சமண சமயத்தின் கடைசி தீர்த்தங்கரான மகாவீரர் இறந்த/முக்தியடைந்த நாளில், அவர் நிணைவாக சமணர்கள் தீபங்களை வரிசையாக ஏற்றி வைத்து அவர் நினைவை போற்றுவதுதான் தீபாவளியின் ஆரம்பக் கதை. ஆனால் அநேகம் பேருக்கு இந்த கதை தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
"தீப்" என்ற வடமொழிச் சொல்லுக்கு ஒளி அல்லது நெருப்பு என்றும், "ஆவளி" என்பதற்கு வரிசை என்றும் பொருள் கூறலாம்.
பின்னாளில் சமண மதம் அழிந்தபோது அல்லது அழிக்கப் பட்டபோது சமண மதத்தவர்கள் இந்து மதத்தை தழுவிய பின்னரும் பழைய பழக்கதோஷத்தில் தீபாவளியை தங்களின் புனித நாளாக கொண்டாடினர்.
மகாவீரர் அதிகாலையில் முக்தியடைந்தார் என்பதால் அதிகாலையில் நீராடி , வரிசையாக விளக்கேற்றி வழிபாடு செய்வது மரபாக இருந்தது. இந்த நாளை மிகவும் புனிதம் வாய்ந்ததாய் கருதியதால் இன்று துவக்கப் படும் முயற்சிகள், செயல்கள் யாவும் சிறப்பாக அமையும் என்கிற நம்பிக்கையும் உருவானது.
சமண சமயத்தை சேர்ந்த வர்த்தகர்கள் மகாவீரர் முக்தியடைந்த இந்த நாளை தங்களுடைய புதுவருடத்தின் துவக்கமாய் கொண்டாடுகின்றனர். இந்த நாளில் சமண சமயத்தில் செல்வத்தின் அதி தேவதையான லக்ஷ்மியை பணிந்து வணங்கினால் செல்வம் பெருகும் என்கிற நம்பிக்கையும் காலம் காலமாய் இருந்து வருகிறது.
முதல் ஹிந்து அரசான விஜயநகர பேரரசு உருவான போதுதான் சமண மதத்தின் இந்த பண்டிகை ஹிந்து மதத்தின் பண்டிகையாக நிறம் மாறியது. விஜயநகர பேரரசின் ஆளுனர்களாய் நாயக்க மன்னர்கள் தமிழகத்தில் காலடி வைத்த போதுதான் இந்த பண்டிகை தமிழகத்திற்குள் நுழைந்தது.
தீபாவளியை தமிழகத்துக் கொண்டு வந்த பெருமை சௌராஷ்டிரா இன மக்களையே சேரும் என்றால் அது மிகையில்லை. அதற்கு முன்னர் இப்படி ஒரு பண்டிகை தமிழகத்தில் கொண்டாடப் பட்டதாக எந்த வரலாறும்,
பூகோளமும் நமக்கு கிடைக்கவில்லை.
இந்த இடத்தில் லக்ஷ்மி பற்றி ஒரு இடைச்செருகல்....
சமண சமயத்தில் உயர் நிலை குருவான தீர்த்தங்கரர்களை பாதுகாக்கும் பணியை யக்ஷர்களும்/ யட்சர்கள், யக்ஷினிகளும்/யட்சினிகள் செய்து வந்ததாய் ஒரு நம்பிக்கை உண்டு. இவர்கள் உயர் நிலை தேவதைகளாக கருதப் பட்டனர்.
அடுத்த முறை மகாவீரரின் சிலையை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தால் இந்த யட்சர்களையும், யட்சினிகளையும் கவனித்துப் பாருங்கள். யட்சர்கள் மகாவீரரின் வலது பக்கத்திலும், யட்சினிகள் இடது பக்கத்திலும் அமைக்கப் பட்டிருப்பார்கள்.இந்த யட்சன், யட்சினி தகவல் இங்கே எதற்காக என்கிற கேள்வி இன்னேரத்திற்கு உங்களுக்கு வந்திருக்கும்.
