Saturday, October 13, 2012

வடைக்கு ஆசைப்பட்டு வடைமாலை வாங்கின கதை!


போன சனிக் கிழமையன்று மனைவியானவர் ஆஞ்சநேயர் கோவிலுக்கு போகவேண்டுமென்றார். நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோவிலைச் சொல்கிறார் என நினைத்தால்,  திருவள்ளூர் அருகே காக்களூர் என்ற கிராமத்திலிருக்கும் வீரஆஞ்சநேயர் கோவிலுக்கு போக வேண்டுமென்றார்.இந்தக் கோவிலைப் பற்றி நிறைய கேள்விப் பட்டதுண்டு, ஆனால் போனதில்லை. இலங்கை அரசின் முன்னாள் பிரதமரே இந்தக் கோவிலுக்கு அடிக்கடி ரகசியமாய் வந்து பூஜை புனஸ்காரங்களைச் செய்யும் பெருமையுடையவர் இந்த ஆஞ்சநேயர்.

என் மனைவியின் தாயார் புற்றுநோயுடன் கடுமையாக போராடி கொஞ்சம் கொஞ்சமாய் தோற்றுக் கொண்டிருக்கும் தருணமாகையால், சாட்சிக்காரன் காலில் விழுவதை விட சண்டைக்காரன் காலில் விழலாம் என்பதன் அடிப்படையில் இது மாதிரி கோவில்களுக்கு போவது மனைவியின் வாடிக்கையாகி விட்டது. வேறொரு சமயமாயிருந்தால் அவருடைய இந்த அதி தீவிர பக்தியை கேலி செய்யக் கூடிய நான் இப்போதெல்லாம் மறுபேச்சில்லாமல், அவர் சொல்லும் கோவிலுக்கெல்லாம் சிரமேற்கொண்டு அழைத்துப் போகிறேன்.

வடை கதையை பற்றி கதைப்பதற்கு முன்னால் இந்த கோவிலின் பூர்வீகம் பற்றி கொஞ்சம் பார்த்து விடுவோம்.

விஜயநகர பேரரசரான கிருஷ்ணதேவராயரின் ராஜகுரு வியாசராஜன் என்பவர் இந்தக் கோவிலை கட்டியதாக கருதப் படுகிறது. இவர் இதைப் போல 700 கோவில்களை அமைத்திருக்கிறாராம். அத்தனையும் ஆஞ்சநேயர் கோவில். இந்த எழுநூற்றிச் சில்லரை ஆஞ்சநேயர் சிலைகளும் ஒரே மாதிரியானவை என்பதுதான் சிறப்பு. அதாவது ஆஞ்சநேயரின் உயரம் எட்டிலிருந்து பத்து அடி உயரம். ஆஞ்சநேயர் கிழக்கு முகமாய் நின்றாலும், முகத்தை இடது பக்கமாய் திருப்பி அதாவது வடக்கு திசையை பார்ப்பதைப் போல அமைத்திருக்கிறார்கள். ஒரு கையில் செங்காந்தள் மலரை ஏந்தியிருக்கிறார். மற்றொரு கை அபய ஹஸ்தம். ஆஞ்சநேயரின் வால் தலைக்கு மேலே உயர்ந்து வளைந்து நிற்கிறது. வாலின் முடிவில் ஒரு மணி. அதாவது இந்த படத்தில் இருப்பதைப் போல...ஒரு கருவறை, அதன் முன்னாள் ஒரு மண்டபம் என ரொம்பவே சின்ன கோவில்தான். கோவிலின் அமைப்பை பார்த்தால் ஊரின் எல்லையில் அமைக்கப் பட்ட காவல்தெய்வத்தின் கோவிலைப் போல இருக்கிறது. ராகவேந்திரர் இங்கே வந்து தியானம் செய்ததாய் சொல்கிறார்கள். அப்புறம் வழக்கம் போல பக்த சிகாமணிகளினால் ஒன்றுக்குப் பத்தாய் ஊதிப் பெருக்கப்பட்ட ஆச்சர்ய அற்புதங்களை சுமக்கமாட்டாமல் சுமந்து கொண்டிருக்கிறார் இந்த வீர ஆஞ்சநேயர். உபயதாரர்களின் புண்ணியத்தில்தான் அந்த கோவில் நடந்து கொண்டிருக்கிறது என்பதை ஆங்காங்கே தெரியும் கொட்டை எழுத்து உபயதாரர்களின் பெயர்கள் பறைசாற்றுகிறது.

