Monday, January 14, 2013

புத்தகக் கண்காட்சி 2013


தொடர்ச்சியாக பதினேழாவது வருடமாய், இன்று புத்தக கண்காட்சி போய் வந்தேன்.இத்தனை வருடத்தில் பொங்கல் நாளில் புத்தக கண்காட்சிக்குப் போவது இதுதான் முதல் தடவை. ஊரே பொங்கலை பொங்கி டிவி சிறப்பு நிகழ்சிகளில் வழிந்து கொண்டிருக்கும் நேரத்தில், என் போக்கில் நிதானமாய் அரங்கை சுற்றிவிடலாமென்கிற எனது நம்பிக்கை சரியானதாயிருந்தது.சொற்ப மனிதர்களே நடமாடிக் கொண்டிருந்தனர். 

வழக்கமாய் நடக்கும் இடத்தில் மெட்ரோ இரயில் கட்டுமான வேலைகள் நடப்பதால், இந்த முறை கண்காட்சியை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்திற்கு மாற்றியிருக்கிறார்கள். தாழ்வான கூரை அமைப்பு, தரையெங்கும் மேடு பள்ளமாய் பரப்பி வைக்கப் பட்ட பலகைகள், அதன் மீது ஆங்காங்கே பல்லை காட்டிக் கொண்டிருந்த சிவப்பு விரிப்பு என சுமாரான அரங்க அமைப்புதான். வருடாவருடம் பெருங்குறையாகச் சொல்லப்படும் கழிவறை மற்றும் உணவு வளாகம் பக்கம் நான் போகவே இல்லை.  

காயிதே மில்லத் கல்லூரி வளாகத்தில் கண்காட்சி நடந்து கொண்டிருந்த காலந்தொட்டு புத்தக கண்காட்சியில் இடம்பெறும் ஸ்டால்களின் எண்ணிக்கையானது, பெட்ரொல் விலையைப் போல வருடாவருடம் விர்ர்ர்ரென அதிகரித்துக் கொண்டே போகிறது. போகிற போக்கில் சென்னைக்கு மிக அருகில் திண்டிவனம் பக்கத்தில் எவனாவது சாட்டிலைட் டவுன்ஷிப் என ப்ளாட் போடும் இடத்தில் கண்காட்சி நடத்துகிற அளவுக்கு பெரிதாகி விடுமோ என்கிற நினைப்பு வருவதை தவிர்க்க முடியவில்லை.

எத்தனை கடைகள் வந்து என்ன பிரயோசனம்.வருடாவருடம் அதே பொன்னியின் செல்வன், அதே கடல்புறா, டிக்‌ஷனரிகள், சமையல் மற்றும் சோதிட புத்தகங்கள் என் மாற்றமே இல்லாமல் கடைக்குக் கடை வரிசை கட்டி நிற்பது புத்தக கண்காட்சி மீதான ஈர்ப்பையும் ஆர்வத்தையும் குறைத்துக் கொண்டே வருகிறது. கண்காட்சியை நடத்துபவர்கள் ஐந்தாறு வருடங்களுக்கு இந்த மாதிரி புத்தகங்களுக்கு தடை விதித்தால் புண்ணியமாய் போகும். என்னை மிகவும் வெறுப்பேற்றிய சித்தர்கள் பற்றிய புத்தகங்களை இந்த வருடம் அவ்வளவாய் பார்க்க முடியாதது ஆறுதல்.

அத்தனைக்கும் ஆசைப்படும் ஜக்கி வாசுதேவ் மட்டும் ஸ்டால் போட்டிருக்கிறார்.மற்ற கார்ப்பரேட் சாமியார்கள் திருந்திவிட்டார்கள் போலிருக்கிறது. நிறைய இஸ்லாமிய புத்தக பதிப்பகங்களின் ஸ்டால்கள் காணமுடிந்தது. ஒரு கடையில் ஆறே நாளில் அரபி சொல்லித் தரும் புத்தகம் ஒன்றை பார்த்தேன். பெரியார் புத்தகங்கள், இடதுசாரி புத்தகங்கள் உள்ளிடட்ட ஸ்டால்களில் அத்தனை கூட்டமில்லை.

குழந்தைகளுக்கென நிறைய கடைகள் ஒதுக்கியிருக்கிறார்கள். எல்லா கடை வாசலிலும் பிள்ளை பிடிக்கிறவர்கள் போல ஆட்கள் நின்று கொண்டு, சின்னப் பிள்ளைகளோடு வரும் பெற்றோர்களை கையைப் பிடித்து இழுக்காத குறையாய் தங்கள் கடைகளுக்குள் வலுக்கட்டாயமாய் கடத்திக் கொண்டு போய், தங்களின் சரக்குகளைக் காட்டி வியாபாரம் செய்யும் மிரட்டலான வணிக உத்தியை பார்க்க முடிந்தது. நல்லவேளை வாரிசுகள் என் உயரத்தை நெருங்கி விட்டிருந்தபடியால் பிழைத்தேன்.

கடந்த சில வருடங்களாய் மாய்ந்து மாய்ந்து புத்தகங்கள் வாங்குவதிலும், வாசிப்பதிலும் ஏனோ ஆர்வம் குறைந்திருக்கிறது. அதனால் பேருக்கு நாலைந்து புத்தகங்கள் வாங்கி, அதை வருடம் முழுக்க துண்டு துண்டாய் வாசிப்பதில் திருப்தியாகி விடுகிறேன். இந்த வருடம் ஒரேயொரு புத்தகம் மட்டுமே வாங்க வேண்டுமென தீர்மானித்திருந்தேன். அது சின்மயி விவகாரம் பற்றிய மாமல்லனின் புத்தகம். ஆனால் ஐந்து புத்தகங்கள் வாங்கினேன்.

சின்மயி விவகாரம், மறுபக்கத்தின் குரல் - விமலாதித்த மாமல்லன். 

ஒரு லோட்டா ரத்தம் - பேயோன். 

பாம்புத் தைலம் - பேயோன். 

குமரிக் கண்டமா சுமேரியமா?, தமிழரின் தோற்றமும் பரவலும் - பா.பிரபாகரன். 

காவல்கோட்டம் - வெங்கடேசன்.....

பத்து வரிசைகளாய் ஸ்டால்கள் இருப்பதனால் நிறைய நடக்க வேண்டியிருக்கும். வயதானவர்கள், குழந்தைகள் நடக்க சிரமப் படுவார்கள். காலாற நடக்க முடிகிறவர்கள் போய் வேடிக்கை பார்த்துவிட்டு வரலாம். மற்றபடி சொல்லிக்கொள்ளும்படி எதுவுமில்லை.

ஆங்! முக்கியமான ஒன்றை மறந்துவிட்டேன். லிச்சி ஜூஸ் குடித்தேனாக்கும்.