Tuesday, December 10, 2013

11.12.13சிறுவயதில் நான் பார்த்த நடனம் ஒன்றில்
பாடினார் இளம் பெண்கள் இருவரேதோ
பாட்டுக்கு. எவரெழுதித் தந்தா ரந்தப்
பாட்டென்று நான் கேட்டேன் உம்மைச் சொன்னார்

சிறுவயதில் நான் சென்ற பொதுக் கூட்டத்தில்
சூடுள்ள சிலவரிகள் ஒருவன் சொன்னான்
எவரெழுதித் தந்தவரி என்றேன். வேர்த்த
முகம்துடைத்துக் கொண்டபடி உம்மைச் சொன்னான்

மணியறியாப் பள்ளிகளில் தண்டவாளத்
துண்டொன்று மணியாகத் தொங்கல் போலக்
கவிஞரிலாத் தமிழகத்தில் எவரெல்லாமோ
கவிஞரெனத் தெரிந்தார்கள் உமக்கு முன்பு

அணைக்காத ஒலிபெருக்கி மூலம் கேட்கும்
கலைகின்ற கூட்டத்தின் சப்தம் போலப்
பிறகவிஞர் குரல் மயங்கிக் கேட்குமின்னும்
நீர் மறைந்தீர் உம் பேச்சை முடித்துக் கொண்டு

(மகாகவி பாரதியார் பற்றி ஞானக்கூத்தன்)

வாழ்க நீ எம்மான்!

Wednesday, September 11, 2013

11-09-1921


நசையறு மனம் கேட்டேன் - நித்தம்
நவமெனச் சுடர் தரும் உயிர் கேட்டேன் 

Thursday, September 5, 2013

கொசு!


வீட்டுத் தோட்டம்

தனிப்பட்ட சேகரிப்புக்காக.....


வளர்ச்சி ஊக்கி 
--------------------

அரிசி கழுவிய தண்ணீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி மூடியினால் மூடி(சிறிது இடைவெளி இருக்கட்டும் ) வைக்கவும். ஒரு வாரத்தில் இந்த நீர் புளித்துவிடும் , மேற்பரப்பில் ஆடைபோல் படிந்திருப்பதை அகற்றிவிட வேண்டும். இதனுடன் அதைப்போல பத்து மடங்கு பசும்பாலை சேர்த்து மூடி வைக்கவும். அடுத்த ஏழு நாட்களில் இந்தக் கலவையில் மாவு, புரதம் மற்றும் கொழுப்பு சத்துகள் தனியாக பிரிந்து மேலே ஆடை போல மிதக்கும். மிதக்கும் இவற்றை நீக்கினால் மஞ்சள் வண்ணத்தில் ஒரு திரவம் கிடைக்கும். இந்த திரவத்தில் அதன் அளவில் மூன்றில் ஒரு பங்கு வெல்லத்தை கலந்து மூடி வைக்கவும். இதுதான் லேக்டிக் அமில பாக்டீரியா ரசம். 


நூறு மில்லி ரசத்தை இரண்டு லிட்டர் தண்ணீரில் கலந்து உபயோகிக்கலாம். குளோரின் தண்ணீர் உபயோகிக்கக்கூடாது.இக்கலவை மிகச்சிறந்த பயிர் ஊக்கியாக செயல்படும்.காய்கறி செடி, கொடிகள் நன்கு செழித்து வளர்ந்து நிறைய காய்கள் காய்க்கும்.

இயற்கை பூச்சிக் கொல்லி மருந்து

தக்காளி இலைகளை(அதிக விஷமுள்ளது) சேகரித்து அவை மூழ்கும் அளவு நீர் விட்டு கொதிக்க வைக்கவும். ஆறியதும் உடனே உபயோகிக்கவும்.

Wednesday, July 24, 2013

மஞ்சுளா @ 59


தமிழ் சினிமா நேற்று இன்னொரு பிரபலத்தையும் இழந்து விட்டது.பிரபல நடிகை மஞ்சுளா  தனது ஐம்பத்தி ஒன்பதாம் வயதில்  காலமானார். வருத்தமான நிகழ்வு. அன்னாரின் குடும்பத்தாருக்கு எனது நெஞ்சார்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

எனது தாயாருக்கு மாரடைப்பு. மதுரை மீனாட்சி மிஷனில் அத்தனை வசதிகள் இல்லையென்பதால், அரக்கப் பரக்க விமானத்தில் சென்னை கொண்டு வந்தேன். போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் ஆஞ்சியோக்ராம் செய்ததில், இதயத்தில் இரண்டு குழாய்களில் அடைப்பு இருந்ததால், உடனடியாக ஆஞ்சியோ ப்ளாஸ்டியும் செய்தோம். அதே சமயத்தில் நடிகை மஞ்சுளாவும் நெஞ்சுவலி என அங்கே அனுமதிக்கப் பட்டிருந்தார்.

எங்களுக்கு பக்கத்து ஸ்யூட்டில் இருந்தார். அது விஐபிகளுக்கான வார்ட், ஸ்டார் ஹோட்டல்கள் பிச்சை வாங்கும் தரத்தில் இருந்தது. தினமும் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்வதால் புன்னகைத்துக் கொள்கிற அளவுக்கு விஜயகுமாரோடும், அவர் குடும்பத்தாரோடும் அறிமுகமாகி இருந்தேன். விஜயகுமார் அம்மாவின் நலம் விசாரிப்பார். நானும் பதிலுக்கு மேடம் க்கு இப்போது எப்படி இருக்கிறதென கேட்பேன்.அவர் மனைவியை நான் மேடம் என விளிப்பதை வெகுவாய் ரசித்தார்.

விஜயகுமாரின் முதல் மனைவியின் மகள் அங்கே மருத்துவராய் பணி புரிந்து கொண்டிருந்தார். என் மனைவியின் சீனியர், அதனால் பரஸ்பரம் நலம் விசாரித்துக் கொள்ளும் அளவுக்கு நெருக்கமாயிருந்தோம்.என்னுடைய சினிமா பின்புலத்தைப் பற்றி தெரிந்து கொண்ட பின்னர், இன்னமும் சிநேகிதமாய் நடக்க முயற்சித்தார், அல்லது அப்படி எனக்குத் தோன்றியது. அவருடைய மருமகனை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். இப்போது பிரபலமாய் இருக்கும் இயக்குனர் ஹரி அப்போது ஒன்றிரண்டு படங்கள் இயக்கியிருந்தார். 

சினிமாவில் டைட் க்ளோஸப்பில் பிரம்மாண்டமாய் தெரிந்த விஜயகுமாரின் மகள்கள் நேரில் பார்த்த போது பொசுக்கென  கோழிக் குஞ்சைப் போல இருந்தார்கள். அவர்களோடு பேச வாய்ப்பிருந்தாலும் அப்போதிருந்த மனநிலையில் அவர்கள் ஒரு பொருட்டாய் தெரியவில்லை. ஆனால் அந்த குடும்பமே திருமதி மஞ்சுளாவை தாங்கு தாங்கென தாங்கியது.

ஏன் இதையெல்லாம் இப்போது எழுதிக் கொண்டிருக்கிறேன் என்பதற்கான காரணம் இனிமேல்தான் வருகிறது.

ஒரு தடவை பேச்சு வாக்கில் என் அம்மாவின் வயதை விஜயகுமார் கேட்டார். அப்போது அம்மாவுக்கு 58 வயதாகியிருந்தது. சொன்னேன்,தன் மனைவிக்கும் அதே வயதுதான் என சொல்லி வருத்தப் பட்டுக் கொண்டிருந்தார். இது நடந்தது 1999 ல்.....

இன்றைய தினசரியில் வெளியான மரணச் செய்தி சொல்கிறது. நடிகை மஞ்சுளாவிற்கு வயது ஐம்பத்தி ஒன்பது.


Sunday, June 30, 2013

ஆதித் தமிழ் எழுத்துக்கள்.


இவை இரண்டாயிரம் வருடத்திற்கு முந்தைய தமிழ் எழுத்துக்களாம். 

Monday, June 3, 2013

சுஜாதாவை தோலுரித்த சுஜாதா!


நீண்ட வாழ்வின் இறுதியில் உள்ள சோகங்கள் சற்றே துருத்தி நிற்கின்றன.வானவில் கனவுகள் நிறமிழந்து விட்டது தெரிகிறது. 
சுஜாதா.எழுத்தாளர் சுஜாதா தன்னுடைய அந்திமக் காலத்தில் எழுதிய இந்த வரிகள், நேற்று தினகரன் பத்திரிக்கையில் வெளியான திருமதி.சுஜாதாவின் உணர்வுகளுக்கும் பொருந்தி வந்திருப்பது வரலாற்றுச் சோகம். 

கட்டுப் பெட்டியான அக்கிரஹாரத்து ரங்கராஜனை மணந்து கொண்டதன் மூலம், தானும், தன்னுடைய வாழ்க்கையும் குறுகிய வட்டத்தில் முடங்கிப் போய் விட்டதாகவும், ஒரு வேளை இன்றிருக்கும் சுதந்திரம்  அன்று இருந்திருந்தால் அவருக்கு குட்பை சொல்லியிருப்பேன் எனவும், தற்போதுதான் தனக்கான வாழ்க்கையை அல்லது தான் விரும்பிய வாழ்க்கையை வாழ்வதாகவும் சொல்லியிருக்கிறார்.

திருமதி.சுஜாதா அவர்களின் இந்த கருத்துக்கள், எழுத்தாளர் சுஜாதா காலங்காலமாய் கட்டமைத்து வைத்திருந்த அல்ட்ரா மார்டன் அறிவுஜீவி பிம்பத்தை சுக்கு நூறாக்கியிருப்பது என்னவோ உண்மைதான். ஆனால் நிதர்சனத்தில் பத்துக்கு ஒன்பது மணைவியர், தங்களின் கணவர் குறித்து இத்தகைய அபிப்ராயத்தையே வைத்திருக்கின்றனர். இத்தகைய புகார்கள் கணவர்களின் பக்கம் இருந்தும் வருகிறது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

தன் அளவுக்கு, அல்லது தான் எதிர்பார்த்த அளவுக்கு தன்னுடைய துனையின் அன்போ, அரவணைப்போ அல்லது வேறெதுவுமோ கிடைக்காத நிலையில் கிளர்ந்து எழும் உள்ளார்ந்த ஏமாற்றமும், அதன் தரும் வைராக்கியத்தின் வெளிப்பாடுதான் இத்தகைய அங்கலாய்ப்புகள். வாழ்நாள் முழுவதும்  அதற்காக  சகித்துக் கொண்டேன், இதற்காக பொறுத்துக் கொண்டேன் என அமைதியாக இருந்துவிட்டு அந்திமக் காலத்தில் தங்களை தியாகியாக காட்டிக் கொண்டு தன் துனையைச் சாடுவதில்  ஒருபோதும் எனக்கு உடன்பாடில்லை. 

தனது நாற்பத்தி ஐந்து ஆண்டு திருமண வாழ்க்கை தந்த அனுபவத்தை, தன் கணவர் இறந்து ஐந்து ஆண்டுகள் கழித்தாவது மனம் திறந்து கூறியதன் மூலம் அவருக்கு ஏதேனும் ஆறுதல் கிடைத்திருக்கும் என்றல் என்றால் அதில் எனக்கும் உடன்பாடுதான்.இனியாவது அவர் வாழ்க்கை அவருக்கு நிறைவானதாக இருக்க அந்த ஸ்ரீரங்கத்து ரங்கராஜன் அருள் புரியட்டும்.

Anger is an acid that can do more harm to the vessel in which it is stored than to anything on which it is poured. -Mark Twain

Saturday, May 11, 2013

குரு என்பவர்....


இந்தியாவைத் தவிர உலகத்தின் எந்த பகுதியிலும் ‘குரு’ என்கிற விஷயம் பற்றி பெரிய சிலாகிப்பு இருக்கிறதா என்ற கேள்வி எனக்குள் உண்டு. இல்லையோ என்ற எண்ணமும் உண்டு. இந்துமத தத்துவத்தில் குரு என்கிற விஷயத்திற்கு மிக மிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த குரு ஆச்சார்யன் அல்ல, பாடம் சொல்லி கொடுக்கிறவரோ, வித்தை சொல்லிக் கொடுக்கிறவரோ, பழக்க வழக்கங்கள் சொல்லிக் கொடுக்கிறவரோ அல்ல. மதபோதகரும் அல்ல. ஒரு மதத்தின் சட்ட திட்டங்களை, ஆசார அனுஷ்டானங்களைச் சொல்லித் தருபவரும் அல்ல.

ஒரு குருவிற்கு தந்தைக்குண்டான ரத்த பாசம் கிடையாது. ‘அவன் என் பிள்ளை. அவன் தவறே செய்யக்கூடாது, தவறு செய்தால் அவனைக் கண்டிப்பதற்குத்தான் நான் இருக்கிறேன்’ என்ற முரட்டுத்தனம் ஒரு குரு காட்டுவதில்லை. பிரம்பால் விளாசுவதோ, பேச்சுகளை வகை தொகையின்றி வாரி இறைப்பதோ, உணவு உண்ணும்போது ‘தண்டச்சோறு’ என்று திட்டுவதோ அவருடைய வேலை அல்ல. ஒரு தாயின் வெகுளித்தனமும் குருவிடம் கிடையாது. என் பிள்ளை என்ன செய்தாலும் என் பிள்ளை தானே, அவனை நான் பொறுத்துக் கொள்ளத் தானே வேண்டும். அவன் திருடனாக இருந்தாலும் ஏற்றுக் கொள்ளத்தானே வேண்டும் என்கிற அதீதமான நெகிழ்வும் குருவிடம் கிடையாது. ஒரு கணவனுக்கு உண்டான உரிமை போல எந்தவிதமான உபயோகப்படுத்தலும் குருவுக்கு இல்லை. மனைவியைப் போல நீங்கள் பேசுவதற்கெல்லாம் தலையாட்டுகிறவரும் அல்ல.

