Thursday, October 11, 2012

நான்!, ராமர் பிள்ளை!!, மூலிகை பெட்ரோல்!!! - 4


இந்த தொடரில் இடம்பெறும் நிகழ்வுகள் அனைத்தும் 2000-01 ஆண்டுகளில் என்னுடைய நேரிடை அனுபவம். இதன் மூலம் எந்த தனி மனிதரைப் பற்றியோ அல்லது  குறிப்பிட்ட இயக்கத்தைப் பற்றியோ ஒரு சார்பான முடிவுக்கு வந்துவிடவேண்டாம். இது என்னுடைய தனிப் பட்ட அனுபவங்களும் அதனால் ஏற்பட்ட கருத்துக்கள் மாத்திரமே....

அங்கே நிறைய புத்தகங்கள் வாங்கினேன்....படித்தேனா என்று யாரும் கேட்டுவிடாதீர்கள்.வெளியே வந்ததும் ராமர் ஆவலாய் ஓடி வந்தார்,எனக்கு அவரைப் பார்த்து கவலைதான் வந்தது. உள்ளே நடந்ததைக் கேட்டார்...விவரம் சொன்னேன். "ஜீ" அவருக்கு கடவுளைப் போல தெரிந்தார். எனக்கோ ஹி..ஹி..வேணாம் யாரும் கருத்து கேக்காதீங்கப்பா.....இனி இவர்களை சந்தித்துப் பேசுவதில் அர்த்தமில்லை, என நினைத்து ராமரிடம் தனியாக பேசிப் பார்த்துவிடலாம் என நினைத்தேன்.ஆனால் மனிதர் அசுர விசுவாசத்தோடு இருந்தார், பாவம் அவருக்கு கிடைத்த கடைசிகொம்பு அவர்கள்....

இதற்கிடையே விஜய்அமிர்தராஜ் குழுமம் மொத்தமாக உலக உரிமையை(!) 250 கோடிக்கு பேசிக்கொண்டிருப்பதாக கூறினர்.இது எனக்கு விரிக்கப்பட்ட வலையா எனத் தெரியாது, ஆனால் நான் வேறு முயற்சிகளில் இறங்கியிருந்தேன். மதுரை காமராசர் பல்கலை கழகத்தில் வேதியியல்துறையில் எனது உறவினர் பேராசிரியராக இருந்தார். அவரை சந்தித்து இதை உருவாக்கக் கூடிய சாத்தியகூறுகள் பற்றி விவாதித்தேன்.அவரோ ராமரிடம் இருந்து சில அடிப்படை தகவல்களை பெற வாய்ப்பிருந்தால் மேலே யோசிக்கலாம் என கைவிரித்தார்.

ராமர் நேரிடையாக தகவல்களைத் தர வாய்ப்பில்லாததால் பேச்சுவாக்கில் அடிப்படை தகவல்களை பெறலாம் என நினைத்தேன். இது தவறுதான் என்றாலும் ஒரு வியாபாரியாக எனக்கான சாதக வாய்ப்புகளை உறுவாக்குவதில் தவறில்லையென்றே நினைத்தேன்.அடிப்படை தகவல்களைக் கொண்டு அந்த பொருளை புதிதாக உருவாக்க முனைவதின் சாத்தியங்களை நோக்கினேன்.அடிப்படையில் சில தகவல்களை பெறமுடிந்தாலும் அவற்றை சோதித்துப் பார்க்கவோ அல்லது அதற்கு சமமான ஒரு எரிபொருளை தயாரிக்கும் ஆர்வம் இதுவரை எனக்கு ஏற்படவில்லை. ஒருவேளை என் மனசாட்சி வாழ்வின் சாதாரண நிலையிலிருக்கும் ஒரு சாமானியனின் உடமையை அபகரிக்க உடன்படவில்லையோ என்னவோ!

