Sunday, September 9, 2012

இந்தியாவின் பால்காரன்!


Dr. Verghese Kurien

(26 November 1921 – 9 September 2012)

வர்கீஸ்குரியனை முதுமை இன்று நம்மிடமிருந்து பிரித்து விட்டது. நடுத்தர மலையாள குடும்பத்தில் பிறந்த குரியன், தன் கடைசி மூச்சை விட்ட போது இந்திய பால் உற்பத்தித்துறையின் தந்தையாக உயர்ந்திருந்த வரலாறு நம்மில் நிறைய பேருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இன்னும் சொல்லப் போனால் அப்துல் கலாமுக்கு கிடைத்த வெளிச்சம் இவருக்கு கிடைக்கவில்லை.

ஆரம்ப பள்ளிக் கல்வியை கேரளாவிலும், இடையில் சிறிது காலம் கோபிச்செட்டிப் பாளையத்திலும் முடித்த பின்னர், சென்னை லயோலா கல்லூரியில் அறிவியலும், அண்ணா பல்கலைகழகத்தில் மெக்கானிக்கல் என்ஜினியரிங்கிலும் பட்டதாரியானார். டாட்டா நிறுவனத்தில் வேலை கிடைத்தது. மேற்படிப்புக்காக அமெரிக்கா செல்ல ஸ்காலர்ஷிப் கொடுத்த அரசு, அவர் நாடு திரும்பியவுடன் குஜராத்தில் ஆனந்த் என்ற சிற்றூரில் இருந்த பால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் பணியமர்த்தியது. விருப்பமே இல்லாமல் அங்கே சென்றவர் திரும்பவே இல்லை.

மும்பை நகர பால் தேவையை முன்னிருத்தி கேடா மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் 1946ல் உருவாக்கப் பட்டது. அதன் நிறுவனத் தலைவராய் இருந்த திரிபுவன் தாஸ் என்பவர், குரியனின் தொழில் நுட்ப அறிவு மற்றும் அவரது நிர்வாக மேலாண் திறமைகள் தங்களுக்கு உதவும் என்பதை உணர்ந்து அவரை தங்களோடு பணியாற்ற அழைக்க, தன் அரசுப் பணியை  துறந்து அவர்களோடு ஐக்கியமானார். அதன் பிறகு நடந்தவை எல்லாம்  நாடறிந்த  வரலாறு.

ஒரு மாவட்ட கூட்டுறவு பால்பண்ணையாக ஆரம்பித்த ஒரு இயக்கம் இன்று உலகில் அதிக அளவில் பால் உற்பத்தி செய்யும் கேந்திரம். அமுல் என்ற பெயரைத் தெரியாத இந்தியர்களை விரல் விட்டு எண்ணிவிடமுடியும். அத்தனை பரந்து பட்ட நிறுவனமாய் வளர்த்தெடுத்தவர் குரியன். அவருடைய திறமையின் மீது நம்பிக்கை வைத்த அப்போதைய பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி, கேடா மாவட்ட கூட்டுறவு சங்கத்தின் மாதிரியை நாடெல்லாம் நிறுவும் பொறுப்பினை அவரிடம் கொடுத்த போது குரியன் வைத்த ஒரே நிபந்தனை தான் ஆனந்தை விட்டு வெளியே போக மாட்டேன் என்பதே.....அந்த அளவுக்கு அந்த மண்ணோடும், மக்களோடும் ஐக்கியமானவர்.

இன்றைக்கு நம்முடைய ஆவின், கர்நாடகத்தின் நந்தினி எல்லாம் அவருடைய முன்னெடுப்புகளே, நாடெங்கிலும் இதைப் போல இருபது பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க பால் பண்ணைகளை நிறுவி அவற்றை நெறிப்படுத்தியதன் மூலமாய் இன்று இந்தியா உலக பால் உற்பத்தியில் முதலிடத்திலிருக்கிறது. இத்தனை சாதித்த அந்த மனிதர் தன் கடைசி நாட்களில் பிரச்சினைகளுக்கும் அவமானங்களும் ஆளானது வருந்தத்தக்கது.

I Too Had A Dream, An Unfinished Dream என்கிற இவரது இரண்டு புத்தகங்கள் மிகப் பிரபலம். அரசின் பத்மவிபூஷன் தவிர பல்வேறு சர்வதேச விருதகளைப் பெற்ற இந்த மாபெரும் நிர்வாகி தன் வாழ்நாள் முழுதும் சாமான்ய ஏழைக் குடியானவர்களின் வாழ்க்கைத் தரம் மேம்பட  உழைத்தவர். அவர் உழைப்பின் பலனை நாடெங்கிலும் உள்ள பல லட்சம் ஏழை குடியானவர்கள் அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர் என்றால் மிகையில்லை.

வாழ்க நீ எம்மான்!