Monday, January 28, 2013

தை ஒன்றே தமிழ்புத்தாண்டு - இலக்கிய ஆதாரத் தொகுப்பு

பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் என்பவர், தை முதல் நாளே தமிழர் புத்தாண்டு என்பதை வலியுறுத்தும் சங்கத் தமிழ் பாடல் வரிகளையும், அது தொடர்பான ஓவியங்களையும் பதிப்பித்து இணையத்தில் பகிர்ந்திருக்கிறார். 

இது தொடர்பில் எனது பழைய கட்டுரையை இங்கே வாசிக்கலாம். தை ஒன்றே!, தமிழரின் புத்தாண்டு!

Wednesday, January 23, 2013

சின்மயி விவகாரமும்....மாமல்லனும்!இந்த புத்தகம் பற்றி கடந்த வாரமே எழுதியிருக்க வேண்டியது. திணறத் திணற வேலைகள்.

பாடகி, நிகழ்ச்சித் தொகுப்பாளர், டப்பிங் ஆர்ட்டிஸ்ட், மொழி பெயர்ப்பு நிறுவனம் நடத்துகிறவர், இணையவெளியில் லட்சம் பேர் பின் தொடர  பரபரப்பாய் இயங்கும் ட்விட்டர் என பல்வேறு அடையாளங்களை சுமக்க மாட்டாமல் சுமந்து திரியும் பிரபலம் சின்மயி ஸ்ரீபாதா.

இணையத்தில் சிலர் தன்னை ஆபாசமாய் மிரட்டுவதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சமீபத்தில் சைபர்க்ரைம் அலுவலகத்தில் புகார் ஒன்றை சின்மயி கொடுத்தார். புகாரை சிரமேற்கொண்ட காவல்துறையும்  இருவரை கைது செய்து ஊடகங்களில் படங்காட்டியதன் பின்னனியில், “குற்றம்!, நடந்தது என்ன?” என்பதை அலசும் புத்தகம்தான் மாமல்லன் எழுதிய  “சின்மயி விவகாரம், மறுபக்கத்தின் குரல்”

இந்த புத்தகத்தின் ஆசிரியரான விமலாதித்த மாமல்லன், தமிழின் தவிர்க்க முடியாத எழுத்தாளுமையாய் வந்திருக்க வேண்டியவர், ஏதோ காரணங்களினால் வனவாசம் போனவர், சமீபத்தில்தான் மீண்டும் களமிறங்கியிருக்கிறார். வம்புச் சண்டைக்குப் போவதில்லை, அதே நேரத்தில் வந்த சண்டையை விடுவதில்லை என்கிற கொள்கை வீரர், பிரச்சினை என வந்துவிட்டால் கடைசி வரையில் இரண்டில் ஒன்று பார்த்துவிடும் முரட்டு எழுத்தாளுமை.

முகமற்றவர்களின் முகமாகவும் ,குரலற்றவர்களின், குரலாகவும் ஆன்மா மறுக்கப்பட்டவர்களின் ஆன்மாவாகவும் செயல்படுபவனே எழுத்தாளன்.....என்று துவங்கும்  இந்தப் புத்தகத்தின் நெடுகில்  பாடகி சின்மயி கொடுத்த புகாரின் ஒவ்வொரு கூறின் பின்புலத்தையும், அதன் விளைவுகளையும் அங்குலம் அங்குலமாய் ஆதாரங்களுடன் அலசி, சின்மயி என்கிற பாடகியின் மறுபக்கம் அல்லது வேறெதையோ பளிச்சென வெளிச்சம் போட்டுக் காட்டுவதில் மாமல்லன் வெற்றி பெற்றிருக்கிறார்.

இந்த விவகாரத்தை ஆரம்பம் முதல் தொடர்ந்து கவனித்தவன் என்கிற வகையில் மாமல்லன் தன் நூலில் எதையும் திரித்தோ, மிகைப் படுத்தியோ கூறிடவில்லை என்பது மகிழ்வையும், அவர் மீதொரு மரியாதையையும் ஏற்படுத்தியது. யாருக்கோ நடந்த அநீதி என்று கடந்து போய்விடாமல் இரவு பகலாய் ஆதாரங்களை திரட்டி, அது தொடர்பான் குறிப்புகளையும் தேடி எடுத்து, அவற்றை வரிசைப் படுத்திய மாமல்லனின் உழைப்பு அசாத்தியமானது என்றால் மிகையில்லை.

அந்த வகையில் இந்த வழக்கில் சின்மயி தரப்பு வாதங்களை  நீதிமன்றத்தில் பொடிப்பொடியாக்கிட இந்த புத்தகத்தில் இருக்கும் சான்றாவனங்களே போதுமானது என நினைக்கிறேன்.

