Monday, August 27, 2012

உணவு.....மருந்து....விஷம்....


பத்துப் பதினோரு நாள் தொடர் மௌனவிரதம், நாலு கிலோ எடை குறைவு, தினமும் பத்துப் பதினைந்து மணி நேரம் தூக்கம்,இதற்கெல்லாம் மேலாய் வலிக்கே வலி வந்தால் எப்படியிருக்குமோ அப்படியொரு உடல்வலி....இத்தனையும் ஏழெட்டு மோர் மிளகாய்களினாலும், அதைத் தொடர்ந்து நானாய் சாப்பிட்ட இரண்டு மூன்று மாத்திரைகளினாலும் சாதிக்க முடியுமென்றால் நம்பித்தானாக வேண்டும்.

நள்ளிரவு ஒரு மணி வாக்கில், திடீரென வயிறு பிசைய, உடல் வலியோடு காய்ச்சலும் கூட்டுச் சேர குடலைப் பிரட்டிக் கொண்டு வந்தது வாந்தி...மதியம் தயிர் சாதத்தோடு ஆசையாய் விழுங்கிய மோர் மிளகாய்கள் வேலையை காட்டி விட்டன. மனைவியை எழுப்ப வேண்டாமென நினைத்து நானே ஒன்றிரண்டு மாத்திரைகளை போட்டுக் கொண்டு படுத்து விட்டேன். தூக்கம் வரவில்லை, குளிர் ஜுரம் மாதிரி தூக்கித் தூக்கிப் போட.....இரண்டு முறை வாந்தியும், வயிற்றுப் போக்கும் அதிகரிக்க இனி தாங்காது என மனைவியை எழுப்ப பதறிப் போனார்.

எப்போதும் எங்கள் வீடு ஒரு மருத்துவமனை ஜபர்தஸ்த்தில் இருப்பதால் உடனடியாக களமிறங்கிய மனைவி நிலமையை புரிந்து கொண்டு மளமளவென ஊசிகளை போட்டு, ட்ரிப் வேறு ஸ்டார்ட் பண்ணி விட்டுத்தான் ஓய்ந்தார். இந்த களேபரத்தில் நான் ஏற்கனவே விழுங்கிய மாத்திரை பற்றி சொல்லத் தோன்றவில்லை, அல்லது எடுத்த வாந்தியில் எல்லாம் போயிருக்கும் என அலட்சியம் காட்டினேன். காலை ஐந்து மணி வாக்கில் காய்ச்சலும், வயிற்றுப் போக்கும், வாந்தியும் கட்டுக்குள் வந்தது. ஏதோ மரணப் படுக்கையில் கிடப்பவனை பார்ப்பதைப் போல மனைவியும், குழந்தைகளும் கவலை தோய்ந்த முகத்தோடு சுற்றிலும் உட்கார்ந்திருந்தனர். 

என்னுடைய உணவு விஷயத்தில் மனைவியின் கெடுபிடி எங்கள் குடும்பமறிந்த ரகசியம்.அதிலும் மோர் மிளகாயெல்லாம் எனக்கு தடை செய்யப்பட்ட உணவு. ஏதோ ஆர்வக் கோளாறில் சாப்பிட்டு விட்டு அவஸ்தையில் உட்கார்ந்திருந்தேன்.அன்று பகல் முழுக்க எனக்கு ட்ரிப்தான் போனது. அடுத்த நாள் ரம்ஜானுக்கு வரும் பிரியாணி சாப்பிட முடியுமோ, முடியாதோ என்கிற கவலைதான் எனக்கு அப்போது பெரிதாக இருந்தது.

முதல் நாள் தூங்காததன் விளைவு, அன்று இரவு சீக்கிரமே தூங்கிப் போனேன். காலையில் எழுந்திருந்த போது நாக்கெல்லாம் மரத்துப் போனதைப் போலவும், தடிப்பாகவும் இருந்தது.தொடர்ச்சியாக ட்ரிப் போட்தன் எஃபெக்ட்டாய் இருக்கும் என மனைவி சொல்லியிருந்தார். ஆனால் அடுத்த சில மணி நேரங்களில் வாயின் உள்புறம், நாக்கின் மேல்புறமெல்லாம்  வட்ட வட்டமாய் சிவந்து அல்சர்....நாக்கை அசைக்க முடியவில்லை, அசைத்தால் உயிர் போகிற மாதிரி வலி. மனைவி டென்ஷனாகி விட்டார். அப்போதுதான் கேட்டார் என்னைக் கேட்காமல் வேறேதும் மாத்திரை சாப்பிட்டீர்களாவென....என்ன சொல்வது. ட்ரக் அலர்ஜி...அதான் மருந்து ஒவ்வாமை.

நான் மனைவிக்குத் தெரியாமல் போட்டுக் கொண்ட மாத்திரைகள், அத்தோடு மனைவி கொடுத்த மருந்துகளோடு சேர்ந்து ஓவர் டோஸாகி ட்ரக் அலர்ஜியாகி விட்டது. இதனால் ஏற்படும் பாதிப்புகளை மருத்துவ ரீதியில் "stephen johnson syndrome"  என்கிறார்கள். மனைவி கவலையும், கலவரமுமாய் ஆகி விட்டிருந்தார். நான் அவசர அவசரமாய் விக்கிப்பீடியாவில் என்ன ஏதென தேடிப் படிக்க அதில் சொல்லியிருந்த மாதிரியே நாக்கும்,வாயும் பாதிப்புக்குள்ளாக ஆரம்பித்திருந்தது. நாக்கில் மேற்பரப்பில் உள்ள சுவை மொட்டுக்கள் யாவும் மொத்தமாய் அழிந்து போய்விட்டிருந்தது. 

நாக்கின் சின்ன அசைவு கூட தாங்கொனாத வலியை தந்தது. அப்புறமென்ன ஒருவாரமாய் மரண அவஸ்தை, நல்ல வேளையாக தோல், கண் பாதிப்புகள் ஏதும் இல்லை.

பேச்சு முற்றாக நின்று விட்ட நிலையில் வீட்டில் உள்ளவர்களிடம் அபிநயம் பிடித்து நடித்து புரியவைப்பதற்குள் தாவு தீர்ந்து விட்டது. சட்டென யோசனை...லேப்டாப்பில் நோட் பேடை திறந்து வைத்துக் கொண்டு நான் பேச நினைப்பதை எல்லாம் தட்டித் தட்டிக் காட்டி பிழைப்பை நடத்த வேண்டியதாயிற்று. இப்போது பரவாயில்லை மார்வாடி பையனாட்டம் பேசுகிறேன். இரண்டொரு நாளில் தமிழ் பிழைத்துக் கொள்ளுமென நினைக்கிறேன்.

வயதாகிக் கொண்டிருக்கிறது......ம்ம்ம்ம்

எத்தனை நாளைக்குத்தான் இருபத்தி நாலே வயதென அடம்பிடித்துக் கொண்டிருப்பது. இனியாவது இருபத்தி ஐந்து வயதானதை உணர்ந்து  அதற்கேற்றார்ப் போல நடந்து கொள்ள வேண்டும்.