Friday, August 10, 2012

நீண்ண்ண்ண்ட கால முதலீடுகள்

ஜப்பான்,சீனா துவங்கி ஐரோப்பா நெடுக அமெரிக்கா வரை பொருளாதார நிலைகள் அத்தனை சுகமில்லை. நித்திய கண்டம் பூரண ஆயுசு என்பதாகவே சர்வதேச பொருளாதாரம் தவித்துக் கொண்டிருக்கிறது. நாமோ ஒன்பது சதவிகித வளர்ச்சி என படம் காட்டிய நிலையில் இருந்து இப்போது 5.5 சதவிகித வளர்ச்சிதான் என சுதி இறங்கியிருக்கிறோம்.

இந்த லட்சணத்தில் பருவமழை வேறு பொய்த்திருக்கிறது. வழக்கமான மழைப் பொழிவில் இருந்து 12% முதல் 15% வரை குறையலாம் என வாநிலை ஆய்வு மையங்கள் புள்ளிவிவரம் தருகின்றன.எது எப்படி இருந்தாலும், எத்தனை பிரச்சினைகள் வந்தாலும் அதெல்லாம் சமாளித்து விடுவோம் என ரிசர்வ் வங்கி கவர்னர் காற்றில் கத்தி வீசிக் கொண்டிருக்கிறார். வட்டி விகிதங்களை குறைப்பது பற்றி எந்தப் பேச்சையும் காணோம்.

டாலருக்கு எதிராய் ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத கீழ் நிலைகளை எல்லாம் தொட்டு கவலைக்கிடமான நிலையில் இருக்கிறது. பணவீக்கம் 6.5% அளவில் இருக்கும் என எதிர்பார்க்கிறார்கள். விலைவாசி இறக்கை கட்டிக் கொண்டிருக்கிறது. டீசல் விலையை உயர்த்தியாக வேண்டிய கட்டாயத்தில் அரசு இருக்கிறது. இதெல்லாம் போதாதென அன்னா தொடங்கி சரத்பவார் வரையிலும் மத்திய அரசுக்கு தங்களாலான குடைச்சல்களை கொடுத்து அரசின் ஸ்திரத் தன்மையை கேள்விக்கும் கேலிக்கும் உள்ளாக்கிக் கொண்டிருக்கின்றனர்.புதிய நிதி மந்திரி வேறு பொறுப்பேற்றிருக்கிறார்.

இத்தனை கவலை தருகிற ஒரு நிதிச்சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கிறோமே என இன்னேரத்துக்கு உங்களுக்கு சோர்வும், பயமும் வந்திருந்தால் அது இயல்பானதே, இந்த சவால்களை எல்லாம் எப்படி எதிர் கொள்வது அதற்கான வலுவும் திராணியும் நமக்கு இருக்கிறதா என்றால் நிச்சயம் இருக்கிறது என்று வல்லுனர்கள் சொல்கிறார்கள். சர்வதேச அலகுகளோடு ஒப்பிடுகையில் நமது பொருளாதார அடிப்படைகளின் கட்டமைப்பு மேம்பட்டதும், சவால்களை எதிர்கொள்ளத் தேவையான திராணியுடன் இருக்கிறது என நம்பிக்கை தருகின்றனர். அவை பற்றி அலசுவது இந்த கட்டுரையின் நோக்கம் இல்லை என்பதால், இத்தோடு பங்குச் சந்தைகளுக்குள் நழுவி விடுவோம்.

எதிர்கால நிதி பாதுகாப்பு என்பதை முன்னிருத்தி செய்யப் படுகிற சேமிப்பே முதலீடுகள். உண்டியலில் காசு போடுவதில் துவங்கி உள்ளூரில் நிலம் வாங்கிப் போட்டுவது வரை சேமிப்பின் எல்லைகள் விரிவானவை.இந்த சேமிப்பின் பலனை அறுவடை செய்வது அவரவர் தேவைகளையும், சூழல்களையும் பொறுத்தது. சிலருக்கு ஐந்தாண்டில் தேவைப்படலாம். சிலருக்கு ஐந்து மாதங்களில் தேவைப்படலாம். இதையொட்டியே குறுகிய கால முதலீடுகள், நடுத்தர கால முதலீடுகள், நீண்ட கால முதலீடுகள் தீர்மானிக்கப் படுகின்றன.

