Thursday, October 11, 2012

நான்!, ராமர் பிள்ளை!!, மூலிகை பெட்ரோல்!!! - 3


இந்த தொடரில் இடம்பெறும் நிகழ்வுகள் அனைத்தும் 2000-01 ஆண்டுகளில் என்னுடைய நேரிடை அனுபவம். இதன் மூலம் எந்த தனி மனிதரைப் பற்றியோ அல்லது  குறிப்பிட்ட இயக்கத்தைப் பற்றியோ ஒரு சார்பான முடிவுக்கு வந்துவிடவேண்டாம். இது என்னுடைய தனிப் பட்ட அனுபவங்களும் அதனால் ஏற்பட்ட கருத்துக்கள் மாத்திரமே....

மணி அடித்தவுடன் பரபரப்பாய் எழுந்தவர் 'கொஞ்சம் பொறுங்கள் வந்துவிடுகிறேன்' என வெளியே கிளம்பினார்.பேச்சுவார்த்தையில் சுவாரஸ்யமிழந்திருந்த நான் இன்னொரு நாள் வருகிறோமே என கிளம்ப, கொஞ்சம் பொறுக்குமாறு பணிவுடன் வேண்டினார்.அவர் கதவை திறந்தபோது வெளியே பரபரப்பாய் இருந்தது. கொஞ்சத்தில் வெளியே பயங்கர நிசப்தம், கட்டிடத்தில் நாங்கள் மட்டும்தான் இருக்கிறோமோ என்கிற மாதிரியான அமைதி. வெளியே வந்தால் கட்டிடத்தில் நாங்கள் மட்டும்தான்.....

ஆஹா எங்க ஒருத்தரையும் காணமே! என கீழே வந்தால் கட்டிடத்தின் முன்னால் இருந்த மைதானத்தில் "ஜீ" உட்பட எல்லோரும் காக்கி டவுசரும், வெள்ளை பனியனுமாக உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தனர் . எங்களோடு வந்த ராமர் மட்டும் பேண்ட்,சட்டையில் வித்தியாசமாய் அவர்கள் நடுவில். இடையிடையே ஏதேதோ கோஷமிட்டனர். அப்புறம் ஆளுயரத்திற்கு கம்புகளை கையில் பிடித்துக்கொண்டு பாடல்கள் பாடினர். எல்லாம் பாரதமாதாவை வாழ்த்தித்தான்...

சென்னையின் பரபரப்பான மையத்தில் இப்படியும் ஒரு கும்பல் இயங்குவது ஆச்சர்யமாய் இருந்தது. இதுதான் சமயமென அடுத்தசுற்று பேச்சு வார்த்தைக்காக காத்திருந்த தெலுங்கு ஆசாமிகளை பிடித்தேன், அவர்கள் கடப்பாவில் குவாரி வைத்திருப்பதாகக் கூறினர்.கொஞ்சத்தில் அவர்களுக்கும் சந்திரபாபு நாயுடுவுக்கும்...அம்மாவாசை,அப்துல் காதர் தொடர்பிருப்பது புரிந்தது. 'அரசியல்ல இதெல்லாம் சஹஜமப்பா' என நினைத்துக்கொண்டு, திட்டம் குறித்து அவர்களை கிண்டினேன். ராமரை அவதாரபுருஷராகவும்(!), RSSகாரர்களை குபேரசம்பத்தை அருளப்போகும் மஹாலட்சுமியாகவும் கருதிக்கொண்டிருப்பது புரிந்தது. 

நிதர்சனத்தில் இவர்களின் திட்டம் சாத்தியமில்லை என்பதையும் புரியவைத்தேன்.சீனாவில் காப்புரிமைக்கு பதிந்திருப்பதாக அவர்கள் காட்டும் ஆவணம் நம்பத் தகுந்தது அல்ல என்றும், ஏன் இந்தியாவில் காப்புரிமைக்கு பதியவில்லை என்கிற ஐயத்தையும் பகிர்ந்து கொண்டேன்.
மேலும் எதெற்கெடுத்தாலும் "ஜீ" பெட்ரோலிய மந்திரியுன் பேசுவதாகக் கூறுவது அறியாமையின் உச்சம், மூலிகை எரிபொருள் என்பது 'மரபு சாரா எரிசக்தி துறை' என்கிற துறையின் கட்டுப்பாட்டில் வரக்கூடியது.இந்த அடிப்படை கூட தெரியாமல் பேசிக் கொண்டிருப்பவர்களிடம் என்ன வர்த்தகம் செய்யமுடியும் என அவர்களை கலைத்தேன்.

