Tuesday, October 21, 2014

தீபாவளி என்பது.....

சமண சமயத்தின் கடைசி தீர்த்தங்கரான மகாவீரர் இறந்த/முக்தியடைந்த நாளில், அவர் நிணைவாக சமணர்கள் தீபங்களை வரிசையாக ஏற்றி வைத்து அவர் நினைவை போற்றுவதுதான் தீபாவளியின் ஆரம்பக் கதை. ஆனால் அநேகம் பேருக்கு இந்த கதை தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

"தீப்" என்ற வடமொழிச் சொல்லுக்கு ஒளி அல்லது நெருப்பு என்றும், "ஆவளி" என்பதற்கு வரிசை என்றும் பொருள் கூறலாம். 

பின்னாளில் சமண மதம் அழிந்தபோது அல்லது அழிக்கப் பட்டபோது சமண மதத்தவர்கள் இந்து மதத்தை  தழுவிய பின்னரும் பழைய பழக்கதோஷத்தில் தீபாவளியை தங்களின் புனித நாளாக கொண்டாடினர். 

மகாவீரர் அதிகாலையில் முக்தியடைந்தார் என்பதால் அதிகாலையில் நீராடி , வரிசையாக விளக்கேற்றி வழிபாடு செய்வது மரபாக இருந்தது.  இந்த நாளை மிகவும் புனிதம் வாய்ந்ததாய் கருதியதால் இன்று துவக்கப் படும் முயற்சிகள், செயல்கள் யாவும் சிறப்பாக அமையும் என்கிற நம்பிக்கையும் உருவானது. 

சமண சமயத்தை சேர்ந்த வர்த்தகர்கள் மகாவீரர் முக்தியடைந்த இந்த நாளை தங்களுடைய புதுவருடத்தின் துவக்கமாய் கொண்டாடுகின்றனர். இந்த நாளில் சமண சமயத்தில் செல்வத்தின் அதி தேவதையான லக்‌ஷ்மியை பணிந்து வணங்கினால் செல்வம் பெருகும் என்கிற நம்பிக்கையும் காலம் காலமாய் இருந்து வருகிறது.

முதல் ஹிந்து அரசான விஜயநகர பேரரசு உருவான போதுதான் சமண மதத்தின் இந்த பண்டிகை ஹிந்து மதத்தின் பண்டிகையாக நிறம் மாறியது. விஜயநகர பேரரசின் ஆளுனர்களாய் நாயக்க மன்னர்கள் தமிழகத்தில் காலடி வைத்த போதுதான் இந்த பண்டிகை தமிழகத்திற்குள் நுழைந்தது. 

தீபாவளியை தமிழகத்துக் கொண்டு வந்த பெருமை சௌராஷ்டிரா இன மக்களையே சேரும் என்றால் அது மிகையில்லை. அதற்கு முன்னர் இப்படி ஒரு  பண்டிகை தமிழகத்தில் கொண்டாடப் பட்டதாக எந்த வரலாறும், 
பூகோளமும் நமக்கு கிடைக்கவில்லை.

இந்த இடத்தில் லக்‌ஷ்மி பற்றி ஒரு இடைச்செருகல்....

சமண சமயத்தில் உயர் நிலை குருவான தீர்த்தங்கரர்களை பாதுகாக்கும் பணியை யக்‌ஷர்களும்/ யட்சர்கள், யக்‌ஷினிகளும்/யட்சினிகள் செய்து வந்ததாய் ஒரு நம்பிக்கை உண்டு. இவர்கள் உயர் நிலை தேவதைகளாக கருதப் பட்டனர். 

அடுத்த முறை மகாவீரரின் சிலையை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தால் இந்த யட்சர்களையும், யட்சினிகளையும் கவனித்துப் பாருங்கள். யட்சர்கள் மகாவீரரின் வலது பக்கத்திலும், யட்சினிகள் இடது பக்கத்திலும் அமைக்கப் பட்டிருப்பார்கள்.இந்த யட்சன், யட்சினி தகவல் இங்கே எதற்காக என்கிற கேள்வி இன்னேரத்திற்கு உங்களுக்கு வந்திருக்கும். 

மனித வாழ்வியல் ஆசாபாசங்களின் கூறுகளாகவும்  அவற்றின் அதிபதியாக அல்லது அதி தேவதையாக யட்சர்களும், யட்சினிகளும் குறிக்கப் படுகின்றனர். இவற்றில் நல்ல, தீய யட்ச,யட்சினிகளூம் உண்டு. சில புகழ் பெற்ற யட்சினிகளை நீங்கள் தெரிந்து கொள்வது அவசியம். 

அம்பிகா தேவி, சக்கரேஷ்வரி தேவி, பத்மாவதி தேவி, சரஸ்வதி தேவி, லக்‌ஷ்மி தேவி......அடடே இவர்கள் எல்லோரும் இந்து மதத்தின் தெய்வங்களாயிற்றே என்கிற கேள்வி உங்களுக்கு வந்தால் அதற்கு நானொன்றும் செய்ய முடியாது. பின்னாளில் சமணர்கள் ஹிந்துக்களாய் மதம் மாறியதைப் போல இந்த யட்சினிகளும் மதம் மாறியிருக்கலாம்.....யார் 
கண்டது.

இதில் சரஸ்வதி கல்விக்கு அதிபதியாகவும், லக்‌ஷ்மியானவள் செல்வத்திற்கு அதிபதியாகவும் குறிப்பிடப் படுகின்றனர். இவை எல்லாம் சமண மத கட்டமைப்பில் உள்ளவை.

நாம் நம்பிக் கொண்டிருக்கும் நரகாசுரன் கதையெல்லாம் இங்கே தென்னாட்டில்தான். வடக்கே இந்தக்கதை  எடுபடாது. அவர்களுக்கு திபாவளிக்கு என வெவ்வேறு காரணங்கள் உண்டு. ராமர் அயோத்தி மீண்ட நாளென்றும் சொல்வதுண்டு. பாண்டவர்கள் வனவாசத்தை நிறைவு செய்த நாளென்றும் ஒரு ஐதீகம். வங்காளத்தில் காளி பூஜை, சீக்கியர்களுக்கு ஹிந்துக்களிடம் இருந்து விடுதலையானது என ஒவ்வொரு பகுதிக்கென்றும் தனித்துவமான ஒவ்வொரு காரணங்கள்.

இப்படி எல்லா காரணங்களையும் கூட்டிக் குழம்பாக்கி தற்சமயத்தில் நாலு நாட்களை தீபாவளியாக கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். முதல் நாளில் நரகாசுர வதம், இரண்டாம் நாளி லக்‌ஷ்மி பூசை, மூன்றாம் நாளில் நரகத்திலிருக்கும் பாலி பூமிக்கு வருவதை கொண்டாடுவது, நான்காம் நாளில் சகோதரிகள் தங்கள் சகோதர்களை வீட்டுக்கு அழைப்பதாகவும் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.

தனிப்பட்ட முறையில் எனக்கு தீபாவளி கொண்டாட்டங்களில் பெரிதான ஆர்வம் இருந்ததே இல்லை. என் வாரிசுகளும் அப்படியே இருக்கிறார்கள் என்பதில் எனக்கு பெரு மகிழ்ச்சி. மனைவிதான் கோவித்துக் கொள்கிறார். * நரகாசுரன் கதையை விலாவாரியாக எழுத வேண்டுமென்றுதான் இந்தக் கட்டுரையை ஆரம்பித்தேன். ஆனால் எத்தனை வருடத்திற்குத்தான் நரகாசுரன் கதை ஒரு அபத்தம் என்று எழுதிக் கொண்டிருப்பது புதிதாய் எதையாவது முயற்சிப்போமென தோன்றியதால் சமண தீபாவளி பதிவாக மாறிவிட்டது. இங்கே குறிப்பிட்ட தகவல்களுக்கு தேவையான நூலாதாரங்களை என்னால் தர முடியும். 


Thursday, October 9, 2014

Brown Penny....I whispered, 'I am too young,'
And then, 'I am old enough';
Wherefore I threw a penny
To find out if I might love.
'Go and love, go and love, young man,
If the lady be young and fair.'
Ah, penny, brown penny, brown penny,
I am looped in the loops of her hair.

O love is the crooked thing,
There is nobody wise enough
To find out all that is in it,
For he would be thinking of love
Till the stars had run away
And the shadows eaten the moon.
Ah, penny, brown penny, brown penny,
One cannot begin it too soon.

William Butler Yeats

Tuesday, September 23, 2014

எளிய மனிதர்களின் ஓவியன் - ராஜ்குமார் ஸ்தபதி.

வந்தாரை வாழவைப்போமென்கிற ஒற்றைக் கோஷத்தினூடே உள்ளூர் திறமைகளை நாம் கவனிப்பதோ அங்கீகரிப்பதோ இல்லை. இதற்கு  ஓவியத்துறை கலைஞர்களும் விலக்கில்லை.

பாண்டிச்சேரியை அடுத்த ஆரோவில்லை மையமாய் கொண்டு இயங்கிவரும் ஓவியர் ராஜ்குமார் ஸ்தபதியின் வாட்டர்கலர் ஓவியங்கள் பெரும்பாலும் எளிய மனிதர்களின் உடல்மொழியை பிரதியெடுப்பவையாகவே இருக்கின்றன.

ராஜ்குமார் ஸ்தபதியின் இணையதள முகவரி : http://www.rajkumarsthabathy.com/

முகவரி : 
Sathuram Art Studio 
Periya Mudaliyarchavady , 
Auroville Main Road, 
Pondicherry 605101

Phone : +91-99443-72478 
E-mail : rksthabathy@gmail.comFriday, September 19, 2014

இசைபட வாழ்ந்தவர்மாலையில் வீடு வந்து இணையம் நுழைந்தால்.....எங்கு திரும்பினாலும் மாண்டலின் ஶ்ரீநிவாஸின் மரணம் தொடர்பான செய்திகள்தான். இத்தனை சிறிய வயதில் அவர் இறந்திருக்கக் கூடாது. கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்குப் பின்னர் ஏற்பட்ட நோய்த் தொற்றின் காரணமாய் உயிரிழந்திருக்கிறார். கல்லீரலை மாற்றும் அளவிற்கு அவருக்கு என்ன நேர்ந்தது எனத் தெரியவில்லை.

