Monday, December 31, 2012

2012

பத்துப் பதினைந்து வருடத்து முயற்சியில் ஒரு மலையுச்சிக்குப் போன மிதப்பில், கவனம் சிதறியோ அல்லது கால் இடறியோ தலை குப்புற விழுந்து, அந்த அடி தந்த காயத்தையும், அது தந்த வேதனையையும் உள் வாங்கி, நிதானித்து வலியோடு எழுந்து நின்றது 2011 என்றால், காயங்களை ஆற்றி மெல்ல இயல்புக்குத் திரும்பி மீண்டும் மலை உச்சியை நிமிர்ந்து பார்க்கவும், அதன் மீது மீண்டும் ஏறவும் தீர்மானித்தது 2012. 

மெல்ல மெல்ல உயரம் போவது சாதனை, உயரத்தில் இருந்து தொபீரென கீழே விழுவது வேதனை....இரண்டையும் அனுபவிக்கும் வாய்ப்பு எல்லோருக்கும் வாய்க்காது. இரண்டையும் பார்த்தாயிற்று.வெயிலின் அருமையை நிழலிலும், நிழலின் அருமையை வெயிலிலும் தெரிந்து கொண்ட வகையில் நான் பாக்கியவான். 

அந்த வகையில் இத்தோடு தொலைந்தான் என நினைத்தவர்களுக்கு ஏமாற்றத்தையும், அட அதற்குள் எழுந்து விட்டானே என்றவர்களுக்கு ஆச்சர்யத்தையும் தர முடிந்ததுதான் இந்த ஆண்டின் ஒரே சாதனை.

புத்தாண்டில் இதையெல்லாம் செய்யப் போகிறேன் என இப்போது பட்டியலிடுவதை விடவும் , இந்த வருடத்தில் இதையெல்லாம் சாதித்திருக்கிறேனென  வருட முடிவில்  பதிவெழுதவே விரும்புகிறேன்.

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Wednesday, December 19, 2012

யாருடா மகேஷ்!

சமீப மாதங்களில் புதிய இயக்குனர்கள் பளிச்சென கவனம் கவர ஆரம்பித்திருக்கின்றனர்.”அட்டகத்தி” “பீட்சா”, “நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்” வரிசையில் இப்போது “யாருடா மகேஷ்” என்ற பெயரில் ஒரு படம். ட்ரெய்லரே வித்தியாசமாய் செய்திருக்கிறார்கள். “ஆரண்ய காண்டம்” படத்திற்குப் பின்னர் என்னை கவர்ந்த வித்த்யாசமான ட்ரைலர் இதுதான்...

Sunday, December 16, 2012

கோர்ட்டுக்குப் போறேன்...


நீண்ட கால முதலீடாய் இருக்கட்டுமே என 2004ல் ஒரு கிரவுண்ட் இடம் வாங்கிப் போட்டிருந்தேன். 2005ல் வாக்கில் அந்த இடத்துக்கு பின்னால் இருந்த இடத்தினர் என் இடத்தை பாதையாக உபயோகிப்பது தெரியவந்து, அவர்களிடம் முறையாய் சொல்லிப் பிரயோசனமில்லாததால், என் இடத்தில் அவர்கள் நுழைய நீதி மன்றத்தில் தடையானை வாங்கியிருந்தேன்.

இப்போது 7 ஆண்டுகள் கழித்துதான் அந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது. போன வாரம் வக்கீலிடம் இருந்து அழைப்பு வந்த போது அந்த விவகாரத்தை நான் மறந்தே போய் விட்டிருந்தேன்.இதோ நீதி மன்றத்துக்கு கிளம்பிக் கொண்டிருக்கிறேன். இன்றைய பொழுது நீதிமன்ற நடவடிக்கைகளை வேடிக்கை பார்ப்பதில் கழியும்/தொலையும்.

Monday, December 10, 2012

பாரதி நாள்!....உங்களுக்குத் தொழிலிங்கே அன்புசெய்தல் கண்டீர்!


ட்ரெய்லர் - http://www.musaravanakumar.com/


இதுவரை எழுதியதையும், இனி எழுதப் போகிறவைகளையும் ஒரே இடத்தில் குவித்து வைக்கும் முயற்சியின் முதல் படியாக எனது சொந்தத் தளத்தினை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன். 


இது வெறும் ட்ரெய்லர்தான்....இனிமேல் நீங்கள் தரப்போகும் ஆலோசனைகள் மற்றும் விமர்சனங்களைக் கொண்டு கொஞ்சம் கொஞ்சமாய் மெயின் பிக்‌ச்சரை கட்டமைக்க உத்தேசித்திருக்கிறேன்.Sunday, December 9, 2012

Make Your Own Diary With Notepad!


