Saturday, December 8, 2012

விக்கிரமாதித்யன் என்றொரு வித்தைக்காரன்
இப்போதெல்லாம் கவிதைகளை அல்லது அதை எழுதுவதாய் சொல்கிறவர்களைக் கண்டாலே தலை தெறிக்க ஓடிவிடுவது என் வாடிக்கை. அந்த அளவுக்கு சமகால கவிஞர்களாலும், கவிதைகளினாலும் பாதிக்கப் பட்டிருக்கிறேன்.இது மாதிரித் தருணங்களில் நான் முற்பகல் செய்தது எனக்கு பிற்பகலில் விளைகிறது என ஆறுதல் சொல்லிக் கொள்வதுண்டு. 

வாழ்க்கையின் போக்கில், அதனோடு ஊடாடுவதின் பயனாய் பிறக்கும் அக தரிசனமே கவிதை. அது கருத்தாகவோ, உளறலாகவோ, ஏன் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். பெரும்பாலான இன்றைய கவிதையாளர்கள் இந்த அடிப்படை தெரியாதவர்கள் அல்லது  மறந்து விட்டவர்கள்

விக்கிரமாதித்யனின் கவிதைகளின் ஊடே இத்தகைய தரிசனங்களை நம்மால் உள்வாங்கிட முடியும்.அபத்தக் குப்பைகளின் நடுவே அவ்வப்போது அற்புதங்களை கண்டெடுப்பதைப் போலத்தான் நானும் விக்கிரமாதித்யனை கண்டெடுத்தேன். தான், தன்னுடைய சமூகம், அதன் அரசியல் என்கிற மூன்று தளங்களின் ஊடாக இவரது பாடுபொருள்கள் அமைந்திருக்கின்றன.பெரும்பாலும் தன்னுடைய சமகால வாழ்வியல் சிக்கல்களின் அவலங்களையும், அனுபவங்களுமே கவிதையாய் வடித்திருக்கிறார்.

 பாரதிக்குப் பிறகு பாசாங்கில்லாத சுதந்திர கவிஞன்/மனிதன் என்றால் இவரைத்தான் சொல்லுவேன். ஆனால் இவரோ தன்னை புதுமைபித்தனின் வாரிசாய் சொல்லிக் கொள்கிறார். 

போய்ச் சேர்ந்தான் புதுமைப் பித்தன்
வந்து நிற்கிறான் விக்ரமாதித்யன்  

இவரது வார்த்தைச் சிக்கனமும், அதை வாசிக்கும் போது நமக்குள்  அடுக்கடுக்காய் விரியும் யோசனைகளும் வாய்பிளக்க வைப்பவை. 

1947ல் பிறந்த இவர், மளிகைக்கடைப் பையன், சித்தாள், இட்லி-வடை விற்பவன், சலவைநிலைய எடுபிடி, மெத்தைக்கடைப் பையன், காயலான்கடை உதவியாள், ஓட்டல்-க்ளீனர், சர்வர், கட்பீஸ் ஸ்டோர் பணியாள், குன்றகுடி ஆதின அட்டெண்டர், ஜலகன்னி, தம்போலா, வளையமெறிதல் ஸ்டால்களில் கேஷியர், சீட்டு கிளப் கேஷியர், ஊர் ஊராகப் போய் புத்தக வியாபாரம், அச்சக உதவியாளர், பிழை திருத்துபவர், துணையாசிரியர், பொறுப்பாசிரியர் என கட்டுப் பாடுகளற்ற நாடோடி வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார்.இப்போது சினிமாவிலும்  தலை காட்ட ஆரம்பித்திருக்கிறார்.

எனக்கு மிகவும் பிடித்த அவரின்  சில வரிகளை மட்டும் இங்கே தொகுத்திருக்கிறேன்.

உன்னுள் இருக்கும் அந்த மிருகம்
உன்னுள்
வாழும்
அந்த மிருகம் எப்படி இருக்கிறது
இரை
போட்டுத்
தூங்கப்பண்ணிவிட்டாயா
சங்கிலியால்
கட்டிப்
போட்டு வைத்திருக்கிறாயா
யாரையும்
கடித்துக்
குதறிவிடாது பார்த்துக்கொள்கிறாயா
வேண்டிய நேரத்தில்
வேண்டியது
செய்து கொடுக்கிறாயா
உன்னையே
விழத்தட்டி
உயிரை வாங்கிவிடும் பார்த்துக்கொள்.


அவன் திருட
இவன் திருட
அதையெல்லாம் பார்த்து
நீயும் திருட
நான் மட்டும்
எப்படிச் சாமியாராய் இருக்க

இந்த
மூடன் ஏதோ விசாரிக்க
அந்த
இரண்டுங்கெட்டான் என்னவோ விளக்கம் சொல்ல
போதும் போதுமென்றாகி
பிராந்திக் கடைக்குப் புறப்பட்டு விட்டேன்
மத்தியில்
மாட்டிக்கொண்ட நான்.

அன்று
மறதியில்
இன்று
போதையில்
செருப்பு தொலைவது மட்டும்
மாறவே இல்லை.

விலைகூவி விற்கலாம்
இருக்கிறது சரக்கு எல்லோருக்குமாக
ஒருசிறு பிரச்சனை
வியாபாரி அல்ல நான்
வீணாக அழிந்தாலும் கலைஞன் தான்

விரும்பியது நதிக்கரை நாகரீகம்
விதிச்சது நகர நாகரீகம்

சுமைதாளாது
முறிந்ததென் அச்சு,
பால் விஷமானது போலென் இருப்பு
கர்ணனைக் கொன்றது போல
கொல்கிறார்கள் என்னையும்

கைபட
தளர்வது முலை
கவலைப்பட
தளர்வது மனம்

விக்கிரமாதித்யனின் எழுத்துக்களை இப்படி நிறையவே பட்டியலிடலாம். இது வரை பதினாறுக்கும் மேற்பட்ட கவிதை தொகுப்புகளும், இரண்டு சிறுகதை தொகுப்பும், ஏழு கட்டுரை தொகுப்புகளும் எழுதியிருக்கிறார். மிகவும் குறுகிய தமிழ் இலக்கிய வட்டம் தாண்டி வெகுசனத்திற்கு இவரது படைப்புகள் போய்ச் சேரவில்லை என்கிற ஆதங்கம் எனக்கு நிறையவே உண்டு.எந்த தேசத்தில் மேதைகள் மதிக்கப்படவில்லையோ அவர்கள் அங்கே மீண்டும் பிறப்பதில்லை. 

இதை வாசிக்கும் யாரேனும் ஒருவராவது விக்கிரமாதித்யனின் எழுத்துக்களை காசு  கொடுத்து வாங்கி வாசித்தால் அது சமகால தமிழ் இலக்கியத்துக்குச் செய்த சேவையாக இருக்கும். இந்த பதிவை எழுதிய எனது நோக்கமும் நிறைவேறியதாயிருக்கும். 

(இன்னும் ஒரு மாதத்தில் சென்னை புத்தக சந்தை துவங்க இருக்கிறது என்பதை இந்த இடத்தில் நினைவு படுத்திட விரும்புகிறேன்.)