எது எப்படி இருந்தாலும் ஶ்ரீநிவாஸ் நம் காலத்தின் மகத்தான இசைச்  சாதனையாளர். பல தருணங்களில் அவரது இசை என்னை ஆற்றுப்படுத்தியிருக்கிறது.இரண்டொரு தடவை அவருடைய இசையை மட்டுமே கேட்டுக் கொண்டு சென்னையிலிருந்து மதுரைக்கு வண்டியோட்டியது இப்போதும் பசுமையாய் நினைவிருக்கிறது.

அவரது வாசிப்பதை ஒரே ஒரு தடவை நேரில் பார்த்திருக்கிறேன். தென்னிந்திய மரபியல் இசை பற்றி எதுவுமே தெரியாத என் போன்ற பாரமனையும் ரசிக்க வைத்த கச்சேரி அது. அதன் பின்னர்தான் அவரது இசைத் தகடுகளை வாங்கி சேகரிக்க ஆரம்பித்தேன்.

இணையம் புழங்கிய காலத்தில் மாண்டலின் ஊடாக இசைக்கப் பட்ட பல்வேறு இசை வடிவங்கள் அறிமுகம் ஆனது. அதிலும் இப்போது உடனே நினைவுக்கு வருவது  'THE GODGATHER" படத்தில் இடம் பெற்றுள்ள இந்த இசைக் கோர்வையில் மாண்டலினின் பயன்பாட்டை குறிப்பிட்டே ஆக வேண்டும்.


.

ஶ்ரீநிவாசைப் பற்றி, அவருடைய இசையைப் பற்றி இந்த தருணத்தில் நிறைய எழுதலாம்தான்......அதை விடவும் இந்த நொடியில், இந்த இரவில் அவருடைய இசையை கேட்கவே பிரியப்படுகிறேன். அதுவே நான் அவருக்கு செய்யும் குறைந்தபட்ச மரியாதையாக இருக்கும்.


Wednesday, September 10, 2014

இதுதான் பாரதி!


சென்றதினி மீளாது,மூட ரே!நீர்
எப்போதும் சென்றதையே சிந்தை செய்து
கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து
குமையாதீர்!சென்றதனைக் குறித்தல் வேண்டாம்
இன்றுபுதி தாய்ப்பிறந்தோம் என்று நீவிர்
எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு
தின்றுவிளை யாடியின்புற் றிருந்து வாழ்வீர்;
தீமையெலாம் அழிந்துபோம்,திரும்பி வாரா.


'உங்களுக்குத் தொழிலிங்கே அன்பு செய்தல் கண்டீர்!'

Wednesday, August 6, 2014

அசலும்....நகல்களும்.

1956

"Que Será, Será" ("Whatever Will Be, Will Be")
Music by Jay Livingston
Lyrics by Ray Evans
Published 1956

 


 1957

இசை : ஜி.ராமநாதன்
பாடல்:மருதகாசி
படம்: ஆரவல்லி

 

 2013

இசை : சந்தோஷ் நாராயணன்.
படம் : சூது கவ்வும்.

 

Thursday, July 17, 2014

பாரதியின்....தமிழ்சாதி!மகாகவி பாரதியாரின் எல்லா பாடல்களும் நமக்கு கிடைக்கவில்லை. அதிலும் ஒரு சில பாடல்களின் ஒரு பகுதியே நமக்குக் கிடைத்திருக்கிறது. அப்படி கிடைத்த "தமிழ் சாதி" எனும் பாடலின் ஒருபகுதிதான் இது. 

நல்லவை எங்கிருந்தாலும், எப்படியிருந்தாலும், எவரிடமிருந்தாலும் அவற்றை அறிந்துணர்ந்து வாழ்ந்தால்.....அச்சமில்லை.எத்தனை வீரியம் பாரதியின் வரிகளில்... 

 ".......நன்மையும் அறிவும் 
எத்திசை தெனினும், யாவரே காட்டினும் 
மற்றவை தழுவி வாழ்வீ ராயின் 
அச்சமொன் றில்லை....."

- சுப்பிரமணியம் பாரதி.

Tie A Tie In 10 Seconds

Saturday, July 5, 2014

வாழ்க்கை

நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது

ஒரு கவிதையைப் போல..

Thursday, June 26, 2014

2400 சதுர அடியில் ஒருங்கிணைந்த விவசாயம்.""ஐந்து சென்ட் நிலத்தில் நெல்லும், மீனும், கோழியும் வளர்ப்பது சாத்தியம்,'' என்கிறார் சிதம்பரம் அண்ணாமலை பல்கலை உழவியல் துறை பேராசிரியர் ஆர்.எம்.கதிரேசன்.


இந்திய வேளாண் ஆய்வுக்கழகம், உலகவங்கி நிதியுதவியுடன் சிறு, குறு விவசாயிகளின் வாழ்வாதார மேம்பாட்டிற்கான ஆய்வுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. நாகை, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் 600 விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த பண்ணைய பயிற்சி அளிக்கப்பட்டு, சிறப்பாக செயல்படுகின்றனர். எங்களது மாதிரி திட்டம் ஐந்து சென்ட் அளவு தான். ஐந்து சென்ட்டில், அதாவது 200 சதுர மீட்டரில் நடுவில் 20 சதுரஅடியில் ஒருமீட்டர் ஆழத்திற்கு பள்ளமாக்க வேண்டும். 

பள்ளத்தில் நீர் நிரம்பும் போது, நிலத்தின் மட்டமும், நீர் மட்டமும் ஒன்றாக இருக்க வேண்டும். வழக்கமாக நெல்வயலில் 10செ.மீ., ஆழத்திற்கு நீர்கட்டுவதுண்டு. பள்ளத்தில் கட்லா, மிர்கால், ரோகு, புல்கெண்டை என, 200 மீன்குஞ்சுகளை விடவேண்டும். நெற்பயிர் வளரும் போது கூடவே களையும் வளரும். புல்கெண்டை ரகம், களைச்செடிகளை உண்ணும். பகலில் பள்ளத்திலும், வெயில் குறையும் போது வயலில் நீந்திச் சென்று புழு, பூச்சிகளை உணவாக கொள்ளும்.

பள்ளத்தையொட்டி 20 இறைச்சிக் கோழிகள் வளர்க்கும் ஒரு கூண்டு அமைக்க வேண்டும். இந்த கூண்டை நாங்களே இலவசமாக அமைத்துத் தந்தோம். ஒருநாள் குஞ்சின் விலை ரூ.25 முதல் ரூ.35க்குள் இருக்கும். இவற்றை முதல் பத்து நாட்கள் வீட்டில் வளர்த்து, 11வது நாளில் கூண்டில் வளர்க்க வேண்டும். கடைகளில் கிடைக்கும் கறிக்கோழி தீவனம் கொடுத்து வளர்த்தால், 45 நாட்களில் இரண்டு கிலோ எடை அதிகரிக்கும். ஒரு கோழிக்கு தீவனத்திற்கு ரூ.60 கணக்கிட்டால், செலவு போக கோழிக்கு ரூ.200 லாபம் கிடைக்கும்.

150 நாட்கள் நெற்பயிரில் ஐந்து முறை கோழி வளர்த்து, லாபம் பார்க்கலாம். கோழி எச்சம் நீரில் கரைந்து பயிர்களுக்கும், மீனுக்கும் உரமாகும். 150 நாட்களில் 30 முதல் 45 கிலோ எடையுள்ள மீன்கள் மொத்தமாக கிடைக்கும். மழை, வெள்ளத்தால் பயிர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டாலும் கோழி, மீன்கள் கைகொடுக்கும். இதையே ஒரு ஏக்கர் அளவுக்கு விரிவுபடுத்தினால், 20 கோழிக் கூண்டுகள் வைக்கலாம். நெல் சாகுபடி செய்வதற்கு முன் அடியுரம் இடலாம். கோழி, மீன்கள் வளர்ப்பதால், யூரியா போன்ற மேல் உரம், பூச்சிகொல்லி மருந்து எதையும் பயன்படுத்தக்கூடாது, என்றார். இவரிடம் பேச: 96551 88233.

-எம்.எம்.ஜெயலெட்சுமி, மதுரை.

Wednesday, June 25, 2014

சோதனை பதிவு

ஆன்ட்ராய்ட் மொபைலில் வழியே பதிவெழுதும் முயற்சி. இது மட்டும் சரியாக வந்தால் இனி வரும் நாட்களில் அடிக்கடி பதிவெழுதலாம்.

Sunday, June 22, 2014

அசலும், நகலும்

அசல்படம் : உஸ்தாதோன் கே உஸ்தாத் / 1963
இசை : ரவி
பாடகர் : மொஹம்மத் ரஃபி


இனி நகலை பார்ப்போம். :)
படம் : வல்லவனுக்கு வல்லவன்/ 1965
இசை : வேதா
பாடகர் : டி. எம். சவுந்தரராஜன்.

Wednesday, May 28, 2014

மாயா ஆஞ்சலௌ (1928 - 2014)


சமீப மாதங்களில் நம் காலத்தின் மகத்தான எழுத்தாளுமைகள் ஒவ்வொருவராய்  விடைபெற்றுக் கொண்டேயிருப்பது வருத்தமான நிதர்சனம். அந்த வரிசையில் இன்று நம் சமகாலத்தில் மிகவும் மதிக்கப் பட்ட அமெரிக்க கவிஞர் மாயா ஆஞ்சலௌ(Maya Angelou) தனது என்பத்தியாறாவது வயதில் இயற்கையெய்தியிருக்கிறார்.

இந்த நாளில் அவருடைய கவிதை ஒன்றை தமிழாக்கினால் என்னவென்று தோணியதன் விளைவைத்தான் இனி வாசிக்கப் போகிறீர்கள். மொழி பெயர்ப்பில் எனக்கு பெரிதான அனுபவம் இல்லையென்பதால், இந்த முயற்சியை ஒரு "ஆர்வக் கோளாறா"க மட்டுமே அணுகிட வேண்டுகிறேன். 