மனித வாழ்வியல் ஆசாபாசங்களின் கூறுகளாகவும் அவற்றின் அதிபதியாக அல்லது அதி தேவதையாக யட்சர்களும், யட்சினிகளும் குறிக்கப் படுகின்றனர். இவற்றில் நல்ல, தீய யட்ச,யட்சினிகளூம் உண்டு. சில புகழ் பெற்ற யட்சினிகளை நீங்கள் தெரிந்து கொள்வது அவசியம்.
அம்பிகா தேவி, சக்கரேஷ்வரி தேவி, பத்மாவதி தேவி, சரஸ்வதி தேவி, லக்ஷ்மி தேவி......அடடே இவர்கள் எல்லோரும் இந்து மதத்தின் தெய்வங்களாயிற்றே என்கிற கேள்வி உங்களுக்கு வந்தால் அதற்கு நானொன்றும் செய்ய முடியாது. பின்னாளில் சமணர்கள் ஹிந்துக்களாய் மதம் மாறியதைப் போல இந்த யட்சினிகளும் மதம் மாறியிருக்கலாம்.....யார்
கண்டது.
இதில் சரஸ்வதி கல்விக்கு அதிபதியாகவும், லக்ஷ்மியானவள் செல்வத்திற்கு அதிபதியாகவும் குறிப்பிடப் படுகின்றனர். இவை எல்லாம் சமண மத கட்டமைப்பில் உள்ளவை.
நாம் நம்பிக் கொண்டிருக்கும் நரகாசுரன் கதையெல்லாம் இங்கே தென்னாட்டில்தான். வடக்கே இந்தக்கதை எடுபடாது. அவர்களுக்கு திபாவளிக்கு என வெவ்வேறு காரணங்கள் உண்டு. ராமர் அயோத்தி மீண்ட நாளென்றும் சொல்வதுண்டு. பாண்டவர்கள் வனவாசத்தை நிறைவு செய்த நாளென்றும் ஒரு ஐதீகம். வங்காளத்தில் காளி பூஜை, சீக்கியர்களுக்கு ஹிந்துக்களிடம் இருந்து விடுதலையானது என ஒவ்வொரு பகுதிக்கென்றும் தனித்துவமான ஒவ்வொரு காரணங்கள்.
இப்படி எல்லா காரணங்களையும் கூட்டிக் குழம்பாக்கி தற்சமயத்தில் நாலு நாட்களை தீபாவளியாக கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். முதல் நாளில் நரகாசுர வதம், இரண்டாம் நாளி லக்ஷ்மி பூசை, மூன்றாம் நாளில் நரகத்திலிருக்கும் பாலி பூமிக்கு வருவதை கொண்டாடுவது, நான்காம் நாளில் சகோதரிகள் தங்கள் சகோதர்களை வீட்டுக்கு அழைப்பதாகவும் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.
தனிப்பட்ட முறையில் எனக்கு தீபாவளி கொண்டாட்டங்களில் பெரிதான ஆர்வம் இருந்ததே இல்லை. என் வாரிசுகளும் அப்படியே இருக்கிறார்கள் என்பதில் எனக்கு பெரு மகிழ்ச்சி. மனைவிதான் கோவித்துக் கொள்கிறார்.
* நரகாசுரன் கதையை விலாவாரியாக எழுத வேண்டுமென்றுதான் இந்தக் கட்டுரையை ஆரம்பித்தேன். ஆனால் எத்தனை வருடத்திற்குத்தான் நரகாசுரன் கதை ஒரு அபத்தம் என்று எழுதிக் கொண்டிருப்பது புதிதாய் எதையாவது முயற்சிப்போமென தோன்றியதால் சமண தீபாவளி பதிவாக மாறிவிட்டது. இங்கே குறிப்பிட்ட தகவல்களுக்கு தேவையான நூலாதாரங்களை என்னால் தர முடியும்.