அப்படியானால் குரு சிநேகிதனா, இல்லை. அதற்கும் மேலே. சிநேகிதனிடம் கூட ஒரு பொறாமை இருக்கும். உங்களோடு ஒரு போட்டி இருக்கும். தனக்கு பின் படியில் தன் தோழன் இருக்க வேண்டும் என்ற ஆவல் இருக்கும். நானே கதாநாயகன் என்ற மமதை இருக்கும். அதற்கான முனைப்புகள் இருக்கும். குரு அப்படிப்பட்டவரும் அல்ல. ஆமெனில், குரு எப்படிப்பட்டவர் என்ற ஒரு கேள்வி வருகிறது.

குரு என்பவர் ஒரு நேர்த்தியான மனிதர்.

“கருணை என்றால் ஒரு வரம்புதான் இல்லையோ, குருவின் அருளுக்கொரு உவமைதான் சொல்லவோ” என்று ஒரு பாடல் உண்டு. நேர்த்தியான மனிதர் என்பதற்கு ஒரு வரைமுறையே இல்லை. எல்லா இடத்திலும் செயல் நேர்த்தியும், சொல் நேர்த்தியும், யோசிப்பு நேர்த்தியும், பழகு நேர்த்தியும் கொண்டவர் குரு. குறையே இல்லாதவர் குரு. உங்களுக்குக் குறையாகத் தென்பட்டதெல்லாம் பிறகு மிகப் பெரிய நிறைவாக வெகு சீக்கிரமே தெரிய ஆரம்பித்து விடும். அவரை மறுத்துப் பேசியதோ, கீழ்ப்படிய மறுத்ததோ எத்தனை பெரிய முட்டாள்தனம் என்று வெகு சீக்கிரத்தில் நிரூபணம் ஆகும். குருவுக்கு மட்டும் இப்படிப்பட்ட ஒரு உயர்ந்த இடம் சொல்லக் காரணம் என்ன.

அப்படி அவரிடம் என்ன இருக்கிறது என்ற கேள்விக்கு யார் குருவாக முடியும் என்கிற உபகேள்வியையும் போட்டுக் கொண்டால் பதில் கிடைப்பது எளிதாக முடியும். விருப்பு வெறுப்பு இல்லாமல் எவர் நடுநிலையில் இருக்கிறாரோ அவரே நேர்த்தியான மனிதராக முடியும். எது குறித்தும் எப்போதும், எந்த நிலையிலும் விருப்பு வெறுப்பற்று இருத்தல், யோசிக்கும்போதே, பிரச்சனைகளை அணுகுகின்ற போதே, நடு நிலையில் நிற்றல். மதம் சார்ந்தோ, மொழி சார்ந்தோ, தேசம் சார்ந்தோ, கலாச்சாரம் சார்ந்தோ இல்லாத போது நடுநிலையில் நிற்றல் என்றால் என்ன என்பது புரியும். இப்படி மொழி, மதம், தேசம் சாராது எல்லோராலும் இருக்க முடியாது. அதற்கு மிகப் பெரிய நேசிப்பு தேவை. சகல உயிர்களையும் நேசிக்கிறவர் இவைகளையெல்லாம் கடந்து வந்து நிற்பார்.

எவரும் எதிரியில்லா, எதுவும் எதிரியில்லா ஒரு நிலை வேண்டுமெனில் எதையும் சார்ந்திராத ஒரு தனிமை, ஒரு அமைதி, ஒரு சந்தோஷம் மிக முக்கியம். அந்த சந்தோஷமான அமைதி தான் ஒருவரை குருவாக்குகிறது. சகலமும் அறிந்த சாந்தம் ஒருவரைத் தெளிவாக்குகிறது. தெளிவானவர் தான் குருவாக உருவாக முடியும். ஏனெனில் அவர் எதையும் சாராதவர். எந்த பக்கமும் இல்லாதவர். எப்போதும் நடுநிலையில் நிற்பவர். எந்த பாசப்பிடிப்பிலும் சிக்கித் தவிக்காதவர். 

குரு எப்படி பேசுவார். 

“அவர் இளம் வயதில் மரணமடைந்து விட்டாரா என்ன செய்வது, நேற்று இருந்தவர் இன்று இல்லை என்ற சிறப்பு தான் உலகத்தின் இயல்பு . அடுத்தபடியாக ஆக வேண்டியதை கவனிப்போமே” 

“அடடே.. அவளுக்குக் குழந்தை பிறந்து விட்டதா . மிகவும் சந்தோஷம், பிறந்த குழந்தையின் மூலம் மகத்தான பணிகள் நிறைவேறட்டும், அன்பு பெருகட்டும், ஒரு வீட்டில் குழந்தை பிறந்தால் அந்த வீட்டில் அன்பு அதிகரிக்கிறது என்று அர்த்தம். அன்பு அதிகரிக்க வேண்டும், அன்புதான் சந்தோஷத்தின் வெளிப்பாடு. நம்முடைய இயல்பு இடையறாத சந்தோஷத்தை நாடுவதுதான். சந்தோஷத்தைத் தேடித்தான் இத்தனை போட்டி, பொறாமைகள். ஆட்டம் பாட்டம் எல்லாம்” என்று விளக்கிச் சொல்வார்.

“இந்த உலகத்தினுடைய பிரம்மாண்டத்தை, இந்த பிரபஞ்சத்தினுடைய பிரம்மாண்டத்தை, எல்லாக் கோள்களும் சரியாக அசைவதை, ஒழுங்காக நடப்பதை, சூரியன் சரியாக தினமும் காலையில் உதிப்பதை, அஸ்தமிப்பதை, நன்கு சுட்டெரிப்பதை, மழை வருவதை, காற்று வீசுவதை எல்லாம் பார்க்கும் போது, ஏதோ ஒன்று இயக்குகிறது என்று தோன்றவில்லையா. அதற்கு என்ன பெயர் வைப்பது, எல்லாவற்றையும் கடந்த ஒரு சக்தி என்பதை புரிந்து கொண்டு ,அதற்கு ‘கடவுள்’ என்று பெயர் வைத்தார்கள்.

எது அது. என்ன உருவம் அது. என்ன தன்மை அது, என்ன வலிவு அது. அது எங்கிருந்து வந்தது போன்ற கேள்விகள். நீ உண்மையாக இருப்பின் உனக்குள் எழும். அந்தக் கேள்விகளுக்கு பதில் நான் சொல்லி, நீ புரிந்து கொள்ள முடியாது, நீயாக அறிந்து கொள்ள வேண்டும். இதோ இந்தக் குடுவையிலிருந்து நான் தேன் குடித்து விட்டேன். தேன் மிகத் தித்திப்பாக இருக்கிறது, எவ்வளவு தித்திப்பாக இருக்கிறது என்று என்னால் உன்னிடம் சொல்ல முடியவில்லை. அப்படிச் சொன்னாலும் உனக்கு அது புரியாது. நீ தேன் குடிக்கும் வரை உனக்கு அது தெரியாது. எனவே, என்னைத் தேன் எப்படியிருக்கிறது என்று கேட்பதை விட்டு விட்டு நீ குடி.”

ஒரு உத்தமமான குருவின் சத்தியமான வார்த்தைகள் இவைகள்.

தேன் குடித்தல் என்பது கடவுளைத் தேடுதல் என்று வைத்துக் கொள்வோம். அறிதல் என்று வைத்துக் கொள்வோம். வெறும் கடவுள் தேடுதல் மட்டும் சொல்பவரா குரு, இல்லை. நடுநிலையில் நிற்பவரின் மனம் எப்பொழுதும் கருணையில் ஊறி நிற்கும். நாம் அருகே நிற்க, அது நம் தலையைத் தொட, நம்மை அணைத்துக் கொள்ள, அதனுடைய கருணை நம்முடைய கருணையை ஊற வைக்கும். அவரோடு வெறுமே சுற்றி இருப்பதால், பார்ப்பதால், உட்கார்ந்து பேசுவதால் நம்மையும் மீறி, நமக்குள் ஒரு மலர்ச்சி ஏற்படும். இதுதான் சொல்லாமல் சொல்லுதல். 

“உன்னை மாற்றி விடுகிறேன், உனக்கு தீட்சை கொடுக்கிறேன், உனக்கு புதுப்பெயர் சூட்டுகிறேன்” என்றெல்லாம் பம்மாத்து செய்யாமல், எல்லாவற்றையும் கணக்குப் போட்டு காசு வாங்காமல், தன்னுள் இருப்பதை உன்னுள் கொட்டிவிட்டு தனியே அமர்ந்திருக்கின்ற மிகப்பெரிய உன்னதம் குரு.

குருவை அனுபவித்தவன், குருவாவதற்கு எந்த முயற்சியும் செய்யத் தேவையில்லை. அவன் வளர்ச்சியில் எந்தத் தடங்கலும் வராது. இது இந்துமதம் உணர்த்திடும் குருவின் தனிச்சிறப்பு.


- திரு பாலகுமாரன் எழுதி 2000ஆம் ஆண்டு வெளி வந்த 'குரு' என்ற புத்தகத்திலிருந்து....

Friday, April 26, 2013

ஒரு பயணம், ஒரு அனுபவம், இரு மனிதர்கள்...!


அதிகாலை காலை இரண்டே முக்கால் மணிக்கு மதுரையில் நுழைந்து அழகரை எதிர் கொண்டுவிட்டு, அன்று மாலை ஐந்தரை மணிக்கே சென்னை கிளம்பியது சோகம்தான் என்றாலும், சூழ்நிலை அப்படி. எது நடந்து விடக் கூடாதென இரண்டரை வருடமாய் என் மனைவி தனியே போராடிக் கொண்டிருக்கிறாரோ, அது என்னேரமும் நடந்து விடலாமென்கிற அச்சமே உடனடியாய் என்னை சென்னைக்கு  மீட்டது. இது போன்ற தருணங்களில்  மனைவியின் உடனிருப்பது என் கடமை மாத்திரமில்லை, உரிமையும் கூட.

போகும் போது சுகமாய் ஏஸி பஸ்ஸில் போய்விட்டாலும், திரும்பும் போது அத்தனை யோகமில்லை. தமிழக அரசின் விரைவுப் பேருந்துதான் வாய்த்தது. சுமாருக்கு கொஞ்சம் மேலே, சூப்பருக்கு பல மடங்கு கீழே தரத்திலான பேருந்து. ஏஸி பஸ்காரர் 710 ரூபாய் வாங்கினார்கள். தமிழக அரசோ 325 ரூபாயில் சென்னை கொண்டு வந்து சேர்த்து விட்டார்கள். ஆறேழு வருடங்களுக்குப் பிறகான முதல் பேருந்து பயணம் என்பதால் இதனை குறிப்பிட வேண்டியிருக்கிறது. ஏஸி பஸ்காரர்கள் ஐந்தே மணி நேரத்தில் பயணித்த தூரத்தை கடக்க அரசு பேருந்துக்கு ஒன்பது மணி நேரம் தேவைப் பட்டது கொடுமை. மற்றபடி நல்லதொரு பயண அனுபவம்.

ஊரெல்லாம் Smart phones நிரம்பி வழிந்து கொண்டிருந்தாலும், நான்  மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் வாங்கி அரதப் பழசான மோட்டரோலா qwerty phone தான் இன்னமும் வைத்திருக்கிறேன். நேற்றுவரை இது தொடர்பில் எனக்கு பெரிதான யோசனையோ, அக்கறையோ இருந்ததில்லை. நேற்று பஸ்ஸில் என்னைச் சுற்றி உட்கார்ந்திருந்த பலரும் இந்த Smart phone களை வைத்து படம் காட்டிக் கொண்டிருந்த போது எனது நிலைப்பாடு குறித்த மறு யோசனைகள் வந்திருக்கிறது. 

தற்போது Micromax என்றொரு உள்ளூர் உற்பத்தியாளர்  சர்வதேச ப்ராண்டுகளுக்கு தண்ணீர் காட்டிக் கொண்டிருக்கின்றனர். அவர்களின் மாடல் எதையாவது வாங்கிவிட யோசனை வந்திருக்கிறது. விலையும் மலிவு, தரமும் சர்வதேசங்களுக்கு இணை, எல்லாவற்றிற்கும் மேலாய் என்னுடைய சுதேசி உணர்வை விளம்பரப் படுத்திக் கொள்ள ஒரு வாய்ப்பு. :)

6KVA Online UPS ஒன்று தேவைப் பட யாரிடம் கேட்பது என்கிற யோசனையில், தற்போது புதியதாய் முளைத்திருக்கும் ஆன்லைன் தளம் ஒன்றில் என் தேவையை பதிந்து வைத்தேன். தற்போது ஊரில் இருக்கும் அத்தனை UPS விற்பனையாளர்களின் அன்பு மழையில் நனைந்து கொண்டிருக்கிறேன். பிள்ளையார் பிடிக்க எதுவோ ஆன கதையாகி விட்டது. காலையில் தொலைபேசியில் அன்பாய் என்னை எழுப்புவதும் அவர்கள்தான், நல்லிரவு சொல்லித் தூங்க வைப்பதும் அவர்கள்தான். யாரிடம் வாங்குவதென தெரியாமல் மலைத்துப் போய் உட்கார்ந்திருக்கிறேன். இப்போது இரண்டு விண்டோ ஏசி வேறு தேவைப் படுகிறது. நாலு கடை ஏறி இறங்கினாலும் பரவாயில்லை என்று நினைக்க வைத்து விட்டார்கள்.

