Tuesday, August 28, 2012

ஊர்வாய்...


The world is a totality in itself. It has its own muscles, its own brain, its own limbs, and its own circulation. We are not talking about the totality of the world in the sense that everything should be good and perfect and fantastic, and nobody should acknowledge anything bad. We are talking about reality, in which good is made out of bad and bad is made out of good. Therefore, the world can exist in its own good/bad level, its self-existing level of dark and light, black and white, constantly. Whatever is there, favorable or unfavorable, is workable: it is the universe....

Monday, August 27, 2012

உணவு.....மருந்து....விஷம்....


பத்துப் பதினோரு நாள் தொடர் மௌனவிரதம், நாலு கிலோ எடை குறைவு, தினமும் பத்துப் பதினைந்து மணி நேரம் தூக்கம்,இதற்கெல்லாம் மேலாய் வலிக்கே வலி வந்தால் எப்படியிருக்குமோ அப்படியொரு உடல்வலி....இத்தனையும் ஏழெட்டு மோர் மிளகாய்களினாலும், அதைத் தொடர்ந்து நானாய் சாப்பிட்ட இரண்டு மூன்று மாத்திரைகளினாலும் சாதிக்க முடியுமென்றால் நம்பித்தானாக வேண்டும்.

நள்ளிரவு ஒரு மணி வாக்கில், திடீரென வயிறு பிசைய, உடல் வலியோடு காய்ச்சலும் கூட்டுச் சேர குடலைப் பிரட்டிக் கொண்டு வந்தது வாந்தி...மதியம் தயிர் சாதத்தோடு ஆசையாய் விழுங்கிய மோர் மிளகாய்கள் வேலையை காட்டி விட்டன. மனைவியை எழுப்ப வேண்டாமென நினைத்து நானே ஒன்றிரண்டு மாத்திரைகளை போட்டுக் கொண்டு படுத்து விட்டேன். தூக்கம் வரவில்லை, குளிர் ஜுரம் மாதிரி தூக்கித் தூக்கிப் போட.....இரண்டு முறை வாந்தியும், வயிற்றுப் போக்கும் அதிகரிக்க இனி தாங்காது என மனைவியை எழுப்ப பதறிப் போனார்.

எப்போதும் எங்கள் வீடு ஒரு மருத்துவமனை ஜபர்தஸ்த்தில் இருப்பதால் உடனடியாக களமிறங்கிய மனைவி நிலமையை புரிந்து கொண்டு மளமளவென ஊசிகளை போட்டு, ட்ரிப் வேறு ஸ்டார்ட் பண்ணி விட்டுத்தான் ஓய்ந்தார். இந்த களேபரத்தில் நான் ஏற்கனவே விழுங்கிய மாத்திரை பற்றி சொல்லத் தோன்றவில்லை, அல்லது எடுத்த வாந்தியில் எல்லாம் போயிருக்கும் என அலட்சியம் காட்டினேன். காலை ஐந்து மணி வாக்கில் காய்ச்சலும், வயிற்றுப் போக்கும், வாந்தியும் கட்டுக்குள் வந்தது. ஏதோ மரணப் படுக்கையில் கிடப்பவனை பார்ப்பதைப் போல மனைவியும், குழந்தைகளும் கவலை தோய்ந்த முகத்தோடு சுற்றிலும் உட்கார்ந்திருந்தனர். 

என்னுடைய உணவு விஷயத்தில் மனைவியின் கெடுபிடி எங்கள் குடும்பமறிந்த ரகசியம்.அதிலும் மோர் மிளகாயெல்லாம் எனக்கு தடை செய்யப்பட்ட உணவு. ஏதோ ஆர்வக் கோளாறில் சாப்பிட்டு விட்டு அவஸ்தையில் உட்கார்ந்திருந்தேன்.அன்று பகல் முழுக்க எனக்கு ட்ரிப்தான் போனது. அடுத்த நாள் ரம்ஜானுக்கு வரும் பிரியாணி சாப்பிட முடியுமோ, முடியாதோ என்கிற கவலைதான் எனக்கு அப்போது பெரிதாக இருந்தது.