நிறைகளே சொல்லிக் கொண்டிருந்தால் எப்படி!, இனி சில குறைகளையும் பட்டியலிட விரும்புகிறேன்.

சிறிய எழுத்துருக்கள் வாசிப்பின் வேகத்தை தடை செய்வதுடன், சோர்வையும் உண்டாக்குகிறது. பக்கங்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டி அப்படி செய்திருக்கலாமென நினைக்கிறேன்.

சான்றாவனங்கள் என நிறைய்ய்ய்ய்ய்ய ஸ்க்ரீன்ஷாட்டுகளை கொடுத்திருக்கிறார். புதியவர்களுக்கு அந்த ஸ்க்ரீன் ஷாட்டில் என்ன இருக்கிறது என்பதை புரிந்து கொள்வதில் நிறையவே சிரமம் ஏற்படும். அவற்றை வாசித்து அறியும் படி படங்களை பளிச்சென பிரிண்ட் செய்திருக்கலாம்.புத்தக காட்சியை மனதில் கொண்டு அவசர கதியில் தயாரிக்கப் பட்டதால் இந்த குறைகள் ஏற்பட்டிருக்கலாம். அடுத்த பதிப்பில் சரிசெய்வாரென நினைக்கிறேன்.

சின்மயிக்கு ஆதரவு தெரிவித்தாரென்பதற்காகவே குஷ்புவுக்கு தனியே மண்டகப்படி நடத்தியிருக்கிறார். குஷ்பு மாதிரி உள்று வாயர்களின் வார்த்தைக்கு அத்தனை முக்கியத்துவம் கொடுத்திருக்க வேண்டியதில்லை. அதை தவிர்த்திருக்கலாம்.

வாசிப்பின் முடிவில் சின்மயி மற்றும் அவரது தாயாரின் மீது நமக்கு யாதொரு பரிதாபமோ அல்லது அனுதாபமோ எழவில்லை என்றாலும் கூட, புத்தகத்தில் சில இடங்களில் சின்மயி மற்றும் அவர் தாயாரின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த சில செய்திகளும் இடம்பெற்றிருக்கிறது. அவற்றையும் தவிர்த்திருக்கலாம்.

பிரச்சினையின் அடியாழம்  என்ன என்பது தெரியாமல்,பாலியல் வக்கிரம், அத்துமீறல்,பெண்ணியம், வெங்காயமென  எகிறிக் குதித்து கருத்துச் சொன்னவர்கள் இந்த புத்தகத்தை வாசித்தால்  குறைந்த பட்சம் மனதுக்குள்ளாவது தங்களுடைய செயலுக்காக வெட்கப் படுவார்கள். அந்த வகையில் மாமல்லன் நிமிர்ந்து நிற்கிறார்.

அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகம் என்றெல்லாம் இதை பரிந்துரைக்க மாட்டேன். அரைவேக்காட்டுத் தனம், அற்பத்தனம் என்றால் என்ன என்பதை ஆதாரங்களுடன் அறிய விரும்புவோர் தவற விடக் கூடாத புத்தகம்.

Tuesday, January 15, 2013

யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன்
பால்நினைத் தூட்டும் தாயினுஞ்சாலப் பரிந்துநீ பாவியே னுடைய
ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி உலப்பிலா ஆனந்த மாய
தேனினைச் சொரிந்து புறம்புறந்திரிந்த செல்வமே சிவபெருமானே
யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவ தினியே.

-மாணிக்க வாசகர் (திருவாசகம்)

 
Monday, January 14, 2013

புத்தகக் கண்காட்சி 2013


தொடர்ச்சியாக பதினேழாவது வருடமாய், இன்று புத்தக கண்காட்சி போய் வந்தேன்.இத்தனை வருடத்தில் பொங்கல் நாளில் புத்தக கண்காட்சிக்குப் போவது இதுதான் முதல் தடவை. ஊரே பொங்கலை பொங்கி டிவி சிறப்பு நிகழ்சிகளில் வழிந்து கொண்டிருக்கும் நேரத்தில், என் போக்கில் நிதானமாய் அரங்கை சுற்றிவிடலாமென்கிற எனது நம்பிக்கை சரியானதாயிருந்தது.சொற்ப மனிதர்களே நடமாடிக் கொண்டிருந்தனர். 

வழக்கமாய் நடக்கும் இடத்தில் மெட்ரோ இரயில் கட்டுமான வேலைகள் நடப்பதால், இந்த முறை கண்காட்சியை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்திற்கு மாற்றியிருக்கிறார்கள். தாழ்வான கூரை அமைப்பு, தரையெங்கும் மேடு பள்ளமாய் பரப்பி வைக்கப் பட்ட பலகைகள், அதன் மீது ஆங்காங்கே பல்லை காட்டிக் கொண்டிருந்த சிவப்பு விரிப்பு என சுமாரான அரங்க அமைப்புதான். வருடாவருடம் பெருங்குறையாகச் சொல்லப்படும் கழிவறை மற்றும் உணவு வளாகம் பக்கம் நான் போகவே இல்லை.  