The Lesson 

I keep on dying again.
Veins collapse, opening like the
Small fists of sleeping
Children.
Memory of old tombs,
Rotting flesh and worms do
Not convince me against
The challenge. The years
And cold defeat live deep in
Lines along my face.
They dull my eyes, yet
I keep on dying,
Because I love to live. 
Maya Angelou

பாடம்

நான் இறந்து கொண்டேயிருக்கிறேன்...
உறங்கும் குழந்தைகளின்
தளர்வான கைகளைப் போல
என் குருதி நாளங்கள் ஒய்ந்து கொண்டிருக்கின்றன....
பழைய கல்லறைகள் தரும் நினைவுகள்
அழுகிக் கொண்டிருக்கும் தசைகள், புழுக்கள்
ஒருபோதும் என்னை சமாதானமாக்கவில்லை.
இந்த சவால்கள், இத்தனை வருடங்கள் 
தந்த தோல்விகளெல்லாம்
என் முகச்சுருக்கங்களின் ஆழத்தில்
உறைந்தும் நிறைந்துமிருக்கின்றன
அவற்றினால் என் கண்கள் மங்குகின்றன
நான் இறந்து கொண்டேதான் இருக்கிறேன்
ஏனெனில் நான் வாழவே விரும்புகிறேன்.

Friday, May 9, 2014

தொடுதல்

புனிதர்
நம் தலையை தொடுகிறார்
நமக்கு கண்ணீர் வருகிறது
நாம் மனமுடைந்து அழுகிறோம்

புனிதர்
நம் தோள்களைத் தொடுகிறார்
நம் பாரங்கள் இறக்கிவைக்கபடுகின்றன
நாம் ஒரு இறகைபோல
நம் உடலை அறிகிறோம்

புனிதர்
நம் கைகளைத் தொடுகிறார்
நமது நோய்மைகள் குணமடைகின்றன
நமது எல்லா வாதைகளும் குணமடைகின்றன

நான்
புனிதரின் கைகளேயே
உற்றுப் பார்க்கிறேன்
அந்தக் கைகளில் விசேஷமாக
ஒன்றுமே இல்லை
அவை வெறுமனே
ஒரு மனிதனின் கைகள்
உண்பதற்கும்
வேலை செய்வதற்கும்
தழுவிக் கொள்வதற்குமான
கைகள் மட்டுமே

இருந்தும்
புனிதன்
அந்தக் கைகளால்தான்
அற்புதங்களை நிகழ்த்துகிறான்
அவன் வேறொன்றும் செய்யவில்லை
வெறுமனே தொடுகிறான்
அவன் அந்த எளிய செயலை
எப்படியோ கண்டுபிடித்துவிட்டான்
எல்லோருக்கும் மறந்துபோன ஒன்று
அவனுக்கு எங்கிருந்தோ
நினைவுக்கு வந்துவிட்டது


நான் இதை
திரும்பத் திரும்ப யோசிக்கிறேன்
ஒரு புனிதர்
என்னைத் தொடுவதற்கு முன்பு
கடைசியாக  யார் என்னைத் தொட்டார்கள் என்று

என் அன்னையா
என் இளம்பருவத்து தோழியா
எனது சின்னஞ் சிறு நாய்க்குட்டியா?

நோக்கமில்லாமல்
பசியில்லாமல்
திட்டமில்லாமல்
தொடுவது பற்றி நமக்கு
எந்தப் பயிற்சியும் இல்லை

ஒரு மனிதன்
இன்னொரு மனிதனைத் தொடுவது
எவ்வளவு ஆபாசமானதாக மாறிவிட்டது
அது ஒரு பலவந்தம்
அது ஒரு குற்றம்
அது ஒரு தாக்குதல்
அது ஒரு அத்து மீறல்

நான் ஒரு கைகலுக்கலுக்குப் பிறகு
என் கைகளை உற்றுப் பார்கிறேன்
ஒரு புனிதன்
அப்படிச் செய்வதில்லை
அவனுக்கு நோய்க் கிருமிகளைக் கண்டு
பயமே இல்லை

நான் ஒரு பெண்ணைத் தொடுகிறேன்
அவள் கசக்கப்படுகிறாள்
திரும்பத் திரும்ப குளிக்கிறாள்
ஒரு இழிவான வசைச் சொல்லை பயன்படுத்துகிறாள்
ஒரு புனிதன்
ஒன்றுமே செய்வதில்லை
ஒரு ஆணைத் தொடுவதுபோலவே
ஒரு பெண்ணைத் தொடுகிறான்


நாம் குழந்தைகளைத் தொட
முய்ற்சிக்கிறோம்
அவர்கள் ஒருபோதும்
நம் கைகளுக்கு கிடைப்பதே இல்லை
மீறி அவர்களை பலவந்தமாகத் தொடுகிறோம்
அவர்கள் வாழ் நாள் முழுக்க
தொடுதலைப்பற்றிய அச்சமுடையவர்களாகிறார்கள்
ஒரு புனிதன் நம்மைத் தொடுகிறான்
ஒரு குழந்தை நம்மைத் தொடுவது போல


ஒரு எளிய செயல்
அதைப்போல அவ்வளவு எளியது
வேறு எதுவுமே இல்லை
அதை நாம் நிரந்தமாக இழந்துவிட்டிருகிறோம்
அதற்காக அவ்வளவு காத்திருக்கிறோம்
அதை
அவ்வளவு பாவமுடையதாக்கியிருகிறோம்
அவ்வளவு புனிதமுடையதாக்கியிருகிறோம்

- மனுஷ்ய புத்திரன்

Saturday, March 29, 2014

காலத்தின் திரைச்சீலை - ட்ராட்ஸ்கி மருது.

இந்தியாவின் ஆகச் சிறந்த ஓவியர்களின் வரிசையில் ட்ராட்ஸ்கி மருதுவுக்கு எப்போதும்  நிரந்தரமாய் ஓரிடம் உண்டு. அவர் தமிழனாய் இல்லாமல் வடக்கே பிறந்திருந்தால் இன்னேரத்திற்கு கொண்டாடித் தீர்த்திருப்பார்கள்....என்னுடைய சேகரிப்புக்காக அவரெழுதிய சில படங்கள்.....


வாழ்க்கையைக் கொண்டாடியவர்!

