Thursday, February 14, 2013

நகரும் சாலைகள்!


நேற்று அதிகாலை நான்கு மணிக்கு கிளம்பி, காரை விரட்டு விரட்டென விரட்டி காந்தி கிராமத்தை தொட்ட போது பகல் 11.20. ஒரு துக்க நிகழ்வு, அவர் என் மனைவியின் பெரியப்பா . 98 வயதைத் தொட்டவர். 

சம காலத்தில் குறிப்பிட்டுச் சொல்லுமளவுக்கு அத்தனை பெரிய மனிதரில்லைதான். ஆனாலும் கூட அவருடைய மரணச் செய்தியை அத்தனை தொலைக் காட்சிகளும் வாசித்தன.கருணாநிதி துவங்கி அநேக அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் சொல்லி தங்கள் இருப்பை காட்டிக் கொண்டனர். தி ஹிண்டு துவங்கி எல்லா செய்தித் தாட்களும் அவருக்கு புகழாரம் சூட்டின. 

அந்த மனிதர் சர்வோதய இயக்கத்தின் தலைவர் திரு.சங்கரலிங்கம் ஜெகந்நாதன். 

Sarvodaya leader Jagannathan passes away


Homage paid to Sarvodaya leader


கடைசி மூச்சு வரை காந்தியவாதி. பூதான இயக்கத்தின் தளகர்த்தர். நில மீட்புப் போராளி, பண்ணை விவசாயம் என்கிற பெயரில் காலம் காலமாய் விவசாயிகளின் மீது நிகழ்த்தப் பட்டு வந்த கொத்தடிமைத் தனத்தை ஒழித்தவர்.லட்சக் கணக்கான ஏழை விவசாயிகளுக்கு தாங்கள் உழுத நிலத்தை சொந்தமாக்கிக் கொடுத்தவர். தீண்டாமைக்கு எதிராய் போராடியவர். தன்னைப் போலவொரு சமூகப் போராளியை சுதந்திரம் கிடைக்கும் வரை காத்திருந்து, காதலித்து மணந்தவர். இத்தனை உயரம் தொட்ட அந்த மாமனிதரிடம் கடைசியில் எஞ்சியிருந்த ஒரே சொத்து அவர் வளர்த்த ஒரு குட்டி நாய்தான்.

காந்தி கிராமத்தில் கேந்திரிய ஊழிய்ர் கூட்டம் நடக்கும் எளிமையான கூடத்தில் அவருடைய உடல் இருத்தப் பட்டிருந்தது. ஏதோவொரு தேசத் தலைவரின் மரணம் போல சாரை சாரையாய் மக்கள், எளிய மனிதர்கள். எத்தனை துவைத்தாலும் போகாத அழுக்கேறிய பழுப்பு சட்டை வேஷ்டிகள்,கசங்கிய நூல் சேலை பெண்கள் என எங்கு திரும்பினாலும் கிராமத்து மனிதர்கள். அழக்கூடாது என அறிவுறித்தியே உள்ளே அனுப்பினாலும், பலர் உடைந்து அழுதனர். அப்பாவென அரற்றினர்.அவர் மனைவியை தெய்வம் போல பார்த்தனர். அவர் காலில் விழுந்து கும்பிட்டனர்.

இது ஒரு புறமிருக்க, பாரபட்சமில்லாமல் எல்லாக் கட்சி அரசியல் வாதிகளும் ஆட்கள் புடைசூழ வந்து ஆளுயர மாலை போட்டு போட்டோ எடுத்துக் கொண்டனர். விளம்பரத்திற்காகுமே!. இதில் ஒருவர் மட்டும் விதிவிலக்காய்த் தெரிந்தார். இத்தனைக்கும் எனக்கு அவரை பிடிக்காது. அதற்கு ஆயிரம் காரணங்கள். ஆனால் அவர் மட்டும்தான் குழியை முழுதாய் மூடும் வரை கூடவே இருந்து விட்டு. இரங்கல் கூட்டத்தில் உருக்கமாய் பேசிவிட்டு போனார். அவருடைய செயலில் பாசாங்கு இல்லை என உறுதியாய்ச் சொல்வேன். அவர்தான் வைக்கோ.

எல்லாம் முடித்து மதுரைக்கு வந்த போது மணி ஏழாகி விட்டிருந்தது. குளித்து விட்டு கோணார் மெஸ் போய் இரண்டு முட்டை தோசை, வெங்காய கறி மற்றும் முட்டைக் கறியோடு சிம்ப்பிளாய்(!) டின்னர் முடித்துவிட்டு வீட்டில் போய் படுத்தால் அப்படியொரு முரட்டுத் தூக்கம். அதென்னவோ எங்களுடைய மதுரை வீட்டில் மட்டும்தான் எனக்கு அப்படியொரு தூக்கம் வருகிறது.

காலையில் ஒன்பது மணிக்கு அம்மாவின் திட்டோடு திருப்பள்ளியெழுச்சி. பத்து மணிக்கு அம்மா கொடுத்த தோசைகளை முழுங்கிவிட்டு கிளம்பினோம். அப்பாவுக்கும், அம்மாவுக்கும் பேரன் பேத்தியை பிரிய மனதில்லை, ஆனாலும்  கூட அதை வெளிக் காட்டிக் கொள்ளவில்லை. எனக்குத்தான் குற்றவுணர்ச்சி பிடுங்கித் தின்றது. என்ன செய்வது, பள்ளி ஆண்டு விடுமுறைக்கு கூட்டி வருவதாய் சொல்லிக் கிளம்பினேன். திருச்சி வரை மழை கொட்டித் தீர்த்தது. ஐந்து மணிக்கு சென்னை வந்து சேர்ந்தேன். 

37 மணி நேரத்தில் ஆயிரம் கிலோமீட்டரைத் தொட்ட பயணம். சாலைகள்  எப்போதும் நகர்ந்து கொண்டேதானிருக்கிறது. நாம்தான் ஏனோ அதை புரிந்து கொள்வதேயில்லை.