Most of the people know that notepad is used to create and modify plain text. But very little of them know about its useful applications. It has many tricks. In this post I am gonna show a small trick of notepad.You can make a diary using notepad. To do so simply follow the steps below:

1. Open notepad 
2. Type .LOG 
3. Save it as Diary or any other desired name as your choice. (Make sure that your file format is .txt)

Now when you open up this file, each time it will insert the date and time of opening the file just as below:


"கடல்"....ட்ரெய்லர்!

Saturday, December 8, 2012

விக்கிரமாதித்யன் என்றொரு வித்தைக்காரன்
இப்போதெல்லாம் கவிதைகளை அல்லது அதை எழுதுவதாய் சொல்கிறவர்களைக் கண்டாலே தலை தெறிக்க ஓடிவிடுவது என் வாடிக்கை. அந்த அளவுக்கு சமகால கவிஞர்களாலும், கவிதைகளினாலும் பாதிக்கப் பட்டிருக்கிறேன்.இது மாதிரித் தருணங்களில் நான் முற்பகல் செய்தது எனக்கு பிற்பகலில் விளைகிறது என ஆறுதல் சொல்லிக் கொள்வதுண்டு. 

வாழ்க்கையின் போக்கில், அதனோடு ஊடாடுவதின் பயனாய் பிறக்கும் அக தரிசனமே கவிதை. அது கருத்தாகவோ, உளறலாகவோ, ஏன் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். பெரும்பாலான இன்றைய கவிதையாளர்கள் இந்த அடிப்படை தெரியாதவர்கள் அல்லது  மறந்து விட்டவர்கள்

விக்கிரமாதித்யனின் கவிதைகளின் ஊடே இத்தகைய தரிசனங்களை நம்மால் உள்வாங்கிட முடியும்.அபத்தக் குப்பைகளின் நடுவே அவ்வப்போது அற்புதங்களை கண்டெடுப்பதைப் போலத்தான் நானும் விக்கிரமாதித்யனை கண்டெடுத்தேன். தான், தன்னுடைய சமூகம், அதன் அரசியல் என்கிற மூன்று தளங்களின் ஊடாக இவரது பாடுபொருள்கள் அமைந்திருக்கின்றன.பெரும்பாலும் தன்னுடைய சமகால வாழ்வியல் சிக்கல்களின் அவலங்களையும், அனுபவங்களுமே கவிதையாய் வடித்திருக்கிறார்.

 பாரதிக்குப் பிறகு பாசாங்கில்லாத சுதந்திர கவிஞன்/மனிதன் என்றால் இவரைத்தான் சொல்லுவேன். ஆனால் இவரோ தன்னை புதுமைபித்தனின் வாரிசாய் சொல்லிக் கொள்கிறார். 

போய்ச் சேர்ந்தான் புதுமைப் பித்தன்
வந்து நிற்கிறான் விக்ரமாதித்யன்  

இவரது வார்த்தைச் சிக்கனமும், அதை வாசிக்கும் போது நமக்குள்  அடுக்கடுக்காய் விரியும் யோசனைகளும் வாய்பிளக்க வைப்பவை. 

1947ல் பிறந்த இவர், மளிகைக்கடைப் பையன், சித்தாள், இட்லி-வடை விற்பவன், சலவைநிலைய எடுபிடி, மெத்தைக்கடைப் பையன், காயலான்கடை உதவியாள், ஓட்டல்-க்ளீனர், சர்வர், கட்பீஸ் ஸ்டோர் பணியாள், குன்றகுடி ஆதின அட்டெண்டர், ஜலகன்னி, தம்போலா, வளையமெறிதல் ஸ்டால்களில் கேஷியர், சீட்டு கிளப் கேஷியர், ஊர் ஊராகப் போய் புத்தக வியாபாரம், அச்சக உதவியாளர், பிழை திருத்துபவர், துணையாசிரியர், பொறுப்பாசிரியர் என கட்டுப் பாடுகளற்ற நாடோடி வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார்.இப்போது சினிமாவிலும்  தலை காட்ட ஆரம்பித்திருக்கிறார்.

எனக்கு மிகவும் பிடித்த அவரின்  சில வரிகளை மட்டும் இங்கே தொகுத்திருக்கிறேன்.