வாழ்க்கையைக் கொண்டாடியவர்!
சாரு நிவேதிதா, ஓவியம்: பாரதிராஜா
குடித்து ரொம்பக் காலம் ஆயிற்றே என்று, சென்ற வாரத்தில் ஒருநாள் மதியம் ரெமி மார்ட்டினுடன் அமர்ந்தேன். தொட்டுக்கொள்ள ஒரு சாலட் செய்தேன். தக்காளி, வெங்காயம், முள்ளங்கி, கோவைக்காய், ஸுக்னி, ஆலிவ் காய், முட்டைக்கோஸ், கேரட் (துருவியது), கேப்ஸிகம் ஆகிய ஒன்பது அயிட்டங்களை பொறுமையாக வெட்டிப் போட்டு, எலுமிச்சைப் பழம் பிழிந்து செய்த சாலட். அப்போதுதான் குஷ்வந்த் சிங்கின் மரணச் செய்தி வந்தது. 'என்ன ஓர் ஒற்றுமை?!’ என்று நினைத்துக்கொண்டேன்.
குஷ்வந்த், தன்னை ஒரு குடிகாரன் என்றும், ஸ்த்ரீலோலன் என்றும் சொல்லிக்கொண்டவர். 'எனக்கு ராகிமால்ட் வேண்டாம்; சிங்கிள் மால்ட் விஸ்கி போதும்’ என்பார். பெண்களைப் பற்றி, தனது 97-ம் வயது முடிந்தபோது இப்படிச் சொன்னார், 'பெண்களை தாயாகவும், சகோதரியாகவும், புதல்வியாகவும் கருதும் இந்திய மனோபாவத்தை என்னால் எந்தக் காலத்திலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பெண்களின் வயது என்னவாக இருந்தாலும், அவர்கள் எனக்கு போகப் பொருள்களே!’
ஆனால் வேடிக்கை என்னவென்றால், குஷ்வந்த் தன்னை எப்படிக் காண்பித்துக்கொண்டாரோ அப்படி இல்லை. குடியை எடுத்துக்கொள்வோம். இளமையில் நீண்ட காலம் லண்டனில் வாழ்ந்த தாலோ என்னவோ, அவர் ஐரோப்பியர்களைப் போலவே குடித்தார். அவரைப் போல் அவர் ஒருவர்தான் குடிக்க முடியும். மாலை 7 மணிக்கு ஆரம்பித்து 8 மணி வரை மூன்று பெக். அதுவும் ஸ்காட்ச். அவர் கலந்துகொள்ளும் விருந்துகளிலும் இதே முறையைத்தான் பின்பற்றுவார். அவருடைய இல்லத்தில் அவர் மற்றவர்களுக்குக் கொடுக்கும் விருந்திலும் இதே கதைதான். 7 மணியில் இருந்து 8 மணி வரை மூன்று பெக். 8 மணிக்கு இரவு உணவு. 9 மணிக்கு எல்லோரும் கலைந்துவிட வேண்டும்.
90 வயது வரை இப்படி மூன்று பெக். பிறகு, 95 வரை இரண்டு பெக். அதற்குப் பிறகு 99 வயதில் இறப்பதற்கு முந்தின இரவு வரை ஒரு பெக். இரவு 10 மணிக்குப் படுத்து, காலை 4.30 மணிக்கு எழுந்துவிடுவார். காலையில் டென்னிஸ் விளையாட்டு. குளிர் காலமாக இருந்தால், லோதி கார்டனில் வாக்கிங். கோடையாக இருந்தால், ஒரு மணி நேரம் நீச்சல்.
குஷ்வந்த் குடிக்கும் ஸ்காட்ச் விஸ்கிதான் எல்லோருக்கும் தெரியுமே தவிர, அவருடைய அன்றாட வாழ்வில் இருந்த 'ராணுவ ஒழுங்கு’ பற்றி அதிகம் பேருக்குத் தெரியாது.
1969-ல் தொடங்கி ஒவ்வொரு வாரமும் அவருடைய 99-வது வயது வரை அவர் ஒரு பத்தி எழுதினார். அதாவது, 44 ஆண்டுகள் இடைவிடாமல் வந்த அந்தப் பத்தியின் முகப்பில் ஒரு 'பல்ப்’ படம் இருக்கும். பல்புக்குள் குஷ்வந்த் எழுதிக்கொண்டு இருப்பார். அருகே நிறைய புத்தகங்கள் குவிந்திருக்கும். ஒரு பக்கம், அவருக்கு இஷ்டமான ஸ்காட்ச் விஸ்கி பாட்டில் இருக்கும். ஆனால், குடியை கொண்டாட்டத்தின் அடையாளமாக நினைக்கும் பலரால், இப்படிப்பட்ட ஒழுங்கான வாழ்க்கையை வாழ முடியுமா? 99 ஆண்டுகள் நீடித்த அவருடைய வாழ்க்கையில், இந்த ஒழுங்கை அவர் ஒரு நாள்கூடத் தளர்த்தியது கிடையாது.
தேதான் பெண்கள் விஷயத்திலும். 'பெண்களைப் போகப் பொருள்களாக நினைக்கிறேன்’ என்று அவர் சொன்னாலும், அவர் எப்போதுமே பெண்களின் நேசத்துக்கு உரியவராகவே இருந்தார். காரணம், நம்ப முடியாத அளவுக்கு அவர் வெளிப்படையாக இருந்தார்.
அவர் மும்பையில் இருந்தபோது தேவயானி என்கிற சினிமா நிருபர், அவரின் நெருங்கிய தோழி. இரண்டு பேரும் சேர்ந்து Stag Partyக்கெல்லாம் போவார்கள். Stag Party என்றால், ஆண்கள் மட்டுமே கலந்துகொள்வது. (அந்த பார்ட்டியில் நீலப் படம் எல்லாம் போடுவார்கள் என்று எழுதுகிறார் குஷ்வந்த்!) தேவயானி ஒருமுறை, 'தர்மேந்திரா தினமும் இரண்டு நடிகைகளோடு 'கசமுசா’ செய்துவிட்டுத்தான் வீட்டுக்குப் போய் படுக்கை அறையில் தன் மனைவியோடு 'ஹோம் வொர்க்’ செய்கிறார்!’ என்று எழுதிவிட்டார். உடனே தர்மேந்திரா, தேவயானியைப் போய்ப் பார்த்து அவர் கன்னத்தில் அறைந்துவிட்டார். தேவயானி, போலீஸில் புகார் செய்ய, விஷயம் பத்திரிகைகளில் தலைப்புச் செய்தி ஆகிவிட்டது. இந்தச் சம்பவம் குறித்து குஷ்வந்த், 'தர்மேந்திராவின் இடத்தில் நான் இருந்தால், நானும் அவர் செய்ததையே செய்திருப்பேன்’ என்று எழுதினார். ஆனால், அதற்குப் பிறகும் தேவயானியும் குஷ்வந்த்தும் நண்பர்களாகத்தான் இருந்தார்கள்.
குஷ்வந்த்தை ஏன் பெண்கள் நேசித்தார்கள் என்பதற்கு, அவரது வாசகியான பிரேமா சுப்ரமணியம் பற்றி அவர் எழுதியிருப்பதில் இருந்து இன்னொரு யூகம் கிடைக்கிறது. அவரது நட்பு எந்த நிபந்தனையும் இல்லாமல் இருந்தது என்பதே காரணம். பிரேமா, 20 ஆண்டுகளுக்கு முன்பு  சென்னை ஹிக்கின்பாதம்ஸில் விற்பனைப் பிரதிநிதியாகப் பணிபுரிந்தவர். பிறகு, கணவருடன் அமெரிக்கா சென்றுவிட்டார். குஷ்வந்த்துக்கு, பிரேமா ராக்கி கட்டிய சகோதரி. 'பிரேமாவின் ஒவ்வொரு கடிதமும் 30 பக்கங்களுக்குக் குறையாமல் இருக்கும்’ என்று சொல்லும் குஷ்வந்த், 'பிரேமா அமெரிக்கா சென்ற பிறகு, அப்படி ஒரு பிராமணத் தமிழ் சகோதரியைச் சந்திக்க முடியவில்லை!’ என்று எழுதுகிறார்.
குஷ்வந்த் சிங், இதுவரை 85 புத்தகங்கள் எழுதியிருக்கிறார். (அதில் 'பாகிஸ்தானுக்குப் போகும் ரயில்’ ஒவ்வொரு இந்தியனும் படிக்க வேண்டிய நாவல்.) இந்தப் புத்தகங்களில் அவர் வலியுறுத்தும் அடிப்படையான விஷயம் 'வாழ்க்கையைக் கொண்டாடுங்கள்!’ என்பதுதான். இயல்பிலேயே அழுகுணிகளான இந்தியர்களுக்கு குஷ்வந்த்தின் வாழ்க்கை ஒரு சாகசத்தைப் போலவே இருந்தது. ஆனால், சீக்கியர்களின் இயல்பான குணமே கொண்டாட்டம்தான். 'காவோ... பீயோ... மௌஜ் கரோ!’ என்பார்கள். 'சாப்பிடு... குடி... கொண்டாடு!’ என்று பொருள்.
குஷ்வந்த், சீக்கியராகப் பிறந்தது அவர் அதிர்ஷ்டம் என்றே சொல்ல வேண்டும். ஏனென்றால், பெண்களைப் பற்றி அவர் சொன்னதைப் போல் நான் தமிழில் சொன்னால் புலனாய்வுப் பத்திரிகையில் என் புகைப்படத்தைப் போட்டு காமக்கொடூரன் என்று எழுதிவிடுவார்கள். முன்பு என்னுடைய வலைதளத்தில், 'I like wine, women and gods’ என்று பதிந்தேன். அதைப் பார்த்துவிட்டுப் பலரும் என்னைப் பற்றி 'செக்ஸ் சைக்கோ’ என்று எழுதியதும், அதை நீக்கும்படி ஆயிற்று. பாலியல் குற்றவாளிகளுக்கும் கலைஞர்களுக்கும் வித்தியாசம் தெரியாத சமூகத்தில், குஷ்வந்த்தைப் போல் என்னால் வெளிப்படையாக எழுத முடியவில்லை என்பது என் வருத்தங்களில் ஒன்று.
வாழ்க்கையைக் கொண்டாடுதல் என்பதை 'Hedonism’ என்பார்கள். இந்திய எழுத்தாளர்களிலேயே ஹெடோனிஸ்டாக வாழ்ந்த ஒரே எழுத்தாளர் குஷ்வந்த். ஆனால், ஹெடோனிஸம் வெகு எளிதில் தவறானப் புரிதலைத் தரக்கூடிய தாகவும் இருக்கிறது. கொண்டாட் டம் என்றால், தன்னையும் அழித்துக் கொண்டு அடுத்தவரையும் துன் புறுத்துதல் என்றே பலருக்கும்  அர்த்தமாகி இருக்கிறது. மது, இசை, பக்தி, மரணம் என்று எதை எடுத் தாலும் இந்தியர்களுக்கு அதீத மாகவும் சத்தமாகவும் இருக்க வேண்டும். வெளிநாடுகளில் நம்மவர்களைப் பற்றி சொல்லும்         முக்கியமான குற்றச்சாட்டு இதுதான்.
பொதுவாக, ஹெடோனிஸத்தைத் தவறாகப் புரிந்துகொண்டவர்கள், தங்களது ஒழுங்கற்ற வாழ்க்கை முறையால் 50 வயதிலேயே மரணத்தைத் தொட்டுவிடுவார்கள். ஆனால், குஷ்வந்த் 99 வயது வரை கொண்டாட்டமாக வாழ்ந்தார். அவருக்கு நண்பர்கள் கூட்டம் அதிகமாக இருந்த அதே சமயம், அவர் ஒரு தனிமை விரும்பியாகவும், அமைதியை நேசிப்பவராகவும் இருந்தார்.

100 வயது வரை வாழ்வது எப்படி என்பதற்கு, அவர் பலமுறை டிப்ஸ் கொடுத்திருக்கிறார். தினசரி உடற்பயிற்சி, கடுமையான உணவுக் கட்டுப்பாடு, காலை-மாலை தியானம், அளவான, உயர்தரமான மது, உள்ளன்று வைத்துப் புறம் ஒன்று பேசாமல் கூடியவரை உண்மையே பேசுதல் என்று பட்டியலிட்டுவிட்டு, கடைசியாக ஒன்று சொல்கிறார்... 'ஜீவகாருண்யம்! பலரும் இந்த வார்த்தையைக் கேள்விப்பட்டிருப்பார்களே தவிர, இதைத் தங்கள் வாழ்வில் கடைப்பிடிக்க மாட்டார்கள். நாய், பூனை போன்ற வாயில்லா ஜீவன்களுக்கு உணவிடுதல் உலகின் மேலான காரியங் களில் ஒன்று’ என்கிறார். 'பேராசை, வெறுப்பு, துவேஷம், சுயநலம் போன்றவற்றை நம்மிடம் இருந்து அகற்ற சிறிதளவும் முயற்சி செய்யாமல், வழிபாட்டுத் தலங்களுக்குச் சென்று சுமார் நான்கு மணி நேரம் வரிசையில் நின்று தரிசிப்பதால் என்ன பயன்?’ என்று கேட்கிறார் குஷ்வந்த்.
குஷ்வந்த், ஓர் எழுத்தாளராக மட்டும் இல்லாமல், வாழ்க்கை பற்றிய பார்வையையே மாற்றிய என் ஆசான்களில் ஒருவராகவும் இருந்தார். அவரிடம் இருந்து நான் கற்றுக்கொண்ட பல்வேறு விஷயங்களில் முக்கியமானது, புனிதம் என்று எதுவும் இல்லை. எல்லாமே விமர்சனத்துக்கு உட்பட்டவைதான் என்ற Iconoclasm. சிலர், மற்றவர்களை விமர்சிப்பார்கள். தனக்கு என்று வந்தால் புனிதமாகிவிடுவார்கள். ஆனால், குஷ்வந்துக்கு இந்தப் பாகுபாடே கிடையாது. அவரைப் பொறுத்தவரை கடவுளாக இருந்தாலும், இறந்து போனவர்களாக இருந்தாலும், தானாக இருந்தாலும் எல்லோருமே ஒன்றுதான்.
இரண்டு சம்பவங்களைக் குறிப்பிடலாம். செக்ஸ் பற்றி எழுதினால், இந்தியர்கள் உணர்ச்சிவசப்பட்டுத் திட்ட ஆரம்பித்துவிடுவார்கள். இதனால் குஷ்வந்த்துக்கு தினமும் ஆபாசக் கடிதங்கள் வருவது வழக்கம். 'என்னைத் திட்ட நினைப்பவர்கள் ஏன் என் வீட்டுப் பெண்களையே திட்டுகிறார்கள்?’ என்று கிண்டலாக ஒருமுறை குஷ்வந்த் குறிப்பிட்டார். நான் சொல்ல வந்தது அது அல்ல. ஒருமுறை, அவர் முகவரிக்கு தபால் அட்டை ஒன்று வந்தது. முகவரியில், 'குஷ்வந்த் சிங், பாஸ்டர்ட், இந்தியா’ என்று மட்டுமே இருந்ததாம். அதை ஃப்ரேம் போட்டு தன் அறையில் மாட்டிவைத்தார் குஷ்வந்த்.
எவ்வளவு பெரிய புத்திஜீவியாக இருந்தாலும் தன்னுடைய மரணத்தைப் பற்றி யோசிக்கும்போது பயம் வந்துவிடும். ஆனால், எதைப் பற்றியுமே கவலைப்படாத குஷ்வந்த், 30 வயதைத் தாண்டாத இளைஞராக இருந்தபோதே (1943-ல்) தன் கல்லறை வாக்கியம் எப்படி இருக்கும் என்று எழுதி வெளியிட்டார். அந்த வாக்கியத்தின் மொழிபெயர்ப்பு இது:
'கடவுளையோ, மனிதனையோ யாரையும் விட்டுவைக்காதவன் இங்கே உறங்குகிறான். யாரும் இவனுக்காகக் கண்ணீர் சிந்த வேண்டாம். ஏனென்றால், இவன் ஒரு பொறுக்கி. அசிங்கமாக எழுதுவது இவனுக்கு ஒரு விளையாட்டு. நல்லவேளை செத்துவிட்டான்... ரவுடிக்குப் பிறந்த ரவுடி!’
ஆனால், குஷ்வந்த் விரும்பியபடி அவர் புதைக்கப்படவில்லை. மண்ணில் இருந்து வந்த நாம் மண்ணுக்கே போவதுதான் சரி என்று சொல்லிக்கொண்டிருந்தார். பல நிர்வாகக் காரணங்களால் அவர் விருப்பம் நிறைவேறவில்லை. உயிரோடு இருந்திருந்தால் இதையும் கிண்டல் செய்து எழுதியிருப்பார்.
குஷ்வந்த் சிங் பற்றி சுருக்கமாகச் சொன்னால், அவரைப் படிப்பதற்கு முன்னால் எப்படி இருந்தோமோ, அதேபோல் அவரைப் படித்த பிறகும் இருக்க முடியாது!