இனி வடை கதைக்கு வருவோம்....நாங்கள் போனது புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமை. கோவிலை பார்த்ததும் ஏனோ பிடித்துப் போயிற்று. கிராமங்களுக்கு நடுவே ஆர்பாட்டமில்லாமல் பணத்துக்கும், பகட்டுக்கும் விலைபோகாத இம் மாதிரியான கிராமத்து கோவில்களின் மீது எனக்கு எப்போதும் தனியொரு ஈர்ப்பு உண்டு. நாங்கள் போனபோது திரையிட்டிருந்தனர். கொள்ளாத கூட்டம். பக்தர்களுக்கு இணையாய் ஈக்களும் சாமி கும்பிட வந்திருந்த அற்புதத்தை நான் இங்கே குறிப்பிட்டேயாக வேண்டும்.இப்படியான சூழலில் சட்டென திரை விலக, கோவில் மணி, அப்புறம் ஏதேதோ வாத்திய ஒலினூடே சர்வ அலங்கார பூஷனாய் தீப ஆராதனை வெளிச்சத்தில் ஆஞ்சநேயரை பார்த்த போது சட்டென மயிர் கூச்செறிந்தது உண்மை.அத்தனை ஆகிருதியான ஒரு மூலவரை நான் எதிர்பார்க்கவில்லை. மனைவியை பார்த்தேன்.அவரோ தரிசன அனுபவத்தில் நெகிழ்ந்திருந்தார். மற்றவர்களும் அப்படியே நின்றிருந்தனர்.சரம் சரமாய் துளசி, பல வண்ண மலர் மாலைகள்.....அதற்கு கொஞ்சமும் குறையாமல் வடை மாலைகள்ள்ள்ள்ள்ள். 

வடை மாலைகளை பார்த்த மாத்திரத்தில் மயிர் கூச்செறிந்ததெல்லாம் அடங்கி காலையில் சாப்பிடாமல் வந்தது நினைவுக்கு வர அந்த வடைகளில் சிலவற்றை ஆஞ்சநேயர் எனக்கு கொடுத்தால் இந்த அனுபவம் எத்தனை திவ்யமானதாயிருக்குமென மூளை கணக்குப் போட ஆரம்பித்தது.ஆரத்தி முடிந்து, துளசி தீர்த்தமெல்லாம் கொடுத்த பின்னர் ஆளுக்கு ஒன்றிரண்டு வடை கொடுப்பார்கள் என நினைத்தேன்.அங்கே நின்றிருந்தவர்களின் தலைக்கு பத்து வடையாவது கொடுக்கலாமென்கிற அளவுக்கு ஆஞ்சநேயரிடம் வடைகள் இருந்தன. 

"வடைமாலை டோக்கன் வச்சிருக்கவங்க மட்டும் நில்லுங்க, மத்தவங்க எல்லாம் சாமி பார்த்துட்டு நகருங்க" என ஒருவர் எங்கிருந்தோ கத்தினார்." அடடே!, டோக்கன் வாங்கினால்தான் வடை போலிருக்கிறதே என நினைத்து, சரி இத்தனை ஆயிற்று டோக்கனை வாங்கி வடையை ருசித்தேயாக வேண்டுமென முடிவு செய்து அலுவலகமெங்கே எனத் தேடினால், ஒரு வயதான பெண்மணி கையில் ஒரு நோட்டுடன் உட்கார்ந்திருந்தார். அவரிடம் போய் வடைமாலைக்கு டோக்கன் வேணுமென்றேன். 

