Monday, April 15, 2013

பிரதிவாதி பயங்கரம் ஸ்ரீநிவாஸ் - நினைவேந்தல்!நினைவு தெரிந்த நாளில் இருந்து காதலையும், சோகத்தையும் வழிய வழிய பிழியப் பிழிய எனக்குச் சொல்லித் தந்த அந்த குரல் நேற்றோடு அமைதியாகி விட்டது. பாடாத பாட்டெல்லாம் பாடிய அந்த மாமனிதர் பிறப்பால் தமிழரில்லைதான், ஆனால் அவரது குரல் தமிழையும் அதன் அழகையும்  இனி வரும் காலத்துக்கும் சொல்லிக் கொண்டேயிருக்கும்.

பிரதிவாதி பயங்கரம் ஸ்ரீநிவாஸ் என்கிற பி.பி.ஸ்ரீநிவாஸ் பிறப்பால் தெலுங்கர். ஆனால் தன் வாழ்நாளை தமிழகத்தில் வாழ்ந்து முடித்தவர். அவரை நான் சந்தித்து நான்கைந்து வருடங்களுக்கு மேலிருக்கும். உட்லேண்ட்ஸ் ட்ரைவ் இன்னில்...மாலை நாலு மணி வாக்கில், அநேகமாய் தினமும் பார்க்க முடியும்.

தங்கச் சரிகை வேய்ந்த தலைப்பாகை, கசங்கிய பட்டு அங்கவஸ்திரம்,  கண்ணாடி,கலர்கலராய் பேனாக்கள்,  நிறைய துண்டுக் காகிதங்கள் என வீங்கியிருக்கும் அவரது சட்டை பாக்கெட். வலது கையில் கத்தையாய் ஒரு கட்டு பேப்பர் வைத்திருப்பார். இடது தோள்பட்டையில் ஒரு ஜோல்னா பை. டைரி ஒன்றும் பார்த்ததாய் நியாபகம்.

அவருக்கும், அவருக்கு பரிமாறும் பரிசாகரருக்குமான உறவு மிகவும் அலாதியானது. தனக்கு இன்னது வேண்டுமென அவரும் சொல்ல மாட்டார், ஓட்டல் ஊழியரும் கேட்க மாட்டார். ஒரு டம்ளரில் தண்ணிர் வரும், அதைத்  தொடர்ந்து ஒரு காஃபியோ/டீயோ வரும். தன் பையில் இருந்து ஒரு மேரி பிஸ்கெட் பாக்கெட்டை எடுப்பார். ஒரு சில பிஸ்கெட்டுகளை அந்த காஃபியில் தொட்டு சாப்பிடுவார். தன் சுற்றத்தை கவனிக்காத ஒரு ஏகாந்தியாய் தன் பிஸ்கெட்டையும், காஃபியையும் ருசித்துக் கொண்டிருப்பார்.

பிஸ்கெட்டும், காஃபியும் முடிந்த உடன், தான் கொண்டு வந்திருக்கும் பேப்பரை எடுத்து வைத்துக் கொண்டு தீவிரமான யோசனையுடன் எதையோ எழுதிக் கொண்டிருப்பார். அங்கு வந்து போகும் எல்லோருக்கும் அவரைத் தெரியும். ஆனாலும் யாரும் அவரிடம் வலியப் போய் பேசியதை நான் பார்த்ததில்லை. அவருடைய உலகத்தில் அவர் தனியனாய் இருந்தார் என்றே சொல்லலாம்.  எனக்கிருந்த தயக்கத்தையும் மீறி இரண்டுடொரு தடவை அவருடன் ஒன்றிரண்டு வார்த்தைகள் பேசியிருக்கிறேன்.

ஒரு தடவை தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அவரிடம் போய், ”சார், நான் உங்கள் தீவிரமான ரசிகன்” என்று சொன்ன போது, கண்ணாடியை உயர்த்திப் பார்த்தவர், என்ன நினைத்தாரோ...கணீரென்ற குரலில் ”நல்லாயிருங்க” என ஒற்றை வார்த்தையோடு அந்த உரையாடலை முடித்துக் கொண்டு தொடர்ந்து எழுத ஆரம்பித்து விட்டார். ஒரு ஆட்டோக்ராஃப் கேட்கும் தைரியம் கூட எனக்கு அப்போது வரவில்லை.