இந்த மாதத்தில் நான் சந்தித்த இரு சுவாரசியமான மனிதர்களைப் பற்றி விரிவாய் எழுதிவைக்க ஆசைப் பட்டேன். இதெல்லாம் சூட்டோடு சூடாக எழுதினால்தான் சுவாரசியமாய் இருந்திருக்கும்...இப்போது சிறு குறிப்பாய் எழுதவே தோணுகிறது. முதலாமவர் லண்டனைச் சேர்ந்தவர், குழந்தைகள் உளவியல் துறையில் மருத்துவ நிபுணர். வயது எழுபதை தாண்டியவர். நன்கு சம்பாதிக்கிறார்.பிறப்பால் ஈரானியர், 

அங்கே நடந்த கலவரத்தில் தன் பெற்றோரையும் குடும்பத்தையும் இழந்து உயிர் தப்பித்து அகதியாய் இங்கிலாந்து சென்றவர். புற்று நோய்க்கு தன் ஜெர்மன் மனைவியை பறி கொடுத்தவர். தன் வருமானத்தின் பெரும் பகுதியை ஈரான் மற்றும் இந்தியாவில் பதின்ம வயதைத் தொட்ட ஆதரவற்ற பெண் குழந்தைகளுக்காக செலவு செய்து வருகிறார். திண்டுக்கல் அருகே காந்தி கிராமத்தில் உள்ள நாற்பதுக்கும் மேற்பட்ட பெண் குழந்தைகள் அவருடைய “இண்டியன் டாட்டர்ஸ்”. 

இந்த பெண் குழந்தைகளுக்கான உணவு, உறைவிடம், கல்வி அதன் பின்னர் வேலைவாய்ப்பு அதற்கும் மேலே அவர்களுக்கு மாப்பிள்ளை பார்த்து திருமணமும் செய்து வைத்துக் கொண்டிருக்கிறார். வருடம் இரு முறை இந்தியா வந்து ஒரு மாதம் வரை அவர்களோடு தங்கியிருந்து அவர்களின் நலனை பேணி வருகிறார். எந்த விளம்பரமும் இல்லை. யாரையும் எதிர்பார்ப்பதில்லை. தன் சம்பாத்யத்தைக் கொண்டுவந்து செலவு செய்கிறார். மென்மையான கிழவர்.

மற்றவர் இந்தியர். அறுபது வயதைத் தொட்டவர். இவரும் உளவியல் துறை மருத்துவர். இவர் இங்கிருந்து போய் கம்போடியாவில் பெண்கள் நலனுக்காக உழைத்துக் கொண்டிருக்கிறார். கம்போடியாவில் வறுமை மற்றும் கல்வியறிவு இல்லாமையினால் இளம் பெண்கள் பதின்ம வயதில் பாலியல் தொழிலில் ஈடுபடுகின்றனர். இதனால் எய்ட்ஸ் போன்ற பாதிப்புகளுக்கு ஆளாகி கவனிப்பாரின்றி தெருவில் மரித்துப் போகின்றனர். இத்தகைய பெண்களை தேடிக் கண்டு பிடித்து அவர்களை பராமரிப்பது மற்றும், இளம் பெண்கள் திசைமாறிச் செல்லாமல் தடுக்கும் வகையில் விழிப்புணர்வு வேலைகளை அங்கேயே தங்கி தீவிரமாய் செய்து கொண்டிருக்கும் களப் போராளி. இவரும் மற்றவர்களை எதிர்பாராமல் தன் கை காசை செலவழிப்பவர். தற்போது இவருடைய வேலைகளைப் பார்த்து கம்போடிய அரசாங்கமே இவரோடு கை கோர்த்திருக்கிறது.

இது மாதிரியான மனிதர்களினால்தான் இன்னமும் மழை பெய்து கொண்டிருக்கிறது. இவர்களோடு எனக்கு கிடைத்த அறிமுகமும், நட்பும்  பல புதிய கேள்விகளை எனக்குள் விதைத்திருப்பதை மறுக்க முடியாது. பார்ப்போம்.

Wednesday, April 24, 2013

அழகரும் பின்னே ஞானும்ம்ம்ம்

நேற்று மாலை நான்கு மணி வரை மதுரைக்கு போகும் திட்டம் எதுவுமில்லை. ஒரு வருடமும் இல்லாத வகையில் இந்த வருடம் அழகர் என்னை மிஸ் பண்ணப் போகிறார் என்றே நினைத்திருந்தேன். சூழ்நிலைகள் மற்றும் வேலைகளின் காரணமாய் இந்த திருவிழா எல்லாம் முடிந்த பின்னால் ஊருக்குப் போகலாமென என்னையே சமாதானம் செய்து கொண்டிருந்தேன்.

தம்பியும், தங்கையும் இதே சிங்காரச் சென்னையில் ஆளுக்கு ஒரு பகுதியில் செட்டிலாகி இருந்தாலும், நாங்கள் ஆடிக்கொரு தடவை, அம்மாவாசைக்கு ஒரு தடவைதான் நேரில் பார்த்துக் கொள்கிறோம். அவரவர் வேலையில் அவ்வளவு பிஸியாக இருக்கிறோமாம். ஆனால் இரண்டு நாளைக்கொரு தடவை ஃபோனில் ஷேம லாபங்களை விசாரித்துக் கொள்வதுண்டு. அந்த வகையில் நான்கு மணி வாக்கில் தம்பி போனில் அழைத்து, “சாமி பார்க்கப் போகலாமா” எனக் கேட்டான். 

அவன் பற்ற வைத்த அந்த பொறி பற்றிக் கொண்டு எரிந்ததில் ஏழு மணிக்கெல்லாம் கோயம்பேட்டில் இருந்து கிளம்பிய ARC Travels ன் ஏஸி பஸ்ஸில் உட்கார்ந்திருந்தோம். காலையில் நாலு மணிக்கெல்லாம் கொண்டு மதுரை கொண்டு சேர்த்து விடுவதாய் கூறினர். ஆனால் பேருந்து சென்னையை விட்டு வெளியே வந்த போது மணி ஒன்பதாகி இருந்தது. ஆனாலும் கூட நள்ளிரவு 2.45க் கெல்லாம் பெரியார் பேருந்து நிலையத்திற்கு வந்து விட்டிருந்தோம். 

பழைய எம்.ஜி.ஆர் பாடல்கள் உரக்க ஒலிக்க விட்டபடி ஒன்றிரண்டு  டீக்கடைகள் திறந்திருந்தது, நாலைந்து பேர் கடமையாய் டீ குடித்துக் கொண்டிருக்க பெரியார் பேருந்து நிலையம் இருளின் நிழலில் உறங்கிக் கொண்டிருந்தது. வீடு வந்த போது மணி 3.15. அந்த நேரத்தில் அம்மா  எங்களை எதிர்பார்க்கவில்லை. குஷியாகி விட்டிருந்தார்.


ஆறு மணிக்கெல்லாம் மூன்றுமாவடியில் கூட்டம் சேரத் துவங்கியிருந்தது. வீட்டிலிருந்து காலாற நடந்து எதிர்சேவை மண்டகப் படிக்கு வந்த போது தூரத்தே அழகரின் பல்லக்கு தெரிந்தது. என்ன டைமிங் என என்னையே சிலாகித்துக் கொண்டேன்.


சமீபத்தில் பெங்களூரில் குண்டு வெடித்த எதிரொலியோ என்னவோ பக்தர்களை விட போலீசாரின் எண்ணிக்கை அதிகமாய் இருந்தது. பல்லக்கின் முன்னே 50 பேரும், பின்னே 50 பேருமாய் போலீஸ் புடைசூழ மதுரைக்குள் நுழைகிறார் அருள்மிகு கள்ளழகர்.

அதே உண்டியல்கள். ”உண்டியல் வரும் முன்னே, அழகர் வருவார் பின்னே”....என்று புது மொழி சொல்லலாம்.

குதிரை மீது போலீஸ், பாதுகாப்புக்காகவா, இல்லை படங் காட்டவா என்பது அவர்களுக்கே வெளிச்சம். :)


நேர்த்திக் கடன் என்கிற பெயரில் கொண்டாட்டங்கள்.


உடனே சென்னை திரும்ப வேண்டிய சூழல்.  அம்மாவையும் அப்பாவையும்,அழகரையும், பார்த்தாச்ச்ச்ச்ச்......வேறென்ன வேணும், அது போதும்.

Sunday, April 21, 2013

மதுரை சித்திரைத் திருவிழாவும், சில குறிப்புகளும்!


மதுரையைப் பொறுத்தவரையில் பாண்டியர்களின் ஆட்சி என்பது 1310ல் மாலிக்காஃபூர் படையெடுப்போடு முடிவுக்கு வந்தது. மதுரையை இழந்த  பின்னர் வந்த பாண்டிய அரசர்கள் சிறிய பகுதியினை ஆளும் சிற்றரசர்களாகவே இருந்தனர்.

மதுரையைப் பிடித்த டெல்லி சுல்தான், தன்னுடைய விசுவாசமான  தளபதியை மதுரையை நிர்வகிக்கும் ஆளுனர்களாய் நியமித்தார்.  பின்னாளில் இந்த ஆளுனர்கள் டெல்லி சுல்தானுக்கு கட்டுப் படாமல் தங்களை அரசனாக அறிவித்துக் கொண்டு மதுரையை ஆள ஆரம்பித்தனர். வரலாறு இவர்களை மதுரை சுல்தான்கள் என்றே கூறுகிறது.

ஏறக்குறைய அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்ற இவர்களின் ஆட்சியில் ஹிந்துக்கள் பெரிய அளவில் பல்வேறு கொடுமைகளை எதிர்கொள்ள நேர்ந்தது. மதம் மாறாதவர்கள் ஈவிரக்கமில்லாமல் வெட்டிச் சாய்க்கப் பட்டனர். இந்த காலகட்டத்தில்  மீனாட்சி அம்மன் கோவில் முழுமையான மூடப் பட்டே இருந்தது.  மீனாட்சி அம்மன் சிலை ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே ஓரிடத்தில் மறைத்து வைக்கப் பட்டிருந்தது.கோவிலின் செல்வம் பெருமளவில் கொள்ளையிடப் பட்டிருந்த நிலையில் கோவில் வளாகம் சிதிலமடைந்து புதர்காடாய் மாறியிருந்தது.

1372ல் விஜயநகர இளவரசரான கம்பண்ண உடையார், மற்றும் இளவரசி கங்காதேவி தலைமையில் வந்த விஜயநகர படையினரே மதுரையை ஆண்ட முஸ்லீம் சுல்தான்களை தோற்கடித்து  மதுரையை மீட்டனர். மீனாட்சி அம்மன் கோவிலை மீண்டும் செயல்பாட்டுக் கொண்டு வந்த பெருமை இவர்களையே சேரும். ஒளித்து வைக்கப் பட்டிருந்த மீனாட்சி அம்மன் சிலையை மதுரைக்கு கொண்டு வந்து மீண்டும் பிரதிஷ்டை செய்தவர்கள் இவர்களே. கங்கா தேவியின் ”மதுரா விஜயம்” குறிப்புகளில் இந்த தகவல் நமக்குக் கிடைக்கிறது.

இதன் பின்னர் இவர்களால் நியமிக்கப் பட்ட ஆளுனர்களே மதுரையை ஆண்டு வந்தனர். கிருஷ்ணதேவராயர் காலத்தில் நாகம்ம நாயக்கரின் மகனான விஸ்வநாத நாயக்கரின் விசுவாசத்தை மெச்சி மதுரையை அரசாளும் உரிமை அவருக்கு அளிக்கப் பட்டது. அவருக்குப் பின்னர் வந்த நாயக்க அரசர்களே மீனாட்சி அம்மன் கோவிலை பல வகையிலும் சீரமைத்து, அதன் திருவிழாக்களையும் நெறிப் படுத்தினர். அவர்கள் உருவாக்கிய முறையே இன்றளவும் பின்பற்றப் படுகிறது. அந்த வகையில் சித்திரைத் திருவிழா என்பது நாயக்க அரசர்களினால் உருவாக்கப் பட்ட ஒரு கொண்டாட்டம். முந்தைய பாண்டியர் ஆட்சியில் சித்திரைத் திருவிழா நடந்தது பற்றிய குறிப்புகள் இல்லை......அல்லது அப்படி எதையும் நான் வாசிக்கவில்லை.

மீனாட்சி அம்மன் கோவிலின் வரலாறு என்பது 2000-2500 ஆண்டுகள் பழமையானது. இந்த வரலாறை ஆதாரப் பூர்வமாய்ச் சொல்லும் ஆவணங்கள் எதுவும் இல்லாத நிலையில் புராணங்கள் என்கிற பெயரில் ஏகப்பட்ட கற்பனை கதைகள் மீனாட்சி அம்மனின் மீது பூசி மெழுகப் பட்டிருக்கிறது.

 மீனாட்சியின் தந்தையின் பெயர் மலையத்வஜ பாண்டியன், தாயார் காஞ்சனமாலா. கணவரின் பெயர் சோம சுந்தரர். இந்த தம்பதிகளின் மகன் பெயர் உக்கிர பாண்டியன். மீனாட்சி அம்மனுக்குப் பிறகு உக்கிர பாண்டியன் ஆட்சிக்கு வந்ததாக தகவல்கள் இருக்கின்றன. இவைதான் நான் அறிந்த வரையில் கொஞ்சம் நம்பும் படியான தகவல். 