காயிதே மில்லத் கல்லூரி வளாகத்தில் கண்காட்சி நடந்து கொண்டிருந்த காலந்தொட்டு புத்தக கண்காட்சியில் இடம்பெறும் ஸ்டால்களின் எண்ணிக்கையானது, பெட்ரொல் விலையைப் போல வருடாவருடம் விர்ர்ர்ரென அதிகரித்துக் கொண்டே போகிறது. போகிற போக்கில் சென்னைக்கு மிக அருகில் திண்டிவனம் பக்கத்தில் எவனாவது சாட்டிலைட் டவுன்ஷிப் என ப்ளாட் போடும் இடத்தில் கண்காட்சி நடத்துகிற அளவுக்கு பெரிதாகி விடுமோ என்கிற நினைப்பு வருவதை தவிர்க்க முடியவில்லை.

எத்தனை கடைகள் வந்து என்ன பிரயோசனம்.வருடாவருடம் அதே பொன்னியின் செல்வன், அதே கடல்புறா, டிக்‌ஷனரிகள், சமையல் மற்றும் சோதிட புத்தகங்கள் என் மாற்றமே இல்லாமல் கடைக்குக் கடை வரிசை கட்டி நிற்பது புத்தக கண்காட்சி மீதான ஈர்ப்பையும் ஆர்வத்தையும் குறைத்துக் கொண்டே வருகிறது. கண்காட்சியை நடத்துபவர்கள் ஐந்தாறு வருடங்களுக்கு இந்த மாதிரி புத்தகங்களுக்கு தடை விதித்தால் புண்ணியமாய் போகும். என்னை மிகவும் வெறுப்பேற்றிய சித்தர்கள் பற்றிய புத்தகங்களை இந்த வருடம் அவ்வளவாய் பார்க்க முடியாதது ஆறுதல்.

அத்தனைக்கும் ஆசைப்படும் ஜக்கி வாசுதேவ் மட்டும் ஸ்டால் போட்டிருக்கிறார்.மற்ற கார்ப்பரேட் சாமியார்கள் திருந்திவிட்டார்கள் போலிருக்கிறது. நிறைய இஸ்லாமிய புத்தக பதிப்பகங்களின் ஸ்டால்கள் காணமுடிந்தது. ஒரு கடையில் ஆறே நாளில் அரபி சொல்லித் தரும் புத்தகம் ஒன்றை பார்த்தேன். பெரியார் புத்தகங்கள், இடதுசாரி புத்தகங்கள் உள்ளிடட்ட ஸ்டால்களில் அத்தனை கூட்டமில்லை.

குழந்தைகளுக்கென நிறைய கடைகள் ஒதுக்கியிருக்கிறார்கள். எல்லா கடை வாசலிலும் பிள்ளை பிடிக்கிறவர்கள் போல ஆட்கள் நின்று கொண்டு, சின்னப் பிள்ளைகளோடு வரும் பெற்றோர்களை கையைப் பிடித்து இழுக்காத குறையாய் தங்கள் கடைகளுக்குள் வலுக்கட்டாயமாய் கடத்திக் கொண்டு போய், தங்களின் சரக்குகளைக் காட்டி வியாபாரம் செய்யும் மிரட்டலான வணிக உத்தியை பார்க்க முடிந்தது. நல்லவேளை வாரிசுகள் என் உயரத்தை நெருங்கி விட்டிருந்தபடியால் பிழைத்தேன்.

கடந்த சில வருடங்களாய் மாய்ந்து மாய்ந்து புத்தகங்கள் வாங்குவதிலும், வாசிப்பதிலும் ஏனோ ஆர்வம் குறைந்திருக்கிறது. அதனால் பேருக்கு நாலைந்து புத்தகங்கள் வாங்கி, அதை வருடம் முழுக்க துண்டு துண்டாய் வாசிப்பதில் திருப்தியாகி விடுகிறேன். இந்த வருடம் ஒரேயொரு புத்தகம் மட்டுமே வாங்க வேண்டுமென தீர்மானித்திருந்தேன். அது சின்மயி விவகாரம் பற்றிய மாமல்லனின் புத்தகம். ஆனால் ஐந்து புத்தகங்கள் வாங்கினேன்.

சின்மயி விவகாரம், மறுபக்கத்தின் குரல் - விமலாதித்த மாமல்லன். 

ஒரு லோட்டா ரத்தம் - பேயோன். 

பாம்புத் தைலம் - பேயோன். 

குமரிக் கண்டமா சுமேரியமா?, தமிழரின் தோற்றமும் பரவலும் - பா.பிரபாகரன். 