ஏனெனில் எனக்கு அவர் மீதிருந்த பிரமிப்பு அத்தகையது. பால்யம் தொட்டு நான் ஆராதித்த ஒரு பாடகர், அவரைப் போல பாட வேண்டுமென நினைத்து  முயற்சித்த போதில்தான் அவரது மேதமை புரிந்தது.தளராத எழுத்தாளர், கவிஞர்.....அதிலும் கன்னடம், ஆங்கிலம், தமிழ், தெலுங்கு,ஹிந்தி இப்படி எட்டு மொழிகளிலும் கவிதை எழுதும் ஆற்றல் கொண்ட கவிஞர் அவர்.

உட்லேண்ட்ஸ் ட்ரைவ் இன் நாட்களைப் பற்றி பத்தி பத்தியாய் நிறைய எழுதலாம். பறவைகள் சரணாலயம் மாதிரி அது மனிதர்களின் சரணாலயம் . விதம் விதமான மனிதர்கள் வந்து குவிந்து தங்களை ஆசுவாசப் படுத்திக் கொண்டு போகும் இடம். தீடீரென ஒரு நாளில் அந்த இடத்தை அரசு கையகப் படுத்திய போது என் போல ட்ரைவ் இன் ரசிகர்கள் பலரும் மீளா துயரில் ஆழ்ந்தோம் என்றால் மிகையில்லை.

ட்ரைவ் இன் ல் பல சினிமா பிரபலங்களை சர்வ சாதாரணமாய் பார்க்க முடியும். கவுண்டமணி துவங்கி, ரகுவரன் வரை எத்தனையெத்தனையோ பிரபலங்கள் நம்மிடையே சர்வசாதாரணர்களாய் உலா வருவார்கள்.ட்ரைவ் இன் மூடப் பட்ட பின்னர் அவரை நான் பார்க்கவில்லை. ஒரு சில தொலைக் காட்சி நிகழ்வுகளில் பார்த்ததோடு சரி.

என்னுடைய அவதானிப்பில் தமிழ் சினிமாவில் இரண்டே வகையான ஆண் பாடகர்கள்தான் இருக்கின்றனர். கனத்த, கம்பீரத்தோடு உயிரை உலுக்கும் சாரீரம் கொண்டவர்கள். இந்த பாரம்பரியம் கிட்டப்பாவில் துவங்கி பாகவதர் வழியே,சிதம்பரம் ஜெயராமன், கண்டசாலா, டி.எம்.எஸ், சீர்காழி வரிசையில் மலேசியா வாசுதேவனோடு முடிந்து விட்ட ஒரு வகையினர்.

மற்றொரு வகையினர் உயிரை வருடும் மென்மையான சாரீரத்துக்குச் சொந்தக் காரர்கள். டி.ஆர். மகாலிங்கம், திருச்சி லோகநாதன், ஏ.எம்.ராஜா,பி.பி.ஸ்ரீநிவாஸ் வழியே ஜேசுதாஸ் என இன்றைக்கிருக்கும் அநேக பாடகர்கள் இந்த வகையினர்தான். எஸ்.பி.பி இரண்டும் கலந்த கலவை, தனிப்பிறவி. ஏ.எம்.ராஜாவின் மென்மையான குரலுக்கு கொஞ்சம் மெருகும், குழைவும் சேர்த்தால் அதுதான் பி.பி.ஸ்ரீநிவாஸ் குரல் என்பதாக நான் ஒரு தீர்மானத்தில் இருக்கிறவன்.

ஆந்திராவில் பிறந்திருந்தாலும் தன் வாழ்க்கை முழுவதையும் சென்னையில் வாழ்ந்து முடித்த இந்த மனிதருக்கு நியாயமாய் கிடைத்திருக்க வேண்டிய அங்கீகாரமோ, கௌரவமோ தரப் படவில்லை என்பது வருத்தமான செய்தி. அவ்வளவு ஏன், தமிழக அரசின் கலைமாமனி பட்டம் கூட இவருக்குத் தரப்படவில்லை.

அவர்கள் தராவிட்டால் என்ன, என் போன்ற லட்சோப லட்சம் ரசிகர்களின் உள்ளத்தில் கலையாத மாமணியாய் அந்த மனிதர் விளங்குகிறார். இனியும் விளங்குவார்.