Thursday, October 11, 2012

நான்!, ராமர் பிள்ளை!!, மூலிகை பெட்ரோல்!!! - 5


இந்த தொடரில் இடம்பெறும் நிகழ்வுகள் அனைத்தும் 2000-01 ஆண்டுகளில் என்னுடைய நேரிடை அனுபவம். இதன் மூலம் எந்த தனி மனிதரைப் பற்றியோ அல்லது  குறிப்பிட்ட இயக்கத்தைப் பற்றியோ ஒரு சார்பான முடிவுக்கு வந்துவிடவேண்டாம். இது என்னுடைய தனிப் பட்ட அனுபவங்களும் அதனால் ஏற்பட்ட கருத்துக்கள் மாத்திரமே....

"எனக்கு ராமநாதபுர மாவட்டம் கொடுங்க..ஆனா ஒரு சொட்டு கூட அங்க விக்கறதா இல்லை...அவ்வளவும் எக்ஸ்போர்ட்தான்" என்றேன். 

"எங்க எக்ஸ்போர்ட் பண்ண போறீங்க?"...ன்னு கேட்டார்.

இலங்கைக்குத்தான் என்றேன். அத்தனையும் ட்ரம்ல போட்டு கடல்ல மிதக்கவிட்டு கொண்டுபோய் வித்தா நல்ல காசு பார்க்கலாம்னு சொன்னதும் ஆடிப்போய்விட்டார். என்னங்க இப்படி வில்லங்கமா பேசறீங்க, என நிஜமான கவலையோடு சொன்னார்.சொல்றேன்னு தப்பா நினைக்காதீங்க ராமர், ஒரு பொருள் புதுசா சந்தைக்கு வருதுன்னா அதற்கென தனித்துவமான திட்டமிடலும், விற்பனை உத்தியும் இருக்கனும்.

எனக்குத் தெரிஞ்சி இந்த விற்பனைக்கு எந்த அரசுத் துறையிடமும் அனுமதியோ அங்கீகாரமோ நீங்கள் பெறவில்லை. அவசர கோலத்துல செய்யுற எதுவும் சரியாவராது. அதுனால என்னால இதுல உங்களோட எவ்வளவு தூரம் பங்கெடுத்துக்க முடியும்னு தெரியலைன்னு சொன்னேன். சரி நாம் நேர பேசிக்கலாம்னு சமாதனப்படுத்தினார்.ஒரு வாரம் கழித்து ராமர் புதிய எரிபொருள் அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சிக்கான அழைப்பிதழுடன் சந்தித்தார்.

கோடம்பாக்கம் பைலட் திரையரங்கினையொட்டிய வீதியில் ஒரு ஹோட்டலில் விழா.எல்லா மாவட்ட முகவர்களும் வருகிறார்கள் அவசியம் வரவேண்டுமென கேட்டார். ஆர்வம் இல்லாவிடினும் ராமருக்காக விழாவிற்கு சென்றேன். பா.ஜ.க வைச் சேர்ந்தவர்களும் RSS பிரமுகர்களும் குழுமியிருந்தனர்.கட்சிக்காரர்களே நான் அந்த மாவட்டம் அவர் இந்த மாவட்டம் என பேசிக்கொண்டிருந்தனர்.பத்திரிக்கை நிருபர்கள் என அய்ந்தாறு பேர் உட்கார வைக்கப்பட்டிருந்தனர்.

முதலில் ராமர்பிள்ளையின் தாயார் குத்துவிளக்கேற்றிய அந்தக் கணத்தில் அவரின் மொத்தக் குடும்பமே நெகிழ்ந்து கண்ணீர் சிந்தியது உணர்ச்சிப்பூர்வமாய் இருந்தது. அந்த ஏழைத் தாய் எத்தனை எதிர்பார்ப்புகளையும், ஏமாற்றங்களையும், ஏளனங்களையும் சந்தித்திருப்பார் என்பதை உணரமுடிந்தது.சம்பிரதாயத்திற்கு சில பெரியவர்கள் பேசிய பின்னர் வழக்கறிஞர் சம்பத் குமார் பேசினார்.ராமர் மீது CBI போட்ட வழக்குகளை நீதிமன்றத்தில் எவ்வாறு முறியடிக்கப் பட்டது என்பதை விளக்கினார்.

மூலிகை எரிபொருளை வாகனங்களில் பயன்படுத்துவது தொடர்பான சிக்கலை விளக்கி அதை சரிசெய்யும் வரை மண்ணென்னைக்கு மாற்றாக ஏழைமக்களை இலக்காக வைத்து புதிய எரிபொருளை சந்தைபடுத்த இருப்பதையும் அந்த எரிபொருளுக்கு "ஜெரோசின்"(ஜெய் ஸ்றீ ராம்+கெரோசின்) என பெயரிட்டிருப்பதாக அறிவிக்க கரகோஷம் எழுந்தது. மயிலை சட்டமன்ற உறுப்பினராக இருந்த திரு.லட்சுமணன் முறைப்படி ஜெரோசினை அறிமுகப்படுத்தினார். 

தொடர்ந்து நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில், ஹிந்துவில் இருந்து வந்த நிருபர் மட்டுமே நியாயமான சந்தேகங்களை எழுப்பி சம்பத்குமாரை எரிச்சலூட்டினார்.முடிவில் எல்லா பத்திரிக்கையாளர்களும் கவர் ஒன்றைக் கொடுத்தார்கள்...அதில் என்ன இருந்திருக்குமென்பதை உங்கள் ஊகத்திற்கே விட்டுவிடுகிறேன்.அடுத்த நாள் பத்திரிக்கைக்ளில் இந்த நிகழ்வு குட்டியான பெட்டிச் செய்தியாகத்தான் வந்திருந்தது வேறுவிடயம்.