முதல் நாள் தூங்காததன் விளைவு, அன்று இரவு சீக்கிரமே தூங்கிப் போனேன். காலையில் எழுந்திருந்த போது நாக்கெல்லாம் மரத்துப் போனதைப் போலவும், தடிப்பாகவும் இருந்தது.தொடர்ச்சியாக ட்ரிப் போட்தன் எஃபெக்ட்டாய் இருக்கும் என மனைவி சொல்லியிருந்தார். ஆனால் அடுத்த சில மணி நேரங்களில் வாயின் உள்புறம், நாக்கின் மேல்புறமெல்லாம்  வட்ட வட்டமாய் சிவந்து அல்சர்....நாக்கை அசைக்க முடியவில்லை, அசைத்தால் உயிர் போகிற மாதிரி வலி. மனைவி டென்ஷனாகி விட்டார். அப்போதுதான் கேட்டார் என்னைக் கேட்காமல் வேறேதும் மாத்திரை சாப்பிட்டீர்களாவென....என்ன சொல்வது. ட்ரக் அலர்ஜி...அதான் மருந்து ஒவ்வாமை.

நான் மனைவிக்குத் தெரியாமல் போட்டுக் கொண்ட மாத்திரைகள், அத்தோடு மனைவி கொடுத்த மருந்துகளோடு சேர்ந்து ஓவர் டோஸாகி ட்ரக் அலர்ஜியாகி விட்டது. இதனால் ஏற்படும் பாதிப்புகளை மருத்துவ ரீதியில் "stephen johnson syndrome"  என்கிறார்கள். மனைவி கவலையும், கலவரமுமாய் ஆகி விட்டிருந்தார். நான் அவசர அவசரமாய் விக்கிப்பீடியாவில் என்ன ஏதென தேடிப் படிக்க அதில் சொல்லியிருந்த மாதிரியே நாக்கும்,வாயும் பாதிப்புக்குள்ளாக ஆரம்பித்திருந்தது. நாக்கில் மேற்பரப்பில் உள்ள சுவை மொட்டுக்கள் யாவும் மொத்தமாய் அழிந்து போய்விட்டிருந்தது. 

நாக்கின் சின்ன அசைவு கூட தாங்கொனாத வலியை தந்தது. அப்புறமென்ன ஒருவாரமாய் மரண அவஸ்தை, நல்ல வேளையாக தோல், கண் பாதிப்புகள் ஏதும் இல்லை.

பேச்சு முற்றாக நின்று விட்ட நிலையில் வீட்டில் உள்ளவர்களிடம் அபிநயம் பிடித்து நடித்து புரியவைப்பதற்குள் தாவு தீர்ந்து விட்டது. சட்டென யோசனை...லேப்டாப்பில் நோட் பேடை திறந்து வைத்துக் கொண்டு நான் பேச நினைப்பதை எல்லாம் தட்டித் தட்டிக் காட்டி பிழைப்பை நடத்த வேண்டியதாயிற்று. இப்போது பரவாயில்லை மார்வாடி பையனாட்டம் பேசுகிறேன். இரண்டொரு நாளில் தமிழ் பிழைத்துக் கொள்ளுமென நினைக்கிறேன்.

வயதாகிக் கொண்டிருக்கிறது......ம்ம்ம்ம்

எத்தனை நாளைக்குத்தான் இருபத்தி நாலே வயதென அடம்பிடித்துக் கொண்டிருப்பது. இனியாவது இருபத்தி ஐந்து வயதானதை உணர்ந்து  அதற்கேற்றார்ப் போல நடந்து கொள்ள வேண்டும்.