அவரிடம் பேச்சுவாக்கில் நான் பெற்ற தகவல்கள்...இவை யாருக்காவது பயன்படுமா அல்லது சாத்தியங்கள் உண்டா என வேதியியல் அறிவு உள்ளவர்கள்தான் கூற வேண்டும்.

1.அவர் உபயோகிக்கும் இலைக்கும் எரிபொருளுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை.

2.நீரில் இருந்து ஹைட்ரஜனை பிரிக்கும் வேலையை மட்டும்தான் இலைகள் செய்கின்றன

3.சிட்ரிக் குடும்ப உப்பிலிருக்கும் கார்பன் அணுக்களும் ஹைட்ரஜனுக்குமான வேதி வினையில் எரியும் தன்மையிலான ஹைட்ரோகார்பன்கள் உறுவாக்கப்படுகிறது.

4.அவர் பயன்படுத்தும் இலை பூவரசமர இலையென ஒரு முறையும், இன்னொரு முறை அவை பருத்தி இலைகள் என்றும் கூறினார்.


இதன் பிறகு பலமுறை அவர்கள் பேச்சுவார்த்தைக்கு அழைத்தும் நான் ஆர்வம் காட்டவில்லை. ராமர் என்னை அவருடைய நெருங்கிய நட்பு வைத்துக்கொள்வதில் ரொம்பவே மெனக்கெட்டார்.எனது நிறுவனங்களில் உள்ள வாகனங்களுக்கும், ஜெனரேட்டர்களுக்கும் மூலிகை எரிபொருள் தருவதாகக் கூறினார்.இதனிடையே ராமரின் வழக்கறிஞர் திரு.சம்பத்குமார் அவர்களை இரண்டொரு முறை சந்தித்தேன்.நான் சந்தித்த மனிதர்களிலே இவர் ரொம்ப நேர்மையானவர் என நினைக்கிறேன்.பல உண்மைகளை ஒப்புக்கொண்டார். இந்திய எண்ணைக் கழக சோதனையில் 11 விதமான தகுதிச் சோதனையில் 9ல் மட்டுமே திருப்திகரமான முடிவுகள் வந்ததாயும், மற்ற இரு சோதனையில் தோல்வி எனவே நிறைய ஆராய்ச்சிகள் செய்ய வேண்டியிருப்பதாகக் கூறினார். வாகனங்களில் உபயோகித்தால் பிசின் போன்ற ஒரு பொருள் உருவாவதாகவும் அவை வாகனங்களுக்கு உகந்ததல்ல என்றும் கூறினார்.

எனவே மண்ணென்னைக்கு மாற்றாக இதை சந்தைப்படுத்த வாய்ப்பிருப்பதாக கூறினார்.நானும் அது சாத்தியமென்றே நினைத்தேன்.மாவட்ட வாரியாக முகவர்களை நியமித்து சந்தைப் படுத்தலாம் எனக் கூறினேன்.அவரும் இதை பரிசீலிப்பதாகக் கூறினார். ஒரு நாள் ராமர் அழைத்து என்னுடைய பரிந்துரையை அவர்களின் புதிய திட்டமென கூறி, என்னை ஒரு மாவட்டத்திற்கான முகவராகும்படி கேட்டார்.எனக்கு மதுரை மாவட்டம் வேண்டுமென்றேன். அவர் அதை தன் சகோதரிக்கு தரவிருப்பதால் இயலாதென்றார். சரி ராமநாதபுரம் மாவட்டம் கொடுங்கள் எனக் கேட்டேன்.ராமர் நான் கோவிப்பதாக நினைத்து அதைவிட நல்ல மாவட்டங்கள் எத்தனையோ இருக்கிறதே எனக் கேட்டார், நான் சொன்ன காரணத்தைக் கேட்டு அவர் ஆடிப்போய்விட்டார்

அது.....

தொடரும்

(2006ல் எழுதிய தொடர், சேகரிப்புக்காக மீள் பதிவு )