"ஜீ" என்னிடம் அன்பாய் நலம் விசாரித்தார், வாரவாரம் அவர்கள் அலுவலகத்தில் நடக்கும் கூட்டங்களுக்கு நான் வந்தால் மகிழ்ச்சியடைவேன் என கூறினார்.இன்றைக்கு வரை அவருக்கு அந்த வாய்ப்பை நான் வழங்கவில்லை.

மறுநாள் ராமர் என்னை சந்தித்து, ராமநாதபுரம் அல்லது சென்னையை தருவதாகவும், ஐம்பது லட்ச ரூபாய் இரண்டு தவனைகளாக தரவேண்டுமெனக் கூறினார். அதாவது 25 லட்ச ரூபாய் ராமர் தொழில்நுட்பம் தருவதற்கான விலையாகவும், அது திரும்ப தரப்படாது என்றும், மற்ற 25 லட்சம் மாவட்ட முகவர் தொகையாக இருக்கும் என கூறினார். இது போக மொத்த விற்பனையில் ராமருக்கு ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் ராயல்டியாக தர வேண்டுமென கூறினார்.அடுத்து வரும் ஆண்டுகளில் ஆண்டுக்கு 25 லட்சம் கொடுத்தால் போதுமென்றார்.

பணம் கொடுப்பது சிரமமில்லையென்றாலும், எவ்வித அரசு அங்கீகாரமுமில்லாமல் RSS என்கிற பின்புல செல்வாக்கை மட்டுமே நம்பி ரிஸ்க் எடுப்பதில் எனக்கு விருப்பமில்லை.ஆனால் ராமரோ 'அவுக கேட்ருக்காக...இவுக கேட்ருக்காக'....என நெருக்கடி கொடுத்தார்.விருப்பமில்லை எனக் கூறி அவரை வருத்தப்பட வைக்க எனக்கு விருப்பமில்லாததால்....பணம் பிரச்சினை இல்லை ஆனால் எனக்கு மதுரைதான் வேண்டுமென்றேன்.நிச்சயமாய் அவர் மதுரையை தரப்போவதில்லை என எனக்குத் தெரியும்.

விருதுநகர் வரை வந்தார், என்னை அவரது நெட்வொர்க்கில் வைத்துக்கொள்ள வேண்டுமென ரொம்பவே ஆசைப்பட்டார். இந்தச் சமயத்தில் முதல் முகவர் தன் விற்பனையை துவக்கும் விழா வந்தது. திருவள்ளூர் மாவட்ட முகவர் மூலிகை பெட்ரோல் தயாரிப்பு மற்றும்  விற்பனை துவக்கும் விழா பாடி TVS லூகாஸ் சந்திப்பிற்கு அருகே நடந்தது. தற்போதைய தமிழக பா.ஜ.க தலைவர் திரு.இல.கணேசன் தயாரிப்பினையும் விற்பனையையும் துவக்கி வைத்தார்.இங்கேயும் பத்திரிக்கையாளர்கள்...கவர் எல்லாம் அமர்க்களப்பட்டது.அந்த முகவரிடம் எக்ஸ்ப்ளோசிவ் லைசென்ஸ் எல்லாம் வாங்கிவிட்டீர்களா எனக்கேட்டேன். அவர் என்னை வேற்றுகிரக ஆசாமியை பார்ப்பதைப் போல பார்த்தார்.

இனி ராமருக்காக நேரத்தை வீணடிபப்தில் அர்த்தமில்லை என்கிற முடிவுடன்,ராமரை வாழ்த்திவிட்டு விழாவில் இருந்து கிளம்பினேன்.அதுதான் அவரை கடைசியாக சந்தித்தது.சில நாட்கள் கழித்து பாடியில் ஒரு கடை ராமரின் மூலிகை பெட்ரோல் விற்பனையகம் என அமர்களத்துடன் திறக்கப்பட்டது. அன்று மாலை அந்தவழியாய் போகும் போது "NO STOCK" என தட்டி வைத்திருந்தனர். அடுத்த நாளும் அதே தட்டி, இரண்டொரு நாள் கழித்து தட்டிக்கு பதில் மூடிய ஷட்டரில் எழுதி வைத்திருந்தனர். இதை எழுதும் இன்று வரை அந்தக் கடை திறக்கப்படதாக தெரியவில்லை. தயாரிப்பு நிறுவனம் அமைப்பதாக விழா நடந்த இடத்தில் இன்று ஒரு பெட்ரோல் பங்க் வந்துவிட்டது. 

இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் இரண்டொரு முறை அவர் தொலைபேசினாலும் நான் விலகிப்போகிறேன் என்பதை உணர்த்தினேன். அவரும் புரிந்துகொண்டார், நாளடைவில் எங்களுக்கிடையேயான தொலைத்தொடர்பும் நின்று போனது, எனது தொலைபேசியில் இருந்த அவரது எண்ணும் நீக்கப்பட்டது.

இந்த மொத்த அனுபவம் பற்றிய எனது நிறைவினை அடுத்த பதிவுடன் முடிக்கிறேன்.

தொடரும்

(2006ல் எழுதிய தொடர், சேகரிப்புக்காக மீள் பதிவு )