அவர்கள் பணத்தைக் கொடுத்து ஏமாந்துவிடக் கூடாது என்கிற நியாயமான கவலை, அக்கறையில்தான் அதைச் சொன்னேன்.இப்போது என்ன செய்வது என அவர்கள் மிரள , இப்போது திடிரென வேண்டாம் என மறுத்தால் ஏதாவது பிரச்சினை வருமா என பயந்தார்கள்.பேசிப்பார்ப்போம் கவலைப்படாதீர்கள் என சமாதானம் சொல்லிக் கொண்டிருந்த வேளையில் "ஜீ" திரும்ப வந்தார். தாமதத்திற்கு மண்ணிப்புக் கோரினார். ரொம்பவும் தன்மையான மனிதராக தன்னைக் காட்டிக்கொள்ளும் முனைப்பு அவரிடத்தில் இருந்தது.

இப்போது "ஜீ" முற்றிலும் வேறு மனிதராக பேசினார்.என்னுடைய சந்தேகங்களையும் கவலையையும் பகிர்ந்து கொள்வதாக கூறினார். சந்தைப் படுத்துவது தொடர்பாக எங்களை மாற்றுத் திட்டம் தர இயலுமா எனக் கேட்டதுதான் ஆச்சர்யத்தின் உச்சம். இதுதான் சமயமென தெலுங்குகாரர்களை காப்பாற்ற முனைந்தேன். "ஜீ" சரியென ஒப்புக்கொண்டார். அவர்களையும் அழைத்து விரைவில் புதுப்பிக்கப்பட்ட திட்டத்துடன் அவர்களை தொடர்பு கொள்வதாக கூறினார். சரி விரைவில் சந்திக்கிறோம் என கிளம்பியபோது "ஜீ" என்னுடன் தனித்து பேச விரும்புவதாக கூறினார்.

அந்த தெலுங்கு பிரமுகர் கிளம்பும் போது கையை பிடித்துக் கொண்டு சிரித்தவேளையில் அவர் கண்களில் தெரிந்த நன்றியும், கைகளில் கொடுத்த அழுத்தமும் இன்னமும் பசுமையாய் இருக்கிறது.அதற்குப் பிறகு அவர்களை நான் சந்திக்கவில்லை.ராமரும் அவர்களிடமிருந்து எந்த தகவலுமில்லை என்று கூறினார்.

அவர்கள் போனபிறகு "ஜீ" கேட்ட முதல் கேள்வி, எங்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

சிங்கத்தின் குகைக்குள் போய் உட்கார்ந்து கொண்டு..."நீங்கள்தானே மஹாத்மாவை கொன்றீர்கள்","இன்றைக்கு மத்தியில் ஆளுபவர்கள் உங்கள் வீட்டு நாய்க்குட்டிகள்தானே!"..."நீங்கள் ஒரு மாஃபியா கும்பல்"...இப்படில்லாம் சொல்ல நான் என்ன கட்டபொம்மனா!.......ஹி..ஹி எந்த பிரதிபலனும் பாராமல் கிருஸ்த்துவ பாதிரியார்கள் போல தன்னலமற்ற சேவை செய்கிறீர்கள் என ஐஸ் வைத்தேன்.

அவருக்கு கோபம் வந்துவிட்டது...எங்களை அவர்களோடு ஒப்பிடாதீர்கள் அவர்கள் மதத்தை பரப்புகிறார்கள்.வெளிநாட்டுப் பணத்தைக் கொண்டு மீண்டும் நம்மை அடிமையாக்குகிறார்கள் என கோபமாகி, நிதானித்து பெருமூச்சு விட்டு எங்களுடைய சேவை தன்னலமற்றது என சொல்வதற்கு கூட உவமைக்கு அவர்கள் தேவைப்படுகிறார்கள் என அங்கலாய்த்தார், எனினும் உங்கள் கூற்று நேர்மையானது, உங்களை பிடித்திருக்கிறது என திரும்ப ஐஸ் வைத்தார். ஆஹா தப்பிச்சோம்டா! என நினைத்துக் கொண்டேன்.

எங்களைப் பற்றி நீங்கள் மேலும் தெரிந்துகொள்ள வேண்டுமென ஆசைப்படுகிறேன், நான் எதையும் உங்களிடம் திணிப்பதாக நினைக்காவிட்டால் எங்கள் புத்தகசாலையை பாருங்கள் அங்கேயுள்ள புத்தகங்கள் உங்களுக்கு சில தெளிவுகளைதரும். உங்களை மாதிரியான இளைஞர்கள் சமூகத்தைப் பற்றியும் யோசிக்கவேண்டும் என உபதேசித்தார். ஆஹா எதுக்கோ ப்ராக்கெட் போடறாங்களே! என மண்டைக்குள் விளக்கெறிய ஆரம்பித்தது.எதையும் காட்டிக்கொள்ளாது அவசியம் பார்க்கிறேன் என சொல்லியவுடன் உதவியாளர் ஒருவரை என்னை அவர்களின் புத்தகசாலைக்கு அழைத்துச் செல்லக் கூறி. என்னை மீண்டும் சந்திக்க ஆவலாய் இருப்பதாய் "ஜீ" விடைபெற்றார்.

தொடரும்....

(2006ல் எழுதிய தொடர், சேகரிப்புக்காக மீள் பதிவு )