Friday, March 7, 2014

ஒரு நாள் கூத்து!

கடந்த ஒரு வாரமாய் எந்தப் பக்கம் திரும்பினாலும் இந்த இம்சை தொடர்கிறது. போட்டிபோட்டுக் கொண்டு எல்லா ஊடகத்திலும் இதைப் பற்றிய விளம்பரங்களும், விவாதங்களும்தான். மேலொட்டமாய் பார்த்தால், இவர்கள் ஏதோ நல்லது செய்வதைப் போலத் தோன்றினாலும், அதன் அடியாழத்தில் கொச்சையான வர்த்தக நோக்கமும் , பாசாங்கும்தான் ஒளிந்து கிடக்கின்றன.

 ஒவ்வொரு வருடமும் இந்த சத்தங்கள் அதிகரித்துக் கொண்டேதான் போகிறது.  வருடம் தவறாமல் இத்தனை கூவுகிறார்களே, இந்த கூச்சல்களினால் சமூகத்தில் உருப்படியான மாற்றங்கள் ஏதும் நடந்திருக்கிறதா என்றால்  எதுவுமில்லை. நாக்கை பிடுங்கிக் கொண்டு சாகலாம் போலத்தான் இருக்கிறது நிதர்சனம். நேற்று பிறந்த குழந்தையில் இருந்து நாளைக்கு கட்டையில் போகப் போகிற உயிர் வரை யாருக்கும் பாதுகாப்பில்லாத நிலைதான் நீடிக்கிறது.

பிறகு என்ன கூந்தலுக்கு (இதை விட நாகரீகமான வார்த்தை இப்போதைக்கு நினைவில் வரவில்லை) இத்தனை ஆர்ப்பாட்டங்கள்.

நாளைக்கு சர்வதேச பெண்கள் தினமாம். 

ஒரு நாளைக்கு பெண்கள் தினம் கொண்டாடுவதை விடவும், பெண்களை தினமும் கொண்டாடுங்கள். உங்கள் வாழ்க்கை இனிதாகும்.  உலகம் அர்த்தமுள்ளதாகும்.

நான் கொண்டாட்ட ப்ரியன். :)

"We properly understand the miracle of life when we allow the unexpected to happen". - Paulo Coelho

Wednesday, February 5, 2014

விசாரணை

கவிஞர், எழுத்தாளர், மொழி பெயர்ப்பாளர் என பன்முகத் திறமையாளரான திரு.சுகுமாரன் எழுதிய கட்டுரை இது. எனது தனிப்பட்ட சேகரிப்புக்காக இங்கே பதிந்து வைக்கிறேன்.


விசாரணைமலையாள சமூக, பண்பாட்டு உலகங்களில் நூறு ஆண்டுகளுக்கும் மேலாகப் பேசப்பட்டு வரும் பெண்பாத்திரம் குறியேடத்து தாத்ரி. பாலியல் குற்றஞ் சாட்டப்பட்டு சமுதாயத்திலிருந்து விலக்கப்பட்ட தாத்ரி ஒவ்வொரு கட்டத்திலும் ஒவ்வொரு விதமாகப் புரிந்துகொள்ளப்பட்டவள்.நூற்றாண்டின் ஆரம்பத்தில் நெறி தவறிய காமக் குற்றவாளி. பின்னர் ஆணாதிக்க வெறிக்கு இரையான அப்பாவி. இன்று பெண்ணுரிமையின் முதல் மலையாளிக் குரல்.


பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் பிறந்து அடுத்த நூற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்து மறைந்த குறியேடத்து தாத்ரி கேரள சமூக வரலாற்றில் இன்றும் வாழ்கிறாள். ஆண் மேலாதிக்கம் அதன் எல்லா விதமான பிற்போக்குக் குணங்களுடனும் பரவியிருந்த சமுதாயத்தில் ஓர்  அபலைப்பெண் தனது உடலையே ஆயுதமாக்கி நடத்திய கலகம், குற்றஞ் சாட்டியவர்களையே  குற்றவாளிகளாக்கியது.அன்றைய சமூகக் கட்டுப் பாடுகளையும் அநீதியையும் சவாலுக்கு அழைத்த  தாத்ரி விரட்டப் பட்டாள். வாழ்வின் இறுதிக் காலங்களில் அவளுக்கு என்ன நேர்ந்தது என்று புறவுலகுக்குத் தெரியவில்லை. ஆனால் தாத்ரியின் முடிவிலிருந்துதான் கேரள சமூக வாழ்க்கையின்  மறுமலர்ச்சிக் காலத்தில் முக்கியமான அத்தியாயங்களில் ஒன்று ஆரம்பமானது.


இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கேரளத்தில் நிலவிய மேற்சாதி ஒழுக்க விதிகள்  பெண்ணை போகச்சரக்காக மட்டுமே கையாண்டன. பிற ஆணுடன் தொடர்புகொண்டிருந்த பிழைக்காக தாத்ரிக்குட்டி என்ற நம்பூதிப் பெண்மீது விசாரணை நடத்தி சமூக விலக்கு கற்பிக்கப் பட்டது. இந்த சம்பவம் நடந்தது 1905 இல். அந்த சமுதாய விசாரணையின்  நோக்கத்தையும் நடை முறையையும் விளைவுக¨ளையும் அறிந்துகொள்ளும் முன்பு அந்தக்காலத்தின் பண்பாட்டுச் சூழலையும் ஆண்-பெண் உறவுமுறையின் இயல்பையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.இன்று ஒருங்கிணைந்த மாநிலமாகவுள்ள கேரளம் சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்தில் மூன்று முக்கிய நிலப்பகுதிகளாகப் பிரிந்திருந்தது. வடக்குப் பகுதி மலபார். மத்தியப் பகுதி கொச்சி சமஸ்தானத்துக்கு உட்பட்டது. தென்பகுதி திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் ஆளுகை யிலிருந்தது. ஆனால், மூன்று பிரதேசங்களிலும் கலாச்சாரக் கட்டுமானம் மட்டும் பொதுவானதன்மைகொண்டிருந்தது. சமுதாயத்தில் ஆணின் ஆதிக்கம் மேலோங்கி யிருந்தது.பெண்களும் கீழ்ச்சாதியினரும் வளர்ப்பு விலங்குகளாகவே பராமரிக்கப்பட்டனர். 

இந்தக் கொடுமைக்கு எதிரான முதல் போராட்டம் 1859 இல் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் நடந்தது. பிற்பட்ட வகுப்பினராக ஒதுக்கப்பட்ட சாணார் இனத்தவர் தங்களது பெண்கள் மார்பை சீலையால்மறைத்துக்கொள்ள உரிமைகோரிப் போராடி வெற்றி பெற்றனர். பெண்ணின் மானம் என்பது அடிப்படையில் ஆணின் மரியாதையும் சமூகத்தின் கௌரவமும் மானிட மதிப்பீடுகளின் தேவையும் என்று உணரவைத்த போராட்டம் அது. இந்த விழிப்புணர்வின் கனலிலிருந்து படர்ந்த சுவாலைகள் தாம் நாராயண குருவும் அய்யங்காளியும். நாராயண குரு 1903இலும் அய்யங் காளி 1905இலும் சமுதாய மறுமலர்ச்சிக்கான அமைப்புகளைத் தோற்று வித்தனர்.

ஆனால் அதே காலப்பகுதியில்தான் கேரள சமூக அமைப்பின் மேல்தட்டி லிருந்த உயர் சாதியான நம்பூதிரி சமுதாயம் பெண்களை அடுப்படிக்குள் வேகவைத்துக்கொண்டிருந்தது. வெளி உலகில் பரவலாகியிருந்த மாற்றத்தின் அதிர்வுகள் நம்பூதிரி இல்லங்களில் நுழைய அனுமதிக்கப் படவில்லை. நிலவுடைமை பிடிநழுவாமலிருக்கவும் பிராமணீய அதிகாரம் பறிபோகாமலிருக்கவும் காபந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டன. கலாச்சார
ஆதிக்கத்தை வலுவாக்க விதிகள் இறுக்கப்பட்டன. அந்த இறுக்கத்தில் நம்பூதிரிப் பெண்கள் நெரிபட்டனர்.