உன்னுள் இருக்கும் அந்த மிருகம்
உன்னுள்
வாழும்
அந்த மிருகம் எப்படி இருக்கிறது
இரை
போட்டுத்
தூங்கப்பண்ணிவிட்டாயா
சங்கிலியால்
கட்டிப்
போட்டு வைத்திருக்கிறாயா
யாரையும்
கடித்துக்
குதறிவிடாது பார்த்துக்கொள்கிறாயா
வேண்டிய நேரத்தில்
வேண்டியது
செய்து கொடுக்கிறாயா
உன்னையே
விழத்தட்டி
உயிரை வாங்கிவிடும் பார்த்துக்கொள்.


அவன் திருட
இவன் திருட
அதையெல்லாம் பார்த்து
நீயும் திருட
நான் மட்டும்
எப்படிச் சாமியாராய் இருக்க

இந்த
மூடன் ஏதோ விசாரிக்க
அந்த
இரண்டுங்கெட்டான் என்னவோ விளக்கம் சொல்ல
போதும் போதுமென்றாகி
பிராந்திக் கடைக்குப் புறப்பட்டு விட்டேன்
மத்தியில்
மாட்டிக்கொண்ட நான்.

அன்று
மறதியில்
இன்று
போதையில்
செருப்பு தொலைவது மட்டும்
மாறவே இல்லை.

விலைகூவி விற்கலாம்
இருக்கிறது சரக்கு எல்லோருக்குமாக
ஒருசிறு பிரச்சனை
வியாபாரி அல்ல நான்
வீணாக அழிந்தாலும் கலைஞன் தான்

விரும்பியது நதிக்கரை நாகரீகம்
விதிச்சது நகர நாகரீகம்

சுமைதாளாது
முறிந்ததென் அச்சு,
பால் விஷமானது போலென் இருப்பு
கர்ணனைக் கொன்றது போல
கொல்கிறார்கள் என்னையும்

கைபட
தளர்வது முலை
கவலைப்பட
தளர்வது மனம்

விக்கிரமாதித்யனின் எழுத்துக்களை இப்படி நிறையவே பட்டியலிடலாம். இது வரை பதினாறுக்கும் மேற்பட்ட கவிதை தொகுப்புகளும், இரண்டு சிறுகதை தொகுப்பும், ஏழு கட்டுரை தொகுப்புகளும் எழுதியிருக்கிறார். மிகவும் குறுகிய தமிழ் இலக்கிய வட்டம் தாண்டி வெகுசனத்திற்கு இவரது படைப்புகள் போய்ச் சேரவில்லை என்கிற ஆதங்கம் எனக்கு நிறையவே உண்டு.எந்த தேசத்தில் மேதைகள் மதிக்கப்படவில்லையோ அவர்கள் அங்கே மீண்டும் பிறப்பதில்லை. 

இதை வாசிக்கும் யாரேனும் ஒருவராவது விக்கிரமாதித்யனின் எழுத்துக்களை காசு  கொடுத்து வாங்கி வாசித்தால் அது சமகால தமிழ் இலக்கியத்துக்குச் செய்த சேவையாக இருக்கும். இந்த பதிவை எழுதிய எனது நோக்கமும் நிறைவேறியதாயிருக்கும். 

(இன்னும் ஒரு மாதத்தில் சென்னை புத்தக சந்தை துவங்க இருக்கிறது என்பதை இந்த இடத்தில் நினைவு படுத்திட விரும்புகிறேன்.) 

Thursday, December 6, 2012

எத்தனை பேருக்குத் தெரியும்!...."வெள்ளியம்பலம்"

எனக்கு மட்டுமே தெரிந்ததாய் நான் நம்பிக் கொண்டிருக்கும் தகவல்களை "எத்தனை பேருக்குத் தெரியும்" என்கிற தலைப்பில் தொகுத்து வைக்கலாமென தோன்றியதன் பலனையே இப்போது வாசித்துக் கொண்டிருக்கிறீர்கள்.இந்த வரிசையில் துவக்கமாய்  மீனாட்சி அம்மன் கோவிலைப் பற்றிய ஒரு தகவல்.

ஆதியில் மீனாட்சிக்கும், அதன் பின்னர் சொக்கநாதருக்குமென இரண்டு சிறு கோவில்களும், தாமரைக் குளம் என அறியப்படும் பொற்றாமரைக் குளம் மாத்திரமே இருந்தன. மதுரையை ஆண்ட மன்னர்கள் தங்கள் காலத்தில் ஒவ்வொன்றாய் எடுத்துக் கட்டிய பல தனித் தனி கோவில்களின் தொகுப்புதான் இன்றைய மீனாட்சி அம்மன் கோவில் வளாகம்.