காவல்கோட்டம் - வெங்கடேசன்.....

பத்து வரிசைகளாய் ஸ்டால்கள் இருப்பதனால் நிறைய நடக்க வேண்டியிருக்கும். வயதானவர்கள், குழந்தைகள் நடக்க சிரமப் படுவார்கள். காலாற நடக்க முடிகிறவர்கள் போய் வேடிக்கை பார்த்துவிட்டு வரலாம். மற்றபடி சொல்லிக்கொள்ளும்படி எதுவுமில்லை.

ஆங்! முக்கியமான ஒன்றை மறந்துவிட்டேன். லிச்சி ஜூஸ் குடித்தேனாக்கும்.Wednesday, January 9, 2013

கோர்ட் அப்டேட்!

வருடத்தின் முதல் ஒன்பது நாட்களில், மூன்று நாளின் பகற்பொழுதுகள் நீதிமன்ற வளாகத்தில் கழிந்திருக்கிறது. எட்டு வருடத்திற்கு முன்னால் நீதி கேட்டு படியேறியவனின் குரலை நீதிதேவதை இப்போதுதான் கேட்க ஆரம்பித்திருக்கிறார். நிஜமாகவே நீதிதேவதைதான்....பெண் நீதிபதி.

விரைவில் நீதி கிடைத்து விடுமோ, என்கிற நினைப்பு துளிர்விட ஆரம்பித்திருக்கிறது.

Sunday, January 6, 2013

சபரிமலை அய்யப்பன் யார்!