நம்பூதிரி இல்லங்களில் மூசாம்பூரி என்று அழைக்கப்படும் மூத்த நம்பூதிரி மட்டுமே திருமணம் செய்துகொள்ள அனுமதிக்கப் படுவார். அவருக்கு இளையவர்களான நம்பூதிரிகள் கோவில் ஊழியக்காரர்களான அம்பல வாசிகளின் வீட்டுப் பெண்களையோ நாயர் தறவாட்டுப் பெண்களையோ சம்பந்தம் செய்துகொள்ளலாம். சொத்துக்கள்மீதும் பெண்கள்மீதும் முழுஅதிகாரமுள்ள மூசாம்பூரி வயதைப் பொருட்படுத்தாமல் எட்டோ பத்தோ பெண்களை 'வேளி' (கல்யாணம்) நடத்திக் கொள்வார். விளைவு? குழிக்குப் போகிற பிராயமுள்ள நம்பூதிரிக்கு முந்தா நாள் பூப்படைந்த மணப்பெண். நம்பூதிரி இல்லங்கள் உதாசீனம் செய்யப்பட்ட பெண்களால் நிரம்பிய இருண்ட தொழுவங்களாக நின்றன.

திருமணம் என்ற பெயரால் இல்லத்தில் அடைக்கப்பட்டவர்களின் சக்களத்திப் போர்,நிறைவு செய்யப்படாத பாலியல் வேட்கை ஆகியவை பெண்களை முடக்கின.இளம் விதவைகளின் பெருமூச்சுகளால் இல்லத்தின் அகாயிகள் (உள் அறைகள்) தீச்சூளைகளாயின.மணமாகாத நம்பூதிரிப் பெண்கள் (நம்பூதிரிப் பெண்களுக்கு அந்தர்ஜனம் என்று பெயர்) கனவுகளையும்ஆசைகளையும் விழுங்கி கன்னியராக முதிர்ந்தனர்.கூந்தல் நரைத்து, உடல் குன்றி சாவுக்காகக் காத்துக் கிடந்தனர். அப்படி இறந்துபோகும் முதிர் கன்னிகளால் குலத்துக்கு சாபம் வந்து விடாமலிருக்க அந்த பிணத்துடன் உடலுறவுகொள்ள வெளியிலிருந்து கீழ்ச்சாதிக்காரர்களான 'நீசர்கள்' அமர்த்தப்பட்டனர்.இந்த தோஷ பரிகாரம் 'நீச கர்மம்' என்று அழைக்கப்பட்டது.

பண்பாட்டு விதிகளில் ஆண்களுக்கு நிரந்தர சலுகையிருந்தது. ஒரு நம்பூதிரிப் பெண் அந்நிய ஆடவனுடன் தொடர்புகொண்டால் அவள் களங்கப்பட்டவள். அவள் மீது சமுதாய விசாரணை நடத்தப்படும். இந்த விசாரணைக்கு 'ஸ்மார்த்த விசாரம்' என்று பெயர். நம்பூதிரி கிராம சபைகளின் நடவடிக்கை களைச் செய்யும் ஸ்மார்த்தர்களும் மீமாம்சகர்களும் அடங்கிய குழு அந்தர் ஜனத்தின் ஒழுக்கக்கேட்டை விசாரிக்கும். அதற்குத் தோதாக குற்றம் சாட்டப்பட்ட பெண் தனியறையில் அடைக்கப்படுவாள்.உறவினர் எவரும் அவளை நெருங்கவோ உணவோ தண்ணீரோ கொடுக்கவோ அனுமதிக்கப் படமாட்டார்கள். இருண்ட அறையில் ஒண்டிக்கிடக்கும் 'குற்றவாளி'க்கு அவளுடைய தாசி(பணிப்பெண்) மட்டும் உதவலாம்.காமக்குற்றம் சாட்டப்பட்ட பெண் 'சாதனம்' என்று அழைக்கப்பட்டாள். சாதனம் தனது குற்றத்தை ஒப்புக் கொள்ளச் செய்ய பலவிதமான உபாயங்கள் பிரயோகிக்கப் பட்டன. பாயோடு சுருட்டிக்கட்டி மாளிகையின் மேலிருந்து அவளை எறிவது ஒருமுறை.அவளை அடைத்துவைத்திருக்கும் அறைக்குள் விஷ ஜந்துக்களை விடுவது இன்னொரு உபாயம்.இந்த தண்டனைகளிலிருந்து  தப்பினால் அவள் நிரபராதி. ஆனால் அப்படி யாரும் தப்பியதில்லை.விஷப் பிராணிகளுக்கு ஒழுக்க விதிகள் பற்றிய ஞானமில்லாததே காரணம்.

அடைக்கப்பட்டிருக்கும் 'சாதன'த்தை ஸ்மார்த்தர்களின் பஞ்சாயத்து விசாரிக்கும்.உயிர் வற்றி உடல் ஒடுங்கிய சாதனம் பெரும்பாலும் குற்றத்தை ஒப்புக்கொள்ளும்.தன்னைப் போகித்தவன் யார் என்று சொல்லிவிடும். அத்துடன் சாதனம் இல்லத்திலிருந்தும் சமுதாயத்திலிருந்தும் விலக்கப் படும். இல்லத்திலிருந்து வெளியேற்றி கதவை அடைத்து பிண்டம் வைக்கப்படும்.நீத்தாருக்கான சடங்கு அது.இனி அவள் உயிரற்றவள். இறந்தவள். இல்லத்தி லிருந்து எறியப் பட்ட சாதனத்தை பிரம்மனின் சந்ததிகளல்லாத எந்த நீசனும் பொறுக்கிக்கொள்ளலாம்.ஆனால் அதற்கு யாரும் முன்வந்ததில்லை.தொழில் அதிகாரத்தை வைத்திருக்கும் மேற்சாதியுடன் மோதிக்கொள்ளத் துணிந்த தில்லை.

சமுதாயத்திலிருந்து பிரஷ்டம் செய்யப்பட்ட பெண்கள் திசையறியாத ஏதோ நிலப்பரப்பில் மண்ணில் புதைந்து மக்கிப்போயிருக்கலாம். எரிந்து சாம்பலாகிக் கார்றில் கரைந்திருக்கலாம். அவர்களுக்கு வரலாறு இல்லாமற் போயிற்று.இந்த சமுதாய அநீதிகளைத் தனது உடலை ஆயுதமாகவும் அவர்கள் சுமத்திய குற்றச்சாட்டுகளையே தந்திரோபாயமாகவும் மாற்றிஎதிர்கொண்டதன் மூலம் வரலாற்றுப் பாத்திரமானவள் குறியேடத்து தாத்ரிக் குட்டி.பத்தொன்பதாம் நூற்றாண்டின் எண்பதுகளில் அரங்கோட்டுக் கரையில் கல்பகசேரி இல்லத்தில் அஷ்டமூர்த்தி நம்பூதிரியின் மகளாகப் பிறந்தவள் சாவித்திரி. பிடிவாதக்காரக் குழந்தையாக வளர்ந்தாள். பெண்கள் கல்வி கற்பது ஆசாரத்துக்கு ஒவ்வாததாகக் கருதப்பட்ட காலத்தில் அருகிலிருந்த குரு குலத்தில் படிக்க அந்தப் பிடிவாதம் துணைசெய்தது. தர்க்க புத்தியுடனும்சுதந்திர வாஞ்சையுடனும் வளர்ந்த பெண் பூப்படைந்தபோது தீச்சுடரின் அழகுடன் ஒளிர்ந்தாள். உடல் மலர்வதற்கு முன்னும் உடல் மலர்ந்த பின்னும் அவளை மோகித்து கலந்தவர்கள் பலர் என்று செவிவழிக் கதைகள் சொல்கின்றன.

தாத்ரியை வேளி முடித்து அனுப்பியது குறியேடத்து இல்லத்துக்கு. அவ்வாறு வெறும் சாவித்திரிக் குட்டி குறியேடத்து தாத்ரியாகிறாள்.அவளை மணந்தவர் குறியேடத்து இல்லத்தை சேர்ந்த இரண்டாம் சந்ததியான ராமன் நம்பூதிரி. இந்த மணஉறவில் ஒரு சதி மறைந்திருந்தது.

நம்பூதிரிக் குடும்பங்களில் மூத்தவரான மூசாம்பூரிக்கு மட்டுமே திருமணம் செய்துகொள்ளும் உரிமை.இரண்டாமவரான அப்பன் நம்பூதிரி திருமணம் செய்துகொள்ள வேண்டுமென்றால் வேத விதிப்படி ஒரே ஒரு வழியிருந்தது. மூசாம்பூதிரியால் தாம்பத்தியத்தில் ஈடுபட்டு வாரிசை உற்பத்தி செய்ய முடியாமலிருந்தாலோ தீராத நோயிருந்தாலோ அவரது அனுமதியுடன்வைதிகமுறைப்படி பரிகாரங்கள் நடத்திய பின்பு இரண்டாமவர் மணமுடித்துக் கொள்ளலாம். குறியேடத்து நம்பியாத்தன் நம்பூதிரி தீராத நோயாளியாக இருந்தார்.அதனால் ராமன் நம்பூதிரிக்கு தாத்ரியை மணந்துகொள்ள முடிந்தது. ஆனால் முதலிரவில் அவளுடன் உறவுகொண்டவர் மூசாம்பூதிரி. தாத்ரியின் கனவுகள் பொசுங்கின. மனம் துவண்டது.உடல் களவாடப்பட்டது. அந்த கொடூர நொடியில் தாத்ரி வெஞ்சினப் பிறவியானாள்.தன்னை வஞ்சித் தவர்களைப் பழிவாங்க தனது உடலை ஆயுதமாக்கினாள். அவளது மாமிசப் பொறியில் பல ஆண்கள் சிக்கினர்.