அவரோ சீரியஸாய் பேர் அட்ரஸ் சொல்லுங்க என்றார். ஒரு வடைக்கு இத்தனை டேட்டாவா....என நினைத்துக் கொண்டே கர்ம சிரத்தையாய் சொன்னேன். கடைசியில் போன் நம்பர் கேட்ட போதாவது நான் சுதாரித்திருக்க வேண்டும். சொல்லி முடித்த உடன் அடுத்த சனிக் கிழமை காலைல எட்டரை மணிக்கெல்லாம் வந்திரனும். நானூற்றி ஐம்பது ரூபாய் கொடுங்க....என யந்திரத்தனமாய் சொன்னார்.

இந்த சமயத்தில் பக்கத்தில் நின்றிருந்த என் மறுபாதி என்ன நினைத்தாரோ தெரியவில்லை, விடுவிடுவென நடந்து தூரமாய் போய்விட்டார். எனக்கிருந்த பசி மயக்கத்தில் ஒன்றும் புரியாமல் பணத்தை எண்ணிக் கொடுத்து விட்டு வந்தால், மனைவி விழுந்து விழுந்து சிரிக்கிறார். எதுக்கு இத்தனை சந்தொஷமென கேட்க, அந்தம்மா நானூற்றி ஐம்பது கொடுங்க...ன்னு சொன்னவுடன் என் முகம் போன போக்கைப் பார்த்துத்தான் சிரிப்பை அடக்க முடியவில்லையாம். 

விதி வலியது!

இனி இந்த வாரம்....

இன்று காலையில் எழுந்த உடனே, வடைமாலை வாங்கப் போகனும்ல சீக்கிரமா கிளம்புங்க என மனைவி விரட்ட, எல்லோருமா போவோம் என கூட்டம் சேர்த்தேன். ஆனால் யாரும் வரமாட்டேனெனச் சொல்லிவிட்டார்கள். மகனுக்கு ஸ்கூலில் பெற்றோர் ஆசிரியர் கூட்டம், அதனால் மனைவியும், மகனும் அங்கே போவதாய் திட்டம். மிஞ்சியது மகள்தான்.அப்பா தனியா போறார்ல என்கிற மனைவியின் கரிசனத்தினால் மகளும் நானும் காலையில் எட்டு மணிக்கெல்லாம் கிளம்பினோம். ஆஞ்சநேயரை பார்ப்பதை விடவும் வடைமாலைதான் என் அஜென்டாவாக இருந்தது. எத்தனை வடை தருவாய்ங்க என மனதுக்குள் கணக்குப் போட்டுக் கொண்டே போனேன்.

நாங்கள் போன சமயத்தில்தான் ஆஞ்சநேயருக்கு எண்ணை தேய்த்துக் கொண்டிருந்தனர். சாவகாசமாய் ஒரு மணி நேரத்துக்கு குறையாமல் தேய்த்த்த்த்த்த்த்துக் கொண்டேயிருந்தார்கள். அடுத்து அபிஷேகம், அடுத்து திரை, உள்ளே அலங்காரம், திரை விலக்கி தரிசனம், ஆரத்தி உடனே வடைமாலைதானென அடுத்தடுத்த நிகழ்வுகளை பட்டியலிட்டு, மளமளவென நேரக் கணக்குப் போட்டு எப்படியும் பதினோரு மணிக்கெல்லாம் கிளம்பிடலாமென நினைத்துக் கொண்டேன்.

ஆனால் கிளம்பும் போது மணி ஒன்றை தொட்டிருந்தது. ஆம்!, அத்தனை நிதானமாய் பூஜைகள் நடந்தன. வடைக்கு ஆசைப் பட்டு அது வடைமாலையாகி, அதன் பொருட்டு  நான்கு மணி நேரம் அவர் சன்னிதியில் உட்கார்ந்திருக்கும் படி செய்த வீர ஆஞ்சநேயரின் மகிமையை என்னவென்பது. 

விதி வலியதுதான்!!* பதிவில் இருக்கும் இரண்டு படங்களும் இணையத்திலிருந்து சுட்டது. என்னுடையதில்லை.