சாத்தனார் \ அய்யனார்
சாத்தன், அல்லது சாத்தனார் என்னும் பெயர் சாஸ்தா என்னும் வடமொழிப் பெயரின் திரிபு.  சாஸ்தா என்பது புத்தருக்குரிய பெயர்களுள் ஒன்று என்பது அமரகோசம் நாமலிங்கானுசாசனம் முதலிய வடமொழி நிகண்டுகளால் அறியப்படும்.  எனவே, சாஸ்தா என்னும் சொல்லின் திரிபாகிய சாத்தன் என்னும் பெயர் புத்தரைக் குறிக்கும் பெயராகப் பண்டைக் காலத்தில் வழங்கப்பட்டு வந்தது.  இந்தப் பெயரைப் பௌத்த மதத்தினர் பெரும்பான்மையும் தத்தம் சிறுவருக்குச் சூட்டினர்.  பண்டைக் காலத்தில், அதாவது கடைச்சங்க காலத்தில், தமிழ்நாட்டிலிருந்த பௌத்தர்கள் சாத்தன் என்னும் பெயரைப் பெரும்பாலும் மேற்கொண்டிருந்தனர் என்பது சங்க நூல்களினின்றும் தெரிய வருகின்றது.  பௌத்த நூலாகிய மணிமேகலையை இயற்றியவர் பௌத்த மதத்தினர் என்பதும், அவரது பெயர் சாத்தனார் என்பதும் ஈண்டுக் கருதத்தக்கது.  கோவலன் என்னும் சிலப்பதிகாரக் கதைத் தலைவனுடைய தந்தை மாசாத்துவன் என்னும் பௌத்தன் என்பதும், கோவலன் கொலையுண்டபின், மாசாத்துவன் பௌத்த பிக்ஷூவாகித் துறவுபூண்டான் என்பதும் ஈண்டு நோக்கற்பாலன.  மற்றும், பெருந்தலைச் சாத்தனார், மோசி சாத்தனார், வடமவண்ணக்கன் பெருஞ்சாத்தனார், ஒக்கூர்மா சாத்தனார், கருவூர்க் கந்தப்பிள்ளை சாத்தனார் முதலான சங்க காலத்துப் புலவர்களும் பௌத்தர்களாக இருந்திருக்கக்கூடும் என்று, அவர்கள் கொண்டிருந்த சாத்தன் என்னும் பெயரைக்கொண்டு கருதலாகும்.
கொங்கண நாடாகிய துளுவதேசத்தில் உள்ள சில கோயில்களுக்குச் சாஸ்தாவு குடி என்றும், சாஸ்தாவேஸ்வரம் என்றும், சாஸ்தாவு கள என்றும் பெயர்கள் வழங்கப்படுகின்றன என்றும், இவையாவும் பண்டைக்காலத்தில் பௌத்தக் கோயில்களாக இருந்தன என்றும், பௌத்த மதம் அழிவுண்ட பின்னர் இந்தக் கோயில்கள் இந்துமதக் கோயில்களாக மாற்றப்பட்டன என்றும் கூறப்படுகின்றது இதனை உறுதிப்படுத்துகின்றது.  இப்பொழுதும் மலையாள நாட்டில் சாஸ்தா கோயில்கள் உண்டு.  இவற்றிற்குச் சாத்தன் காவுகள் என்று பெயர்.  (காவு=கா=தோட்டம், அல்லது பூஞ்சோலை என்பது பொருள்). பண்டைக் காலத்தில் தமிழ்நாட்டிலிருந்த பௌத்தக் கோயில்கள் பூஞ்சோலைகளின் நடுவில் அமைக்கப்பட்டிருந்ததாகப் பண்டை நூல்களினால் தெரிகின்றது.  இவற்றிற்கு ஆராமம் (பூந்தோட்டம்) என்று பெயர் வழங்கிவந்தன.  மலையாள நாட்டிலுள்ள சாத்தன் காவுகளும் பண்டைக் காலத்தில் பௌத்தக் கோயில்களாக இருந்து, இப்போது இந்துமதக் கோயில்களாக மாற்றப்பட்டவை என்பது ஆராய்ச்சிவல்லோர் கருத்து.  சாத்தனாருக்கு அய்யப்பன் என்னும் பெயரும் மலையாள தேசத்தில் வழங்கி வருகின்றது.
காவிரிப்பூம்பட்டினத்திலும் சாத்தன் கோயில் இருந்ததாகச் சிலப்பதிகாரத்தினால் தெரிகின்றது.  சாஸ்தா, அல்லது சாத்தன்என்னும் வட சொல்லிற்கு நேரான தமிழ்ச்சொல் அய்யன், அல்லது அய்யனார் என்பது.  அய்யன் என்பதற்கு உயர்ந்தோன், குரு, ஆசான் என்பன பொருள்.  பௌத்தமதம் அழிந்த பின்னர், அம்மதக் கொள்கைகளையும் தெய்வங்களையும் இந்து மதம் ஏற்றுக்கொண்டபோது, வெவ்வேறு கதைகள் கற்பிக்கப்பட்டன.  வைணவர் புத்தரைத் திருமாலின் ஓர் அவதாரமாகவே வெளிப்படையாக ஒப்புக்கொண்டனர்.  சைவ சமயத்தோர், புத்தராகிய சாத்தனாரைத் திருமாலுக்கும் சிவபெருமானுக்கும் பிறந்த பிள்ளையாகக் கற்பித்து, சாத்தனாரைத் தமது தெய்வக்குழாங்களில் ஒருவராகச் சேர்த்துக் கொண்டனர்.  அப்பர் சுவாமிகளும் தமது தேவாரத்தில் சாத்தனாரைச் சிவபெருமானின் பிள்ளை என்றே கூறியிருக்கின்றார்.
பார்த்தனுக் கருளும்வைத்தார் பாம்பரை யாடவைத்தார்
சாத்தனை மகனா வைத்தார் சாமுண்டி சாமவேதங்
கூத்தொடும் பாடவைத்தார் கோளராமதிய நல்ல
தீர்த்தமுஞ் சடைமேல் வைத்தார் திருப்பயற்றூரனாரே
என வரும் தேவாரத்தினாலே இதனை அறியலாம்.
பிற்காலத்தில், சாத்தனார், அய்யனார், அரிஹரபுத்திரர் என்னும் இத்தெய்வத்தைக் கிராம தெய்வமாகச் செய்து, பண்டைப் பெருமையைக் குலைத்துவிட்டனர்.
சாத்தன், அல்லது சாஸ்தா என்று புத்தருக்குப் பெயர் கொடுக்கப்பட்டதன் காரணம் என்னவென்றால், அவர் எல்லாச் சாஸ்திரங்களையும் கற்றவர் என்னும் கருத்துப்பற்றி என்க.  சிலப்பதிகாரம், கனாத்திற முரைத்த காதையில், பாசண்டச் சாத்தற்குப் பாடுகிடந்தாளுக்கு எனவரும் அடியில், பாசண்டச் சாத்தன் என்னும் சொல்லுக்கு அடியார்க்கு நல்லார் எழுதும் உரை வருமாறு:  பாசண்டம் தொண்ணுற்றறு வகைச் சமய சாத்திரத் தருக்கக் கோவை.  இவற்றிற்கு முதலாயுள்ள  சாத்திரங்களைப் பயின்ற வனாதலின், மகாசாத்திர னென்பது அவனுக்குப் பெயராயிற்று. இவர் கூறும் உரைக்கேற்பவே பௌத்தர்களும், புத்தர் பல நூல்களைக் கற்றவர் என்று கூறுவர்.  இதனை வற்புறுத்தியே, சூடாமணி நிகண்டும்,