தாத்ரியின் துர்நடத்தை ஊர்ப்பேச்சாக மாறியது.கொச்சி சமஸ்தானத்தின் ராஜா விசாரணைக்கு அனுமதியளித்தார். தாத்ரியை முன்னிருத்திய ஸ்மார்த்த விசாரம் நாற்பது நாட்கள் நீண்டது. தன்னைக் காமப்பிழைக்கு ஆளாக்கியவர்களைப் பற்றி முப்பத்தியொன்பது நாட்கள் எதுவும் பேசாம லிருந்தாள் தாத்ரி. அப்படிப் பேசாமலிருப்பது ஒருதலைப்பட்சமான தீர்ப்பில் முடியும். தான்மட்டுமே குற்றத்தின் பாரத்தைச் சுமக்கவேண்டியிருக்கும் என்ற உள்ளுணர்வில் நாற்பதாம் நாள் தன்னோடு கிடந்தவர்களை அடையாளம் காட்டினாள்.அவள் பகிரங்கப்படுத்திய வரிசையில் அறுபத்தி நான்கு புருஷர் களின் பெயர்கள் இருந்தன.அறுபத்தி ஐந்தாவது பெயரைச் சொல்வதற்கு முன்பு பணிப்பெண்ணிடம் ஒரு மோதிரத்தைக் கொடுத்து சபையில் காட்டச் சொன்னாள். 'இந்தப் பெயரையும் சொல்லவேண்டுமா?' என்று அவள் கேட்டதும் ஸ்மார்த்தனும் மீமாம்சகனும் மகாராஜாவும் அதிர்ந்து நடுங்கினர். அந்த நொடியில் ஸ்மார்த்த விசாரம் முடிந்தது. தாத்ரியுடன் உறவுகொண்ட அறுபத்தி நான்கு ஆண்களும் விலக்கு கற்பித்து நாடு கடத்தப்பட்டனர். தாத்ரிக் குட்டிக்குப் பிண்டம் வைக்கப்பட்டது. அவளுடைய முதுகுக்குப் பின்னால் மரண ஓலத்துடன் கதவு அறைந்து மூடப்பட்டது. அவள் இறந்து போனவர் களில் ஒருத்தியாகக் கருதப்பட்டாள்.

தாத்ரி வெளிப்படுத்திய அறுபத்தி நான்கு பெயர்களில் எல்லா வயதினரும் இருந்தனர். உறவினர்கள் குடும்பத்துடன் நெருங்கிய தொடர்புள்ளவர்கள், அண்டை வீட்டவர்கள்,கல்வி கற்பித்த குரு,இல்லத்துக்கு வந்துபோன இசைவாணர்கள், கதகளிக் கலைஞர்கள் என்று எல்லா ஆண்களும் இருந்தனர். அதிர்ச்சியளிக்கும் விதத்தில் பெற்ற தகப்பனின்பெயரும் உடன்பிறந்த சகோதரனின் பெயரும் இருந்தன. தாத்ரி சொன்னவர்களில் பாதி அவளை வீழ்த்தியவர்கள். மறுபாதி அவளால் வீழ்த்தப்பட்டவர்கள். அவள் சொல்லாமல்விட்ட அறுபத்தி ஐந்தாவது பெயர் கொச்சி மகராஜாவின் பெயர் என்றும் ராஜாவுக்கு நெருக்கமுள்ள நபரின் பெயர் என்றும் நிரூபணம் செய்யப்படாத ஊகங்கள் நிலவின.இன்றும் அது விடுவிக்கப்படாத புதிர்.

குறியேடத்து தாத்ரி சம்பவத்துக்கு முன்பும் சில அந்தர்ஜனங்கள் பிரஷ்டம் செய்யப்பட்டிருக்கிறார்கள். வாயில்லாப் பிராணிகளாக தண்டனையை ஏற்றுக்கொண்டு மடிந்து காலத்தின் புழுதியாக அவர்கள் மறைந்தனர்.தாத்ரி குட்டி மட்டுமே எதிர்விசாரணைக்குத் தயாரானவள். தன்மீது சுமத்தப் பட்ட குற்றத்தின் ம்றுபக்கத்தை அம்பலப்படுத்தி தார்மீக உறுத்தலை உண்டாக்கியவள். ஆணாதிக்க மனோபாவத்தையும் பெண்ணுக்கு விரோதமான சாதியொழுக்க விதிகளையும் கேலிக்குள்ளாக்கியவள்.எந்த உடல் பாவக்கறை படிந்தது என்று உதாசீனமாகச் சொல்லப்பட்டதோ அதே உடலை ஆயுதமாக தாத்ரி மாற்றினாள். எந்த ஒழுக்க விதிகள் தன்னைக் குற்றவாளி என்று தீர்ப்பளித்தனவோ அதேவிதிகளை தனது பிரதிவாத மாக்கினாள். 'குலப்பெண்ணுக்குத்தான் பிரஷ்டம். எப்போது ஒரு குலப் பெண்ணை நடத்தை கெட்டவள் என்று தீர்மானிக்கிறீர்களோ அப்போதே அவள் அந்தத் தகுதியிலிருந்து கீழே தள்ளப்பட்டு வேசியாகிறாள். வேசியின் தர்மத்தைக் கேள்வி கேட்கவோ அவளைத் தண்டிக்கவோ ஸ்மார்த்த சபைக்கு என்ன அதிகாரம்?' என்ற தாத்ரியின் கேள்வியில் அன்று மிரண்ட சமுதாயம்  பின்னர் ஸ்மார்த்த விசாரம் நடத்தவில்லை.

நாடு கடத்தப்பட்ட அறுபத்து நான்கு ஆண்களில் ஒருவரைத் தவிர யாரும் பின்னர் சொந்த மண்ணுக்குத் திரும்பவில்லை. கதகளிக் கலைஞரான காவுங்ஙல் சங்கரப்பணிக்கர் மட்டும் சமுதாய விலக்கிலிருந்து விடுவிக்கப் பட்டார். தன்னை நாடுகடத்திய ராஜாவிடமிருந்து கலைக்காகப் பரிசு பெறுவதை சபதமாகக்கொண்டு தீவிர சாதகத்தில் ஈடுபட்டார். நாடுகடத்தப்பட்டவருக்கு மேடைகள் மறுக்கப்பட்டன. ஒருவேளைச் சோறோ  ஒரு மிடறு நீரோ தலைசாய்க்க ஒரு திண்ணையோ அகப்படாமல் அலைய நேர்ந்தது. எனினும் சங்கரப் பணிக்கர் தளரவில்லை. அறுவடை முடிந்த வயல் வெளிகளை அரங்காக்கி கதகளி நிகழ்ச்சிகளை நடத்தினார்.புரவலர்க ளல்லாத சாமானிய மக்கள் அவருக்கு ஆதரவளித்தனர்.அதுவரை கோவில்களின்கூத்தம்பலங்களிலும் நம்பூதிரி இல்லங்களிலும் தனி ரசனைக்குரிய கலையாக இருந்த கதகளி அவரால் பொது ரசனைக்குரிய ஊடகமானது. அந்தக் கலைஞரின் மறு அரங்கேற்றத்துக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்தன. கடைசியில் எந்த ராஜாதிகாரம் பிரஷ்டம் செய்ததோ அதே கொச்சிமகாராஜாவிடமிருந்து தனது கலைக்குரிய அங்கீகாரமாக பரிசும் பெற்றார் சங்கரப் பணிக்கர்.

தாத்ரி சம்பவத்தால் சமுதாயத்திலிருந்து விலக்கப்பட்ட பலரும் அவளைச் சபித்திருக்கிறார்கள். சபிக்காத நபர் சங்கரப் பணிக்கர். இருவருக்குமிடையில் பாலியல் ஈர்ப்பை மீறிய உறவு உருவாகியிருந்தது. ஒரு கலைஞனுக்கும் ரசிகைக்குமான உறவு. சங்கரப் பணிக்கர் கதகளியில் ஏற்ற பாத்திரங்க ளெல்லாம் பகன்,கீசகன் என்று அசுர இயல்புள்ள பாத்திரங்கள். அவற்றைச்சித்தரிப்பதில் முரட்டுத்தன்மையை மீறி சில அடவுகளில் பெண்மையின் சாயல் இருந்தது. அது தாத்ரியின் சிநேகம் அளித்த கொடை என்றும் கருதப் படுகிறது. மனித தேகமல்ல கலையின் பரவச நுட்பம்தான் தாத்ரியிடம் காதலையும் காமத்தையும் கிளரச் செய்திருக்கிறது.ஸ்மார்த்த விசாரம் நடத்தி பிரஷ்டு கற்பிக்கப் பட்ட குறியேடத்து தாத்ரிக்கு என்ன ஆயிற்று என்பது வாய்மொழிக் கதைகளிலிருந்தே அறியப்படுகிறது. தாத்ரி விசாரணை பற்றிய தகவல்கள் வில்லியம் லோகன் எழுதிய 'மலபார் கையேட்'டில் (மலபார் மானுவல்) விரிவாகக் குறிப்பிடப் பட்டுள்ளன. ஆனால் பின்கதைகள் அனைத்தும் மக்கள் பேச்சிலிருந்தே பெறப்படுகின்றன.சம்பவத்தோடு தொடர்புடைய பலரது பின் தலைமுறையினர் இன்றும் வாழ்கிறார்கள் என்ற நிலையில் வாய்மொழித் தகவல்களை பொய்யென்று தள்ளுபடி செய்வதும் தவறாகிவிடும்.

சமுதாயத்தால் விலக்கப்பட்ட பெண்ணைக் காப்பாற்றும் பொறுப்பு மகாராஜாவைச் சேர்ந்தது.கூடாவொழுக்கத்துக்காக தண்டிக்கப்பட்டவளை ஊர் மத்தியில் பராமரிப்பது ராஜ நீதிக்கு இழுக்கு என்பதால் புறம்போக்குப் பகுதியில் அவளுக்கான வீடும் நிலமும் ஒதுக்கப்படும். வைதீக நியதி அது. அதுபோன்று தாத்ரிக்கும் பெரியாற்றின் கரையில் மயானத்தையொட்டி இடம் ஒதுக்கப்பட்டது. அங்கே அவள் வாழ்ந்ததற்கான சான்றுகளில்லை. 1905 இல் இறந்து போகவில்லை என்பது மட்டும் நிச்சயம். முன் காலங்களில் பிரஷ்டம் செய்யப்பட்ட பிற பெண்களைப்போல தாத்ரியும் பாண்டிதேசத்துக்கு -தமிழ்நாட்டுக்கு- அடைக்கலம் தேடிப் போனாள் என்பது ஏற்றுக்கொள்ளப் பட்ட விவரம். தமிழ் நாட்டைச் சேர்ந்த ஆங்கிலோ- இந்தியர் ஒருவரை மணந்து மூன்று பிள்ளைகளுக்குத் தாயுமாகியிருக்கிறாள். இரண்டு பெண்களும் ஓர் ஆணும். மகள்களில் ஒருத்தி பாலக்காட்டிலும் மகன் சென்னையிலும் வாழ்ந்தார்கள். சென்னைவாசியான மகள் வயிற்றுப் பேத்தி நடிகையாக அறிமுகமாகி மலையாளத் திரையில் கால் நூற்றாண்டுக்கும் மேலாக நட்சத்திரமாக ஜொலித்திருக்கிறாள்.

