Wednesday, August 8, 2012

கிருஷ்ண ஜெயந்தி !


பஞ்சாங்கப் படி பார்த்தால்  இன்று பரணி நட்சத்திரம்....அப்படி இருக்க ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்த கண்ணனுக்கு இன்று பிறந்த நாள் என தமிழக அரசு அறிவித்து பள்ளிகளுக்கு இன்று விடுமுறை. இம் மாதிரி தனித்துவமான குளறுபடிகள் எல்லாம் அம்மாவின் ஆட்சியில்தான் சாத்தியம். நிற்க, கடந்த 2007ல் கிருஷ்ண ஜெயந்தியை ஒட்டி நானெழுதிய பதிவொன்றினை இன்று மீள் பிரசுரித்து என் பதிவுலக இருப்பை காட்டிக் கொள்கிறேன்.இன்றைக்கு கிருஷ்ண ஜெயந்தி....ஆளாளுக்கு கண்ணன் துதிபாடி பதிவிடும் நேரத்தில் கிருஷ்ணர் பற்றிய நானறிந்த சில தகவல்கள் மற்றும் சந்தேகங்களை தொகுக்கவே இந்த பதிவு

கண்ணன் அடிப்படையில் ஒரு தமிழனாகவே/திராவிடனாக இருந்திருக்க வேண்டுமென்பது என்னுடைய அனுமானம். இதனை நிரூபிக்க என்னிடம் போதிய சான்றாவனங்கள் இல்லாவிடினும், நம்முடைய கருப்பண்ண சாமியும் கண்ணனும் ஒருவராக இருக்க வாய்ப்புள்தை அலசும் புத்தகமொன்றை படித்திருக்கிறேன்.....புத்தகத்தின் பெயர் நினைவில்லை

எனது இதே கருத்தினையொட்டி திரு.குமரி மைந்தன் அவர்கள் தனது பதிவொன்றில் கிருஷ்ணரை குறித்து பின்வருமாறு பதிகிறார்....


துவரைக் கோமான் என்பவன் இடைக் கழகத்தவன். கார்க்கி கூறுவது தவறு. துவார் என்றால் கதவு. கபாடம் என்றாலும் கதவு. கபாடபுரம் தான் துவாரகை →துவரை. தெற்கே கடலினுள் அமிழ்ந்த நிலத்துக்குத் துவரையம்பதி என்ற பெயர் உண்டு என்ற மரபு குமரி மாவட்டத்தில் உருவான அகிலத் திரட்டு அம்மானை என்ற நூலில் பதிவாகியுள்ளது. அய்யா ஒளி என்ற இதழில் நான் எழுதியுள்ள “துவரையம்பதி” என்ற கட்டுரை பார்க்க. கபாடபுரம் அழிந்த பின் அங்கிருந்து குசராத்துக் கரையில் குடியேறியவர்கள் தங்கள் நகரத்துக்குத் துவாரகை என்று பெயரிட்டனர்.

மகாபாரதம், மதுரை (மாத்ரா = மா + துறை → மாதுறை → மதுரை)யில் ஆண்ட கண்ணனை சிசுபாலன் என்ற நாக அரசன் துரத்த அவன் துவாரகையில் குடியேறியதாகக் கூறுகிறது. இதைக் குமரிக் கண்டத்தில் நிகழ்ந்த மதுரை → கபாடபுரம் இடப்பெயர்ச்சியை நினைவுகூரும் கதைக் கருவாகக் கொள்ளலாம்.

மகாபாரதம் குமரிக் கண்டத்தில் நடந்த நிகழ்வின் தொன்ம வடிவம். பாம்பைத் தோற்றக்குறியாகக் கொண்ட நூற்றுவர்க்கும் அதாவது நாகர்களுக்கும் இயற்கையில் அதன் எதிரியாகிய பருந்தைக் குலக்குறியாகக் கொண்ட கண்ணணுக்கும் அதாவது யாதவர்களுக்கும் நடந்த போர். அதில் அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்கிறார் எரிக் வான் டெனிக்கன் (பார்க்க: Charists of Gods). காண்டவனத்தை (கோண்ட்வானா – காண்டவனம்; இன்று இந்தியாவில் கோண்டு எனும் மக்கள் வாழும் பகுதியின் பெயர். கோண்டுவானா நிலம் என்று கண்டப்பெயர்ச்சிக்கு முன் தென் அரைக் கோளத்தில் அனைத்து நிலப்பரப்பும் திரண்டிருந்த நிலைக்கு ஏன் புவியியங்கியலாளர் பெயர் கொடுத்தனர்?) எரித்து அழிக்கப் புறப்பட்ட கண்ணணும் அருச்சுனனும் பயன்படுத்திய படைக்கலன் (அம்பு?) ஏற்படுத்திய விளைவுகளை நாகசாகியில் அமெரிக்கா வீசிய அணுக்குண்டின் விளைவுகளோடு ஒப்பிட்டுக் காட்டுகிறார் அவர். அசுவத்தாமன் வீசிய ஓர் ஆயுதம் கருவிலிருந்த குழந்தைகள் அனைத்தையும் அழித்ததாம்.