மலையத்வஜ பாண்டியனைப் பற்றிய குறிப்புகள் வியாச பாரதத்தில் காணக் கிடைக்கிறது. பாண்டிய வம்சத்தின் 150 வது அரசன் என்றொரு தகவலும் இருக்கிறது. இதனை முன் வைத்து ஆய்வுகளையோ அல்லது தெளிவுகளையோ யாரும் முன் வைத்ததாகத் தெரியவில்லை.  

எது எப்படி இருந்தாலும் மீனாட்சி மதுரையை ஆண்ட பாண்டிய வம்சத்தின் அரசி. ஆணாதிக்க சமூகத்தில் முதல் அரசியாக, தனிப்பெருந்தலைவியாக விளங்கியவள், இன்றைக்கும் மதுரை மக்களின் அன்புக்கும் வணக்கத்துக்கும், மரியாதைக்கும் உரிய தாய்மையின் அம்சம்.

தாயை, தாய்மையை கொண்டாடுவதில் தவறே இல்லை. கொண்டாடித் தீர்க்கலாம். :)

சித்திரைத் திருவிழா வாழ்த்துக்கள்.

Tuesday, April 16, 2013

தங்கம், சில எதிர்பார்ப்புகள்!

பங்குச் சந்தையில் “falling knife” என்றொரு பிரசித்தமான சொற்றொடர் உண்டு. இலக்கில்லாமல் சரியும் பங்குகளை இம் மாதிரி குறிப்பதுண்டு. இம் மாதிரி பங்குகளை விட்டு விலகியிருப்பதே நல்லது.

"Never try and catch a falling knife. Wait for it to hit the ground then pick it up. The same applies to falling stocks." 
கடந்த இரு தினங்களாய் தங்கத்தின் விலை சர்வதேச சந்தைகளில் சரிந்து கொண்டிருக்கிறது. ஐந்தாண்டுகளில் இல்லாத வகையில் ஏற்பட்ட இந்த சரிவினால் சர்வதேசங்கள் கவலையாகி இருக்கின்றன என்றால் மிகையில்லை. இந்த சரிவு ஏதோ இன்றைக்கு நேற்று துவங்கியதைப் போல பத்திரிக்கைகளும், ஊடகங்களும் முழங்கிக் கொண்டிருக்கின்றன.

நுட்ப ஆய்வாளர்கள் எனப்படும் Technical analyst பலரும் இந்த சரிவினை கடந்த வருட இறுதியில் கணித்து விட்டனர். நானும் கூட இதை அப்போதே சொன்னேன் என இந்த இடத்தில் படம் காட்டிக் கொள்ள விரும்புகிறேன்(வெளம்பரம் :) ).  கடந்த மூன்று மாதங்களில் சீராக கீழிறங்கிக் கொண்டிருந்த தங்கத்தின் விலை கடந்த வாரத்தின் இறுதி துவங்கி நேற்றும் இன்றும் கட்டுப் பாடில்லாமல் சரிந்து கொண்டிருக்கின்றன.

இந்த சரிவுகள் எதுவரை போகும்? , எங்கே தரைதட்டி நிற்கும்?, அல்லது எங்கே இருந்து மீளத் திரும்பும்?, எப்போது வாங்கலாம்? என்கிற கேள்விகள் இப்போது எல்லோர் மனதிலும் ஓடிக் கொண்டிருக்கும். இந்த கேள்விகளை  குறுகிய கால இலக்குகள் மற்றும் நீண்ட கால இலக்குகள் என இரண்டு கட்டமாய் அணுகுவது சரியாக இருக்குமென நினைக்கிறேன்.

கீழே உள்ள படம் குறுகிய கால இலக்கினை தீர்மானிக்க உதவுமென நினைக்கிறேன். தற்போதைய நிலையில் குறுகிய காலத்தில் பத்து கிராம் தங்கத்தின் விலை  23500 வரை கீழிறங்கும் வாய்ப்புகளை எதிர்பார்க்கிறேன். இந்த நிலையை எட்டிய பின்னர் சிறிய அளவில் விலை உயர்வுகளை எதிர்பார்க்கிறேன். எனவே சிறு வர்த்தகர்கள் அல்லது நீண்ட கால முதலீட்டாளர்கள் சிறிய அளவில் வாங்கிச் சேர்க்கலாம். குறுகிய காலத்தில் விலை உயரும் போது வர்த்தகர்கள் கையிருப்பை விற்று லாபத்தை உறுதி செய்து கொள்ளலாம்.


நீண்டகால நோக்கில் நுட்ப ஆய்வுகளின் படி பத்து கிராம் தங்கத்தின் விலை 12000 ரூபாய் வரை கீழிறங்கும் வாய்ப்புகள் இருக்கின்றன. இதை இப்போது சொன்னால் யாராலும் நம்ப முடியாதுதான். ஆனால் இதற்கான வாய்ப்புகளே அதிகம். குறைந்த பட்சம் ஐந்தாண்டுகளில் இந்த நிலமை வரும் வாய்ப்பினை எதிர்பார்க்கிறேன். சர்வதேச அரசியல் மற்றும் பொருளாதார நகர்வுகளினால் இந்த கணிப்புகள் பொய்த்தும் போகலாம்.  ஆனால் நுட்ப ஆய்வுகள் எனப்படும் Technical analysis நான் சொல்லும் இந்த விலையினையே முன் வைக்கிறது.
"A falling knife security can rebound, or it can lose all of its value. As the phrase suggests, buying into a market with a lot of downward momentum can be quite dangerous. If timed perfectly, a buy at the bottom of a long downtrend can be rewarding - both financially and emotionally - but the risks run extremely high."

Monday, April 15, 2013

பிரதிவாதி பயங்கரம் ஸ்ரீநிவாஸ் - நினைவேந்தல்!நினைவு தெரிந்த நாளில் இருந்து காதலையும், சோகத்தையும் வழிய வழிய பிழியப் பிழிய எனக்குச் சொல்லித் தந்த அந்த குரல் நேற்றோடு அமைதியாகி விட்டது. பாடாத பாட்டெல்லாம் பாடிய அந்த மாமனிதர் பிறப்பால் தமிழரில்லைதான், ஆனால் அவரது குரல் தமிழையும் அதன் அழகையும்  இனி வரும் காலத்துக்கும் சொல்லிக் கொண்டேயிருக்கும்.

பிரதிவாதி பயங்கரம் ஸ்ரீநிவாஸ் என்கிற பி.பி.ஸ்ரீநிவாஸ் பிறப்பால் தெலுங்கர். ஆனால் தன் வாழ்நாளை தமிழகத்தில் வாழ்ந்து முடித்தவர். அவரை நான் சந்தித்து நான்கைந்து வருடங்களுக்கு மேலிருக்கும். உட்லேண்ட்ஸ் ட்ரைவ் இன்னில்...மாலை நாலு மணி வாக்கில், அநேகமாய் தினமும் பார்க்க முடியும்.

தங்கச் சரிகை வேய்ந்த தலைப்பாகை, கசங்கிய பட்டு அங்கவஸ்திரம்,  கண்ணாடி,கலர்கலராய் பேனாக்கள்,  நிறைய துண்டுக் காகிதங்கள் என வீங்கியிருக்கும் அவரது சட்டை பாக்கெட். வலது கையில் கத்தையாய் ஒரு கட்டு பேப்பர் வைத்திருப்பார். இடது தோள்பட்டையில் ஒரு ஜோல்னா பை. டைரி ஒன்றும் பார்த்ததாய் நியாபகம்.

அவருக்கும், அவருக்கு பரிமாறும் பரிசாகரருக்குமான உறவு மிகவும் அலாதியானது. தனக்கு இன்னது வேண்டுமென அவரும் சொல்ல மாட்டார், ஓட்டல் ஊழியரும் கேட்க மாட்டார். ஒரு டம்ளரில் தண்ணிர் வரும், அதைத்  தொடர்ந்து ஒரு காஃபியோ/டீயோ வரும். தன் பையில் இருந்து ஒரு மேரி பிஸ்கெட் பாக்கெட்டை எடுப்பார். ஒரு சில பிஸ்கெட்டுகளை அந்த காஃபியில் தொட்டு சாப்பிடுவார். தன் சுற்றத்தை கவனிக்காத ஒரு ஏகாந்தியாய் தன் பிஸ்கெட்டையும், காஃபியையும் ருசித்துக் கொண்டிருப்பார்.

பிஸ்கெட்டும், காஃபியும் முடிந்த உடன், தான் கொண்டு வந்திருக்கும் பேப்பரை எடுத்து வைத்துக் கொண்டு தீவிரமான யோசனையுடன் எதையோ எழுதிக் கொண்டிருப்பார். அங்கு வந்து போகும் எல்லோருக்கும் அவரைத் தெரியும். ஆனாலும் யாரும் அவரிடம் வலியப் போய் பேசியதை நான் பார்த்ததில்லை. அவருடைய உலகத்தில் அவர் தனியனாய் இருந்தார் என்றே சொல்லலாம்.  எனக்கிருந்த தயக்கத்தையும் மீறி இரண்டுடொரு தடவை அவருடன் ஒன்றிரண்டு வார்த்தைகள் பேசியிருக்கிறேன்.

ஒரு தடவை தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அவரிடம் போய், ”சார், நான் உங்கள் தீவிரமான ரசிகன்” என்று சொன்ன போது, கண்ணாடியை உயர்த்திப் பார்த்தவர், என்ன நினைத்தாரோ...கணீரென்ற குரலில் ”நல்லாயிருங்க” என ஒற்றை வார்த்தையோடு அந்த உரையாடலை முடித்துக் கொண்டு தொடர்ந்து எழுத ஆரம்பித்து விட்டார். ஒரு ஆட்டோக்ராஃப் கேட்கும் தைரியம் கூட எனக்கு அப்போது வரவில்லை.

ஏனெனில் எனக்கு அவர் மீதிருந்த பிரமிப்பு அத்தகையது. பால்யம் தொட்டு நான் ஆராதித்த ஒரு பாடகர், அவரைப் போல பாட வேண்டுமென நினைத்து  முயற்சித்த போதில்தான் அவரது மேதமை புரிந்தது.தளராத எழுத்தாளர், கவிஞர்.....அதிலும் கன்னடம், ஆங்கிலம், தமிழ், தெலுங்கு,ஹிந்தி இப்படி எட்டு மொழிகளிலும் கவிதை எழுதும் ஆற்றல் கொண்ட கவிஞர் அவர்.

உட்லேண்ட்ஸ் ட்ரைவ் இன் நாட்களைப் பற்றி பத்தி பத்தியாய் நிறைய எழுதலாம். பறவைகள் சரணாலயம் மாதிரி அது மனிதர்களின் சரணாலயம் . விதம் விதமான மனிதர்கள் வந்து குவிந்து தங்களை ஆசுவாசப் படுத்திக் கொண்டு போகும் இடம். தீடீரென ஒரு நாளில் அந்த இடத்தை அரசு கையகப் படுத்திய போது என் போல ட்ரைவ் இன் ரசிகர்கள் பலரும் மீளா துயரில் ஆழ்ந்தோம் என்றால் மிகையில்லை.

ட்ரைவ் இன் ல் பல சினிமா பிரபலங்களை சர்வ சாதாரணமாய் பார்க்க முடியும். கவுண்டமணி துவங்கி, ரகுவரன் வரை எத்தனையெத்தனையோ பிரபலங்கள் நம்மிடையே சர்வசாதாரணர்களாய் உலா வருவார்கள்.ட்ரைவ் இன் மூடப் பட்ட பின்னர் அவரை நான் பார்க்கவில்லை. ஒரு சில தொலைக் காட்சி நிகழ்வுகளில் பார்த்ததோடு சரி.

என்னுடைய அவதானிப்பில் தமிழ் சினிமாவில் இரண்டே வகையான ஆண் பாடகர்கள்தான் இருக்கின்றனர். கனத்த, கம்பீரத்தோடு உயிரை உலுக்கும் சாரீரம் கொண்டவர்கள். இந்த பாரம்பரியம் கிட்டப்பாவில் துவங்கி பாகவதர் வழியே,சிதம்பரம் ஜெயராமன், கண்டசாலா, டி.எம்.எஸ், சீர்காழி வரிசையில் மலேசியா வாசுதேவனோடு முடிந்து விட்ட ஒரு வகையினர்.

மற்றொரு வகையினர் உயிரை வருடும் மென்மையான சாரீரத்துக்குச் சொந்தக் காரர்கள். டி.ஆர். மகாலிங்கம், திருச்சி லோகநாதன், ஏ.எம்.ராஜா,பி.பி.ஸ்ரீநிவாஸ் வழியே ஜேசுதாஸ் என இன்றைக்கிருக்கும் அநேக பாடகர்கள் இந்த வகையினர்தான். எஸ்.பி.பி இரண்டும் கலந்த கலவை, தனிப்பிறவி. ஏ.எம்.ராஜாவின் மென்மையான குரலுக்கு கொஞ்சம் மெருகும், குழைவும் சேர்த்தால் அதுதான் பி.பி.ஸ்ரீநிவாஸ் குரல் என்பதாக நான் ஒரு தீர்மானத்தில் இருக்கிறவன்.

ஆந்திராவில் பிறந்திருந்தாலும் தன் வாழ்க்கை முழுவதையும் சென்னையில் வாழ்ந்து முடித்த இந்த மனிதருக்கு நியாயமாய் கிடைத்திருக்க வேண்டிய அங்கீகாரமோ, கௌரவமோ தரப் படவில்லை என்பது வருத்தமான செய்தி. அவ்வளவு ஏன், தமிழக அரசின் கலைமாமனி பட்டம் கூட இவருக்குத் தரப்படவில்லை.