Friday, August 17, 2012

உலகத் திரைப்படம் - Italyanets(The Italian) /ரஷ்யா

உலகத் திரைப்பட வரிசையில் இன்று பார்த்தது ரஷ்யத் திரைப்படம். படத்தின் பெயர் Italyanets(The Italian),  2005ல் வெளியான படம். மேலதிக விவரங்கள் இங்கே . சர்வதேச திரைப்பட விழாக்களில் நிறைய விருதுகளை அள்ளிய படம். பட்டியல் இங்கே


ரஷ்ய கிராமப் புறத்தில் இருக்கும் ஒரு ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம், அதில் இருக்கும் ஒரு ஆறு வயது சிறுவன், பெற்றோரைப் பற்றிய அவனுடைய தேடல் என மெல்லிய உணர்வுகளின் ஊடே கதை  பயணிக்கிறது.

ஆதரவற்ற குழந்தைகளின் உலகம், அவர்களின் அரசியல், குழந்தைகளை தத்துக் கொடுப்பதன் பின்னால் நடக்கும் பேரங்கள்,என எளிதில் நாடகத்தனமாகி விடக்கூடிய ஒரு கதையை அதன் யதார்த்தம் கெடாமல் நிஜங்களையும் அதன் வலிகளையும் பதிவு செய்த வகையில் இயக்குனர் மிளிர்கிறார். 


படத்தின் ட்ரெய்லர்


தன் தாயைத் தேடி காப்பகத்தில் இருந்து தப்பித்து தனியே பயணிக்கும் சிறுவனின் சாகசப் பயணம் நம்ப முடியாவிட்டாலும் கூட சுவாரசியமாய் படமாக்கியிருக்கிறார்கள்.

Saturday, August 11, 2012

சோதனைப் பதிவு

பதிவுகளை வாசிக்க இயலவில்லை. பதிவுகள் திறக்க நெடுநேரம் ஆகிறது.பதிவுகளைத் திறந்தால் கணினி முடங்கி விடுகிறது....என வரிசையாய் புகார் வந்ததை அடுத்து  பதிவின் டெம்ப்ளேட்டை மாற்றி விட்டிருக்கிறேன்.

இப்போது சரியாக இயங்கும் என்கிற நம்பிக்கையில் இந்த சோதனைப் பதிவு.


Friday, August 10, 2012

நீண்ண்ண்ண்ட கால முதலீடுகள்

ஜப்பான்,சீனா துவங்கி ஐரோப்பா நெடுக அமெரிக்கா வரை பொருளாதார நிலைகள் அத்தனை சுகமில்லை. நித்திய கண்டம் பூரண ஆயுசு என்பதாகவே சர்வதேச பொருளாதாரம் தவித்துக் கொண்டிருக்கிறது. நாமோ ஒன்பது சதவிகித வளர்ச்சி என படம் காட்டிய நிலையில் இருந்து இப்போது 5.5 சதவிகித வளர்ச்சிதான் என சுதி இறங்கியிருக்கிறோம்.

இந்த லட்சணத்தில் பருவமழை வேறு பொய்த்திருக்கிறது. வழக்கமான மழைப் பொழிவில் இருந்து 12% முதல் 15% வரை குறையலாம் என வாநிலை ஆய்வு மையங்கள் புள்ளிவிவரம் தருகின்றன.எது எப்படி இருந்தாலும், எத்தனை பிரச்சினைகள் வந்தாலும் அதெல்லாம் சமாளித்து விடுவோம் என ரிசர்வ் வங்கி கவர்னர் காற்றில் கத்தி வீசிக் கொண்டிருக்கிறார். வட்டி விகிதங்களை குறைப்பது பற்றி எந்தப் பேச்சையும் காணோம்.

டாலருக்கு எதிராய் ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத கீழ் நிலைகளை எல்லாம் தொட்டு கவலைக்கிடமான நிலையில் இருக்கிறது. பணவீக்கம் 6.5% அளவில் இருக்கும் என எதிர்பார்க்கிறார்கள். விலைவாசி இறக்கை கட்டிக் கொண்டிருக்கிறது. டீசல் விலையை உயர்த்தியாக வேண்டிய கட்டாயத்தில் அரசு இருக்கிறது. இதெல்லாம் போதாதென அன்னா தொடங்கி சரத்பவார் வரையிலும் மத்திய அரசுக்கு தங்களாலான குடைச்சல்களை கொடுத்து அரசின் ஸ்திரத் தன்மையை கேள்விக்கும் கேலிக்கும் உள்ளாக்கிக் கொண்டிருக்கின்றனர்.புதிய நிதி மந்திரி வேறு பொறுப்பேற்றிருக்கிறார்.