அண்ணலே மாயாதேவிசுதன் அகளங்க மூர்த்தி நண்ணியகலைகட் கெல்லாம்நாதன் முக்குற்ற மில்லோன் என்று கூறுகின்றது.  அருங்கலை நாயகன் என்று திவாகரம் கூறுகின்றது.  நாகைப்பட்டினத்தில் கண்டெடுக்கப்பட்ட புத்தர் உருவச்சிலையொன்றன் பீடத்தில், ஸ்வஸ்தி ஸ்ரீ ஆகம பண்டிதர் உய்யக்கொண்ட நாயகர் என்று எழுதியிருப்பது (படம் அ) காண்க.  புத்தர் சகல சாஸ்திரங்களையும் கற்று வல்லவர் என்பதும், அதுபற்றியே அவருக்குச் சாஸ்தா, அல்லது மகா சாஸ்தா என்னும் பெயருண்டென்பதும் அறியப்படும்.  லலிதாவிஸ்தார என்னும் பௌத்த நூலிலும் புத்தர் பல கலைகளைக் கற்றவர் என்று கூறப்பட்டுள்ளதென்று கூறுவர்.  இன்னுமொரு கண்கூடான சான்று யாதெனில், காஞ்சீபுரத்திலுள்ள காமாட்சியம்மன் கோயிலின் உட்பிராகாரத்தில் இருந்த புத்தர் உருவச் சிலைக்குச் சாஸ்தா என்னும் பெயர் உள்ளதுதான்.  (படம் ஆ காண்க.) இச்சாஸ்தாவைப்பற்றிக் காமாட்சிலீலாப் பிரபாவம் என்னும் காமாக்ஷி விலாசத்தில், காமக்கோட்டப் பிரபாவத்தில், தேவியின் (காமாட்சி தேவியின்) தன்யபானஞ் செய்து (முலைப்பால் அருந்தி) சுப்பிரமணியரைப் போலான சாஸ்தா ஆலயம் காமாட்சியம்மன் கோயிலில் இருக்கிறதாகக் கூறப்பட்டுள்ளது.* சாஸ்தா என்பவரும் புத்தர் என்பவரும் ஒருவரே என்பதற்கு இதுவே போதுமான ஆதாரம்.  இன்னும் சில ஆதாரங்கள் உண்டு.  அவை விரிவஞ்சி விடப்பட்டன.
சாஸ்தா என்னும் புத்தருடைய கோயில்களை அய்யனார் கோயில்கள் என்றும், சாதவாகனன் கோயில்கள் என்றும் சொல்லி, பிற்காலத்து இந்துக்கள் நாளடைவில் அவற்றைக் கிராமதேவதையின் கோயில்களாக்கிப் பெருமை குன்றச் செய்துவிட்டது போலவே, ஏனைய சில புத்தப் பெயர்களுக்கும் வேறு பொருளும் கதையும் கற்பித்து அவற்றையும் மதிப்பிழக்கச் செய்துவிட்டதாகத் தெரிகின்றது.  சில இடங்களில் புத்தரை முனீஸ்வரன் ஆக்கிவிட்டனர்.  தென்னாட்டில், தலைவெட்டி முனீஸ்வரன் கோயில் என ஒன்று உண்டென்றும், அக்கோயிலில் உள்ள உருவம் புத்தரின் உருவம் போன்றுள்ளதென்றும் சொல்லப்படுகின்றது.  இப்பொழுது காணப்படும் தருமராஜா கோயில்கள் என்பனவும் பண்டொருகாலத்தில் பௌத்தக் கோயில்களாயிருந்திருக்க வேண்டும் என்று தோன்றுகின்றது.  தருமன், அல்லது தருமராசன் என்பதும் புத்தருக்குரிய பெயர்களில் ஒன்று, பிங்கல நிகண்டில் தருமன் என்றும், திவாகரத்திலும் நாமலிங்கானுசாசனத்திலும் தர்மராஜன் என்றும் புத்தருக்கு வேறு பெயர் கூறப்பட்டுள்ளது.  இது தமிழ் நிகண்டுகளினாலும் அறியப்படும்.  இந்தத் தருமராஜா கோயில்களான பௌத்தக் கோயில்கள், இந்துமதம் செல்வாக்குப் பெற்ற காலத்தில், பஞ்சபாண்டவரில் ஒருவரான தருமராஜா கோயிலாகக் கற்பிக்கப்பட்டுப் பலராலும் நம்பப்பட்டன.  தருமராஜா கோயில்களில், பௌத்தர் போற்றும் போதி என்னும் அரசமரங்கள் இன்றைக்கும் காணப்படுவதே, தருமராஜா கோயில்கள் பண்டைக் காலத்தில் பௌத்தக் கோயில்கள் என்பதை விளக்கும்.  சமீபகாலம் வரையில் பௌத்தமதம் நிலைபெற்றிருந்த வங்காளத்திலே, இப்பொழுதும் சில பௌத்தக் கோயில்களுண்டென்றும், அக்கோயில்களில் உள்ள புத்தவிக்கிரகங்களுக்குத் தருமராஜா, அல்லது தருமதாகூர் என்று பெயர் வழங்கப்படுகின்றதென்றும் அறிகின்றோம்.  எனவே, தமிழ்நாட்டிலுள்ள இப்போதைய தருமராஜா கோயில்கள் பண்டைக்காலத்தில் பௌத்தக் கோயில்களாயிருந்திருக்கவேண்டும் என்று கருதப்படும்.
இவ்வாறே, தாராதேவி, மங்கலாதேவி, சிந்தாதேவி முதலான பௌத்தத் தெய்வங்களின் கோயில்களும், பிற்காலத்தில் இந்துக்களால் பகவதி கோயில்களாகவும் கிராமதேவதை கோயில்களான அம்மன் கோயில்களாகவும் மாற்றப்பட்டனவாகத் தெரிகின்றன.  தாராதேவி கோயில் திரௌபதையம்மன் கோயிலென இப்பொழுது வழங்கப்படுகின்றது.  தருமராஜா என்னும் பெயருள்ள புத்தர் கோயில், பிற்காலத்தில், பாண்டவரைச் சேர்ந்த தருமராஜா கோயிலாக்கப்பட்டது போல, தாராதேவி என்னும் பௌத்த அம்மன் கோயில், தருமரா-ஜாவின் மனைவியாகிய திரௌபதையின் கோயிலாக்கப் பட்டதுபோலும்.
சுருக்கமாகச் சொல்லுவதென்றால், இப்போது திருமால் கோயில்கள் அவ்வவ்விடங்களில் வரதராசர் கோயில், திருவரங்கர் கோயில், வேங்கடேசர் கோயில் முதலிய வெவ்வேறு பெயர்களுடனும், சிவபெருமான் கோயில்கள் கபாலீஸ்வரர் கோயில், தியாகராசர் கோயில், சொக்கலிங்கர் கோயில் முதலான வெவ்வேறு பெயர்களுடனும் வழங்கப்படுவது போலவே, பண்டைக்காலத்தில், பௌத்தக் கோயில்களும் புத்தருடைய பல பெயர்களில் ஒவ்வொன்றன் பெயரால் தருமராசா கோயில், சாத்தனார் கோயில், முனீஸ்வரர் கோயில் என்பன போன்ற பெயர்களுடன் வழங்கப்பட்டுவந்தன என்றும், பிற்காலத்தில், இந்துமதம் செல்வாக்குப் பெற்றபோது, அவை இந்துமதக் கோயிலாகச் செய்யப்பட்டு, இந்துமதத் தொடர்பான கதைகளுடன் இணைக்கப்பட்டு, பின்னும் நாளடைவில் அவை கிராம தேவதை கோயில்கள் என்னும் நிலையில் தாழ்ந்த நிலைக்குக் கொண்டுவரப்பட்டனவென்றும் தோன்றுகின்றது.
(மயிலை சீனி. வேங்கடசாமி எழுதிய "பௌத்தமும் தமிழும்" நூலிலிருந்து).