அவர்கள் தராவிட்டால் என்ன, என் போன்ற லட்சோப லட்சம் ரசிகர்களின் உள்ளத்தில் கலையாத மாமணியாய் அந்த மனிதர் விளங்குகிறார். இனியும் விளங்குவார்.

Tuesday, March 26, 2013

"பிரமிள்" தரும் பிரமிப்பு!


பிரமிள், நகுலன், விக்கிரமாதித்யன் அப்புறம் விரல் விட்டு எண்ணி விடக் கூடிய சிலரோடு என் கவிதை உலகம் முடிந்து போகிறது.  ஏனோ இன்று காலையில் இருந்து பிரமிளின்  இந்த கவிதை மனசுக்குள் ஓடிக் கொண்டேயிருக்கிறது. காரணம் தெரியவில்லை, 

ஒரு வேளை சமீபத்தில் நான் சந்தித்த மனிதர்கள் தந்த தாக்கமாய் இருக்கலாம். ட்விட்டரிலும், முகநூலிலும் ஒற்றை வரியில் இவைகளை போடுவதை விடவும் என் பதிவில் பதிந்து வைக்கலாம் என்று இதை எழுதிக் கொண்டிருக்கிறேன்.

"இப்பொழுதும் 
அங்குதான் 
இருக்கிறீர்களா?" 
என்று 
கேட்டார் 
"எப்பொழுதும் 
அங்குதான் இருப்பேன்" 
என்றேன்.

- பிரமிள்

கவிதையில் இருப்பது நம் எல்லோருக்கும் தெரிந்த வார்த்தைகள்தான், வாக்கியங்கள்தான். பிரமிள் மாதிரி வித்தைக்காரர்களின் கைகளில் அவை சிக்கும் போது கிடைக்கும் அனுபவம் அலாதியானது. வார்த்தைகளால் விளக்கிட முடியாத அனுபவமாகி விடுகின்றன.

இன்னொரு கவிதை!

வந்தவன் கேட்டான் 
`என்னைத் தெரியுமா ? ` 
`தெரியவில்லையே` 
என்றேன் 
`உன்னைத்தெரியுமா ?` 
என்று கேட்டான் 
`தெரியவில்லையே` 
என்றேன் 
`பின் என்னதான் தெரியும்` 
என்றான். 
உன்னையும் என்னையும் தவிர 
வேறு எல்லாம் தெரியும் 
என்றேன்.

மேலோட்டமாய் இதை வாசித்தால் எதுவும் விளங்காதுதான், திரும்ப திரும்ப வாசிக்கும் போதுதான் கவிதையின் வீரியம் பிடிபடும். ஒரு கவிதையோடு முடித்து விடுவோமென்றுதான் ஆரம்பித்தேன். இன்னும் சில கவிதைகளையும் சொல்லிவிட்டால் திருப்தியாய் போய் தூங்குவேன்.

நினைவு ஊர்ந்து செல்கிறது 
பார்க்கப் பயமாக இருக்கிறது 
பார்க்காமல் இருக்கவும் முடியவில்லை


இருப்பதற்கென்று 
வருகிறோம் 
இல்லாமல் 
போகிறோம்

எனக்கு 
யாருமில்லை 
நான் 
கூட..

எந்தப் புத்தகத்தை
படித்தாலும்
நமக்குள் இருப்பதுதான்
புஸ்தகத்தில்
எழுதியிருக்கிறது
அதை மீறி ஒன்றுமில்லை!


நீயிருக்க
நானிருக்க
நேற்று
இன்று
நாளை
என்ற நிலை
ஒன்றும் இல்லை
ஒன்றுமே இல்லை!
......நல்லிரவு 

Monday, March 25, 2013

மாதக் குறிப்பு :-)


நிதியாண்டின் கடைசி மாதம். கணக்கு வழக்குகளை நேர் செய்தாக வேண்டிய கட்டாயங்கள். நிறைய வேலைகள்.......எழுதுவதற்கு நிறைய இருந்தாலும் எழுதாமல் விட வேண்டியதாயிற்று.

மாதத்தின் ஆரம்பத்தில் மீண்டுமொரு தடவை காந்திகிராமம் செல்ல வேண்டியிருந்தது. இம் முறை நிதானமாக காந்தி கிராமத்தின் நீள அகலங்களில் நன்கு சுற்றினேன். நல்ல மழை பெய்தது. 

இலங்கைப் பிரச்சினையை வைத்துக் கொண்டு சமூக வலைத் தளங்களில் ஆளாளுக்கு கும்மியடித்த வேளையில், கையைக் காலை கட்டிக் கொண்டு கருத்தே சொல்லாமல் வேடிக்கை பார்த்ததுதான், இந்த மாதத்தில் நான் செய்த உருப்படியான காரியம். இணையத்தில் ஆவேசக் கூச்சலிடுவது என்பது  காற்றில் அட்டைக் கத்தியை வீசி சண்டை போடுவது போலத்தான் என்றாலும் ,இந்தக் கலையில் நம் ஆட்களை அடித்துக் கொள்ள இன்னொரு இனம் பிறந்துதான் வர வேண்டும். 

இந்த முறை அரசியல் வாதிகளின் வயிறெறியும் வகையில் மாணவர்கள் வீதிக்கு வந்து இலங்கை அரசுக்கு எதிராக போராடினார்கள். மாணவர்களின் இந்த திடீர் பொறுப்புணர்வு குறித்து நிறைய எழுதலாம், ஆனால் அதில் எனக்கு விருப்பமில்லை. என் வாழ்க்கையில் வீட்டுக்குத் தெரியாமல் கட் அடித்துவிட்டு நான் பார்த்த முதல் திரைப்படம் “ஆண்பாவம்”. அன்றைக்கு எங்களைத் தவிர மற்றவர்கள் எல்லோரும் இலங்கைத் தமிழர்களுக்காக  எங்கள் பள்ளியில்(தூய மரியன்னை மேல் நிலைப் பள்ளி) இருந்து கலெக்டர் அலுவலகத்துக்கு ஊர்வலமாய் போய்க் கொண்டிருந்தனர்.

இப்படியான என்னுடைய தமிழ் இன உணர்வு இன்னமும் அப்படியேதான் இருக்கிறது.வளரவும் இல்லை, குறையவும் இல்லை.

இன்று மாலை ஒரு பெரிய்ய்ய்ய்ய நிறுவனத்தில், பெரிய்ய்ய்ய்ய்ய பதவியில் இருக்கும் நண்பனிடம் இருந்து போஃன். அவர்கள் நிறுவனத்திற்கு  இலங்கைத் தமிழர்கள் மீது திடீரென பேரன்பும், பெருங்கருணையும் உண்டாகி இருப்பதால், தமிழகத்தில் அகதி முகாமில் நிஜமாகவே கஷ்டப் படும் இலங்கைத் தமிழர்கள் யாருக்கேனும் கல்வி உதவி அல்லது மருத்துவ உதவி தேவைப் பட்டால், அதைச்  செய்திட அவர்கள் நிறுவனம் தயாராக இருப்பதாய் சொன்னான். இடைத் தரகர்களோ அல்லது அரசியல் வியாதிகளோ இல்லாமல் நேரிடையாக பயனாளர்களுக்கு உதவிடத்  தயாராக இருக்கிறார்களாம். விசாரித்துச் சொல்வதாய் சொல்லியிருக்கிறேன்.

யாருக்கேனும் விவரம் தெரிந்தால் என்னுடைய ட்விட்டருக்கு தனிச் செய்தி அனுப்பவும். 

ஆரம்பத்தில், என்னடா இங்கே போய் தமிழ்ல எழுதறே என்றார்கள். ஆங்கிலத்தில் எழுதத் தெரியலை போல, அதனால் தமிழில் எழுதுகிறானென பேசிக் கொண்டார்கள். அப்புறமாய் நான் அங்கே எழுதுவதே பிரச்சினையாக இருப்பதாய்  தெரிந்தது..... இந்த மடம் இல்லையென்றால் இருக்கவே இருக்கிறது, சந்தை மடம் என அங்கிருந்து நடையைக் கட்டிவிட்டேன். என்ன ஏதென புரியாதவர்கள் கீழே உள்ள பாட்டைக் கேட்டு மகிழலாம்.

இந்தப் பாடல் பணத்தோட்டம் என்ற படத்தில் இடம் பெற்றது. அத்தனை கவனம் பெறாத பாடலென நினைக்கிறேன். எனக்கு பிடித்திருக்கிறது, உங்களுக்கும் பிடிக்கலாம்.


.

Saturday, March 2, 2013

The Power of Nowஇந்த வீடியோவை பார்த்து விட்டுத்தான் இவரைப் பற்றி(Eckhart Tolle) தேட ஆரம்பித்தேன். இவர் எழுதிய புத்தகமான ”The Power of Now” இணையத்தில் இலவசமாகவே கிடைத்தது. 

இப்போதுதான் வாசித்துக் கொண்டிருக்கிறேன்.இந்த புத்தகத்தைப் பற்றி நிறைய எழுத வேண்டும்.  

இதை வாசிக்கும் உங்களில் யாருக்கேனும் ஆன்மிகம் பற்றிய தேடல்கள் இருக்குமானால், அவசியம் வாசித்துப் பார்க்கலாம். ஆன்மிகம் தொடர்பான நம் புரிதல்களை நிச்சயமாக வேறொரு தளத்துக்கு இட்டுச் செல்லும் புத்தகம் இது. 

 The Power of Now 


 தனிப்பட்ட சேகரிப்புக்காக.

Thursday, February 14, 2013

நகரும் சாலைகள்!


நேற்று அதிகாலை நான்கு மணிக்கு கிளம்பி, காரை விரட்டு விரட்டென விரட்டி காந்தி கிராமத்தை தொட்ட போது பகல் 11.20. ஒரு துக்க நிகழ்வு, அவர் என் மனைவியின் பெரியப்பா . 98 வயதைத் தொட்டவர். 

சம காலத்தில் குறிப்பிட்டுச் சொல்லுமளவுக்கு அத்தனை பெரிய மனிதரில்லைதான். ஆனாலும் கூட அவருடைய மரணச் செய்தியை அத்தனை தொலைக் காட்சிகளும் வாசித்தன.கருணாநிதி துவங்கி அநேக அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் சொல்லி தங்கள் இருப்பை காட்டிக் கொண்டனர். தி ஹிண்டு துவங்கி எல்லா செய்தித் தாட்களும் அவருக்கு புகழாரம் சூட்டின. 

அந்த மனிதர் சர்வோதய இயக்கத்தின் தலைவர் திரு.சங்கரலிங்கம் ஜெகந்நாதன். 

Sarvodaya leader Jagannathan passes away


Homage paid to Sarvodaya leader


கடைசி மூச்சு வரை காந்தியவாதி. பூதான இயக்கத்தின் தளகர்த்தர். நில மீட்புப் போராளி, பண்ணை விவசாயம் என்கிற பெயரில் காலம் காலமாய் விவசாயிகளின் மீது நிகழ்த்தப் பட்டு வந்த கொத்தடிமைத் தனத்தை ஒழித்தவர்.லட்சக் கணக்கான ஏழை விவசாயிகளுக்கு தாங்கள் உழுத நிலத்தை சொந்தமாக்கிக் கொடுத்தவர். தீண்டாமைக்கு எதிராய் போராடியவர். தன்னைப் போலவொரு சமூகப் போராளியை சுதந்திரம் கிடைக்கும் வரை காத்திருந்து, காதலித்து மணந்தவர். இத்தனை உயரம் தொட்ட அந்த மாமனிதரிடம் கடைசியில் எஞ்சியிருந்த ஒரே சொத்து அவர் வளர்த்த ஒரு குட்டி நாய்தான்.

காந்தி கிராமத்தில் கேந்திரிய ஊழிய்ர் கூட்டம் நடக்கும் எளிமையான கூடத்தில் அவருடைய உடல் இருத்தப் பட்டிருந்தது. ஏதோவொரு தேசத் தலைவரின் மரணம் போல சாரை சாரையாய் மக்கள், எளிய மனிதர்கள். எத்தனை துவைத்தாலும் போகாத அழுக்கேறிய பழுப்பு சட்டை வேஷ்டிகள்,கசங்கிய நூல் சேலை பெண்கள் என எங்கு திரும்பினாலும் கிராமத்து மனிதர்கள். அழக்கூடாது என அறிவுறித்தியே உள்ளே அனுப்பினாலும், பலர் உடைந்து அழுதனர். அப்பாவென அரற்றினர்.அவர் மனைவியை தெய்வம் போல பார்த்தனர். அவர் காலில் விழுந்து கும்பிட்டனர்.

இது ஒரு புறமிருக்க, பாரபட்சமில்லாமல் எல்லாக் கட்சி அரசியல் வாதிகளும் ஆட்கள் புடைசூழ வந்து ஆளுயர மாலை போட்டு போட்டோ எடுத்துக் கொண்டனர். விளம்பரத்திற்காகுமே!. இதில் ஒருவர் மட்டும் விதிவிலக்காய்த் தெரிந்தார். இத்தனைக்கும் எனக்கு அவரை பிடிக்காது. அதற்கு ஆயிரம் காரணங்கள். ஆனால் அவர் மட்டும்தான் குழியை முழுதாய் மூடும் வரை கூடவே இருந்து விட்டு. இரங்கல் கூட்டத்தில் உருக்கமாய் பேசிவிட்டு போனார். அவருடைய செயலில் பாசாங்கு இல்லை என உறுதியாய்ச் சொல்வேன். அவர்தான் வைக்கோ.