நூற்றுவரும் சேரர்களின் முன்னோர் என்று பெருஞ்சோற்று உதியஞ் சேரலாதனை முரிஞ்சியூர் முடி நாகராயர் பாடிய பாடல் மூலம் தெரிய வருகிறது.

அலங்குளைப் புரவி ஐவரோடு சினைஇ
நிலந்தலைக் கொண்ட பொலம்பூந் தும்பை
ஈரைம் பதின்மரும் பொருதுகளத் தொழியப்
பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய் 
(புறம் 1:13-16) 

இதன் பொருள் ஐவரைப் பகைத்து போர்க்களத்தில் இறந்த நூற்றுவர்க்கும் சேரலாதன் முன்னோர் கடன் ஆற்றினான் என்பதாகும்.

மகாபாரதம் கலுழன் சருக்கத்தில் பாம்புகளுக்கும் பருந்துகளுக்கும் உள்ள பகைமை கூறப்பட்டுள்ளது. காண்டவனத்தைக் கண்ணணும் அருச்சுனனும் தீவைத்ததே நாகங்களை (நாகர்களை)க் கொல்லத்தான்.

போர் முடிந்து அனைவரும் மடிந்து இறுதியில் கண்ணன் உயிரைக் கால் கட்டைவிரலில் தேக்கி அறிதுயிலில் இருந்த போது அசைந்த விரலைக் குருவி எனக் கருதி அம்பெய்து கண்ணனின் சாவுக்குக் காரணமான வேடனின் பெயர் சேரன். அதுவரை நாகமாக இருந்த சேரனின் கொடி இதிலிருந்து தான் வில்லாயிற்றோ?

முரிஞ்சியூர் முடி நாகராயர் ஓர் நாகர் என்பது அவர் பெயரிலிருந்து தெரிகிறது. அவர் இரண்டாம் கழகத்தில் துவரையை ஆண்ட கண்ணனின் பிற்காலத்தவராக இருக்க வேண்டும்.


இந்த கருத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில் திரு.கே.டி.சேத்னா என்பார் கிருஷ்ணர் பங்கேற்றதாய் கருதப்படும் மஹாபாரத போரின் காலத்தினை வானியல் தகவல்களை வைத்து கணித்திருக்கிறார். அதாவது கி.மு 3128ல் இந்த போர் நடந்திருக்க வேண்டும் என்கிறார்.

இதை உறுதி செய்யும் வகையில் அகழ்வாய்வில் கிடைத்த ஒரு செப்பு தகடு தரும் செய்தியாவது கி.மு 3012ல் அர்ஜுனனின் பேரனான ஜனமேஜயன் என்பான் துங்கபத்திரை நதிக்கரையில் உள்ள ராமர் கோவில் ஒன்றிற்கு நிலமானியம் வழங்கியதாக கூறுகிறது. இந்த செப்பேடு ஆய்வுக்குட்படுத்தப்பட்டு பின்னர் அதிகாரப்பூர்வமாய்"இந்தியன் ஆண்டிகுவெரி"யில் வெளியிடப்பட்டிருக்கிறது.

இதைத் தவிர கிருஷ்ணரில் லீலா விநோதங்கள் எண்ணிலடங்கா...அவற்றை விவரிக்கப் போனால் விரசத்தில் எல்லையை தொடுமென்பதால்...மாதிரிக்கு ஒன்றே ஒன்றை மட்டும் வைக்கிறேன்....அதாவது கண்ணனின் காதலியாக கருதப்படும் ராதை உண்மையில் அவருக்கு அத்தை முறையானவள் என்பதும் மாற்றான் மனைவி என்பதும் நெருடும் தகவல்கள். 


மேலே உள்ளது கிருஷ்ணரின் ஜாதகம் என திரு.அருன் பன்சால் என்பவர் கணித்திருக்கிறார்.அவரின் கணிப்பின் படி கிருஷ்னர் கி.மு.3228 ல் ஜூலை மாதம் 21ம் நாள் பிறந்ததாக கூறுகிறார். இது குறித்த மேலதிக விவரங்கள் இங்கே...

எது எப்படியாகினும் பகவத்கீதை போன்ற காலத்திற்கு நிலைத்து நிற்கும் ஓர் கருத்தியலை  அளித்துச் சென்ற கிருஷணரை இந்த நாளில் மாற்றாரோடு இனைந்து என்னுடைய வாழ்த்துக்களையும் பதிவு செய்கிறேன்.