இத்தனை கவலை தருகிற ஒரு நிதிச்சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கிறோமே என இன்னேரத்துக்கு உங்களுக்கு சோர்வும், பயமும் வந்திருந்தால் அது இயல்பானதே, இந்த சவால்களை எல்லாம் எப்படி எதிர் கொள்வது அதற்கான வலுவும் திராணியும் நமக்கு இருக்கிறதா என்றால் நிச்சயம் இருக்கிறது என்று வல்லுனர்கள் சொல்கிறார்கள். சர்வதேச அலகுகளோடு ஒப்பிடுகையில் நமது பொருளாதார அடிப்படைகளின் கட்டமைப்பு மேம்பட்டதும், சவால்களை எதிர்கொள்ளத் தேவையான திராணியுடன் இருக்கிறது என நம்பிக்கை தருகின்றனர். அவை பற்றி அலசுவது இந்த கட்டுரையின் நோக்கம் இல்லை என்பதால், இத்தோடு பங்குச் சந்தைகளுக்குள் நழுவி விடுவோம்.

எதிர்கால நிதி பாதுகாப்பு என்பதை முன்னிருத்தி செய்யப் படுகிற சேமிப்பே முதலீடுகள். உண்டியலில் காசு போடுவதில் துவங்கி உள்ளூரில் நிலம் வாங்கிப் போட்டுவது வரை சேமிப்பின் எல்லைகள் விரிவானவை.இந்த சேமிப்பின் பலனை அறுவடை செய்வது அவரவர் தேவைகளையும், சூழல்களையும் பொறுத்தது. சிலருக்கு ஐந்தாண்டில் தேவைப்படலாம். சிலருக்கு ஐந்து மாதங்களில் தேவைப்படலாம். இதையொட்டியே குறுகிய கால முதலீடுகள், நடுத்தர கால முதலீடுகள், நீண்ட கால முதலீடுகள் தீர்மானிக்கப் படுகின்றன.

நிறுவனங்கள் பங்குச் சந்தையில் தங்களுக்குத் தேவையான நிதியை திரட்டிய பின்னர்  அந்த பணத்தை தொழிலில் முதலீடு செய்து தங்களுடைய பிழைப்பை பார்க்க ஆரம்பித்து விடுவார்கள். அவர்களுடைய உழைப்பின் பலன் அல்லது தரம், முன்னேற்றம் ஆகியவைகளை காட்டும் காலக் கண்ணாடிதான் பங்குச் சந்தைகள். இந்த காலக் கண்ணாடியின் ஊடே தரமான நிறுவனங்களின் பங்குகளை வாங்கவும், தரமில்லாத பங்குகளை கையை கழுவுவதுமே பங்கு வர்த்தகமாகிறது. இந்த செயலை வர்த்தகர்கள் தங்களுடைய பணவசதி மற்றும் தேவையைப் பொறுத்து குறுகிய காலம், நடுத்தர காலம், நீண்ட காலம் என இந்த வர்த்தகத்தினை செய்கின்றனர்.

பங்குச் சந்தை என்பது மாபெரும் சூதாட்டம் என்கிற மாயச்சூழலில் சிக்கியவர்கள் இனி மேற்கொண்டு படிக்காமல் விலகிக் கொள்ளலாம். என்னுடைய அனுபவத்தில் பங்குவர்த்தகத்தின் ஒவ்வொரு அங்குலமும் கவனமாய் திட்டமிடப்பட்டு நேர்த்தியாய் செயல்படுத்த வேண்டிய அறிவியல். உணர்வின் வழி முடிவெடுப்பவர்களுக்கு இது ஏற்ற இடமில்லை, உணர்ச்சிகளின் பிடியில் சிக்காமல் அறிவின் வழி முடிவெடுப்பவன் என தீர்மானமாய் நம்புகிறவர்களுக்கு இது சொர்க்கபூமி. ஆனால் அது அத்தனை எளிதில்லை. ஏனெனில் அடிப்படையில் மனிதன் உணர்வுப்பூர்வமான மிருகம். தொடர்ச்சியான முயற்சி மற்றும் பயிற்சியே இந்த உணர்வு நிலை தாண்டிய அறிவு நிலைக்கு ஒருவனை தயார் செய்யும்.