எல்லாம் முடித்து மதுரைக்கு வந்த போது மணி ஏழாகி விட்டிருந்தது. குளித்து விட்டு கோணார் மெஸ் போய் இரண்டு முட்டை தோசை, வெங்காய கறி மற்றும் முட்டைக் கறியோடு சிம்ப்பிளாய்(!) டின்னர் முடித்துவிட்டு வீட்டில் போய் படுத்தால் அப்படியொரு முரட்டுத் தூக்கம். அதென்னவோ எங்களுடைய மதுரை வீட்டில் மட்டும்தான் எனக்கு அப்படியொரு தூக்கம் வருகிறது.

காலையில் ஒன்பது மணிக்கு அம்மாவின் திட்டோடு திருப்பள்ளியெழுச்சி. பத்து மணிக்கு அம்மா கொடுத்த தோசைகளை முழுங்கிவிட்டு கிளம்பினோம். அப்பாவுக்கும், அம்மாவுக்கும் பேரன் பேத்தியை பிரிய மனதில்லை, ஆனாலும்  கூட அதை வெளிக் காட்டிக் கொள்ளவில்லை. எனக்குத்தான் குற்றவுணர்ச்சி பிடுங்கித் தின்றது. என்ன செய்வது, பள்ளி ஆண்டு விடுமுறைக்கு கூட்டி வருவதாய் சொல்லிக் கிளம்பினேன். திருச்சி வரை மழை கொட்டித் தீர்த்தது. ஐந்து மணிக்கு சென்னை வந்து சேர்ந்தேன். 

37 மணி நேரத்தில் ஆயிரம் கிலோமீட்டரைத் தொட்ட பயணம். சாலைகள்  எப்போதும் நகர்ந்து கொண்டேதானிருக்கிறது. நாம்தான் ஏனோ அதை புரிந்து கொள்வதேயில்லை.

Wednesday, February 6, 2013

டோண்டு!

பதிவுலகில் அவர் எனக்கு ஜூனியர். அதைத் தவிர மற்றெல்லாவற்றிலும் என்னை விட பல விதத்திலும், பல வகையிலும் சீனியர். ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதற்கும், எப்படி வாழக்கூடாது என்பதற்கும் உதாரணம் காட்டுமளவுக்கு உதாரண புருஷனாய் வாழ்ந்தவர்.

எனக்கும் அவருக்கும் எப்போதுமே ஏழாம் பொருத்தம்தான். எனக்கு மட்டுமில்லை, இங்கே பரவியிருக்கும் பலருக்கும் அதே நிலைதான். ஆனால் மனிதர் தன் முரட்டு பிடிவாதத்தினால், தான் பிடித்த குரங்கை கடைசி வரை முயல் என்றே சாதித்துவிட்டுப் போனவர்.

சமீபத்தில்(டோண்டுவின் புகழ் பெற்ற சொல்லாடல் இது) அதாவது 2005 துவங்கி அவரோடு பல தடவைகள் பின்னூட்டங்களின் வழியே சண்டை பிடித்திருக்கிறேன். ஒரு தடவை கூட இருவரும் வரம்பு மீறியதில்லை. பெரியவர் டோண்டு என்றே அவரை குறித்து எழுதியிருக்கிறேன். அந்த மரியாதைக்கு தகுந்தவர்தான்  ஒரு கட்டத்தில் சலித்துப் போய் அவரோடு மல்லுக் கட்டுவதை நிறுத்தி விட்டு அவர் பக்கம் போகாமலிருக்கவும் செய்தேன். ஆனாலும் கூட அவ்வப்போது அவர் பதிவு கண்ணில் படும் போது வாசித்து விட்டு மனிதர் திருந்தவே இல்லை என நினைத்துக் கொள்வதுண்டு.

அவருடைய மகளின் படத்தை போலி டோண்டு தன்னுடைய “ஆப்பு” தளத்தில் வெளியிட்ட போது அதை எதிர்த்து கடுமையாக வாதிட்டு அந்த படத்தை நீக்க காரணமாயிருந்தவர்களில் ஒருவன் என்பதால் எனக்கு நன்றி தெரிவித்து தனியொரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். என்னுடைய தொலைபேசி எண்ணையும் கேட்டிருந்தார். எனக்கு அவரோடு தொடர்பிலிருக்க விருப்பமில்லை என்பதால் அந்த மின்னஞ்சலை நிராகரித்தேன். அதன் பிறகு பல தருணங்களின் அவரோடு மாற்றுக் கருத்துக் கொண்டு விவாதித்திருக்கிறேன்.

.வாழ்க்கை குறித்த அவரது சில தீர்மானங்கள் நம் ஒவ்வொருவருக்குமானவை. தன்னுடைய முடிவுகளில் அவர் ஒரு போதும் சமரசம் செய்து கொண்டதே இல்லை. அந்த வகையில் எனது மரியாதைக்குரிய எதிரி டோண்டு அவர் காலமான செய்தி தெரிந்த போது சில நிமிடங்கள் சலனமில்லாமல் உட்கார்ந்திருந்தேன். இப்போதும் கூட அவர் கொண்டிருந்த கருத்துக்களில் எனக்கு மாறுபாடு உண்டு. ஆனால் அந்த மனிதரின் மேலிருக்கும் மரியாதை நேற்றை விட இன்று கூடியிருக்கிறது.

அவர் ஆத்மார்த்தமாய் வணங்கிய தென் திருப்பேரை மகரநெடுங்குழைக்காதன் அவருக்கு அவர் விரும்பிய வைகுண்ட பதவியை அளித்திட எனது பிரார்த்தனைகளை இணைத்துக் கொள்கிறேன்.


என்னைப் போலவே அவரோடு மாற்றுக் கருத்து கொண்டிருந்த இருவரின் அஞ்சலிப் பதிவுகள்.


Friday, February 1, 2013

Buna! Ce faci?/ருமேனியா

ருமேனிய மொழியில் Buna! Ce faci? என்றால்  “Hello! How Are You?” என்று அர்த்தமாம். இந்த திரைப் படத்தைப் பற்றிய விவரங்களை முதலில் ஜாக்கிசேகர் பதிவுகளில்தான் பார்த்தேன்.அவசியம் பார்த்தேயாக வேண்டிய பட வரிசையில் இந்தப் படத்தினை குறிப்பிட்டிருந்தார். அன்று முதல் எனது தேடலில் இந்தப் படம்  இருந்தது  .சமீபத்தில் இணையத்தில் வேறு எதையோ தேடிக் கொண்டிருக்கையில் எதிர்பாராமல் முழுப் படமும் சிக்கியது. அதுவும் யூட்யூபில்.கணவன், மனைவி, குடும்பம், உறவுகள், நட்புகள் என ஏதோவொரு சமூக மதிப்பீடுகளின் ஊடேதான் நாம் எல்லோருமே  வாழ்ந்து கொண்டிருக்கிறோம். தனிப்பட்ட நம் விருப்பங்களின் பேரில் வாழ்வதை விடவும் இம் மாதிரி பொது மதிப்பீடுகளில்தான் நமது வாழ்க்கை சிக்கிக் கிடக்கிறது. அதைத்தான் சமூகமும் விரும்புகிறது அல்லது அங்கீகரிக்கிறது.

நாற்பது வயதைத் தொட்ட ஒரு கணவணுக்கும், மனைவிக்குமான கதைதான் இந்த படம். இசைக் கலைஞனனான கணவன், துணி சலவை செய்துதரும் கடை வைத்திருக்கும் மனைவி, அவர்களின் பதினேழு வயது மகன். இந்த மூன்று கதாபாத்திரங்களின் ஊடேதான் மொத்த கதையும் பயணிக்கிறது. 

எதிர்பார்ப்புகள் எதுவும் இல்லாமல் பார்த்ததாலோ என்னவோ எனக்கு இந்தப் படம் ரொம்பவே பிடித்திருந்தது. ஆரம்பம் துவங்கி கடைசி காட்சிவரை அதிர்வில்லாத மென்வேகத்தில் படம் நகர்கிறது. கதாபாத்திரங்களின் சின்னச் சின்ன உணர்வுகள், ஆச்சர்யங்கள் துல்லியமாய் படமாக்கியிருக்கின்றனர்.

படத்தின் மிகப் பெரிய வலிமை அதன் பின்னனி இசைதான். சமீபத்தில் இத்தனை அருமையான ஒரு இசைக் கோர்ப்புடன் கூடிய ஒரு படத்தை நான் பார்க்கவே இல்லை என அடித்துச் சொல்வேன். இசையமைப்பாளரைப் பற்றி இனையத்தில் தேடினால் பெரிதாய் தகவல் எதுவும் கிடைகக்வில்லை. 

விமர்சனம் என்கிற போர்வையில் மொத்த கதையையும் விரித்துச் சொல்வது எனக்கு ஏற்புடையதில்லை அது படத்தின் சுவாரசியங்களையும், அதனூடே பொதிந்திருக்கும் ரசமான திருப்பங்களையும் கெடுத்துவிடும்.அதனால் படத்தின் இனைப்பை கீழே கொடுத்திருக்கிறேன். பார்த்து ரசியுங்கள்.

முக்கியமான குறிப்பு: இந்த படம் குழந்தைகளுக்கானதில்லை. பொது இடத்திலோ அலுவலகத்திலோ பார்ப்பதை தவிர்க்கவும். அதற்காக ஆபாசப் படம் என்று நினைத்து விட வேண்டாம். சில காட்சிகளினால் ஏற்படும் வீணான சங்கடங்களைத் தவிர்க்கவே இந்த அடிக் குறிப்பு.

Monday, January 28, 2013

தை ஒன்றே தமிழ்புத்தாண்டு - இலக்கிய ஆதாரத் தொகுப்பு

பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் என்பவர், தை முதல் நாளே தமிழர் புத்தாண்டு என்பதை வலியுறுத்தும் சங்கத் தமிழ் பாடல் வரிகளையும், அது தொடர்பான ஓவியங்களையும் பதிப்பித்து இணையத்தில் பகிர்ந்திருக்கிறார். 

இது தொடர்பில் எனது பழைய கட்டுரையை இங்கே வாசிக்கலாம். தை ஒன்றே!, தமிழரின் புத்தாண்டு!

Wednesday, January 23, 2013

சின்மயி விவகாரமும்....மாமல்லனும்!இந்த புத்தகம் பற்றி கடந்த வாரமே எழுதியிருக்க வேண்டியது. திணறத் திணற வேலைகள்.

பாடகி, நிகழ்ச்சித் தொகுப்பாளர், டப்பிங் ஆர்ட்டிஸ்ட், மொழி பெயர்ப்பு நிறுவனம் நடத்துகிறவர், இணையவெளியில் லட்சம் பேர் பின் தொடர  பரபரப்பாய் இயங்கும் ட்விட்டர் என பல்வேறு அடையாளங்களை சுமக்க மாட்டாமல் சுமந்து திரியும் பிரபலம் சின்மயி ஸ்ரீபாதா.

இணையத்தில் சிலர் தன்னை ஆபாசமாய் மிரட்டுவதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சமீபத்தில் சைபர்க்ரைம் அலுவலகத்தில் புகார் ஒன்றை சின்மயி கொடுத்தார். புகாரை சிரமேற்கொண்ட காவல்துறையும்  இருவரை கைது செய்து ஊடகங்களில் படங்காட்டியதன் பின்னனியில், “குற்றம்!, நடந்தது என்ன?” என்பதை அலசும் புத்தகம்தான் மாமல்லன் எழுதிய  “சின்மயி விவகாரம், மறுபக்கத்தின் குரல்”

இந்த புத்தகத்தின் ஆசிரியரான விமலாதித்த மாமல்லன், தமிழின் தவிர்க்க முடியாத எழுத்தாளுமையாய் வந்திருக்க வேண்டியவர், ஏதோ காரணங்களினால் வனவாசம் போனவர், சமீபத்தில்தான் மீண்டும் களமிறங்கியிருக்கிறார். வம்புச் சண்டைக்குப் போவதில்லை, அதே நேரத்தில் வந்த சண்டையை விடுவதில்லை என்கிற கொள்கை வீரர், பிரச்சினை என வந்துவிட்டால் கடைசி வரையில் இரண்டில் ஒன்று பார்த்துவிடும் முரட்டு எழுத்தாளுமை.

முகமற்றவர்களின் முகமாகவும் ,குரலற்றவர்களின், குரலாகவும் ஆன்மா மறுக்கப்பட்டவர்களின் ஆன்மாவாகவும் செயல்படுபவனே எழுத்தாளன்.....என்று துவங்கும்  இந்தப் புத்தகத்தின் நெடுகில்  பாடகி சின்மயி கொடுத்த புகாரின் ஒவ்வொரு கூறின் பின்புலத்தையும், அதன் விளைவுகளையும் அங்குலம் அங்குலமாய் ஆதாரங்களுடன் அலசி, சின்மயி என்கிற பாடகியின் மறுபக்கம் அல்லது வேறெதையோ பளிச்சென வெளிச்சம் போட்டுக் காட்டுவதில் மாமல்லன் வெற்றி பெற்றிருக்கிறார்.