சொக்கநாதர் சன்னிதியில் நுழையும் போது, வலது பக்கத்தில் பத்து கைகளுடன் ஆளை அடிக்கும் கறுப்பில், பத்துப் பன்னிரெண்டு அடி உயரத்தில் அம்சமான நடராஜரையும் அவருக்கு இடது பக்கத்திலேயே சிவகாமித் தாயார் வலது பக்கத்தில் வித்யாசமான தோற்றத்தில் பதஞ்சலி முனிவரின் சிலைகளை பார்க்கலாம். இப்போது அந்த இடத்தை அங்குலம் விடாமல் வெள்ளித் தகடு போர்த்தி வைத்திருக்கிறார்கள். இதற்கு வெள்ளியம்பலம் என்றொரு பெயரும் உண்டு. வழக்கமான நடராஜர் சிலை போலல்லாது இவர் கால் மாறிய நிலையில் நின்றிருப்பார்.

ஏன் வழக்கமான பாணியில் நிற்காமல் கால் மாறி நிற்கிறாரென யாரும் சந்தேகம் கேட்டால், இருக்கவே இருக்கிறது இரண்டு புராணக் கதைகள். மதுரையில் திருமணத்துக்கு வந்த பதஞ்சலி முனிவர் தினமும் சிதம்பரம் நடராஜரின் ஆடல் கோலத்தை பார்க்காமல் சாப்பிட மாட்டாராம். இது தெரியவந்த சொக்கநாதர் ஆடிய நடன கோலமே மதுரையின் நடராஜர் என்பதாய் ஒரு புராணமும். எத்தனை நாளைக்குத்தான் ஒரே காலில் நிற்பீர்கள், கால் வலிக்குமோ என சிவனிடம் கவலைப் பட்ட பாண்டிய மன்னரின் கவலை(!)யை போக்க கால் மாறி நின்றதாய் இன்னொரு புராணமும் உண்டு. 

இனி மேட்டருக்கு வருவோம்....

ஆதியில் இந்த நடராஜர் கோவில் தனியேதான் இருந்தது. எப்படி சொக்கநாதர் சன்னிதியின் நேரெதிராய் கிழக்கு கோபுரம் அமைந்திருக்கிறதோ அவ்வாறே  நடராஜருக்கு நேரெதிராய் தெற்கு கோபுரம் அமைந்திருந்தது. நாயக்கர்கள் காலம் வரை இந்த நிலைதான் இருந்தது. நாயக்கர் காலத்தில் நடராஜரின் பார்வையின் உக்கிரத்தால்(!) தெற்கு வாயில் பக்கம் இருந்தவர்களுக்கு பாதிப்பு உண்டாவதாக அப்போதைய ஆட்சியாளர்கள் கருதியதால், நடராஜருக்கும் வாசலுக்கும் இடையே ஒரு பிள்ளையாரை வைத்தனர். அந்த பிள்ளையார்தான் இன்றைய முக்குருனி விநாயகர்.

இந்த விநாயகர் சிலையானது திருமலை நாயக்கர் தன் அரண்மனை கட்ட மண்ணெடுத்த இடத்தில்(வண்டியூரில்) புதையுண்டு இருந்ததாய் ஒரு கருத்து இருக்கிறது. இந்த சிலையை வைத்த பின்னரே தெற்குவாயில் பக்கம் இருந்தவர்களுக்கு பாதிப்பு இல்லையாம். நாயக்கர்களின் காலத்தின் பிறகு முஸ்லிம் மன்னர்களின் படையெடுப்பில் கோவிலை காக்க வேண்டி சொக்கநாதர் மற்றும் நடராஜர் கோவில்கள் இனைக்கப் பட்டு தற்போதுள்ள சுற்றுச் சுவரும், கட்டுமானங்களும் உருவாக்கப் பட்டனவாம்.

அடுத்த முறை மீனாட்சி அம்மன் கோவிலுக்குப் போகும் போது நான் சொன்ன இந்த விவரங்களை கவனித்துப் பாருங்கள்.


Wednesday, December 5, 2012

அறிவித்தல்

எனது ட்விட்டர் மற்றும் முகநூல் கணக்குகளை முடக்கி ஒரு வாரமாகிறது. இனி அவ்விடத்தில் வெறும் பார்வையாளனாய் மட்டுமே கடந்து போக தீர்மானித்திருப்பதால்,  எனது எழுத்துக்கள் இவ்விடத்தில் மட்டுமே பதியப் படும். பகிரப்படும்.

புரிதலுக்கு நன்றி.

- சரவணக்குமார்.