Wednesday, September 5, 2012

பெரிய வாத்தியார்!

என் தாய்வழிப் பாட்டனார் அடிப்படையில் ஒரு பெரு விவசாயி, ஆனால் ஒரு வைராக்கியத்தில் ஆசிரியரானவர். தனது கடைசி மூச்சு வரை ஆசிரியராக, மூன்று பள்ளிகளின் நிறுவனராக இருந்தவர். உடனே இன்றைய பணம் கொழிக்கும் கார்ப்பரேட் தொடர் கல்வி நிறுவனங்கள் உங்களுக்கு நினைவுக்கு வரலாம். அதில் தவறில்லை. இன்றைய சூழலில் அப்படியொரு நினைப்பு வருவது இயல்பே.

நான் சொல்ல வருவது சுதந்திரத்துக்கு முந்தைய 1924ம் வருடத்தைய சூழல், கல்வி என்பது குறிப்பிட்ட சில சமூகத்தினருக்கானது என்றிருந்த நிலை, வயிற்றுப் பாட்டுக்கே அல்லாடும் ஏழைக் குடியானவனோ அல்லது கீழ்சாதிக்காரர்களோ கல்வியை நினைத்தே பார்க்க முடியாத காலகட்டம். அப்படியே படிக்கப் போனாலும் கூட மேல்சாதிக்கார குழந்தைகளோடு சமமாய் உட்கார முடியாது. குழியில் உட்கார்ந்து படிக்க வேண்டிய அவலம் சகஜமாயிருந்த காலம்.

சுதந்திரப் போராட்டங்களில் தீவிரமாய் பங்கெடுத்துக் கொண்டவர் என் பாட்டனார். தீண்டாமை ஒழிய வேண்டுமெனில் முதலில் எல்லோருக்கும் விழிப்புணர்வை உருவாக்க வேண்டும். அதற்கு கல்வி அவசியம் என்கிற மகாத்மாவின் பேச்சினால் உந்தப் பட்டு, கிராமத்தில் இருந்த தன்னுடைய ஒரு வயலை மேடாக்கி அதில் தன் முதல் பள்ளியை 1924 ல் உருவாக்கினார். ஆனால் ஆசிரியருக்கு எங்கே போவது, எத்தனை பணம் கொடுத்தாலும் தாழ்த்தப்பட்ட ஏழைக் குழந்தைகளுக்கு சொல்லித் தர யாரும் தயாராக இல்லை.

இன்ட்டர் மீடியட் வரை படித்திருந்த அவர், ஏன் தானே ஆசிரியராகக் கூடாது என்கிற முடிவில் ஆசிரியப் பயிற்சிக்குச் சென்று அதை முடித்து தன்னுடைய பள்ளிக்கு தானே ஆசிரியரானார். ஆனால் குழந்தைகள்!, குடும்பமே வேலை செய்தால்தான் ஒரு வேளை கஞ்சியாவது குடிக்கமுடியும் என்றிருந்த சூழலில் யார்தான் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவார்கள். இன்னொரு வயலையும் பள்ளிக்கென ஒதுக்கி அதில் வரும் விளைச்சலைக் கொண்டு மூன்று வேளையும் குழந்தைகளுக்கு உணவு தருவதாய் சொல்லி ஊரில் இருந்த பிள்ளைகளை விரட்டிப் பிடித்து பள்ளியில் சேர்த்திருக்கிறார்.

பதினைந்து வயதுப் பையனை ஐந்து வயதெனப் போட்டு பள்ளியில் சேர்த்த கூத்தெல்லாம் நடந்திருக்கிறது. அவருடைய நோக்கம் ஊரில் படிக்காமல் யாரும் இருந்துவிடக் கூடாதென்கிற வைராக்கியம்தான். அவருடைய ஏழு குழந்தைகளும் அந்தப் பள்ளியில் சேர்த்தார். ஏழை, பணக்காரன், உயர்சாதி, தாழ்ந்த சாதி என்றில்லாமல், படிக்க நினைக்கும் அத்தனை பேருக்கும் அவரது ஆரம்பப் பள்ளி சரணாலயம். இந்த அனுபவத்தைக் கொண்டு சுற்றியிருந்த ஊர்களில் இரண்டு பள்ளிகளை நிறுவி அதற்கான செலவு முழுவதையும் ஏற்றுக் கொண்டு, பின்னாளில் அந்த ஊர்காரர்களுக்கே அந்த பள்ளிகளை உரிமையாக்கிக் கொடுத்தவர்.

தனது மூத்த மகனுக்கு அரசுப் பணி கிடைத்த போதும் அவரை தன் பள்ளியிலேயே ஆசிரியராய் பணியமர்த்தியவர். என் பெரிய மாமாவின் பெயரே பலருக்குத் தெரியாது. சின்ன வாத்தியார் என்றால்தான் தெரியும். தாத்தாவின் காலத்திற்குப் பின்னர் அவரும் தன் கடைசி மூச்சு வரை பள்ளியை நிருவகித்தார். அதன் பின்னர் எனது பெரியம்மா அதே பள்ளியில் ஆசிரியராகி அவர் கடைசி காலம் வரை பள்ளியை வளர்த்தெடுத்தார்.இத்தனைக்கும் சிறிய கிராமத்து பள்ளிக் கூடம்தான். அதிலிருந்து பொருளாதார பலன் எதுவுமில்லை. கைக்காசைப் போட்டுத்தான் நடத்தினார்கள். தங்கள் தகப்பனாரின் லட்சியம் தொடர வேண்டுமென்கிற அவர்களின் அர்ப்பணிப்பே இன்று வரை அந்த பள்ளியை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது.

மாமாவுக்கும், பெரியம்மாவுக்கும் பின்னர் எங்கள் குடும்பத்தினர் யாரும் அங்கே ஆசிரியராக தொடரவில்லை, மற்றவர்கள் எல்லோரும் மதுரை, சென்னை என இடம் பெயர்ந்து விட்டாலும் கூட இன்று வரை அந்த பள்ளியை ஏழு குடும்பமும் அதே உயிர்ப்புடன் நடத்தி வருகிறோம். மூன்றாவது தலைமுறையினராகிய எங்களுடைய பங்களிப்புகள் இப்போதுதான் நிர்வாகத்தில்  கைகூட ஆரம்பித்திருக்கிறது. இப்போதிருக்கும் நிருவாக குழுவில் நானும் ஓர் உறுப்பினன். அவருடைய நோக்கம் சிதறாமல் இன்னும் சிறப்பாய் முன்னெடுத்து செய்ய வேண்டும் என்கிற ஆசையிருக்கிறது. நிச்சயம் செய்வோம்.

எங்களுக்கு அடுத்த தலைமுறையும் கூட அவருடைய கனவை நனவாக்க உழைப்பார்கள் என்கிற நம்பிக்கை இருக்கிறது.

//இன்று ஆசிரியர் தினம், இந்த நாளில் இது மாதிரியான ஒரு ஆசிரியரைப் பற்றி அனைவருக்கும் சொல்ல முடிந்ததில் நிறைவும், பெருமையும்... எனக்கு! :) //