Friday, April 26, 2013

ஒரு பயணம், ஒரு அனுபவம், இரு மனிதர்கள்...!


அதிகாலை காலை இரண்டே முக்கால் மணிக்கு மதுரையில் நுழைந்து அழகரை எதிர் கொண்டுவிட்டு, அன்று மாலை ஐந்தரை மணிக்கே சென்னை கிளம்பியது சோகம்தான் என்றாலும், சூழ்நிலை அப்படி. எது நடந்து விடக் கூடாதென இரண்டரை வருடமாய் என் மனைவி தனியே போராடிக் கொண்டிருக்கிறாரோ, அது என்னேரமும் நடந்து விடலாமென்கிற அச்சமே உடனடியாய் என்னை சென்னைக்கு  மீட்டது. இது போன்ற தருணங்களில்  மனைவியின் உடனிருப்பது என் கடமை மாத்திரமில்லை, உரிமையும் கூட.

போகும் போது சுகமாய் ஏஸி பஸ்ஸில் போய்விட்டாலும், திரும்பும் போது அத்தனை யோகமில்லை. தமிழக அரசின் விரைவுப் பேருந்துதான் வாய்த்தது. சுமாருக்கு கொஞ்சம் மேலே, சூப்பருக்கு பல மடங்கு கீழே தரத்திலான பேருந்து. ஏஸி பஸ்காரர் 710 ரூபாய் வாங்கினார்கள். தமிழக அரசோ 325 ரூபாயில் சென்னை கொண்டு வந்து சேர்த்து விட்டார்கள். ஆறேழு வருடங்களுக்குப் பிறகான முதல் பேருந்து பயணம் என்பதால் இதனை குறிப்பிட வேண்டியிருக்கிறது. ஏஸி பஸ்காரர்கள் ஐந்தே மணி நேரத்தில் பயணித்த தூரத்தை கடக்க அரசு பேருந்துக்கு ஒன்பது மணி நேரம் தேவைப் பட்டது கொடுமை. மற்றபடி நல்லதொரு பயண அனுபவம்.

ஊரெல்லாம் Smart phones நிரம்பி வழிந்து கொண்டிருந்தாலும், நான்  மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் வாங்கி அரதப் பழசான மோட்டரோலா qwerty phone தான் இன்னமும் வைத்திருக்கிறேன். நேற்றுவரை இது தொடர்பில் எனக்கு பெரிதான யோசனையோ, அக்கறையோ இருந்ததில்லை. நேற்று பஸ்ஸில் என்னைச் சுற்றி உட்கார்ந்திருந்த பலரும் இந்த Smart phone களை வைத்து படம் காட்டிக் கொண்டிருந்த போது எனது நிலைப்பாடு குறித்த மறு யோசனைகள் வந்திருக்கிறது. 

தற்போது Micromax என்றொரு உள்ளூர் உற்பத்தியாளர்  சர்வதேச ப்ராண்டுகளுக்கு தண்ணீர் காட்டிக் கொண்டிருக்கின்றனர். அவர்களின் மாடல் எதையாவது வாங்கிவிட யோசனை வந்திருக்கிறது. விலையும் மலிவு, தரமும் சர்வதேசங்களுக்கு இணை, எல்லாவற்றிற்கும் மேலாய் என்னுடைய சுதேசி உணர்வை விளம்பரப் படுத்திக் கொள்ள ஒரு வாய்ப்பு. :)

6KVA Online UPS ஒன்று தேவைப் பட யாரிடம் கேட்பது என்கிற யோசனையில், தற்போது புதியதாய் முளைத்திருக்கும் ஆன்லைன் தளம் ஒன்றில் என் தேவையை பதிந்து வைத்தேன். தற்போது ஊரில் இருக்கும் அத்தனை UPS விற்பனையாளர்களின் அன்பு மழையில் நனைந்து கொண்டிருக்கிறேன். பிள்ளையார் பிடிக்க எதுவோ ஆன கதையாகி விட்டது. காலையில் தொலைபேசியில் அன்பாய் என்னை எழுப்புவதும் அவர்கள்தான், நல்லிரவு சொல்லித் தூங்க வைப்பதும் அவர்கள்தான். யாரிடம் வாங்குவதென தெரியாமல் மலைத்துப் போய் உட்கார்ந்திருக்கிறேன். இப்போது இரண்டு விண்டோ ஏசி வேறு தேவைப் படுகிறது. நாலு கடை ஏறி இறங்கினாலும் பரவாயில்லை என்று நினைக்க வைத்து விட்டார்கள்.