அதென்ன முயற்சி, பயிற்சி என நினைக்கிறவர்கள் கீழே உள்ள படத்தினை பார்த்தால் நான் எதைச் சொல்ல வருகிறேன் என்பது எளிதில் புரியும். நான் என்கிற அக வட்டத்தையும், தேவைகள் என்கிற புற வட்டத்தையும் நெறிப்படுத்தி கையாளத் தெரிந்த எவனும் மகிழ்ச்சியானவனே....


இப்போது முதலீட்டு பகுதிக்குள் நுழைவோம். பங்குச் சந்தையில் முதலீடு என்பது நல்ல அடிப்படை மற்றும் சீரான வளர்ச்சியைப் பெறும் என எதிர்பார்க்கும் ஒரு நிறுவனத்தின் பங்குகளை வாங்கி வைப்பதோடு முடிந்து விடுகிறது. இனி உங்கள் பணம் அந்த நிறுவனத்தின் வளர்ச்சியை ஒட்டி சீராக வளர்ந்து கொண்டிருக்கும். அல்லது அந்த நிறுவனத்தின் பின்னடைவைப் பொறுத்து உங்கள் முதலீடு கரைந்து கொண்டிருக்கும்.

எளிதாய் இருக்கிறதல்லவா, வாசிக்க எளிதாய் இருக்கும் இந்த செயலின் பின்னால்தான் சூட்சுமம் உட்கார்ந்திருக்கிறது. ஆம், ஒரு நிறுவனத்தின் தராதரத்தை நிர்ணயிக்கும் சூட்சுமம் அது. அதை எப்படி தீர்மானிக்கிறார்கள்.

நீளமாய் எழுதிவிட்டேன் என நினைக்கிறேன். எனவே மிகுதி விவரங்களை அடுத்த பாகத்தில் தொடர்கிறேன்.

Share your knowledge. It is a way to achieve immortality. - His Holiness The Dalai Lama

Wednesday, August 8, 2012

கிருஷ்ண ஜெயந்தி !


பஞ்சாங்கப் படி பார்த்தால்  இன்று பரணி நட்சத்திரம்....அப்படி இருக்க ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்த கண்ணனுக்கு இன்று பிறந்த நாள் என தமிழக அரசு அறிவித்து பள்ளிகளுக்கு இன்று விடுமுறை. இம் மாதிரி தனித்துவமான குளறுபடிகள் எல்லாம் அம்மாவின் ஆட்சியில்தான் சாத்தியம். நிற்க, கடந்த 2007ல் கிருஷ்ண ஜெயந்தியை ஒட்டி நானெழுதிய பதிவொன்றினை இன்று மீள் பிரசுரித்து என் பதிவுலக இருப்பை காட்டிக் கொள்கிறேன்.



இன்றைக்கு கிருஷ்ண ஜெயந்தி....ஆளாளுக்கு கண்ணன் துதிபாடி பதிவிடும் நேரத்தில் கிருஷ்ணர் பற்றிய நானறிந்த சில தகவல்கள் மற்றும் சந்தேகங்களை தொகுக்கவே இந்த பதிவு

கண்ணன் அடிப்படையில் ஒரு தமிழனாகவே/திராவிடனாக இருந்திருக்க வேண்டுமென்பது என்னுடைய அனுமானம். இதனை நிரூபிக்க என்னிடம் போதிய சான்றாவனங்கள் இல்லாவிடினும், நம்முடைய கருப்பண்ண சாமியும் கண்ணனும் ஒருவராக இருக்க வாய்ப்புள்தை அலசும் புத்தகமொன்றை படித்திருக்கிறேன்.....புத்தகத்தின் பெயர் நினைவில்லை

எனது இதே கருத்தினையொட்டி திரு.குமரி மைந்தன் அவர்கள் தனது பதிவொன்றில் கிருஷ்ணரை குறித்து பின்வருமாறு பதிகிறார்....