இந்த விவகாரத்தை ஆரம்பம் முதல் தொடர்ந்து கவனித்தவன் என்கிற வகையில் மாமல்லன் தன் நூலில் எதையும் திரித்தோ, மிகைப் படுத்தியோ கூறிடவில்லை என்பது மகிழ்வையும், அவர் மீதொரு மரியாதையையும் ஏற்படுத்தியது. யாருக்கோ நடந்த அநீதி என்று கடந்து போய்விடாமல் இரவு பகலாய் ஆதாரங்களை திரட்டி, அது தொடர்பான் குறிப்புகளையும் தேடி எடுத்து, அவற்றை வரிசைப் படுத்திய மாமல்லனின் உழைப்பு அசாத்தியமானது என்றால் மிகையில்லை.

அந்த வகையில் இந்த வழக்கில் சின்மயி தரப்பு வாதங்களை  நீதிமன்றத்தில் பொடிப்பொடியாக்கிட இந்த புத்தகத்தில் இருக்கும் சான்றாவனங்களே போதுமானது என நினைக்கிறேன்.

நிறைகளே சொல்லிக் கொண்டிருந்தால் எப்படி!, இனி சில குறைகளையும் பட்டியலிட விரும்புகிறேன்.

சிறிய எழுத்துருக்கள் வாசிப்பின் வேகத்தை தடை செய்வதுடன், சோர்வையும் உண்டாக்குகிறது. பக்கங்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டி அப்படி செய்திருக்கலாமென நினைக்கிறேன்.

சான்றாவனங்கள் என நிறைய்ய்ய்ய்ய்ய ஸ்க்ரீன்ஷாட்டுகளை கொடுத்திருக்கிறார். புதியவர்களுக்கு அந்த ஸ்க்ரீன் ஷாட்டில் என்ன இருக்கிறது என்பதை புரிந்து கொள்வதில் நிறையவே சிரமம் ஏற்படும். அவற்றை வாசித்து அறியும் படி படங்களை பளிச்சென பிரிண்ட் செய்திருக்கலாம்.புத்தக காட்சியை மனதில் கொண்டு அவசர கதியில் தயாரிக்கப் பட்டதால் இந்த குறைகள் ஏற்பட்டிருக்கலாம். அடுத்த பதிப்பில் சரிசெய்வாரென நினைக்கிறேன்.

சின்மயிக்கு ஆதரவு தெரிவித்தாரென்பதற்காகவே குஷ்புவுக்கு தனியே மண்டகப்படி நடத்தியிருக்கிறார். குஷ்பு மாதிரி உள்று வாயர்களின் வார்த்தைக்கு அத்தனை முக்கியத்துவம் கொடுத்திருக்க வேண்டியதில்லை. அதை தவிர்த்திருக்கலாம்.

வாசிப்பின் முடிவில் சின்மயி மற்றும் அவரது தாயாரின் மீது நமக்கு யாதொரு பரிதாபமோ அல்லது அனுதாபமோ எழவில்லை என்றாலும் கூட, புத்தகத்தில் சில இடங்களில் சின்மயி மற்றும் அவர் தாயாரின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த சில செய்திகளும் இடம்பெற்றிருக்கிறது. அவற்றையும் தவிர்த்திருக்கலாம்.

பிரச்சினையின் அடியாழம்  என்ன என்பது தெரியாமல்,பாலியல் வக்கிரம், அத்துமீறல்,பெண்ணியம், வெங்காயமென  எகிறிக் குதித்து கருத்துச் சொன்னவர்கள் இந்த புத்தகத்தை வாசித்தால்  குறைந்த பட்சம் மனதுக்குள்ளாவது தங்களுடைய செயலுக்காக வெட்கப் படுவார்கள். அந்த வகையில் மாமல்லன் நிமிர்ந்து நிற்கிறார்.

அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகம் என்றெல்லாம் இதை பரிந்துரைக்க மாட்டேன். அரைவேக்காட்டுத் தனம், அற்பத்தனம் என்றால் என்ன என்பதை ஆதாரங்களுடன் அறிய விரும்புவோர் தவற விடக் கூடாத புத்தகம்.

Tuesday, January 15, 2013

யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன்
பால்நினைத் தூட்டும் தாயினுஞ்சாலப் பரிந்துநீ பாவியே னுடைய
ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி உலப்பிலா ஆனந்த மாய
தேனினைச் சொரிந்து புறம்புறந்திரிந்த செல்வமே சிவபெருமானே
யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவ தினியே.

-மாணிக்க வாசகர் (திருவாசகம்)

 
Monday, January 14, 2013

புத்தகக் கண்காட்சி 2013


தொடர்ச்சியாக பதினேழாவது வருடமாய், இன்று புத்தக கண்காட்சி போய் வந்தேன்.இத்தனை வருடத்தில் பொங்கல் நாளில் புத்தக கண்காட்சிக்குப் போவது இதுதான் முதல் தடவை. ஊரே பொங்கலை பொங்கி டிவி சிறப்பு நிகழ்சிகளில் வழிந்து கொண்டிருக்கும் நேரத்தில், என் போக்கில் நிதானமாய் அரங்கை சுற்றிவிடலாமென்கிற எனது நம்பிக்கை சரியானதாயிருந்தது.சொற்ப மனிதர்களே நடமாடிக் கொண்டிருந்தனர். 

வழக்கமாய் நடக்கும் இடத்தில் மெட்ரோ இரயில் கட்டுமான வேலைகள் நடப்பதால், இந்த முறை கண்காட்சியை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்திற்கு மாற்றியிருக்கிறார்கள். தாழ்வான கூரை அமைப்பு, தரையெங்கும் மேடு பள்ளமாய் பரப்பி வைக்கப் பட்ட பலகைகள், அதன் மீது ஆங்காங்கே பல்லை காட்டிக் கொண்டிருந்த சிவப்பு விரிப்பு என சுமாரான அரங்க அமைப்புதான். வருடாவருடம் பெருங்குறையாகச் சொல்லப்படும் கழிவறை மற்றும் உணவு வளாகம் பக்கம் நான் போகவே இல்லை.  

காயிதே மில்லத் கல்லூரி வளாகத்தில் கண்காட்சி நடந்து கொண்டிருந்த காலந்தொட்டு புத்தக கண்காட்சியில் இடம்பெறும் ஸ்டால்களின் எண்ணிக்கையானது, பெட்ரொல் விலையைப் போல வருடாவருடம் விர்ர்ர்ரென அதிகரித்துக் கொண்டே போகிறது. போகிற போக்கில் சென்னைக்கு மிக அருகில் திண்டிவனம் பக்கத்தில் எவனாவது சாட்டிலைட் டவுன்ஷிப் என ப்ளாட் போடும் இடத்தில் கண்காட்சி நடத்துகிற அளவுக்கு பெரிதாகி விடுமோ என்கிற நினைப்பு வருவதை தவிர்க்க முடியவில்லை.

எத்தனை கடைகள் வந்து என்ன பிரயோசனம்.வருடாவருடம் அதே பொன்னியின் செல்வன், அதே கடல்புறா, டிக்‌ஷனரிகள், சமையல் மற்றும் சோதிட புத்தகங்கள் என் மாற்றமே இல்லாமல் கடைக்குக் கடை வரிசை கட்டி நிற்பது புத்தக கண்காட்சி மீதான ஈர்ப்பையும் ஆர்வத்தையும் குறைத்துக் கொண்டே வருகிறது. கண்காட்சியை நடத்துபவர்கள் ஐந்தாறு வருடங்களுக்கு இந்த மாதிரி புத்தகங்களுக்கு தடை விதித்தால் புண்ணியமாய் போகும். என்னை மிகவும் வெறுப்பேற்றிய சித்தர்கள் பற்றிய புத்தகங்களை இந்த வருடம் அவ்வளவாய் பார்க்க முடியாதது ஆறுதல்.

அத்தனைக்கும் ஆசைப்படும் ஜக்கி வாசுதேவ் மட்டும் ஸ்டால் போட்டிருக்கிறார்.மற்ற கார்ப்பரேட் சாமியார்கள் திருந்திவிட்டார்கள் போலிருக்கிறது. நிறைய இஸ்லாமிய புத்தக பதிப்பகங்களின் ஸ்டால்கள் காணமுடிந்தது. ஒரு கடையில் ஆறே நாளில் அரபி சொல்லித் தரும் புத்தகம் ஒன்றை பார்த்தேன். பெரியார் புத்தகங்கள், இடதுசாரி புத்தகங்கள் உள்ளிடட்ட ஸ்டால்களில் அத்தனை கூட்டமில்லை.

குழந்தைகளுக்கென நிறைய கடைகள் ஒதுக்கியிருக்கிறார்கள். எல்லா கடை வாசலிலும் பிள்ளை பிடிக்கிறவர்கள் போல ஆட்கள் நின்று கொண்டு, சின்னப் பிள்ளைகளோடு வரும் பெற்றோர்களை கையைப் பிடித்து இழுக்காத குறையாய் தங்கள் கடைகளுக்குள் வலுக்கட்டாயமாய் கடத்திக் கொண்டு போய், தங்களின் சரக்குகளைக் காட்டி வியாபாரம் செய்யும் மிரட்டலான வணிக உத்தியை பார்க்க முடிந்தது. நல்லவேளை வாரிசுகள் என் உயரத்தை நெருங்கி விட்டிருந்தபடியால் பிழைத்தேன்.

கடந்த சில வருடங்களாய் மாய்ந்து மாய்ந்து புத்தகங்கள் வாங்குவதிலும், வாசிப்பதிலும் ஏனோ ஆர்வம் குறைந்திருக்கிறது. அதனால் பேருக்கு நாலைந்து புத்தகங்கள் வாங்கி, அதை வருடம் முழுக்க துண்டு துண்டாய் வாசிப்பதில் திருப்தியாகி விடுகிறேன். இந்த வருடம் ஒரேயொரு புத்தகம் மட்டுமே வாங்க வேண்டுமென தீர்மானித்திருந்தேன். அது சின்மயி விவகாரம் பற்றிய மாமல்லனின் புத்தகம். ஆனால் ஐந்து புத்தகங்கள் வாங்கினேன்.

சின்மயி விவகாரம், மறுபக்கத்தின் குரல் - விமலாதித்த மாமல்லன். 

ஒரு லோட்டா ரத்தம் - பேயோன். 

பாம்புத் தைலம் - பேயோன். 

குமரிக் கண்டமா சுமேரியமா?, தமிழரின் தோற்றமும் பரவலும் - பா.பிரபாகரன். 

காவல்கோட்டம் - வெங்கடேசன்.....

பத்து வரிசைகளாய் ஸ்டால்கள் இருப்பதனால் நிறைய நடக்க வேண்டியிருக்கும். வயதானவர்கள், குழந்தைகள் நடக்க சிரமப் படுவார்கள். காலாற நடக்க முடிகிறவர்கள் போய் வேடிக்கை பார்த்துவிட்டு வரலாம். மற்றபடி சொல்லிக்கொள்ளும்படி எதுவுமில்லை.

ஆங்! முக்கியமான ஒன்றை மறந்துவிட்டேன். லிச்சி ஜூஸ் குடித்தேனாக்கும்.Wednesday, January 9, 2013

கோர்ட் அப்டேட்!

வருடத்தின் முதல் ஒன்பது நாட்களில், மூன்று நாளின் பகற்பொழுதுகள் நீதிமன்ற வளாகத்தில் கழிந்திருக்கிறது. எட்டு வருடத்திற்கு முன்னால் நீதி கேட்டு படியேறியவனின் குரலை நீதிதேவதை இப்போதுதான் கேட்க ஆரம்பித்திருக்கிறார். நிஜமாகவே நீதிதேவதைதான்....பெண் நீதிபதி.

விரைவில் நீதி கிடைத்து விடுமோ, என்கிற நினைப்பு துளிர்விட ஆரம்பித்திருக்கிறது.

Sunday, January 6, 2013

சபரிமலை அய்யப்பன் யார்!

