Monday, September 17, 2012

என்ன செய்து கிழித்தார் பெரியார்!


இன்று பெரியாரின் பிறந்தநாள்.1980 களில் மதுரை ரயில்வே ஸ்டேஷன் மதில்சுவரில் துவங்கி மேம்பாலம் வரை இடைவெளி விடாமல் எங்கும் பெரியாரின் கருத்துக்கள் சுவரெழுத்தாக  எழுதப் பட்டிருக்கும்.அதை வாசிக்காத மதுரைக்காரனே அப்போது இருந்திருக்க முடியாது. இப்படித்தான் எனக்கும் பெரியார் அறிமுகமானார். 

சர்வோதய இலக்கிய பண்ணை புத்தகக் கடையில் கிடைத்த ஒரு புத்தகம், அப்புறம் அப்பாவின் சேகரிப்பில் இருந்த புத்தகங்களின் ஊடேதான் அவரின் நீள அகலங்களை புரிந்து கொள்ள முடிந்தது.ஒரு கட்டத்தில் அவரின் தீவிர ரசிகனாகிப் போனதன் விளைவாய் என்னிடம் திட்டு வாங்காத கடவுள்களே இல்லை எனலாம். அந்த வயதில் பெரியார் தந்த தாக்கத்தை அப்படித்தான் வெளிக் காட்ட முடிந்தது.

அதெல்லாம் ஒரு காலம், காலவோட்டத்தில் நான் பெரியாரைத் தாண்டி வந்துவிட்டதாகவே நினைக்கிறேன்.இப்போது அவரோடு எனக்கு நிறைய முரண்கள் இருக்கின்றன. அவரது கொள்கைகள் சமகாலத்துக்கு ஏற்றவாறு மேம்படுத்தப் படவில்லை என்கிற ஆதங்கம் நிறையவே இருக்கிறது. பெரியார் சொன்னார், பெரியார் சொன்னாரென இன்னமும் ஐம்பதாண்டுகளுக்கு முன்னால் அவர்  சொன்னதை பிடித்துக் கொண்டு தொங்குகிறவர்களுக்கும்,  காலங்காலமாய் பகவத் கீதையையும், மனுதர்மத்தையும் தங்களின் ஆதர்சமாய் பேசிக் கொண்டிருக்கிறவர்களுக்கும் பெரிய வித்யாசமில்லை என்பது என் தனிக் கருத்து.

எது எப்படியானாலும் அவரை வாசித்தவன், அதனால் பலதையும் யோசித்து தெளிந்தவன் என்கிற நன்றியும், மரியாதையும் ஒரு போதும் எனக்குள் குறைந்ததில்லை. பெரியாரிசம் என்பது ஒவ்வொரு மனிதனும் தன்னளவில் சுயமாக சிந்திக்கவும், சுயமாக வாழவும் வலியுறுத்தியது. ஆனால் இன்றைய நிதர்சனத்தில் அப்படி யாருமில்லை என்பதுதான் வருத்தமான ஒன்று.

பெரியார் என்றால் நாத்திகம் பேசுகிற ஆள் என்பதைத் தாண்டி அவர் உண்டாக்கிய சமூக விழிப்புணர்வு, சமூகநீதி போன்றவைகள் காலப் போக்கில் திட்டமிட்டே மறைக்கப் பட்டிருக்கிறது. இதற்கு அவருடைய தொண்டரடி பொடியாழ்வார்களே காரணமாய் இருந்ததை யாவருமறிவர். அவரின் உண்மையான வீச்சு என்ன என்பதை வே.மணிமாறன் அவர்களின் ஒரு கவிதை புட்டுப் புட்டு வைக்கும்.பலருக்கும் இந்த கவிதை பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்பதால் அதனை இங்கே மீளவும் பதிப்பிக்கிறேன்.

“என்ன செய்து கிழித்து விட்டார் பெரியார்?”

பனை ஏறும்

தந்தை தொழிலில்

இருந்து தப்பித்து

தலைமைச் செயலகத்தில் வேலை செய்பவர் கேட்டார்.

***

“பெரியாரின்

முரட்டுத்தனமான அணுகுமுறை

அதெல்லாம் சரிபட்டு வராதுங்க”

இதுமுடி வெட்டும் தோழரின் மகனான

எலக்ட்ரிக்கல் என்ஜினியர்.

***

“என்னங்க பெரியார் சொல்லிட்டா சரியா?

பிரமணனும் மனுசந்தாங்க.

திராவிட இயக்கம்

இலக்கியத்துல என்ன செஞ்சி கிழிச்சது?”

இப்படி ‘இந்தியா டுடே’

பாணியில்கேட்டவர்

அப்பன் இன்னும்

பிணம் எரித்துக் கொண்டிருக்க

இங்கே டெலிபோன் டிபார்மென்டில்

சுபமங்களாவை விரித்தபடி

சுஜாதா

சுந்தர ராமசாமிக்கு

இணையாக

இலக்கிய சர்ச்சை செய்து கொண்டிருக்கும்

அவருடைய மகன்.

ஆமாம்

அப்படி என்னதான் செய்தார் பெரியார்?

***

பெரியார் என்ன செய்து கிழித்தார் என்பதற்கு இந்த ஒரு கவிதை போதுமென நினைக்கிறேன்.