Thursday, October 11, 2012

நான்!, ராமர் பிள்ளை!!, மூலிகை பெட்ரோல்!!! - 1


இந்த தொடரில் இடம்பெறும் நிகழ்வுகள் அனைத்தும் 2000-01 ஆண்டுகளில் என்னுடைய நேரிடை அனுபவம். இதன் மூலம் எந்த தனி மனிதரைப் பற்றியோ அல்லது  குறிப்பிட்ட இயக்கத்தைப் பற்றியோ ஒரு சார்பான முடிவுக்கு வந்துவிடவேண்டாம். இது என்னுடைய தனிப் பட்ட அனுபவங்களும் அதனால் ஏற்பட்ட கருத்துக்கள் மாத்திரமே....

பொது நண்பர் ஒருவர் மூலிகைபெட்ரோல் திரு.ராமர்பிள்ளை நல்ல முதலீட்டாளர்களை தேடிக் கொண்டிருப்பதாகவும்,அவரை என்னிடம் அழைத்து வருவதாகவும்... பேசிப்பாருங்களேன் என தூபம் போட்டார். அப்போது நான் பெரிய அளவில் ஏற்றுமதி நிறுவனம் ஒன்றை நடத்திக் கொண்டிருந்த நேரம். அகில இந்திய அளவில் ஒரு ரவுண்டு படம் காட்டி ப்ளாப் ஆகியிருந்த ராமரை ஒரு மாலையில் என் அலுவலகத்தில் வைத்து சந்தித்தேன்.தையல் பிரிந்த சட்டை...தேய்ந்த செருப்பு, துவைத்து நாளாயிருந்த பேண்ட், கலைந்த தலை, களைத்த முகம்... என வெள்ளந்தியான கிராமத்து மனிதனை சந்தித்த உணர்வும் அனுதாபமுமே எனக்குள் மேலோங்கியிருந்தது.

அப்போது அவரைப் பற்றிய நிறைய செய்திகளும்/வதந்திகளும் ஊடகங்களில் அலசி காயப்போட பட்டிருந்தாலும் மனிதர் தன் கண்டுபிடிப்பு பற்றி உறுதியாகவே பேசினார். சமயத்தில் அவர் கண்களில் தெரிந்த நம்பிக்கை ஆச்சர்யமாகவும் இருந்தது.தேர்ந்த விற்பனை பிரதிநிதியைப் போல பேசத்தெரியாததே அவரின் பெரிய குறையாக இருக்குமென நினைத்துக் கொண்டேன்.

முதல் சந்திப்பில் பெரிதாக ஏதும் பேசவில்லை.அப்போது சூளையில் ஒரு வாடகை வீட்டிலிருப்பதாக கூறினார்.ஆரம்பத்தில் இறுக்கமாயிருந்தவர் கொஞ்சம் கொஞ்சமாய் அவிழ ஆரம்பித்தார்.தமிழக அரசியல்வாதிகளால் துன்புறுத்தப்பட்டதை கண்ணில் நீரோடு கூறினார்.நம்புகிற மாதிரித்தான் இருந்தது. கதை கேட்கிற ஆவலில் நிறைய கிளறினோம்...நிறையவே கிடைத்தது. இரண்டு மூன்று சந்திப்புக்குப்பின்னரே அவர் எங்களை நம்ப ஆரம்பித்தார்.தன்னுடைய கண்டுபிடிப்பினைப் பற்றி சில தகவல்களை கூறினார், எங்களுக்கு அவர் மீது நம்பிக்கை வருவதற்காகவே கூறுகிறார் என்றே நினைத்தேன்.என் சந்தேகத்தை நிவர்த்திக்கும் வகையில் என் முன்னே தயாரித்துக் காட்டுவதாகக் கூறினார்.

ஒரு நாள் அவர் கூறிய இடத்தில் அதை செய்தும் காட்டினார். என் முன்னால் எந்த கண்ணாடிக்குச்சியையும் வைத்துக் கிண்டவில்லை. ஒரு கொப்பரை தண்ணீரில் என்ன இலை என கண்டறியமுடியாத வகையில் வெற்றிலை மாதிரியான இலைகள் துண்டு துண்டாக வெட்டப்பட்டு ஊற வைக்கப்பட்டிருந்தது.வெற்றிலையா எனக் கேட்டதற்கு பதில் சொல்லாமல் சிரித்தார். ஒரு மூட்டையில் வெண்ணிற உப்பொன்று இருந்தது. என்ன உப்பென கேட்டதற்கு Citric குடும்பத்தைச் சேர்ந்த உப்பென்றார். படிக்கிற காலத்தில் வேதியியலையும் அதன் சமன்பாடுகளையும் பார்த்து பேதியானவன் நான்...ஹி..ஹி...

இலையை வடித்து தண்ணீரை ஒரு கண்ணாடி ட்ரம்மில் கொட்டினார், இலை மூன்று நாட்களாக ஊற வைக்கப்பட்டிருப்பதாகக் கூறினார், மெய்ப்பிக்கும் வகையில் தண்ணீர் சற்றே நுரைத்திருந்தது.தண்ணீரை முகர்ந்து பார்த்தோம் பச்சிலை மணம், தீக்குச்சியைக் கொளுத்தி தண்ணீரில் போட்டேன்...அனைந்தது.உடனே உப்பிலும் தீ வைக்கச் சொன்னார் செய்தேன்...கற்பூரம் போல் எரியுமென நினைத்த்து ஏமாந்தேன்.கேலியாய் சிரித்தார்.தண்ணீரில் குறிப்பிட்ட அளவில் உப்பைக் கரைத்தார்.நானும் கரைத்தேன்...கையை விட்டே கரைத்தோம்.கொஞ்ச நேரம் கழித்து தண்ணீர் இரண்டு அடுக்காய் பிரிந்திருந்தது.

காகிதம் இருக்கிறதா என என்னிடம் கேட்டு வாங்கி தண்ணீரின் மேல்மட்டத்தில் தோய்த்து அதை கொளுத்தச் சொன்னார்....காகிதம் குப்பென பற்றி எரிந்தது.மேலே திரண்டிருந்த திரவம் நிறமற்று சற்றே அடர்வாய்,பிசுபிசுப்பாய், மெலிதான பச்சை வாசனையுடன் இருந்தது.அதை ஒரு கோப்பையில் அள்ளி அதில் தீவைக்க கொளுந்து விட்டு எரிந்தது....நம்ப முடியாத காட்சி.அந்த திரவத்தை பெட்ரோலுக்கு முந்தைய நிலை என்று சொன்னார்.இதை சரியான தொழில் நுட்பத்தில் உருவாக்க பெட்ரோலை விட அதிக எரிதிறன் கொண்ட எரிபொருள் கிடைக்குமெனச் சொன்னார்.

தொடரும்.


(2006ல் எழுதிய தொடர், சேகரிப்புக்காக மீள் பதிவு )