இந்த மாதத்தில் நான் சந்தித்த இரு சுவாரசியமான மனிதர்களைப் பற்றி விரிவாய் எழுதிவைக்க ஆசைப் பட்டேன். இதெல்லாம் சூட்டோடு சூடாக எழுதினால்தான் சுவாரசியமாய் இருந்திருக்கும்...இப்போது சிறு குறிப்பாய் எழுதவே தோணுகிறது. முதலாமவர் லண்டனைச் சேர்ந்தவர், குழந்தைகள் உளவியல் துறையில் மருத்துவ நிபுணர். வயது எழுபதை தாண்டியவர். நன்கு சம்பாதிக்கிறார்.பிறப்பால் ஈரானியர், 

அங்கே நடந்த கலவரத்தில் தன் பெற்றோரையும் குடும்பத்தையும் இழந்து உயிர் தப்பித்து அகதியாய் இங்கிலாந்து சென்றவர். புற்று நோய்க்கு தன் ஜெர்மன் மனைவியை பறி கொடுத்தவர். தன் வருமானத்தின் பெரும் பகுதியை ஈரான் மற்றும் இந்தியாவில் பதின்ம வயதைத் தொட்ட ஆதரவற்ற பெண் குழந்தைகளுக்காக செலவு செய்து வருகிறார். திண்டுக்கல் அருகே காந்தி கிராமத்தில் உள்ள நாற்பதுக்கும் மேற்பட்ட பெண் குழந்தைகள் அவருடைய “இண்டியன் டாட்டர்ஸ்”. 

இந்த பெண் குழந்தைகளுக்கான உணவு, உறைவிடம், கல்வி அதன் பின்னர் வேலைவாய்ப்பு அதற்கும் மேலே அவர்களுக்கு மாப்பிள்ளை பார்த்து திருமணமும் செய்து வைத்துக் கொண்டிருக்கிறார். வருடம் இரு முறை இந்தியா வந்து ஒரு மாதம் வரை அவர்களோடு தங்கியிருந்து அவர்களின் நலனை பேணி வருகிறார். எந்த விளம்பரமும் இல்லை. யாரையும் எதிர்பார்ப்பதில்லை. தன் சம்பாத்யத்தைக் கொண்டுவந்து செலவு செய்கிறார். மென்மையான கிழவர்.

மற்றவர் இந்தியர். அறுபது வயதைத் தொட்டவர். இவரும் உளவியல் துறை மருத்துவர். இவர் இங்கிருந்து போய் கம்போடியாவில் பெண்கள் நலனுக்காக உழைத்துக் கொண்டிருக்கிறார். கம்போடியாவில் வறுமை மற்றும் கல்வியறிவு இல்லாமையினால் இளம் பெண்கள் பதின்ம வயதில் பாலியல் தொழிலில் ஈடுபடுகின்றனர். இதனால் எய்ட்ஸ் போன்ற பாதிப்புகளுக்கு ஆளாகி கவனிப்பாரின்றி தெருவில் மரித்துப் போகின்றனர். இத்தகைய பெண்களை தேடிக் கண்டு பிடித்து அவர்களை பராமரிப்பது மற்றும், இளம் பெண்கள் திசைமாறிச் செல்லாமல் தடுக்கும் வகையில் விழிப்புணர்வு வேலைகளை அங்கேயே தங்கி தீவிரமாய் செய்து கொண்டிருக்கும் களப் போராளி. இவரும் மற்றவர்களை எதிர்பாராமல் தன் கை காசை செலவழிப்பவர். தற்போது இவருடைய வேலைகளைப் பார்த்து கம்போடிய அரசாங்கமே இவரோடு கை கோர்த்திருக்கிறது.

இது மாதிரியான மனிதர்களினால்தான் இன்னமும் மழை பெய்து கொண்டிருக்கிறது. இவர்களோடு எனக்கு கிடைத்த அறிமுகமும், நட்பும்  பல புதிய கேள்விகளை எனக்குள் விதைத்திருப்பதை மறுக்க முடியாது. பார்ப்போம்.