Thursday, October 11, 2012

நான்!, ராமர் பிள்ளை!!, மூலிகை பெட்ரோல்!!! - 2இந்த தொடரில் இடம்பெறும் நிகழ்வுகள் அனைத்தும் 2000-01 ஆண்டுகளில் என்னுடைய நேரிடை அனுபவம். இதன் மூலம் எந்த தனி மனிதரைப் பற்றியோ அல்லது  குறிப்பிட்ட இயக்கத்தைப் பற்றியோ ஒரு சார்பான முடிவுக்கு வந்துவிடவேண்டாம். இது என்னுடைய தனிப் பட்ட அனுபவங்களும் அதனால் ஏற்பட்ட கருத்துக்கள் மாத்திரமே....


மூலிகை எரிபொருள் சாத்தியம்தான் எனத் தெரிந்த பின் வர்த்தகரீதியான பேச்சுவார்த்தையை துவக்கினேன்.அவர் அதெல்லாம் நீங்கள் "ஜீ" கிட்டதான் பேசனும் என்றார். யாருங்க இந்த "ஜீ" ன்னு கேட்க, அவர் RSS இயக்கத்தின் தமிழக அமைப்பாளர் என்றார்.இது நான் கொஞ்சமும் எதிர்பார்க்காதது,RSS மக்களுக்கு இதில் என்ன வேலை? அவர்கள் எப்போது வர்த்தக விவகாரங்களில் இறங்கினர்? என அலை அலையாய் கேள்வி. தவிர்த்து விடலாம் என நினனப்பதற்குள் காலம் கடந்திருந்தது. "ஜீ" எங்களை சந்திக்க அனுமதியும், நேரமும் தந்திருந்தார்.அவர்களின் அலுவலகத்திற்கு நாங்கள் அழைக்கப்பட்டோம்.

ராமர் ஒரு ஏமாற்றுக்காரர் என அறிவியலாலர்களும், ஊடகங்களும் கைவிட்ட நிலையில், அரசியல்வாதிகள் தொழில்நுட்பத்தை தங்களிடம் தந்துவிடுமாறு அன்பாகவும், அடித்தும், பொய்வழக்குப் போட்டும் துன்புறுத்திய அந்த கொடுமையான நாட்களில், கையில் காசில்லாமல் உதவ ஆளில்லாமல் தெருவில் நின்ற ராமர் ஏதோ ஒரு வழியில் RSS ன் தலைவர் திரு.சுதர்சன் அவர்களிடம் தன் பரிதாப நிலையை தெரிவிக்க, அவரின் கருனைப் பார்வையினால் RSS அவரை தத்தெடுத்ததாகவும், தற்சமயம் தான் ஒரு முழுநேர RSS ஊழியராக மாறிவிட்டதாகவும்...வழக்குகளை எல்லாம் அவர்களே ஏற்று நடத்துவதாகவும் எனவே அவர்கள் எடுக்கும் முடிவே தன்னுடையது என தன்னுடைய நன்றியுணர்வைக் காட்டினார்.

RSS அலுவலக வாயிலில் தமிழக காவல்துறை ராணுவமுகாம் மாதிரியான அமைப்புகளுடன் சோதனைகளும் நடத்தினர்.நம்மளையே இந்த தடவு தடவறாங்களே, பொம்பள புள்ளைங்க வந்தா என்ன பண்ணுவாய்ங்களோன்னு நினைத்து பெருமூச்சு விட்டுக்கொண்டே உள்ளே போனேன்.மரங்களின் அடர்த்தியில் அந்த கட்டிடம் அமானுஷ்ய அமைதியுடன் தென்பட்டது. முதலில் ஒரு அரையிருட்டான அறையில் உட்கார வைக்கப் பட்டோம்.கொஞ்சம் கூட சினேகமில்லாத முதத்துடன் சந்தேகமான பார்வையுடன் சில ஒல்லியான ஆசாமிகளும் பல கொழுத்தவர்களையும் அங்கே காண முடிந்தது.அனைவரும் வேஷ்டி சட்டையில் காணப்பட்டனர்.

சற்று நேரத்தில் இரண்டு தெலுங்குகாரர்கள் எங்களோடு உட்கார வைக்கப்பட்டனர்.அவர்களும் எங்களைப் போல பேச்சுவார்த்தைக்கு(!) வந்தவர்கள்....முதலில் தெலுங்கு ஆசாமிகள் அழைக்கப் பட்டனர். 15-20 நிமிடம் கழித்து நாங்கள் அழைக்கப் பட்டோம்.அதிக வெளிச்சமற்ற அறையில் வட்டவடிவ மேசையில் நாற்பதுகளின் ஆரம்பத்தில் இருந்த எளிமையான அமைதியான மனிதர்தான் "ஜீ".

பொதுவாக இது மாதிரியான வர்த்தகப் பேச்சுவார்த்தைகளில் முதல் 10 நிமிடங்கள் இரண்டு தரப்புக்குமே ரொம்ப முக்கியமானது. பரஸ்பரம் ஒருவர் மற்றவரை எடை போடவும் எத்தகைய Statergy யினை முன்னெடுத்து தங்கள் இலக்கினை அடைவது என்பதை தீர்மானிக்கும் தருணமாய் அமையக்கூடியது. ஆனால் பேச்சு வார்த்தை துவங்கிய சில நிமிடங்களில் ரொம்பவே குழந்தைத்தனமான ஒரு வர்த்தக பேச்சுவார்த்தைக்கு வந்திருப்பது எரிச்சலைக் கூட்டியது.

எங்களுக்கு முன் வந்த தெலுங்குக்காரர்கள் திரு.சந்திரபாபு நாயுடு அவர்களின் பிரதிநிதி எனக் கூறினார். ஆந்திரா முழுவதுக்குமான தயாரிப்பு மற்றும் விற்பனை உரிமையை கேட்டு வந்திருப்பதாய் கூறினார்.அறுபது கோடி வரை தரத் தயாராக இருப்பதாகவும் கூறினார்.அது எந்த அளவிற்கு உண்மையோ தெரியாது. எங்களுக்கு தமிழக உரிமையை தருவதாகவும் அதற்கான விலையை கூறுமாறு கேட்டார். எனக்கு சிரிப்புதான் வந்தது....

விலையைக் கூறுவதற்கு முன் எரிபொருளின் நம்பகத் தன்மையை நிரூபிக்க எத்தகைய ஆவணங்களை வைத்திருக்கிறீர்கள் எனக் கேட்டதற்கு, சம்பந்தமே இல்லாமல் ஏதேதோ பேசினார். தாங்கள்தான் மத்திய அரசினை செலுத்துவதாகவும், தாங்கள் நினனத்தால் உட்கார்ந்த இடத்திலிருந்தே எந்த உத்தரவுகளையும் பெற்றுத்தர முடியும் எனக் கூறினார்.பேச்சுவார்த்தை தொடர, அவரின் வியூகம் உடைவதை தடுக்க திராணியற்று உட்கார்ந்திருந்தார் என்றே சொல்லலாம்.எனக்குக் கிடைத்த இந்த வாய்ப்பின நான் முழுமையாக பயன்படுத்திக் கொண்டேன் இப்போதிருக்கும் நிலையில் நீங்கள் ஓசியாய் கொடுத்தால் கூட வாங்க எவனும் வரமாட்டான் என அழுத்தமாய் கருத்தினை பதிந்தேன்.

அப்போது வெளியே ஒரு மணி அடித்தது.....

தொடரும்

(2006ல் எழுதிய தொடர், சேகரிப்புக்காக மீள் பதிவு )