நிறுவனங்கள் பங்குச் சந்தையில் தங்களுக்குத் தேவையான நிதியை திரட்டிய பின்னர்  அந்த பணத்தை தொழிலில் முதலீடு செய்து தங்களுடைய பிழைப்பை பார்க்க ஆரம்பித்து விடுவார்கள். அவர்களுடைய உழைப்பின் பலன் அல்லது தரம், முன்னேற்றம் ஆகியவைகளை காட்டும் காலக் கண்ணாடிதான் பங்குச் சந்தைகள். இந்த காலக் கண்ணாடியின் ஊடே தரமான நிறுவனங்களின் பங்குகளை வாங்கவும், தரமில்லாத பங்குகளை கையை கழுவுவதுமே பங்கு வர்த்தகமாகிறது. இந்த செயலை வர்த்தகர்கள் தங்களுடைய பணவசதி மற்றும் தேவையைப் பொறுத்து குறுகிய காலம், நடுத்தர காலம், நீண்ட காலம் என இந்த வர்த்தகத்தினை செய்கின்றனர்.

பங்குச் சந்தை என்பது மாபெரும் சூதாட்டம் என்கிற மாயச்சூழலில் சிக்கியவர்கள் இனி மேற்கொண்டு படிக்காமல் விலகிக் கொள்ளலாம். என்னுடைய அனுபவத்தில் பங்குவர்த்தகத்தின் ஒவ்வொரு அங்குலமும் கவனமாய் திட்டமிடப்பட்டு நேர்த்தியாய் செயல்படுத்த வேண்டிய அறிவியல். உணர்வின் வழி முடிவெடுப்பவர்களுக்கு இது ஏற்ற இடமில்லை, உணர்ச்சிகளின் பிடியில் சிக்காமல் அறிவின் வழி முடிவெடுப்பவன் என தீர்மானமாய் நம்புகிறவர்களுக்கு இது சொர்க்கபூமி. ஆனால் அது அத்தனை எளிதில்லை. ஏனெனில் அடிப்படையில் மனிதன் உணர்வுப்பூர்வமான மிருகம். தொடர்ச்சியான முயற்சி மற்றும் பயிற்சியே இந்த உணர்வு நிலை தாண்டிய அறிவு நிலைக்கு ஒருவனை தயார் செய்யும்.

அதென்ன முயற்சி, பயிற்சி என நினைக்கிறவர்கள் கீழே உள்ள படத்தினை பார்த்தால் நான் எதைச் சொல்ல வருகிறேன் என்பது எளிதில் புரியும். நான் என்கிற அக வட்டத்தையும், தேவைகள் என்கிற புற வட்டத்தையும் நெறிப்படுத்தி கையாளத் தெரிந்த எவனும் மகிழ்ச்சியானவனே....


இப்போது முதலீட்டு பகுதிக்குள் நுழைவோம். பங்குச் சந்தையில் முதலீடு என்பது நல்ல அடிப்படை மற்றும் சீரான வளர்ச்சியைப் பெறும் என எதிர்பார்க்கும் ஒரு நிறுவனத்தின் பங்குகளை வாங்கி வைப்பதோடு முடிந்து விடுகிறது. இனி உங்கள் பணம் அந்த நிறுவனத்தின் வளர்ச்சியை ஒட்டி சீராக வளர்ந்து கொண்டிருக்கும். அல்லது அந்த நிறுவனத்தின் பின்னடைவைப் பொறுத்து உங்கள் முதலீடு கரைந்து கொண்டிருக்கும்.

எளிதாய் இருக்கிறதல்லவா, வாசிக்க எளிதாய் இருக்கும் இந்த செயலின் பின்னால்தான் சூட்சுமம் உட்கார்ந்திருக்கிறது. ஆம், ஒரு நிறுவனத்தின் தராதரத்தை நிர்ணயிக்கும் சூட்சுமம் அது. அதை எப்படி தீர்மானிக்கிறார்கள்.

நீளமாய் எழுதிவிட்டேன் என நினைக்கிறேன். எனவே மிகுதி விவரங்களை அடுத்த பாகத்தில் தொடர்கிறேன்.

Share your knowledge. It is a way to achieve immortality. - His Holiness The Dalai Lama