Wednesday, May 28, 2014

மாயா ஆஞ்சலௌ (1928 - 2014)


சமீப மாதங்களில் நம் காலத்தின் மகத்தான எழுத்தாளுமைகள் ஒவ்வொருவராய்  விடைபெற்றுக் கொண்டேயிருப்பது வருத்தமான நிதர்சனம். அந்த வரிசையில் இன்று நம் சமகாலத்தில் மிகவும் மதிக்கப் பட்ட அமெரிக்க கவிஞர் மாயா ஆஞ்சலௌ(Maya Angelou) தனது என்பத்தியாறாவது வயதில் இயற்கையெய்தியிருக்கிறார்.

இந்த நாளில் அவருடைய கவிதை ஒன்றை தமிழாக்கினால் என்னவென்று தோணியதன் விளைவைத்தான் இனி வாசிக்கப் போகிறீர்கள். மொழி பெயர்ப்பில் எனக்கு பெரிதான அனுபவம் இல்லையென்பதால், இந்த முயற்சியை ஒரு "ஆர்வக் கோளாறா"க மட்டுமே அணுகிட வேண்டுகிறேன். 


The Lesson 

I keep on dying again.
Veins collapse, opening like the
Small fists of sleeping
Children.
Memory of old tombs,
Rotting flesh and worms do
Not convince me against
The challenge. The years
And cold defeat live deep in
Lines along my face.
They dull my eyes, yet
I keep on dying,
Because I love to live. 
Maya Angelou

பாடம்

நான் இறந்து கொண்டேயிருக்கிறேன்...
உறங்கும் குழந்தைகளின்
தளர்வான கைகளைப் போல
என் குருதி நாளங்கள் ஒய்ந்து கொண்டிருக்கின்றன....
பழைய கல்லறைகள் தரும் நினைவுகள்
அழுகிக் கொண்டிருக்கும் தசைகள், புழுக்கள்
ஒருபோதும் என்னை சமாதானமாக்கவில்லை.
இந்த சவால்கள், இத்தனை வருடங்கள் 
தந்த தோல்விகளெல்லாம்
என் முகச்சுருக்கங்களின் ஆழத்தில்
உறைந்தும் நிறைந்துமிருக்கின்றன
அவற்றினால் என் கண்கள் மங்குகின்றன
நான் இறந்து கொண்டேதான் இருக்கிறேன்
ஏனெனில் நான் வாழவே விரும்புகிறேன்.

Friday, May 9, 2014

தொடுதல்

புனிதர்
நம் தலையை தொடுகிறார்
நமக்கு கண்ணீர் வருகிறது
நாம் மனமுடைந்து அழுகிறோம்

புனிதர்
நம் தோள்களைத் தொடுகிறார்
நம் பாரங்கள் இறக்கிவைக்கபடுகின்றன
நாம் ஒரு இறகைபோல
நம் உடலை அறிகிறோம்

புனிதர்
நம் கைகளைத் தொடுகிறார்
நமது நோய்மைகள் குணமடைகின்றன
நமது எல்லா வாதைகளும் குணமடைகின்றன

நான்
புனிதரின் கைகளேயே
உற்றுப் பார்க்கிறேன்
அந்தக் கைகளில் விசேஷமாக
ஒன்றுமே இல்லை
அவை வெறுமனே
ஒரு மனிதனின் கைகள்
உண்பதற்கும்
வேலை செய்வதற்கும்
தழுவிக் கொள்வதற்குமான
கைகள் மட்டுமே

இருந்தும்
புனிதன்
அந்தக் கைகளால்தான்
அற்புதங்களை நிகழ்த்துகிறான்
அவன் வேறொன்றும் செய்யவில்லை
வெறுமனே தொடுகிறான்
அவன் அந்த எளிய செயலை
எப்படியோ கண்டுபிடித்துவிட்டான்
எல்லோருக்கும் மறந்துபோன ஒன்று
அவனுக்கு எங்கிருந்தோ
நினைவுக்கு வந்துவிட்டது


நான் இதை
திரும்பத் திரும்ப யோசிக்கிறேன்
ஒரு புனிதர்
என்னைத் தொடுவதற்கு முன்பு
கடைசியாக  யார் என்னைத் தொட்டார்கள் என்று

என் அன்னையா
என் இளம்பருவத்து தோழியா
எனது சின்னஞ் சிறு நாய்க்குட்டியா?

நோக்கமில்லாமல்
பசியில்லாமல்
திட்டமில்லாமல்
தொடுவது பற்றி நமக்கு
எந்தப் பயிற்சியும் இல்லை

ஒரு மனிதன்
இன்னொரு மனிதனைத் தொடுவது
எவ்வளவு ஆபாசமானதாக மாறிவிட்டது
அது ஒரு பலவந்தம்
அது ஒரு குற்றம்
அது ஒரு தாக்குதல்
அது ஒரு அத்து மீறல்

நான் ஒரு கைகலுக்கலுக்குப் பிறகு
என் கைகளை உற்றுப் பார்கிறேன்
ஒரு புனிதன்
அப்படிச் செய்வதில்லை
அவனுக்கு நோய்க் கிருமிகளைக் கண்டு
பயமே இல்லை

நான் ஒரு பெண்ணைத் தொடுகிறேன்
அவள் கசக்கப்படுகிறாள்
திரும்பத் திரும்ப குளிக்கிறாள்
ஒரு இழிவான வசைச் சொல்லை பயன்படுத்துகிறாள்
ஒரு புனிதன்
ஒன்றுமே செய்வதில்லை
ஒரு ஆணைத் தொடுவதுபோலவே
ஒரு பெண்ணைத் தொடுகிறான்


நாம் குழந்தைகளைத் தொட
முய்ற்சிக்கிறோம்
அவர்கள் ஒருபோதும்
நம் கைகளுக்கு கிடைப்பதே இல்லை
மீறி அவர்களை பலவந்தமாகத் தொடுகிறோம்
அவர்கள் வாழ் நாள் முழுக்க
தொடுதலைப்பற்றிய அச்சமுடையவர்களாகிறார்கள்
ஒரு புனிதன் நம்மைத் தொடுகிறான்
ஒரு குழந்தை நம்மைத் தொடுவது போல


ஒரு எளிய செயல்
அதைப்போல அவ்வளவு எளியது
வேறு எதுவுமே இல்லை
அதை நாம் நிரந்தமாக இழந்துவிட்டிருகிறோம்
அதற்காக அவ்வளவு காத்திருக்கிறோம்
அதை
அவ்வளவு பாவமுடையதாக்கியிருகிறோம்
அவ்வளவு புனிதமுடையதாக்கியிருகிறோம்

- மனுஷ்ய புத்திரன்