துவரைக் கோமான் என்பவன் இடைக் கழகத்தவன். கார்க்கி கூறுவது தவறு. துவார் என்றால் கதவு. கபாடம் என்றாலும் கதவு. கபாடபுரம் தான் துவாரகை →துவரை. தெற்கே கடலினுள் அமிழ்ந்த நிலத்துக்குத் துவரையம்பதி என்ற பெயர் உண்டு என்ற மரபு குமரி மாவட்டத்தில் உருவான அகிலத் திரட்டு அம்மானை என்ற நூலில் பதிவாகியுள்ளது. அய்யா ஒளி என்ற இதழில் நான் எழுதியுள்ள “துவரையம்பதி” என்ற கட்டுரை பார்க்க. கபாடபுரம் அழிந்த பின் அங்கிருந்து குசராத்துக் கரையில் குடியேறியவர்கள் தங்கள் நகரத்துக்குத் துவாரகை என்று பெயரிட்டனர்.

மகாபாரதம், மதுரை (மாத்ரா = மா + துறை → மாதுறை → மதுரை)யில் ஆண்ட கண்ணனை சிசுபாலன் என்ற நாக அரசன் துரத்த அவன் துவாரகையில் குடியேறியதாகக் கூறுகிறது. இதைக் குமரிக் கண்டத்தில் நிகழ்ந்த மதுரை → கபாடபுரம் இடப்பெயர்ச்சியை நினைவுகூரும் கதைக் கருவாகக் கொள்ளலாம்.

மகாபாரதம் குமரிக் கண்டத்தில் நடந்த நிகழ்வின் தொன்ம வடிவம். பாம்பைத் தோற்றக்குறியாகக் கொண்ட நூற்றுவர்க்கும் அதாவது நாகர்களுக்கும் இயற்கையில் அதன் எதிரியாகிய பருந்தைக் குலக்குறியாகக் கொண்ட கண்ணணுக்கும் அதாவது யாதவர்களுக்கும் நடந்த போர். அதில் அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்கிறார் எரிக் வான் டெனிக்கன் (பார்க்க: Charists of Gods). காண்டவனத்தை (கோண்ட்வானா – காண்டவனம்; இன்று இந்தியாவில் கோண்டு எனும் மக்கள் வாழும் பகுதியின் பெயர். கோண்டுவானா நிலம் என்று கண்டப்பெயர்ச்சிக்கு முன் தென் அரைக் கோளத்தில் அனைத்து நிலப்பரப்பும் திரண்டிருந்த நிலைக்கு ஏன் புவியியங்கியலாளர் பெயர் கொடுத்தனர்?) எரித்து அழிக்கப் புறப்பட்ட கண்ணணும் அருச்சுனனும் பயன்படுத்திய படைக்கலன் (அம்பு?) ஏற்படுத்திய விளைவுகளை நாகசாகியில் அமெரிக்கா வீசிய அணுக்குண்டின் விளைவுகளோடு ஒப்பிட்டுக் காட்டுகிறார் அவர். அசுவத்தாமன் வீசிய ஓர் ஆயுதம் கருவிலிருந்த குழந்தைகள் அனைத்தையும் அழித்ததாம்.

நூற்றுவரும் சேரர்களின் முன்னோர் என்று பெருஞ்சோற்று உதியஞ் சேரலாதனை முரிஞ்சியூர் முடி நாகராயர் பாடிய பாடல் மூலம் தெரிய வருகிறது.

