Saturday, September 1, 2012

இஸ்லாம் - தமிழ் - ஒரு வரலாற்றுப் பார்வை

"என் வாசிப்பனுபவங்கள் என்னோடு தேங்கிவிடக் கூடாது, அந்த தகவல்களை அடுத்தடுத்த தளத்துக்கு கொண்டு சேர்த்த வகையில் தமிழின் வரலாற்றில் எனக்கும் ஒரு சிறிய இடம் கிடைத்து விடாதா என்கிற நப்பாசையுடன் கடந்த 2009ல் ஆய்வுக் கட்டுரையில் தரத்தில் எழுத முயற்சித்த  கட்டுரை இது. இரண்டு பாகம் மட்டுமே எழுதினேன், யாரும் சீந்துவாரில்லை என்பதால் அத்தோடு நிறுத்தி விட்டேன்....இங்கே மீள்பதிவாக."


சமயங்கள் தமிழை வளர்த்தனவா, இல்லை தமிழால் சமயங்கள் வளர்ந்தனவா என்கிற தலைப்பு விவாதத்துக்குறியது. எனினும் தமிழுக்கும் சமயங்களுக்கும் ஊடான தொடர்பினை விளக்கும் பழைய பாடல் ஒன்று உண்டு....

”நாயன்மார் நாவமுதும் நம்மாழ்வார் பாசுரமும்
மேயப்புகழ் மேகலையும் மேம்பாடு சிந்தாமணியும்
மாமுனி தேம்பாவணியும் மான்புறு சீறாவும்”

நமது கல்வித் திட்டத்தில் தமிழ் இலக்கியம் குறித்தான பாடத் திட்டங்களில் இந்து மதம் சார்ந்த இலக்கியங்களே பெரும்பான்மையாக சேர்க்கப்பட்டது .கிருஸ்தவர் மற்றும் இஸ்லாமியர்களின் படைப்புகள் பெயரளவிற்கே சேர்க்கப் பட்டிருக்கின்றன என்பது என்னுடைய தனிப்பட்ட அவதானிப்பு. இதனை யாரும் மறுக்க முடியாது.

தமிழகத்திற்கும் இஸ்லாமிய உலகத்திற்குமான தொடர்புகள் பழந்தமிழகத்தின் உலகளாவிய வர்த்தக பரிமாற்ற காலத்தில் இருந்து துவங்குகிறது. எனினும் தமிழகத்தில் இஸ்லாமிய மதம் நுழைந்தது பதினைந்தாம் நூற்றாண்டின் இறுதியில் அல்லது பதினாறாம் நூற்றாண்டின் துவக்கமென சொல்லலாம். அந்த காலந்தொட்டே இஸ்லாமிய தமிழும் வளர்ந்திருக்கிறது. இது குறித்து யாரும் விரிவாக பேசியதாய் தெரியவில்லை. நான் தேடிய வரையில் தமிழ் வலைப்பதிவுகளில் இதைப் பற்றி எழுதும் முதல் ஆள் நானாகத்தான் இருக்கக் கூடும்.

தமிழ் இலக்கியத்தில் மரபு சார்ந்த பிரபந்த வகைகள் தொண்ணூற்று ஆறு இருப்பதாக தெரிகிறது. இஸ்லாமிய தமிழறிஞர்கள் அநேகமாய் தமிழின் இந்த எல்லா எல்கைகளிலும் சென்று எழுதியிருக்கிறார்கள்.இதனையும் தாண்டி  தமிழுக்கு புதிதாக எட்டு இலக்கிய வகைகளை இஸ்லாமிய தமிழறிஞர்கள் அறிமுகப்படுத்தியிருக்கின்றனர் என்பது நம்மில் பலரும் அறியாத ஒன்று. இவை முறையே....

  • மஸலா
  • கிஸ்ஸா
  • நாமா
  • முனாஜாத்து
  • படைப்போர்
  • நொண்டி நாடகம்
  • திருமண வாழ்த்து
  • அரபுத் தமிழ்


மஸலா என்பது அரபி வார்த்தையான மஸ் அலா என்கிற வார்த்தையின் மருவல் எனலாம். தொடர்புடைய தமிழ் அர்த்தமாய் தேடுதலும் தெளிதலுமெனலாம். கேள்வி கேட்டு அதன் மூலமாய் இஸ்லாமிய தத்துவங்களை விளக்குவதே இந்த வகை இலக்கியம்.

இந்த மஸலா வகையில் தமிழில் மூன்று நூல்கள் இருக்கின்றன.

1.ஆயிர மஸலாவென்று வழங்கும் அதிஜய புராணம்

2..நூறு மசலா

3. வெள்ளாட்டி மசலா

இவற்றுள் ஆயிர மஸலாவே காலத்தால் முந்தையது என தெரிகிறது. இதை இயற்றியவரின் பெயர் வண்ண பரிமள புலவர் என அறியப்படும் செய்கு முதலி இஸ்ஹாக்.1572 ம் ஆண்டு இந்த நூலை மதுரை தமிழ் சங்கத்தில் அரங்கேற்றியிருக்கிறார் என்பதும் வியப்பான ஒரு செய்தி. இந்த
நூலில் 1095 பாடல்கள் உள்ளன.

வெள்ளாட்டி மஸலா என்கிற நூல் காலத்தால் பிந்தையது. 1852 ம் ஆண்டில் காயல்பட்டிணத்தைச் சேர்ந்த ஷெய்கப்துல் காதிறு லெப்பை என்பாரால் இயற்றப் பட்டது. வசன நடையில் உள்ள ஒரே மஸலா இதுவேயாகும். தமிழில் உள்ள மூன்று மஸலாக்களில் இதுவே சிறந்ததாய் கருதப் படுகிறது.

மூன்றாவது மஸலாவான நூறு மஸலாவினை எழுதியவர் பெயரோ அல்லது வெளியான காலக்குறிப்புகளோ கிடைக்கவில்லை. எனினும் இந்த நூல் 1872ம் ஆண்டில் பதிப்பிக்கப் பட்டிருக்கிறது என்கிற தகவல் மட்டுமே நமக்கு கிடைத்திருக்கிறது.மற்ற மஸலாக்களை விட இந்த நூறு மஸலாவே அதிகமாய் பதிப்பிக்கப்பட்டிருப்பது இந்த நூலின் சிறப்பினை உணர்த்தும்.

தொடரும்....