Thursday, October 11, 2012

நான்!, ராமர் பிள்ளை!!, மூலிகை பெட்ரோல்!!! - 6


இந்த தொடரில் இடம்பெறும் நிகழ்வுகள் அனைத்தும் 2000-01 ஆண்டுகளில் என்னுடைய நேரிடை அனுபவம். இதன் மூலம் எந்த தனி மனிதரைப் பற்றியோ அல்லது  குறிப்பிட்ட இயக்கத்தைப் பற்றியோ ஒரு சார்பான முடிவுக்கு வந்துவிடவேண்டாம். இது என்னுடைய தனிப் பட்ட அனுபவங்களும் அதனால் ஏற்பட்ட கருத்துக்கள் மாத்திரமே....

இந்த தொடரின் நிறைவாக, மூலிகைபெட்ரோலின் சாத்தியம் மற்றும் அதைச் சூழ்ந்திருக்கும் சந்தர்ப்ப சூழல்கள் அதை நிர்ணயிக்கும் காரண காரணிகளைப் பற்றிய எனது கணிப்புகளுடன் நிறைவு செய்யவிரும்புகிறேன்.

முதலில் தனித்துவமான மூலிகைபெட்ரோல் என்பது சாத்தியமற்றது என்றே கருதுகிறேன், பசுந்தாவரங்களுடன் செயற்கையாக தயாரிக்கப்பட்ட வேதிப் பொருட்களின் துனைகொண்டு எரிபொருளை உருவாக்குதல் வேண்டுமானால் சாத்தியமாகலாம், ஆனால் அதுவும் செலவுகூடிய தயாரிப்பாகவே இருக்கும்.உதாரணத்திற்கு ராமரின் கூற்றுப்படி நீரில் இருக்கும் ஹைட்ரஜனைப் பிரிக்க மூலிகை உபயோகிக்கப்படுகிறது என்பதை நிறுவ எந்த ஆதாரங்களும் நம்மிடையே இல்லை.

நானறிந்தவரை ஹைட்ரஜனை நீரிலிருந்து பிரித்தெடுக்கும் முறைகள் செலவு கூடியது.வெறும் இலைகளைப் போட்டு ஒருவர் தண்ணீரிலிருந்து ஹைட்ரஜனைப் பிரிக்கிறாரென்றால், ஹைட்ரஜனை நேரடியாகவே எரிபொருளாய் உபயோகித்திருக்கலாம்.அதன் மூலம் பெரும் புரட்சியையே உருவாக்க வாய்ப்புகள் இருந்தபோது அவரைச் சேர்ந்த அறிவியலாலர்களுக்கு இதை யோசிக்காமல் இருந்திருப்பார்களா?

சர்கரை ஆலைக் கழிவுகளில் இருந்து விலை குறைவான 'எத்தனால்' என்கிற துனைப்பொருள் தயாரிக்கபடுகிறது. பிரேசில் போன்ற நாடுகளில் இந்த எத்தனால் பெட்ரோலுடன் 40% வரை கலந்து வினியோகிக்கப்படுகிறது. கடந்த பா.ஜ.க அரசினால் இத்திட்டம் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டாலும் இன்றளவில் சோதனையில்தான் இருக்கிறது. அவற்றை பயன்படுத்துவதால் வாகனங்களுக்கு ஏதேனும் குறை வரலாம் என அரசு தயங்குவதாகத் தெரிகிறது. என்னுடைய சந்தேகமெல்லாம் நமது ராமரின் தயாரிப்பும் சற்றேறக்குறைய இந்த எத்தனாலை ஒத்ததாக இருக்க வாய்ப்புள்ளது. ஆனால் இதை நிறுவ என்னிடம் எந்த ஆதாரமும் இல்லை.

இது ஒருபுறமிருக்க இந்தக் கண்டுபிடிப்புக்க காப்புரிமை பெறுவதற்கான முயற்சிகள் ஆரம்பத்திலிருந்தே குழப்பம் நிறைந்ததாயும், நேர்மையான தொனியிலும் இல்லை என்பது என்னுடைய கருத்து. இங்கே கண்டுபிடிக்கப்பட்ட ஒரு பொருளுக்கு சீனாவிலும், ஜெர்மனியிலும் காப்புரிமைக்கு பதிய வேண்டிய அவசியமென்ன?...., தமிழகத்தைச் சேர்ந்த சில அரசியல் தலைவர்களுக்கு பயந்துதான் இத்தகைய நடவடிக்கைகள் என RSS இயக்கமோ ராமரோ சொல்ல முனைவார்களானால் அதைவிட பெரிய கேலிக்கூத்து வேறெதுவும் இருக்க முடியாது.

அந்த காலகட்டத்தில் இதை வைத்து பணம் பண்ண அவர்கள் காட்டிய அவசரம் அதற்குப் பின் என்ன ஆனது? அவர்கள் சொன்னதை நம்பி முதலீடு செய்த நபர்கள் இன்றைக்கு என்ன ஆனார்கள்?.அவர்கள் முதலீடு செய்த பெரும்பணம் திரும்பகொடுக்கப்பட்டதா? அல்லது இன்றளவும் ரகசியமாய் எரிபொருள் தயாரித்து விற்றுக் கொண்டிருக்கின்றனரா?.அந்த காலகட்டத்திற்கு பின்னர் ராமர் எந்தவொரு ஊடக வெளிச்சத்திலும் வரவில்லையே...

என்ன ஆனார் ராமர்?.

இப்படி எண்ணற்ற கேள்விகள சங்கிலித்தொடராய் வந்தாலும், ராமர் என்கிற அந்த பாமரனின் கனவுகளும், எதிர்பார்ப்புகளும் அவன் கண் முன்னே நொறுங்கிப் போனதா அல்லது நொறுக்கப்பட்டதா தெரியவில்லை. ஏனெனில் பல சமயங்களில் அவரின் புதிய எஜமானர்கள் முன் பேசத்திராணியற்று பேந்த பேந்த முழித்த கையாலாகாத ராமரை நான் பார்த்திருக்கிறேன்.சக மனிதனாய், தனிப்பட்ட முறையில் அவருக்காக ரொம்பவே வருந்துகிறேன்.அவர் ஒரு ஏமாற்றுக்காராய் இருப்பார் என்பதை இதுவரை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

சமயங்களில் அறிவைத் தாண்டி உணர்வுகள் சொலவதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது.

(2006ல் எழுதிய தொடர், சேகரிப்புக்காக மீள் பதிவு )