சாத்தனார் \ அய்யனார்
சாத்தன், அல்லது சாத்தனார் என்னும் பெயர் சாஸ்தா என்னும் வடமொழிப் பெயரின் திரிபு.  சாஸ்தா என்பது புத்தருக்குரிய பெயர்களுள் ஒன்று என்பது அமரகோசம் நாமலிங்கானுசாசனம் முதலிய வடமொழி நிகண்டுகளால் அறியப்படும்.  எனவே, சாஸ்தா என்னும் சொல்லின் திரிபாகிய சாத்தன் என்னும் பெயர் புத்தரைக் குறிக்கும் பெயராகப் பண்டைக் காலத்தில் வழங்கப்பட்டு வந்தது.  இந்தப் பெயரைப் பௌத்த மதத்தினர் பெரும்பான்மையும் தத்தம் சிறுவருக்குச் சூட்டினர்.  பண்டைக் காலத்தில், அதாவது கடைச்சங்க காலத்தில், தமிழ்நாட்டிலிருந்த பௌத்தர்கள் சாத்தன் என்னும் பெயரைப் பெரும்பாலும் மேற்கொண்டிருந்தனர் என்பது சங்க நூல்களினின்றும் தெரிய வருகின்றது.  பௌத்த நூலாகிய மணிமேகலையை இயற்றியவர் பௌத்த மதத்தினர் என்பதும், அவரது பெயர் சாத்தனார் என்பதும் ஈண்டுக் கருதத்தக்கது.  கோவலன் என்னும் சிலப்பதிகாரக் கதைத் தலைவனுடைய தந்தை மாசாத்துவன் என்னும் பௌத்தன் என்பதும், கோவலன் கொலையுண்டபின், மாசாத்துவன் பௌத்த பிக்ஷூவாகித் துறவுபூண்டான் என்பதும் ஈண்டு நோக்கற்பாலன.  மற்றும், பெருந்தலைச் சாத்தனார், மோசி சாத்தனார், வடமவண்ணக்கன் பெருஞ்சாத்தனார், ஒக்கூர்மா சாத்தனார், கருவூர்க் கந்தப்பிள்ளை சாத்தனார் முதலான சங்க காலத்துப் புலவர்களும் பௌத்தர்களாக இருந்திருக்கக்கூடும் என்று, அவர்கள் கொண்டிருந்த சாத்தன் என்னும் பெயரைக்கொண்டு கருதலாகும்.
கொங்கண நாடாகிய துளுவதேசத்தில் உள்ள சில கோயில்களுக்குச் சாஸ்தாவு குடி என்றும், சாஸ்தாவேஸ்வரம் என்றும், சாஸ்தாவு கள என்றும் பெயர்கள் வழங்கப்படுகின்றன என்றும், இவையாவும் பண்டைக்காலத்தில் பௌத்தக் கோயில்களாக இருந்தன என்றும், பௌத்த மதம் அழிவுண்ட பின்னர் இந்தக் கோயில்கள் இந்துமதக் கோயில்களாக மாற்றப்பட்டன என்றும் கூறப்படுகின்றது இதனை உறுதிப்படுத்துகின்றது.  இப்பொழுதும் மலையாள நாட்டில் சாஸ்தா கோயில்கள் உண்டு.  இவற்றிற்குச் சாத்தன் காவுகள் என்று பெயர்.  (காவு=கா=தோட்டம், அல்லது பூஞ்சோலை என்பது பொருள்). பண்டைக் காலத்தில் தமிழ்நாட்டிலிருந்த பௌத்தக் கோயில்கள் பூஞ்சோலைகளின் நடுவில் அமைக்கப்பட்டிருந்ததாகப் பண்டை நூல்களினால் தெரிகின்றது.  இவற்றிற்கு ஆராமம் (பூந்தோட்டம்) என்று பெயர் வழங்கிவந்தன.  மலையாள நாட்டிலுள்ள சாத்தன் காவுகளும் பண்டைக் காலத்தில் பௌத்தக் கோயில்களாக இருந்து, இப்போது இந்துமதக் கோயில்களாக மாற்றப்பட்டவை என்பது ஆராய்ச்சிவல்லோர் கருத்து.  சாத்தனாருக்கு அய்யப்பன் என்னும் பெயரும் மலையாள தேசத்தில் வழங்கி வருகின்றது.
காவிரிப்பூம்பட்டினத்திலும் சாத்தன் கோயில் இருந்ததாகச் சிலப்பதிகாரத்தினால் தெரிகின்றது.  சாஸ்தா, அல்லது சாத்தன்என்னும் வட சொல்லிற்கு நேரான தமிழ்ச்சொல் அய்யன், அல்லது அய்யனார் என்பது.  அய்யன் என்பதற்கு உயர்ந்தோன், குரு, ஆசான் என்பன பொருள்.  பௌத்தமதம் அழிந்த பின்னர், அம்மதக் கொள்கைகளையும் தெய்வங்களையும் இந்து மதம் ஏற்றுக்கொண்டபோது, வெவ்வேறு கதைகள் கற்பிக்கப்பட்டன.  வைணவர் புத்தரைத் திருமாலின் ஓர் அவதாரமாகவே வெளிப்படையாக ஒப்புக்கொண்டனர்.  சைவ சமயத்தோர், புத்தராகிய சாத்தனாரைத் திருமாலுக்கும் சிவபெருமானுக்கும் பிறந்த பிள்ளையாகக் கற்பித்து, சாத்தனாரைத் தமது தெய்வக்குழாங்களில் ஒருவராகச் சேர்த்துக் கொண்டனர்.  அப்பர் சுவாமிகளும் தமது தேவாரத்தில் சாத்தனாரைச் சிவபெருமானின் பிள்ளை என்றே கூறியிருக்கின்றார்.
பார்த்தனுக் கருளும்வைத்தார் பாம்பரை யாடவைத்தார்
சாத்தனை மகனா வைத்தார் சாமுண்டி சாமவேதங்
கூத்தொடும் பாடவைத்தார் கோளராமதிய நல்ல
தீர்த்தமுஞ் சடைமேல் வைத்தார் திருப்பயற்றூரனாரே
என வரும் தேவாரத்தினாலே இதனை அறியலாம்.
பிற்காலத்தில், சாத்தனார், அய்யனார், அரிஹரபுத்திரர் என்னும் இத்தெய்வத்தைக் கிராம தெய்வமாகச் செய்து, பண்டைப் பெருமையைக் குலைத்துவிட்டனர்.
சாத்தன், அல்லது சாஸ்தா என்று புத்தருக்குப் பெயர் கொடுக்கப்பட்டதன் காரணம் என்னவென்றால், அவர் எல்லாச் சாஸ்திரங்களையும் கற்றவர் என்னும் கருத்துப்பற்றி என்க.  சிலப்பதிகாரம், கனாத்திற முரைத்த காதையில், பாசண்டச் சாத்தற்குப் பாடுகிடந்தாளுக்கு எனவரும் அடியில், பாசண்டச் சாத்தன் என்னும் சொல்லுக்கு அடியார்க்கு நல்லார் எழுதும் உரை வருமாறு:  பாசண்டம் தொண்ணுற்றறு வகைச் சமய சாத்திரத் தருக்கக் கோவை.  இவற்றிற்கு முதலாயுள்ள  சாத்திரங்களைப் பயின்ற வனாதலின், மகாசாத்திர னென்பது அவனுக்குப் பெயராயிற்று. இவர் கூறும் உரைக்கேற்பவே பௌத்தர்களும், புத்தர் பல நூல்களைக் கற்றவர் என்று கூறுவர்.  இதனை வற்புறுத்தியே, சூடாமணி நிகண்டும்,
அண்ணலே மாயாதேவிசுதன் அகளங்க மூர்த்தி நண்ணியகலைகட் கெல்லாம்நாதன் முக்குற்ற மில்லோன் என்று கூறுகின்றது.  அருங்கலை நாயகன் என்று திவாகரம் கூறுகின்றது.  நாகைப்பட்டினத்தில் கண்டெடுக்கப்பட்ட புத்தர் உருவச்சிலையொன்றன் பீடத்தில், ஸ்வஸ்தி ஸ்ரீ ஆகம பண்டிதர் உய்யக்கொண்ட நாயகர் என்று எழுதியிருப்பது (படம் அ) காண்க.  புத்தர் சகல சாஸ்திரங்களையும் கற்று வல்லவர் என்பதும், அதுபற்றியே அவருக்குச் சாஸ்தா, அல்லது மகா சாஸ்தா என்னும் பெயருண்டென்பதும் அறியப்படும்.  லலிதாவிஸ்தார என்னும் பௌத்த நூலிலும் புத்தர் பல கலைகளைக் கற்றவர் என்று கூறப்பட்டுள்ளதென்று கூறுவர்.  இன்னுமொரு கண்கூடான சான்று யாதெனில், காஞ்சீபுரத்திலுள்ள காமாட்சியம்மன் கோயிலின் உட்பிராகாரத்தில் இருந்த புத்தர் உருவச் சிலைக்குச் சாஸ்தா என்னும் பெயர் உள்ளதுதான்.  (படம் ஆ காண்க.) இச்சாஸ்தாவைப்பற்றிக் காமாட்சிலீலாப் பிரபாவம் என்னும் காமாக்ஷி விலாசத்தில், காமக்கோட்டப் பிரபாவத்தில், தேவியின் (காமாட்சி தேவியின்) தன்யபானஞ் செய்து (முலைப்பால் அருந்தி) சுப்பிரமணியரைப் போலான சாஸ்தா ஆலயம் காமாட்சியம்மன் கோயிலில் இருக்கிறதாகக் கூறப்பட்டுள்ளது.* சாஸ்தா என்பவரும் புத்தர் என்பவரும் ஒருவரே என்பதற்கு இதுவே போதுமான ஆதாரம்.  இன்னும் சில ஆதாரங்கள் உண்டு.  அவை விரிவஞ்சி விடப்பட்டன.
சாஸ்தா என்னும் புத்தருடைய கோயில்களை அய்யனார் கோயில்கள் என்றும், சாதவாகனன் கோயில்கள் என்றும் சொல்லி, பிற்காலத்து இந்துக்கள் நாளடைவில் அவற்றைக் கிராமதேவதையின் கோயில்களாக்கிப் பெருமை குன்றச் செய்துவிட்டது போலவே, ஏனைய சில புத்தப் பெயர்களுக்கும் வேறு பொருளும் கதையும் கற்பித்து அவற்றையும் மதிப்பிழக்கச் செய்துவிட்டதாகத் தெரிகின்றது.  சில இடங்களில் புத்தரை முனீஸ்வரன் ஆக்கிவிட்டனர்.  தென்னாட்டில், தலைவெட்டி முனீஸ்வரன் கோயில் என ஒன்று உண்டென்றும், அக்கோயிலில் உள்ள உருவம் புத்தரின் உருவம் போன்றுள்ளதென்றும் சொல்லப்படுகின்றது.  இப்பொழுது காணப்படும் தருமராஜா கோயில்கள் என்பனவும் பண்டொருகாலத்தில் பௌத்தக் கோயில்களாயிருந்திருக்க வேண்டும் என்று தோன்றுகின்றது.  தருமன், அல்லது தருமராசன் என்பதும் புத்தருக்குரிய பெயர்களில் ஒன்று, பிங்கல நிகண்டில் தருமன் என்றும், திவாகரத்திலும் நாமலிங்கானுசாசனத்திலும் தர்மராஜன் என்றும் புத்தருக்கு வேறு பெயர் கூறப்பட்டுள்ளது.  இது தமிழ் நிகண்டுகளினாலும் அறியப்படும்.  இந்தத் தருமராஜா கோயில்களான பௌத்தக் கோயில்கள், இந்துமதம் செல்வாக்குப் பெற்ற காலத்தில், பஞ்சபாண்டவரில் ஒருவரான தருமராஜா கோயிலாகக் கற்பிக்கப்பட்டுப் பலராலும் நம்பப்பட்டன.  தருமராஜா கோயில்களில், பௌத்தர் போற்றும் போதி என்னும் அரசமரங்கள் இன்றைக்கும் காணப்படுவதே, தருமராஜா கோயில்கள் பண்டைக் காலத்தில் பௌத்தக் கோயில்கள் என்பதை விளக்கும்.  சமீபகாலம் வரையில் பௌத்தமதம் நிலைபெற்றிருந்த வங்காளத்திலே, இப்பொழுதும் சில பௌத்தக் கோயில்களுண்டென்றும், அக்கோயில்களில் உள்ள புத்தவிக்கிரகங்களுக்குத் தருமராஜா, அல்லது தருமதாகூர் என்று பெயர் வழங்கப்படுகின்றதென்றும் அறிகின்றோம்.  எனவே, தமிழ்நாட்டிலுள்ள இப்போதைய தருமராஜா கோயில்கள் பண்டைக்காலத்தில் பௌத்தக் கோயில்களாயிருந்திருக்கவேண்டும் என்று கருதப்படும்.
இவ்வாறே, தாராதேவி, மங்கலாதேவி, சிந்தாதேவி முதலான பௌத்தத் தெய்வங்களின் கோயில்களும், பிற்காலத்தில் இந்துக்களால் பகவதி கோயில்களாகவும் கிராமதேவதை கோயில்களான அம்மன் கோயில்களாகவும் மாற்றப்பட்டனவாகத் தெரிகின்றன.  தாராதேவி கோயில் திரௌபதையம்மன் கோயிலென இப்பொழுது வழங்கப்படுகின்றது.  தருமராஜா என்னும் பெயருள்ள புத்தர் கோயில், பிற்காலத்தில், பாண்டவரைச் சேர்ந்த தருமராஜா கோயிலாக்கப்பட்டது போல, தாராதேவி என்னும் பௌத்த அம்மன் கோயில், தருமரா-ஜாவின் மனைவியாகிய திரௌபதையின் கோயிலாக்கப் பட்டதுபோலும்.
சுருக்கமாகச் சொல்லுவதென்றால், இப்போது திருமால் கோயில்கள் அவ்வவ்விடங்களில் வரதராசர் கோயில், திருவரங்கர் கோயில், வேங்கடேசர் கோயில் முதலிய வெவ்வேறு பெயர்களுடனும், சிவபெருமான் கோயில்கள் கபாலீஸ்வரர் கோயில், தியாகராசர் கோயில், சொக்கலிங்கர் கோயில் முதலான வெவ்வேறு பெயர்களுடனும் வழங்கப்படுவது போலவே, பண்டைக்காலத்தில், பௌத்தக் கோயில்களும் புத்தருடைய பல பெயர்களில் ஒவ்வொன்றன் பெயரால் தருமராசா கோயில், சாத்தனார் கோயில், முனீஸ்வரர் கோயில் என்பன போன்ற பெயர்களுடன் வழங்கப்பட்டுவந்தன என்றும், பிற்காலத்தில், இந்துமதம் செல்வாக்குப் பெற்றபோது, அவை இந்துமதக் கோயிலாகச் செய்யப்பட்டு, இந்துமதத் தொடர்பான கதைகளுடன் இணைக்கப்பட்டு, பின்னும் நாளடைவில் அவை கிராம தேவதை கோயில்கள் என்னும் நிலையில் தாழ்ந்த நிலைக்குக் கொண்டுவரப்பட்டனவென்றும் தோன்றுகின்றது.
(மயிலை சீனி. வேங்கடசாமி எழுதிய "பௌத்தமும் தமிழும்" நூலிலிருந்து).


இது தொடர்பில் ஏற்கனவே 2006ல் நானெழுதிய சர்ச்சைகளும், சபரிமலை ஐயப்பனும்!