இது தொடர்பில் ஏற்கனவே 2006ல் நானெழுதிய சர்ச்சைகளும், சபரிமலை ஐயப்பனும்!

Friday, January 4, 2013

இயற்கை உரம் - அமுதக் கரைசல்

இயற்கை விவசாயத்துக்குத் தேவையான இயற்கை உரம் தயாரிக்கும் முறை. (தனிச் சேகரிப்புக்காக)

வாழையில் அடர் நடவு...தொழில்நுட்பம்

பாரம்பரிய விவசாய முறைகளை எல்லாம் மறந்து, வெளி நாட்டில் இருந்து இறக்குமதியான தொழில் நுட்பங்களையும், உரங்களை மட்டுமே பயன்படுத்தப் பழகிவிட்டோம் அல்லது பழக்கி விட்டார்கள். 

இதன் விளைவுகளை இப்போது கொஞ்சம் கொஞ்சமாய் உணரத் துவங்கி தொலைந்து போன நம் பாரம்பரிய விவசாய நுட்பங்களை மீட்டெடுக்கும் முயற்சி இயற்கை விவசாயம் என்கிற பெயரில் ஆங்காங்கே ஆரம்பித்திருப்பது நம்பிக்கை தருகிறது. 


அந்த வகையில் அடர் நடவு வாழை என்கிற தொழில் நுட்பத்தை விளக்குகிறது இந்த குறும்படம். ஒரு ஏக்கருக்கு 800 வாழைகள் பயிரிடும் தற்போதைய முறையில் இருந்து விலகி ஏக்கருக்கு 1200 வாழைகளை நட்டு குறைந்த செலவில் கூடுதல் மகசூல் மற்றும் லாபமீட்டும் பாதுகாப்பான  தொழில்நுட்பம். (தனிச் சேகரிப்புக்காக....)