அலங்குளைப் புரவி ஐவரோடு சினைஇ
நிலந்தலைக் கொண்ட பொலம்பூந் தும்பை
ஈரைம் பதின்மரும் பொருதுகளத் தொழியப்
பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய் 
(புறம் 1:13-16) 

இதன் பொருள் ஐவரைப் பகைத்து போர்க்களத்தில் இறந்த நூற்றுவர்க்கும் சேரலாதன் முன்னோர் கடன் ஆற்றினான் என்பதாகும்.

மகாபாரதம் கலுழன் சருக்கத்தில் பாம்புகளுக்கும் பருந்துகளுக்கும் உள்ள பகைமை கூறப்பட்டுள்ளது. காண்டவனத்தைக் கண்ணணும் அருச்சுனனும் தீவைத்ததே நாகங்களை (நாகர்களை)க் கொல்லத்தான்.

போர் முடிந்து அனைவரும் மடிந்து இறுதியில் கண்ணன் உயிரைக் கால் கட்டைவிரலில் தேக்கி அறிதுயிலில் இருந்த போது அசைந்த விரலைக் குருவி எனக் கருதி அம்பெய்து கண்ணனின் சாவுக்குக் காரணமான வேடனின் பெயர் சேரன். அதுவரை நாகமாக இருந்த சேரனின் கொடி இதிலிருந்து தான் வில்லாயிற்றோ?

முரிஞ்சியூர் முடி நாகராயர் ஓர் நாகர் என்பது அவர் பெயரிலிருந்து தெரிகிறது. அவர் இரண்டாம் கழகத்தில் துவரையை ஆண்ட கண்ணனின் பிற்காலத்தவராக இருக்க வேண்டும்.


இந்த கருத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில் திரு.கே.டி.சேத்னா என்பார் கிருஷ்ணர் பங்கேற்றதாய் கருதப்படும் மஹாபாரத போரின் காலத்தினை வானியல் தகவல்களை வைத்து கணித்திருக்கிறார். அதாவது கி.மு 3128ல் இந்த போர் நடந்திருக்க வேண்டும் என்கிறார்.

இதை உறுதி செய்யும் வகையில் அகழ்வாய்வில் கிடைத்த ஒரு செப்பு தகடு தரும் செய்தியாவது கி.மு 3012ல் அர்ஜுனனின் பேரனான ஜனமேஜயன் என்பான் துங்கபத்திரை நதிக்கரையில் உள்ள ராமர் கோவில் ஒன்றிற்கு நிலமானியம் வழங்கியதாக கூறுகிறது. இந்த செப்பேடு ஆய்வுக்குட்படுத்தப்பட்டு பின்னர் அதிகாரப்பூர்வமாய்"இந்தியன் ஆண்டிகுவெரி"யில் வெளியிடப்பட்டிருக்கிறது.

இதைத் தவிர கிருஷ்ணரில் லீலா விநோதங்கள் எண்ணிலடங்கா...அவற்றை விவரிக்கப் போனால் விரசத்தில் எல்லையை தொடுமென்பதால்...மாதிரிக்கு ஒன்றே ஒன்றை மட்டும் வைக்கிறேன்....அதாவது கண்ணனின் காதலியாக கருதப்படும் ராதை உண்மையில் அவருக்கு அத்தை முறையானவள் என்பதும் மாற்றான் மனைவி என்பதும் நெருடும் தகவல்கள். 


மேலே உள்ளது கிருஷ்ணரின் ஜாதகம் என திரு.அருன் பன்சால் என்பவர் கணித்திருக்கிறார்.அவரின் கணிப்பின் படி கிருஷ்னர் கி.மு.3228 ல் ஜூலை மாதம் 21ம் நாள் பிறந்ததாக கூறுகிறார். இது குறித்த மேலதிக விவரங்கள் இங்கே...

எது எப்படியாகினும் பகவத்கீதை போன்ற காலத்திற்கு நிலைத்து நிற்கும் ஓர் கருத்தியலை  அளித்துச் சென்ற கிருஷணரை இந்த நாளில் மாற்றாரோடு இனைந்து என்னுடைய வாழ்த்துக்களையும் பதிவு செய்கிறேன்.