவிட்டு, ஒரு சிதறுகாய் அடித்துவிட்டு ஊருக்கு திரும்பினேன்.