Wednesday, January 2, 2013

பழநி பயணப் படங்கள்.

1990 ல் நண்பர்கள் எல்லோரும் உடலை வருத்தி பழநிக்கு பாதயாத்திரை போன நேரத்தில், விளையாட்டுத் தனமாய் பஸ்ஸில் ஏறி இறங்கி வின்ச்சில் பயணித்து முருகனை பார்க்கத் துவங்கி தொடர்ந்து இருபத்தி மூன்றாவது வருடமாக இந்த தடவையும் பழநி மண்ணை மிதித்து விட்டு வந்தாயிற்று. 

அப்போதெல்லாம் மதுரை திண்டுக்கல் ரோடு சுமாராய் இருக்கும். திண்டுக்கல் பழநி பாதை சுமாராயிருக்கும். ஆனால் இன்றைக்கு நான்கு வழிப் பாதையாகி மிகச் சாதாரணமாக 120 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்க முடிகிறது.

 

திண்டுக்கல் பழநி பாதை இரு வழிச் சாலைதான் என்றாலும் பிரச்சினையில்லை. எளிதாய் 80-100 கிலோமீட்டர் வேகம் செல்ல முடிகிறது.

1990 களில் கட்டண தரிசனம் ஐந்து ரூபாயாக இருந்தது, பின்னர் பத்து ரூபாயாக உயர்ந்து, பறக்கிற விலைவாசியில் தண்டாயுதபாணியும் தன்னை தரிசிக்க 100 ரூபாய் கட்டணம் கேட்கிறார். 100 ரூபாய் டிக்கெட்டுக்கும் அடிதடி நடக்கிறது, கொள்ளாத கூட்டம்.

ஒரு காலத்தில் சரவணப் பொய்கையைச் சுற்றி ஜோராய் விவசாயம் நடந்த இடங்களெல்லாம் இன்று வீடுகளாகி விட்டன.கொஞ்ச நாளில் இந்த குளமும் காணாமல் போகலாம்.....வாய்ப்பிருக்கிறது.


தண்டாயுதபாணியின் கருவறைச் சுவற்றில் இருக்கும் சிலை, அகத்தியராய் இருக்கலாம்.

கோவிலின் உள் பிரகாரத்தில் இருந்து எடுத்த படங்கள். திரும்பிய பக்கமெல்லாம் படம் எடுக்கக் கூடாதென மிரட்டலாய் எச்சரிக்கை போர்டுகள் வைத்திருக்கிறார்கள். ஆனாலும் எல்லோரும் கடமையாய் படமெடுத்துக் கொண்டிருக்கின்றனர். நானும் எடுத்தேன்.


போகர் சமாதியின் நுழைவாயில்.

கோவிலின் வெளிப் பிரகாரம்


பஞ்சாமிர்தம் வாங்க நீண்ட வரிசை. வரிசையில் நின்ற போது க்ளிக்கியவை.
சுடச்சுட பஞ்சாமிர்தம் ஸ்டாலுக்கு போகிறது.


மேலே போகும் போது சுகமாய் ரோப் காரில் போய்விட்டாலும், இறங்கும் போது படி வழியே இறங்கிவிட்டோம். ரோப் காருக்கும், வின்ச்சுக்கு அவ்ளோவ் கூட்டம்.

படியெல்லாம் கடை, கடைகளிலெல்லாம் முருகன்.

கயிறு வாங்கலையோ, கயிறு என கூவி விற்காத குறைதான்....திரும்புகிற பக்கமெல்லாம் கேரள நன்னாட்டிளம் பெண்கள்தான்...(எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா:) )முழங்காலிட்டு ஒவ்வொரு படியாய் சிரமப் பட்டு ஏறிக் கொண்டிருந்தார் இந்த மனிதர்.

அடிவாரத்தில் திரும்பின பக்கமெல்லாம் திருவிழாக் கூட்டம் போல மக்கள் வெள்ளம். பாதிக்கும் பேல் ஐயப்ப பக்தர்கள் அவர்களில் பாதிக்கும் மேல் ஐயப்பன் பேரைச் சொல்லிக் கொண்டு ரவுடித்தனம் செய்யும் பக்த சிகாமணிகள்.


தனியார் பஞ்சாமிர்தக் கடையிலும் கூட்டம் மொய்த்தது. சித்தனாதன் பஞ்சாமிர்தக் கடை.

சில கடைகளில் ஈ கூட ஓட்டாமல் உட்கார்ந்திருந்தனர்.

திருவிழாக் கடைகள்.
மிக அருமையான தெருவோர ஓவியம். பத்து ரூபாய் கொடுத்துவிட்டே இந்த படத்தை எடுத்தேன்.


ரோப் கார்.

பழநி மலையின் பின்பக்கத் தோற்றம்.

தென்னை வனம்.