அறுபத்தைந்து பேருடன் உடலுறவு கொண்டும் கர்ப்பமடையாத தாத்ரி மூன்று குழந்தைகளுக்குத் தாயானது உயிரியல் விந்தையா? மனதின் தந்திரமா? என்பது இன்றும் தெளிவாகாத ரகசியம்.

ஸ்மார்த்த விசாரத்தின்பேரில் புறக்கணிக்கப்பட்ட ஆண்கள் குற்றவுணர்வால் சாதியும் பெயரும் மாறி வேறிடங்களுக்குப் போனார்கள். அவ்வாறு வெளியேறிய ஒருவரைப் பற்றி மலையாளச் சிந்தனையாளரும் இலக்கிய வாதியுமான எம்.கோவிந்தன் பின்வருமாறு எழுதினார்.

'மேனோன் சாதிப்பிரிவைச் சேர்ந்த அவர் திருச்சூர் நகரத்தில் முன்சீப்பாகவோ மாஜிஸ்திரேட்டாகவோ பணியாற்றி வந்தார்.திருமணமானவர். ஸ்மார்த்த விசாரத்தில் விலக்கப்பட்டவர்களின் பட்டியலில் அவர் பெயரும் இருந்தது. பதறிப்போன அவரது மனைவியும் குடும்பத்தினரும் மேனோனைக் கைவிட்டனர்.ஊரைவிட்டு வெளியேறினார் மேனோன். அப்போது இளைஞராக இருந்த அவர் பாலக்காடு ஜில்லாவில் ஒரு சிறு கிராமத்தைச் சேர்ந்த எளிய குடும்பத்துப் பெண்மணி ஒருவரை மணந்துகொண்டு பிழைப்புத் தேடி இலங்கைக்குப் போனார்.தம்பதியருக்கு இரண்டு மகன்கள் பிறந்தார்கள். பெரும் சம்பாத்தியம் எதுவும் தேடாமல் இலங்கையிலேயே காலமானார் மேனோன். அவரது விதவை பாலக்காட்டுக்குத் திரும்ப மனமில்லாமல் தமிழ் நாட்டில் குடியேறினார். வீட்டு வேலை பார்த்தும் சின்னச்சின்ன வேலைகளில் ஈடுபட்டும் பிள்ளைகளை வளர்த்தார். பிற்காலத்தில் அந்த இரு பிள்ளைகளும் திரைப்பட நடிகர்களானார்கள். அவர்களில் ஒருவர் தமிழக மக்களின் அமோக ஆதரவுக்குப் பாத்திரமானார். காலப்போக்கில்அவர்களை ஆள்பவருமானார்.'


கேரளத்தின் மறுமலர்ச்சி சிந்தனையில் பெண் விடுதலை குறித்த விழிப்புணர்வைத் தூண்டி விட்டதில் குறியேடத்து தாத்ரியின் கலகத்துக்கும் பங்குண்டு. தாத்ரி கலகம் நடந்து முடிந்த இரண்டாண்டுகளுக்குப் பிறகு நம்பூதிரிகளை மனிதர்களாக மாற்றும் நோக்கத்துடன் 'யோக க்ஷேம சபை' தொடங்கப்பட்டது. நம்பூதிரிக் குடும்பத்தில் பிறந்தவராயினும் அதன் மனு நீதிக்கும் ஆதிக்க விதிகளுக்கும் கலாச்சார அடக்குமுறைக்கும் பிற்போக்கு மனோபாவத்துக்கும் எதிராக இளைஞர்கள் கிளர்ந்தெழுந்தனர். செயலாலும் பேச்சாலும் எழுத்தாலும் புதிய உணர்வு களைத் தோற்றுவித்தனர்.

பின் நாட்களில் அவர்களில் முன் வரிசையில் நின்றவர் வி.டி.பட்டதிரிப்பாடு. பெண் உரிமை பிரச்சனை ஆணின் பிரச்சனையும் சமூகத்தின் பிரச்சனையும் அதன் விரிவாக மானுடப் பிரச்சனையுமாகிறது என்று உணர்த்தினார் அவர். இல்லங்களின் சமையற்கூடங்களில் வெந்து உருகிக்கொண்டிருந்த பெண்களின் அவலத்தை மையமாக்கி அவர் எழுதிய 'அடுக்களையிலிருந்து அரங்கத்துக்கு' என்ற நாடகம் ஸ்மிருதிகளின் விலங்குகளிலும் மனு தர்மத்தின் தளைகளிலும் பூட்டப்பட்டிருந்த உயிரின் சுதந்திரத்தை உசுப்பியது. அந்த நாடகம் தான் ஈ.எம்.எஸ். உட்பட பல சமூக சீர்திருத்தவாதிகளை உருவாக்கியது.

குறியேடத்து தாத்ரிக்கு கலாச்சார நாயகியின் மதிப்பை ஏற்படுத்தியவரும் வி.டி.தான்.அதன் தொடர்ச்சியாகத்தான் ஒவ்வொரு கால கட்டத்திலும் தாத்ரியை மையப்படுத்தி படைப்புகள் உருவாயின. மலையாள இலக் கியத்தில் ஆழமான செல்வாக்குச் செலுத்திய கலாச்சாரப் பாத்திரமாக தாத்ரியைச் சொல்லலாம். தாத்ரியின் வரலாற்றை விரித்தும் அதன் அறியப் படாத பக்கங்களின் மர்மத்தைத் தேடியும் கவிதைகளும் கதைகளும் நாடகங்களும் திரைப்படங்களும் உருவாக்கப்பட்டன. 'அபராதியான அந்தர்ஜனம்' என்ற தலைப்பில் ஒடுவில் குஞ்ஞிக்கிருஷ்ண மேனோன்  எழுதிய கவிதையே முதல் படைப்பு. மாடம்பு குஞ்ஞிக்குட்டனின் 'பிரஷ்டு',லலிதாம்பிகா அந்தர்ஜனத்தின் 'அக்னி சாட்சி' (சிற்பியின் மொழியாக்கத்தில் தமிழில் வெளி வந்துள்ளது), உண்ணி கிருஷ்ணன் பூதூரின் 'அம்ருதமதனம்', நந்தனின் 'குறியேடத்து தாத்ரி' இவையெல்லாம் தாத்ரியின் நாவல் முகங்கள். எம்.கோவிந்தன் எழுதிய 'ஒரு கூடியாட்டத்தின் கதை'- தாத்ரி குட்டிக்கும் கதகளி கலைஞர் சங்கரப் பணிக்கருக்குமிடையில் இழையோடிய காதலைச் சொல்லும் நீள்கவிதை.'யக்ஞம்' என்ற ஸ்ரீதேவியின் நாடகம் ஸ்மார்த்த விசாரத்தை சமகாலச் சூழலில் பொருத்தும் மறுவாசிப்பு.

ஒரு கூடியாட்டத்தின் கதையில் இடம் பெறும் ஆண்-பெண் உறவின் கனவையும் காதலையும் மையக் கருவாக வைத்து மூன்று திரைப்படங்கள் உருவாயின. எம்.டி.வாசுதேவன் நாயர் திரைக்கதை எழுதிய 'பரிணயம்' (இயக்கம்: ஹரிஹரன்), அரவிந்தன் இயக்கிய 'மாறாட்டம்', ஷாஜி என்.கருண் இயக்கிய 'வானப்ரஸ்தம்'.

இந்த ஆண்டுடன் தாத்ரி குட்டி மீதான விசாரணைக்கு நூறு வருடங்கள் நிறைவு பெறுகின்றன. வெறும் காமப் பிசாசு என்று சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்தில் உதாசீனத்துக்குள்ளான ஒருபெண் நூற்றாண்டு கடந்தும் நினைக்கப்படுவதன் காரணம், தாத்ரியின் அரூபமான முன்னிலையில் எல்லா கலாச்சார மனங்களும் மறைமுக விசாரணைக்குள்ளாவதாக இருக்கலாம்.
ஆதார நூல்கள்:

1.வி.டி.யுடெ தெரஞ்ஞெடுத்த க்ருதிகள் (வி.டி.யின் தேர்ந்தெடுத்த படைப்புகள்)

2.ஒரு கூடியாட்டத்தின்டெ கத (ஒரு கூடியாட்டத்தின் கதை) - எம்.கோவிந்தன்

3.லோகண்டெ மலபார் மான்யுவல் (லோகனின் மலபார் மானுவல்)

4.தாத்ரிக்குட்டியுடெ ஸ்மார்த்த விசாரம் (தாத்ரி குட்டியின் ஸ்மார்த்த விசாரம்) ஆலங்கோடு லீலா கிருஷ்ணன்

5.அடுக்களையில் நின்னும் அரங்ஙத்தேக்கு (அடுப்படியிலிருந்து அரங்குக்கு) வி.டி.பட்டதிரிப்பாடு

6.கண்ணீரும் கினாவும்- வி.டி.யுடே ஆத்ம கத (கண்ணீரும் கனவும் - வி.டி.யின் தன் வரலாறு)


2005 ஆம் ஆண்டு எழுதப்பட்ட் கட்டுரை. முதலில் ‘உங்கள் நூலகம்’ இதழில் வெளிவந்தது.  பின்னர் ‘வெளிச்சம் தனிமையானது’ கட்டுரை நூலில் (உயிர்மை பதிப்பகம், சென்னை ,2008) சேர்க்கப்பட்டது. 
ஓவியம் நன்றி: நம்பூதிரி.